கோமாளியின் ஞானம்

லைம்லைட் சாப்ளினின் மிகச் சிறந்த திரைப்படம். எப்போதெல்லாம் மனச்சோர்வு அடைகிறீர்களோ அப்போது இந்தப் படத்தைப் பாருங்கள். மருந்தாக வேலை செய்யும். புதிய நம்பிக்கையை, உற்சாகத்தை, மகிழ்ச்சியை உருவாக்கும். இப்படத்தின் வசனங்களைத் தனியே அச்சிட்டு சிறுநூலாக வெளியிடலாம்.

படத்தின் ஒரு காட்சியில் சாப்ளின் அரங்க மேடையில் உள்ள ஒரு பூவைப் பறித்துத் தனது பாக்கெட்டிலிருந்து உப்பை எடுத்து அதில் போட்டு ஆசையாக ருசித்துத் தின்னுகிறார். அது தான் சாப்ளினின் முத்திரை.

பூவை ஒரு போதும் உண்ணும் பொருளாக நாம் கருதியதில்லை. சாப்ளின் அதை வேடிக்கையாகச் செய்கிறார். காதலுற்றவனின் செயல் போலவே அது வெளிப்படுகிறது. இன்னொரு காட்சியில் ஈயுடன் உரையாடுகிறார். சூரிய ஒளியின் கதகதப்பை கொண்டாடுகிறார்.

Life is a desire, not a meaning. Desire is the theme of all life! It makes a rose want to be a rose and want to grow like that. And a rock want to contain itself and remain like that.

என்று டெர்ரியிடம் சொல்லும் போது ரோஜா மற்றும் பாறை எப்படியிருக்கும் என நடித்துக் காட்டுகிறார். அதை டெரி ரசிக்கவே ஜப்பானிய மரம் எப்படி இருக்கும் என நடித்துக் காட்டுகிறார். அத்தோடு பல்வேறு மரங்களின் இயல்பை நடித்துக் காட்டுவார். அபாரமான காட்சியது.

சாப்ளினின் கடைசிப் படம் லைம் லைட். புகழ்பெற்ற கோமாளி நடிகரான கால்வெரோ மக்கள் தன்னை ரசிப்பதில்லை என உணர்ந்து தனிமையில். குடியில் நாட்களைக் கழிக்கிறார். ஒரு நாள் தற்கொலை செய்ய முயலும் டெரி என்ற இளம்பெண்ணைக் காப்பாற்றித் தனது அறையில் தங்க வைக்கிறார். பாலே நடனக்காரியான டெரி ஆழமான மனப்பாதிப்பை கொண்டிருக்கிறாள். அவளால் எழுந்து நடக்க முடியவில்லை. அவளுக்குச் சிகிட்சை அளிக்கும் கால்வெரோ புதிய நம்பிக்கை அளித்துப் புகழ்பெற்ற நடனக்காரியாக மாற்றுகிறார்.

ஒரு காட்சியில் நோயுற்ற நிலையில் இருக்கும் டெரியின் படுக்கை அருகில் சாப்ளின் செல்கிறார். அவள் இருமுகிறாள். அவசரமாகச் சிறிய அலமாரியை திறந்து உள்ளே இருந்து ஒரு மருந்து பாட்டிலை எடுக்கிறார். அவளுக்கு மருந்து தரப்போகிறாரோ என நாம் நினைத்தால் அவர் மவுத்வாஷால் தனது வாயைச் சுத்தம் செய்து கொள்கிறார். இது தான் சாப்ளினின் வெளிப்பாடு.

மக்கள் ஏன் தனது நகைச்சுவைக்குச் சிரிக்க மறுக்கிறார்கள். சலிப்பாகி அரங்கை விட்டு வெளியே போகிறார்கள் என்று அவருக்குப் புரியவில்லை. பெயரை மாற்றிக் கொண்டு புதிய ஆள் போலக் கால்வெரோ மேடையில் தோன்றி வேடிக்கை செய்கிறார். அப்போதும் புறக்கணிப்புத் தொடர்கிறது.

மக்கள் உங்களை விரும்பவில்லை, உங்கள் காலம் முடிந்துவிட்டது என அரங்க நிர்வாகி சொல்வதைக் கால்வெரோவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மக்கள் மீண்டும் தன்னை ரசிப்பார்கள் என்று நம்புகிறார். அதற்காகப் போராடுகிறார்.

லைம்லைட் படத்தின் திரைக்கதை வசனத்தை சாப்ளின் மிகச்சிறப்பாக எழுதியிருக்கிறார். படத்தின் இசையும் அவரே. அற்புதமான இசை. தனியிசைக்கென்றே காட்சிகள் வைத்திருக்கிறார். படத்தில் இடம்பெற்றுள்ள பாலே நடனக்காட்சி மிகவும் சிறப்பானது.

இப்படத்தில் அவரும் பஸ்டர்கீட்டனும் இணைந்து நடித்திருக்கிறார்கள். கீட்டனுக்கு அதிக முக்கியத்துவமில்லை. படத்தில் இசைக்கலைஞராக நடித்திருப்பது சாப்ளினின் மகன் சிட்னி.

மைக்கேல், ஜோசபின் மற்றும் ஜெரால்டின் என்ற சாப்ளினின் மூன்று பிள்ளைகளும் லைம்லைட்டின் தொடக்கக் காட்சியில் தோன்றுகிறார்கள். .

டெரியின் கதாபாத்திரம் சாப்ளினின் அம்மா ஹன்னாவின் சாயலில் உருவாக்கபட்டிருக்கிறது. சாப்ளின் லைம்லைட்டை எழுத இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகச் செலவிட்டார் . இந்தக் கதையை முதலில் ஒரு நாவலாக எழுதினார். ஃபுட்லைட்ஸ் என்ற அந்த நாவலை பின்பு திரைக்கதையாக மாற்றியிருக்கிறார்.

வழக்கமான படங்களில் நாம் காணும் சாப்ளின் வேறு. இதில் வெளிப்படும் சாப்ளின் வேறு. இதில் வயதான சாப்ளினைக் காணுகிறோம். அவரது நடை மட்டுமே பழைய படங்களை நினைவுபடுத்துகிறது. கோமாளிகளுக்கும் வயதாகும் என்பது ஏற்க முடியாத உண்மை. இப்படத்தில் கைவிடப்பட்ட மேடைக்கலைஞனின் சோகத்தைத் தனித்துவமான உணர்வுடன் வெளிப்படுத்தியிருக்கிறார்.

நடக்க முடியாத நிலையில் படுக்கையில் கிடக்கும் டெரியிடம் அவர் உரையாடும் காட்சி நம்பிக்கையின் வெளிச்சத்தைப் படரவிடுகிறது..

I know a man without arms who can play a scherzo on a violin and does it all with his toes. The trouble is you won’t fight! You’ve given in, continually dwelling on sickness and death. But – there’s something just as inevitable as death, and that’s life. Life, life, life! Think of the power that’s in the universe, moving the earth, growing the trees. That’s the same power within you if you only have courage and the will to use it

கால்வெரோவும் மூன்று இசைக்கலைஞர்களும் ஒன்றாக அவரது வீட்டில் குடித்துவிட்டு இசைக்கும் காட்சி அபாரமானது. இசையே அவர்களின் மீட்சி.

தான் ஏன் கோமாளியாக மாறினேன் என்பதைப் பற்றி டெரியிடம் விளக்கும் போது கால்வெரோ இப்படிச் சொல்கிறார்

`விளையாடுவதற்குப் பொம்மை இல்லையே என ஏங்கிய நாட்களில் எனது அப்பா என்னுடைய தலையைச் சுட்டிக்காட்டிச் சொல்லுவார்.இது தான் இதுவரை உருவாக்கப்பட்டதிலே மிகப்பெரிய விளையாட்டுப் பொருள். இங்கேதான் எல்லா மகிழ்ச்சியின் ரகசியமும் இருக்கிறது.

கால்வெரோவும் டெர்ரியும் காதல் கொள்வதில்லை. மாறாக ஆழமான பிணைப்பை கொண்டிருக்கிறார்கள். உங்களுக்காக எதையும் செய்வேன் என்கிறாள் டெர்ரி. அது நன்றியுணர்விலிருந்து உருவான வெளிப்பாடு.

டெர்ரி விரைவில் ஒரு புதிய பாலே நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெறுகிறாள், அதில் கால்வெரோவும் கோமாளியாகச் சிறிய வேடத்தில் நடிக்கிறார். நிகழ்ச்சி பெரிய வரவேற்பை பெறுகிறது. ஆனால் அந்த வெற்றி கால்வெரோவிற்கு முழுமையான மகிழ்ச்சியைத் தரவில்லை. அது தனது வெற்றியில்லை என அவர் உணர்ந்து கொள்கிறார். அரங்கிலிருந்து வெளியேறிப் போகிறார்.

தியேட்டர் டிரஸ்ஸிங்-ரூமில் கால்வெரோ தனது மேக்கப்பைத் துடைத்துவிட்டு, கண்ணாடியைப் பார்த்து, தோல்வியின் பிம்பத்தைக் காணுகிறார். தன்னைத் தானே இனியும் ஏமாற்றிக் கொள்ள முடியாது என உணர்கிறார். நடிப்பை துறக்கிறார்.

இசைக்கலைஞராக ஒரு மதுவிடுதியில் பணியாற்றும் நாட்களில் அவர் சில்லறைகளுக்காகத் தனது தொப்பியை நீட்டுகிறார். அங்கே அவரைச் சந்திக்கும் அரங்க உரிமையாளர் மீண்டும் நடிக்க அழைக்கும் போது கால்வெரோ அதை எளிதாக உதறிப்போகிறார். கலைஞனின் மனதை சிறப்பாகச் சித்தரிக்கும் காட்சிகள் இவை.

எல்லோரும் என்னிடம் மிகவும் அன்பாக இருக்கிறார்கள். அது என்னைத் தனிமையாக உணர வைக்கிறது. என்று ஒரு காட்சியில் கால்வெரோ சொல்கிறார். இதே குரலை தஸ்தாயெவ்ஸ்கியிடம் கேட்கமுடியும். இளவரசன் மிஷ்கின் இப்படி உணருகிறான். குற்றமும் தண்டனை நாவலில் மர்மலதேவ் இதே குற்றவுணர்வை கொண்டிருக்கிறான்.

Time is the great author. Always writes the perfect ending என ஒரு காட்சியில் கால்வெரோ சொல்கிறார். அது அவரது வாழ்விலும் நடந்தேறுகிறது.

இன்னொரு காட்சியில் கால்வெரோவும் டெரியும் பேசிக் கொள்கிறார்கள்

Calvero: I want to forget the public.

Terry: Never. You love them too much.

Calvero: I’m not so sure. Maybe I love them, but I don’t admire them.

Terry: I think you do.

Calvero: As individuals, yes. There’s greatness in everyone. But as a crowd, they’re like a monster without a head that never knows which way it’s going to turn. It can be prodded in any direction.

இது சாப்ளினின் வாக்குமூலம். அவர் மனதின் ஆழத்திலிருந்து வெளிப்படும் குரல். லைம் லைட்டில் நாம் சாப்ளினின் சொந்த வாழ்க்கையின் எதிரொலிகளைக் கேட்கிறோம். திரையால் இதிகாசங்களை உருவாக்க முடியும் என்று போர்ஹெஸ் ஒரு நேர்காணலில் குறிப்பிடுகிறார். அந்த வரிசையில் வரும் ஒரு படம் லைம்லைட்

••

0Shares
0