அன்றைய மெட்ராஸ் ராஜஸ்தானி நான்கு மாநிலங்களை உள்ளடக்கியது. பெஜவாடா ரந்தேரி இதில் எந்த மாநிலத்தில் எந்த ஊரில் வசித்தான் என்று தெரியவில்லை. ஆனால் அவனது விளம்பரம் தமிழ் மற்றும் ஆங்கிலப் பத்திரிக்கைகளில் வெளியாவது வழக்கமாகயிருந்தது.

“வட இந்தியா யாத்ரா ஸ்பெஷல். இது எங்களுடைய 14 வது யாத்திரை. 1931ம் வருஷம் பிப்ரவரி முதல் வாரத்தில் மதராஸிலிருந்து புறப்படும். துங்கபத்ரா பண்டரிபுரம், நாசிக், பரோச், நர்மதை, அஹமதாபாத், மவுண்ட் அபு ,அஜ்மீர் ஜெய்பூர், ஆக்ரா, மதுரா, டெல்லி, குருசேத்திரம், ஹரித்துவார், லக்னோ பிரயாகை, அலஹாபாத், காசி, கயா, கல்கத்தா, பூரி, ஸிம்ஹாசலம், ராஜ் மஹேந்திரி வழியாக மதராசுக்குத் திரும்பி வரும். மூன்றாவது வகுப்புச் சார்ஜ். ரூ 90 இரண்டாவது வகுப்புச் சார்ஜ் ரூ 225
நூறு பேர்கள் மட்டுமே யாத்திரைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்பதால் முன்பதிவு அவசியம். தனி ரயிலில் பயணம் நடைபெறும். யாத்ரீகர்களுக்கெனக் கும்பகோணம் கணேசய்யர் சமையல். பயணத்தில் வெற்றிலை பாக்கு, முறுக்கு அதிசரம் இலவசமாக வழங்கப்படும், முன்பதிவிற்கு அணுகவும். பெஜவாடா ரந்தேரி கம்பெனி, நம்பர் 14, செகண்டு லைன் பீச். மதராஸ் “என விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது
அந்த அலுவலகத்தில் சேஷாசலம் என்ற குமாஸ்தா மட்டுமே இருந்தார். அவர் முன்பாகச் சிவப்பு பேரேடு ஒன்றிருந்தது. அதில் முன்பதிவு செய்பவர்களின் பெயர் முகவரி குறித்துக் கொள்ளப்பட்டது. வக்கீல் அச்சுதன் நாயர் முதல் டாக்டர் ராமதீர்த்தம் வரை பலரும் இந்த யாத்திரைக்குப் பதிவு செய்திருந்தார்கள். ராயங்குடி மிட்டாதார் தனது மனைவியுடன் பயணத்திற்குப் பதிந்திருந்தார்.
பயணத்தேதியன்று சில்வர் கூஜா, தலையணை. போர்வை, ஸ்வெட்டர். வெள்ளித்தட்டு டம்ளர், ஸ்பூன். சகிதமாக ரயில் நிலையத்திற்கு அனைவரும் வந்து காத்திருந்தார்கள். எந்தப் பிளாட்பாரத்திலிருந்து ரயில் புறப்படுகிறது என்று தெரியவில்லை. இரவு பனிரெண்டரை வரை பிளாட்பாரத்தில் காத்திருந்த பின்பு அப்படி ஒரு யாத்ரா ஸ்பெஷல் ரயில் மதராஸில் இருந்து புறப்படவேயில்லை என்பதையும், பெஜவாடா ரந்தேரி தங்களை ஏமாற்றி ஒடிவிட்டான் என்பதையும் அறிந்து அதிர்ச்சியடைந்தார்கள்.
மதராஸில் அவன் குறிப்பிட்டிருந்த முகவரியில் விசாரித்த போது இரண்டு மாத வாடகைக்கு அந்தக் கட்டிடத்தை எடுத்திருந்தான் என்றும் குமாஸ்தாவிற்குச் சம்பளம் பாக்கியுள்ளதாகவும் கண்டுபிடித்தார்கள். முன்பதிவு செய்த பணம் முழுவதையும் ஒரு இளம்பெண் வந்து வாங்கிக் சென்றாள் என்றும் அவள் ரந்தேரியின் மனைவியா, அல்லது காதலியா எனத் தெரியவில்லை என்றார்கள்.
ரந்தேரி ஒரு போதும் தனி ஒரு ஆளை ஏமாற்றவில்லை. அவன் கூட்டத்தை ஏமாற்றினான். அதுவும் படித்தவர்களை மட்டுமே ஏமாற்றினான். இந்த உலகில் புத்திசாலிகளே அதிகம் ஏமாறுகிறார்கள்.

உண்மையில் பெஜவாடா ரந்தேரி என்று ஒருவரேயில்லை. அது ஒரு ரகசிய அமைப்பு. அவர்கள் திட்டமிட்டு மக்களை ஏமாற்றுகிறார்கள் என்று காவல்துறை அதிகாரி ஜே.வி. நெல்சன் தனது புலனாய்வு அறிக்கையில் தெரிவித்தார்.
பெஜவாடா ரந்தேரி இப்படி மதராஸில் இருந்தவர்களை ஏமாற்றியது போலவே காசியில் இருந்து ராமேஸ்வரம், மதுரை உள்ளிட்ட தென்னாட்டு யாத்திரைக்கு அழைத்துப் போவதாக வட இந்தியர்களையும் ஏமாற்றியிருக்கிறான். கல்கத்தாவில் இருந்து துவாரகைக்கு யாத்திரை, ராஜஸ்தானிலிருந்து பூரி ஜெகனாதர் கோவில் யாத்திரை என்று பல்வேறு விதங்களில் விளம்பரம் கொடுத்து இந்தியா முழுவதையும் ஏமாற்றியிருக்கிறான்.
இந்திய ரயில்வே துறையே இந்த மோசடி பற்றி எச்சரிக்கையாக இருக்கும்படி பொது அறிவிப்பினை வெளியிட்டது. மோசடி நடைபெற்ற எல்லா இடங்களிலும் இதே போல ஒரு குமாஸ்தா இருந்திருக்கிறார். ஒரு இளம் பெண் தான் பணத்தைப் பெற்றுக் கொண்டு போயிருக்கிறாள்.
இதன்பிறகான நாட்களில் பேப்பரில் விளம்பரம் வெளியிடுகிறவர்கள் அத்தாட்சிச் சான்று தர வேண்டும் என்பதைப் பத்திரிக்கைகள் கட்டாயமாக்கினார்கள்.
யாத்திரை மோசடிகள் ஒடுக்கப்பட்டதன் பின்பாகப் பெஜவாடா ரந்தேரி மந்திர மை என்றொரு மோசடியைத் துவக்கினான். இதன்படி நகரின் முக்கியப் பிரமுகர்களுக்கு ஒரு கடிதம் அனுப்பி வைத்தான்.
“ஐயா, உங்கள் கையெழுத்து நிமிர்ந்தும் தீர்க்கமாயுமிருப்பதால் சத்தியத்தில் பிரியமுள்ளவராயும் கபடற்றவராயுமிருப்பீர்கள். எக்காரியத்தையும் துணிந்து செய்ய வல்லவராக இருப்பீர்கள். ஆனால் கையெழுத்திலுள்ள அட்சரங்கள் சீராக அமையப்பெறாது ஒடுங்கியிருப்பதால் உங்களுக்குத் தொழிலிலும் குடும்பத்திலும் மிகப் பெரிய தீங்குகள் நேரிடக்கூடும். இதனால் பொருள்சேதமும் உயிர்சேதமும் ஏற்பட வாய்ப்புள்ளது.
ஆகவே நாங்கள் அனுப்பும் மந்திரமையில் தொட்டு எழுதும்போது உங்கள் கையெழுத்து மந்திர எழுத்தாக மாறி சகல சுபீட்சங்களும் உங்களுக்கு வந்து சேரும். நீங்கள் குபேர சம்பத்து அடைவீர்கள் என்பது உறுதி.
இந்த மந்திரமையைப் பெறுவதற்கு ரூபாய் நூறு அனுப்பி வைத்தால் உங்கள் வீடு தேடி மைப்புட்டியும் விசேச பேனாவும் வந்து சேரும். உங்கள் தலையெழுத்தை மாற்றப்போகும் மையிற்காக நூறு ரூபாய் செலவு செய்யத் தயங்க வேண்டாம். இவண் லோகோபகாரி“ என்றிருந்தது.

ரந்தேரி குறிப்பிட்ட முகவரிக்குப் பணம் அனுப்பியவர்களுக்கு மைப்புட்டியும் பேனாவும் வந்து சேர்ந்தது. ஆனால் அந்த மைப்புட்டியும் பேனாவும் எட்டு அணாவிற்கு மேல் பெறாதது என்று அவர்கள் அறிந்த போது தங்கள் விரலில் தாங்களே சுத்தியலால் அடித்துக் கொண்டது போல உணர்ந்தார்கள்.
ரந்தேரியிடம் ஏமாந்தவர்களில் பதினாறு பேர் யாத்திரைக்குப் பதிவு செய்தும் மந்திர மை வாங்கியும் இரண்டு முறை ஏமாந்திருக்கிறார்கள். அதில் இரண்டு பேர் பி.ஏ. பட்டம் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்று ஒன்பது வகையான மோசடிகளில் ஈடுபட்ட பெஜவாடா கும்பல் தெருநாய் ஒன்றால் மாட்டிக் கொண்டது விசித்திரமானது. காவல்துறையின் விசாரணையின் போது கனகம்மா என்ற பெண்ணும் அவளது இரண்டு சகோதரர்களும் இணைந்து இந்தக் குற்றங்களில் ஈடுபட்டது தெரிய வந்தது.
கனகம்மாளும் அவளது சகோதரர்களும் ராமாயப்பட்டினத்தில் தலைமறைவாக வாழ்ந்து வந்தார்கள். அந்த ஊரிலிருந்த நாய்கள் அவர்களை எங்கே பார்த்தாலும் வெறிக் கொண்டது போலக் குலைத்தன. எந்த வேஷத்தில் வந்தாலும் நாய்களிடமிருந்து தப்ப முடியவில்லை. சில நேரம் அவர்களின் பின்னால் நாய் கூட்டமே குரைத்தபடி பின்தொடர்ந்தன. தூக்கமின்மையால் அவதிப்பட்ட கனகம்மாவால் நாயின் இடைவிடாத குரைப்பொலியை தாங்க முடியவில்லை
இதற்காகவே அவர்கள் ரயிலிலே ஊர்விட்டு ஊர் சென்றபடியே இருந்தார்கள். ஆனால் எந்த ஊருக்குப் போய் இறங்கினாலும் அங்குள்ள நாய்கள் அவர்களை ஆவேசமாகக் குரைத்தன. துரத்தின.
ஒரு நாள் கனகம்மா தங்கியிருந்த வீட்டின் முன்பாகச் செம்பட்டை நிறத்திலிருந்த நாய் ஒன்று வானை நோக்கி தலையை உயர்த்தி ஊளையிட்டபடி நின்றிருந்தது. அவர்கள் ஆத்திரத்தில் கடுகும் மஞ்சளும் கலந்த தண்ணீரை அதன்மீது ஊற்றி விரட்டினார்கள். ஆனாலும் அந்த நாய் போக மறுத்தது. இரவிலும் அதன் குரலை அடக்க முடியவில்லை. எதற்காக நாய் இப்படிப் பகலிரவாக ஊளையிடுகிறது எனச் சந்தேகம் கொண்டு காவல்துறையினர் விசாரித்த போது பெஜவாடா கும்பல் வசமாகச் சிக்கிக் கொண்டது.
குற்றம் என்பது ஒரு பள்ளம். ஒரு விரிசல். அது நீதியால் நிரப்பபட்டுவிடும் என்கிறார்கள். கனகம்மா விஷயத்தில் அப்படித் தான் நடந்திருக்கிறது.