கேலிச்சித்திரங்களின் உலகம்.

லியா வோல்சோக் இயக்கிய Very Semi-Serious ஆவணப்படம் நியூயார்க்கர் இதழில் வெளியான கேலிசித்திரங்கள் குறித்துப் பேசுகிறது.

ஒவ்வொரு வாரமும் செவ்வாய்கிழமை தாங்கள் வரைந்த புதிய கேலிச்சித்திரங்களுடன் ஓவியர்கள் நியூயார்க்கர் அலுவலகம் வருவது வழக்கம். யார் வேண்டுமானாலும் தாங்கள் வரைந்த ஓவியத்துடன் வரலாம். அந்தக் கேலிச்சித்திரங்களிலிருந்து பதினைந்தை அந்த வாரத்திற்காகத் தேர்வு செய்வார்கள். தேர்வு செய்யும் பணி சவாலானது. தேர்வாளரான ராபர்ட் மான்கோஃப் அனைத்துக் கேலிச்சித்திரங்களைப் பரிசீலனை செய்து பொருத்தமானவற்றைத் தேர்வு செய்கிறார். ஒரு கார்ட்டூனிற்கு ஆயிரம் டாலர் வரை பணம் தருகிறார்கள்.

தி நியூயார்க்கர் இதழில் வெளியான கேலிச்சித்திரங்களின் வரலாறு மற்றும் அதன் தேர்வு குறித்து இந்த ஆவணப்படத்தில் மான்கோஃப் விவரிக்கிறார். பல்வேறு ஓவியர்களின் அனுபவங்களும் இதில் சிறப்பாக இடம்பெற்றுள்ளன.

செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பின்பு வெளியான தி நியூயார்க்கர் இதழின் அட்டையில் கேலிச்சித்திரம் இடம்பெறவில்லை. அந்த இதழில் ஒரேயொரு கேலிச்சித்திரம் மட்டுமே வெளியாகியிருக்கிறது. அதன் தொடர்ந்த வாரங்களில் எது போன்ற கேலிச்சித்திரங்களை வெளியிட்டார்கள் என்பதைப் பற்றி மான்கோஃப் விவரிப்பது சிறப்பானது.

71 வயதான மான்கோஃப், 1977 ஆம் ஆண்டு முதல் நியூயார்க்கரில் தனது கேலிச்சித்திரங்களை வெளியிட்டு வருகிறார், அத்தோடு 1997 ஆம் ஆண்டு முதல் கார்ட்டூன் எடிட்டராகவும் செயல்பட்டு வருகிறார்.

நியூயார்க்கர் இதழில் எது போன்ற கேலிச்சித்திரங்களை வெளியிட வேண்டும் என்பதற்குச் சில கட்டுப்பாடுகள், வழிமுறைகள் இருக்கின்றன அவற்றைத் தான் மாற்றி அமைத்ததாக மான்கோஃப் கூறுகிறார்

நியூயார்க்கின் வீதிகளில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளைப் படமாக்கியிருக்கிறார்கள். காரணம் அதே காட்சிகள் கார்ட்டூனிஸ்ட் பார்வையில் எப்படிக் கேலிச்சித்திரமாக உருவாகிறது என்பதைப் புரிந்து கொள்வதற்காகவே.

கேலிச்சித்திரம் வரைபவர்கள் நம்மில் எவரும் பார்க்காத விஷயங்களைப் பார்ப்பார்கள். கேலியாக அதைச் சித்தரிப்பார்கள். பழக்கமான காட்சிகளை விசித்திரமாக்குகிறார்கள் என்கிறார் மான்கோஃப்

மான்கோஃப்பும் அவரது மனைவியும் தங்கள் மகனின் மரணத்தை நினைவுபடுத்தும் பகுதி உணர்ச்சிப்பூர்வமானது.

கார்ட்டூனிஸ்ட்களின் வாழ்க்கை மற்றும் அவர்கள் கருக்களைத் தேர்வு செய்யும் முறை. தொட்ர்தோல்விகள், அதிலிருந்து மீண்டு தங்கள் அடையாளத்தை உருவாக்கிக் கொள்ளுதல் எனக் கேலிச்சித்திரங்களுக்குப் பின்னுள்ள அறியாத உலகை படம் சிறப்பாகப் பதிவு செய்திருக்கிறது.

கேலிச்சித்திரங்களின் கீழே எழுதப்படும் ஒற்றை வரி முக்கியமானது. அதற்காகப் போட்டி நடத்துகிறார்கள். சிறந்த ஒற்றைவரியை தேர்வு செய்து பரிசு தருகிறார்கள்.

இதழின் முதல் கேலிச்சித்திரம் துவங்கி சமீபத்திய இதழின் கேலிச்சித்திரம் வரை அடைந்துள்ள மாற்றத்தை. இதழுடன் இணைந்து பணியாற்றும் ஓவியர்கள் வழியாக வெளிப்படுத்துகிறார்கள். விலங்குகளை கேலிப்பொருளாக கையாளும் முறை இத்தனை ஆண்டுகளிலும் மாறவேயில்லை என்பது வியப்பளிக்கிறது.

தி நியூ யார்க்கர் இதழில் வெளியான கேலிச்சித்திரங்களுக்கு வந்த மதம் மற்றும் அரசியல் எதிர்ப்புப் போராட்டங்கள் பற்றிய தகவல்கள் எதுவும் இதில் இடம்பெறவில்லை. கேலிச்சித்திரங்களின் வழியே வெளிப்படும் அரசியல் முக்கியமானது. சுதந்திரமான எண்ணங்களை அதில் வெளிப்படுத்தமுடியும் என்கிறார் பாப்.

சமகாலத்தைக் கேலி செய்யும் இந்தக் கேலிச்சித்திரங்கள் காலம் கடந்தும் இன்றும் அதே நகைச்சுவையை வெளிப்படுத்துகின்றன. இதில் அமெரிக்காவின் மனசாட்சி வெளிப்படுகிறது என்கிறார் ரோஸ் சாஸ்டின். அது உண்மையே.

0Shares
0