கே.எம். வாசுதேவன் நம்பூதிரி கேரளாவின் முக்கிய ஓவியர். வைக்கம் முகமது பஷீர். தகழி, கேசவதேவ். உரூபு, வி.கே.என் எம்.டி.வாசுதேவன் நாயர் உள்ளிட்ட முக்கியப் படைப்பாளிகளின் தொடர்களுக்குச் சித்திரம் வரைந்தவர். எம்.டி. வாசுதேவன் நாயரின் இரண்டாம் இடம் தொடருக்கு இவர் வரைந்த மகாபாரதக் கோட்டோவியங்கள் அற்புதமானவை.
தான் பீமனின் மனநிலையை முதன்மையாகக் கொண்டு கோட்டோவியங்கள் வரைந்தேன். இந்தத் தொடருக்கு ஓவியம் வரைந்தது என் வாழ்நாளில் கிடைத்த பாக்கியம் என்கிறார் நம்பூதிரி. அவரும் எம்.டி.வாசுதேவன் நாயரும் சந்தித்து உரையாடும் நேர்காணல் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் நம்பூதிரி தான் ஒவியம் வரைந்த விதம் பற்றி மனம் திறந்து உரையாடியிருக்கிறார்.
சென்னை ஒவியக்கல்லூரியில் ஓவியம் பயின்ற நம்பூதிரி மாத்ருபூமியில் நீண்டகாலம் பணியாற்றியிருக்கிறார். சமீபத்தில் இவரை நேரில் சந்தித்து மோகன்லால் உரையாடும் காணொளி ஒன்று சமூக ஊடங்களில் வலம் வந்தது. அதில் நம்பூதிரியின் சித்திரங்களை மோகன்லால் வியந்து போற்றுகிறார். மலையாள திரையுலகின் உச்ச நட்சத்திரம் இப்படி ஒரு ஓவியரின் வீடு தேடிச் சென்று அவரை வணங்கிப் பாராட்டி அவரது ஓவியத்தினை பெரிய விலை கொடுத்து வாங்கித் தனது புதிய வீட்டில் மாட்டி வைத்திருப்பது கலைஞனுக்குச் செய்யப்படும் சிறந்த மரியாதையாகத் தோன்றியது.
நம்பூதிரியின் கோடுகள் மாயத்தன்மை கொண்டவை. ஒரு சுழிப்பில் உணர்ச்சிகளைக் கொண்டுவரக் கூடியவர். உடலை இவர் வரையும் விதம் தனிச்சிறப்பானது. நம்பூதிரி வரைந்த பெண்கள் கோடுகளால் உருவான தேவதைகள்.
நம்பூதிரி மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பொன்னானியில் பிறந்தவர். .தனது வீட்டின் அருகிலுள்ள சுகாபுரம் கோவிலில் உள்ள சிற்பங்களால் கவரப்பட்டுச் சிற்பியாக வேண்டும் என்ற ஆசை கொண்டார். பின்பு சென்னையிலுள்ள அரசு நுண்கலைக் கல்லூரியில் ராய் சௌத்ரியின் கீழ் படிக்கும் வாய்ப்பைப் பெற்றார். அந்த நாட்களில் எஸ். தனபால் மற்றும் கே.சி.எஸ்.பணிக்கருடன் நெருக்கம் உருவானது. சோழமண்டலத்தில் பணிக்கரின் உதவியாளராகப் பணியாற்றியிருக்கிறார். 1960 ல் மாத்ருபூமி வார இதழில் ஒவியர் மற்றும் வடிவமைப்பாளராக வேலைக்குச் சேர்ந்து 1982 ஆம் ஆண்டு வரை பணியாற்றினார். பின்பு சில காலம் இந்தியன் எக்ஸ்பிரஸ் நடத்திய வார இதழிலும் பணியாற்றியிருக்கிறார். நம்பூதிரி தனது ஊரையும் தான் சந்தித்த மனிதர்களையும் பற்றிய நினைவுக்குறிப்புகளா எழுதிய கட்டுரைகள் கீதா கிருஷ்ணன் குட்டியால் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு Sketches: The Memoir of an Artist என்ற பெயரில் வெளியாகியுள்ளது.
நம்பூதிரியின் கோட்டோவியங்களுக்காகவே இந்த நூலை வாங்கினேன். தேர்ந்த எழுத்தாளரின் நுட்பத்துடன் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். அவர் சந்தித்த மனிதர்களைப் பற்றிய சித்திரமும் எழுத்தும் அழகாக ஒன்று சேருகின்றன. மெல்லிய நகைச்சுவையோடு கூடிய எழுத்து. அழகான சிறுகதையைப் போல நிகழ்வுகளை விவரித்திருக்கிறார். ஒன்றிரண்டு வரிகளில் முழுமையான தோற்றம் வெளிப்பட்டுவிடுகிறது
வீடு வீடாகச் சென்று வைத்தியம் பார்க்கும் ஆர்எம்பி டாக்டரின் வாழ்க்கையும் அவரது அக்கறையும் ஒரு திரைப்படத்திற்காகக் கதை. அப்படியே படமாக்கலாம். ஊரையும் மக்களையும் நலமுடன் வைத்துக் கொள்ள வேண்டியது தனது கடமை என்று அந்த டாக்டர் நினைக்கிறார். ஆரம்பத்தில் சைக்கிளில் வரத்துவங்கிய அவர் பின்பு பைக் கார் என மாறுவதும். காசே வாங்காமல் வைத்தியம் பார்ப்பதும், அவரது காரில் ஏறி கவிஞர் அக்கிதம் நம்பூதிரி வீட்டினைக் காணச் சென்ற நாளையும் பற்றி அழகாக விவரித்திருக்கிறார்.
தன் ஊரின் கோவில், திருவிழா, அதில் வரும் யானை, திருவிழாவினை முன்னிட்டு நடக்கும் விருந்து. இசைக்கலைஞர்களின் வருகை எனக் கடந்தகாலத்தின் இனிய நினைவுகளைச் சுவாரஸ்யமாகப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
ஓவியம் பயிலுவதற்காகச் சென்னை வந்த நாட்களையும். ராய்சௌத்ரி பற்றிய குறிப்பு, நவீன சிற்பம். கட்டிடக்கலை என அறிந்து கொண்ட விதம் பற்றியும் விவரிக்கும் நம்பூதிரி தன்னை உருவாக்கியதில் சென்னைக்கு முக்கிய பங்கிருப்பதைக் கூறுகிறார்.
செம்பை பற்றிய சொற்சித்திரம் அபூர்வமானது. மட்டஞ்சேரி இல்லத்தில் சதுரங்கம் ஆடுகிறவர்களைப் பற்றியும் அதில் மாஸ்டராக இருந்தவரைப் பற்றியும் விவரிக்கும் போது நாம் அந்தக் காட்சிகளைக் கண்ணில் பார்க்கிறோம். இல்லத் திருமணத்திற்காக நகைகளைத் துணியில் பொட்டலம் கட்டிக் கொண்டு போன கதையைச் சொல்லும் போது பஷீரை வாசிப்பது போலவே இருக்கிறது போலீஸ் கைது செய்ய வரும்போது சாவகாசமாகத் தனது காலை பூஜைகளைச் செய்து முடிக்கும் நம்பூதிரி ஒருவரைப் பற்றிய சொற்சித்திரம் மறக்கமுடியாதது.
புத்தகம் முழுவதும் நம்பூதிரியின் ஓவியங்கள் நிறைந்திருக்கின்றன. திரும்பத் திரும்ப அந்தக் கோட்டோவியங்களைப் பார்த்துக் கொண்டேயிருந்தேன். ஒளிக்கற்றைகளைப் போலவே கோடுகள் வளைந்து கலைந்து செல்கின்றன.
இயக்குநர் ஜி. அரவிந்தனின் உத்தராயணம் திரைப்படத்தில் வேலை செய்த அனுபவம். முன்னணி மலையாள இதழில் பணியாற்றிய போது சந்தித்த நிகழ்வுள். கே.சி.எஸ். பணிக்கர் மற்றும் வைக்கம் முகம்மது பஷீர் பற்றிய நினைவுகள் எனச் சுவாரஸ்யமான சிறு கட்டுரைகளைக் கொண்ட நூல்.
இந்தக் கட்டுரைகளின் ஊடே அந்நாளைய எழுத்தாளர்கள். பத்திரிக்கை உலகம். கேரள வாழ்க்கையின் பல்வேறு நிலைகள். விழாக்களை அறிந்து கொள்ள முடிகிறது. கோடுகளைப் போலவே சொற்களையும் நடனமாடச் செய்திருக்கிறார் நம்பூதிரி. வெறுமனே இந்தக் கோட்டோவியங்களைப் பார்த்துக் கொண்டிருந்தாலே போதும் புதிய கதைகள் தானே நமக்குள் முளைவிடத் துவங்கிவிடும்.