கோ யுன் : பத்தாயிரம் வாழ்க்கைகள்

(தடம் இதழில் எழுதி வரும் உலகக் கவிதைகள் குறித்த தொடரின்  கட்டுரை )

ஒவ்வோர் ஆண்டும் தமிழில் நிறைய கவிதை நூல்கள் வெளியாகின்றன. புதுப்புது கவிஞர்கள் அறிமுகமாகிறார்கள். ஆயினும் நவீன கவிதைகள் குறித்த விவாதங்கள், கவிதைக் கோட்பாடுகள், அழகியல் பற்றிய உரையாடல்கள் எதுவும் இலக்கியச் சூழலில் நடைபெறுவதில்லை. பிற மொழிகளிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட கவிதைகள் சிற்றிதழ்களில் வெளியாவதோடு சரி. அவை உரிய கவனத்தையும் உரையாடலையும் உருவாக்கவில்லை. முக்கியக் கவிஞர்கள்கூட இவற்றைப் பொருட்படுத்தி விவாதிப்பது இல்லை என்பது வருத்தமளிக்கும் உண்மை. ஆனால், எவரது பொருட்படுத்துதலையும் தாண்டி, தமிழின் சமகாலத் தமிழ்க் கவிதை, புதிய தளத்தில் புதிய மொழியில் புது வீச்சை அடைந்துவருவது மகிழ்ச்சியளிக்கிறது.

‘ஜோசப் ப்ராட்ஸ்கியின் கவிதைகள்’ என்ற கட்டுரையில் கவிஞர் பிரம்மராஜன் ஒரு விஷயத்தைக் குறிப்பிடுகிறார். அதாவது, கவிஞன் சமூகத்திற்கு ஆற்றவேண்டிய கடமை என்ற ஒன்று இருக்குமானால் அவனுடைய கவிதைகளைச் சரியாக எழுதுவதாகத்தான் இருக்க முடியும். அவனுக்கு வேறு எந்தத் தேர்வும் கிடையாது. இந்தக் கடமையிலிருந்து தவறுவதால் அவன் மீட்க முடியாத மறதியில் மூழ்கடிக்கப்படுகிறான். இதற்கு மாறாக சமூகமோ, கவிஞனுக்காக எவ்விதப் பொறுப்பும் அற்றதாக இருக்கிறது. எவ்வளவு சிறப்பாக எழுதப்பட்டிருப்பினும்கூட, கவிதைகள் படிப்பதைத் தவிர வேறு கடமைகள் தனக்கு இருப்பதாக சமுதாயம் பாவனை செய்துகொள்கிறது.

தமிழ்ச் சூழலுக்கு மிகப் பொருத்தமான மேற்கோள் இதுவென்பேன். ஈழக் கவிஞரான சித்தாந்தனின், ‘பசியோடிருப்பவனின் அழைப்பு’ என்ற கவிதையைச் சமீபத்தில் வாசித்தேன். மிகச்சிறந்த அனுபவத்தைத் தந்தது.

முதலில்

மலைகளை உண்ணும்

நுட்பங்களை போதித்தாய்

பிறகு

மலைகளின் சுவை பற்றியப் பாடல்களை

இசைத்துக் காட்டினாய்

மழைப்பொழிவுகளுக்குள்

மலைகள் வளரும் அதிசயங்களை

வசியச் சொற்களில் சொன்னாய்

மலைகள் தீர்ந்துபோகும் ஒருநாள் வருமெனில்

அப்போது

மலைகளைத் தின்று மலைகளாகிய நாம்

நம்மையே பகிர்ந்துண்டு

பசியாறலாம் என்றாய்

இந்தக் கவிதை, வாசிப்பவனுக்குள் விநோதமான அனுபவம் ஒன்றை உருவாக்குகிறது. மலை குறித்த பொது எண்ணங்களை அழித்து, புதிய பொருள்கொள்ளலை ஏற்படுத்துகிறது.   ‘மலைகளை உண்ணும் நுட்பங்களை போதித்தாய்’ என்ற வரியின் வழியே கவிதை இயல்புலகிலிருந்து மேலே பறக்கத் தொடங்குகிறது. வாசிக்க வாசிக்க மலை, மெள்ள புதுவகை அனுபவமாக உருமாறுகிறது. கவிதையின் முடிவில்,  ‘மலைகளாகிய நாம்’ என முடிகையில் மலை என்பது இருப்பின் அடையாளமாகிவிடுகிறது. சலனமற்ற  இருப்பு. அதன் பிரமாண்டம்தானே மலை. சுயம்தான் மலையென உருக்கொள்கிறதா!

கவிதை, எப்போதும் நாம் அறிந்த உலகை அறியாத உலகமாக்குகிறது. கூடவே, அறியாத உலகை நெருக்கமான அனுபவமாகவும் மாற்றுகிறது. கண் வழியே பதிவாகும் அனுபவங்களை, சொற்களைக் கொண்டு சிதறடிக்கிறது.

பல்லாயிரம் முறை மலை குறித்து எழுதப்பட்ட வரிகளை இக்கவிதை சிதறடித்து, மலை என்பது பொருண்மையான மலையில்லை என்று உணர்த்துகிறது. உண்மையில் கவிஞர்கள், உலகை நுண்மையாக ஆராய்கிறார்கள். மொழியை நுண்ணோக்கி போலாக்கிக்கொள் கிறார்கள். அந்த நுண்ணோக்கியின் வழியே நாம் காண்பது அறியாத இயக்கத்தை; உயிர்ப்பை.

மொழியைத் தன்வசமாக்குவதும், மொழிவழியாக அனுபவங்களைப் புத்துருவாக்கம் செய்வதும். கற்பனை – நிஜம் என்ற பிரிவின் கோட்டை அழிப்பதுமே கவிஞனின் முன்னுள்ள சவால்கள்.

நவீனத் தமிழ்க் கவிதை அந்தச் சவாலை திறமையாக முன்னெடுக்கிறது. சென்ற தலைமுறைக் கவிஞர்கள் தொடாத, அறியாத விஷயங்களை இந்தத் தலைமுறை தன்னுடைய கவிதைகளில் பாடுகிறது. குறிப்பாகத் தமிழ் மொழியின் புதுப் பாய்ச்சலைக் கவிதைகளில் அதிகம் காண முடிகிறது.

தமிழ்ச் சூழலில் ஒன்றிரண்டு கவிஞர்களைத் தவிர, மற்றவர்கள் தங்கள் வாழ்நாளில் ஐந்தாறு கவிதைத் தொகுப்புகளையே வெளியிட்டிருக் கிறார்கள். அதிகபட்சம் 500 கவிதைகள் எழுதியிருப்பார்கள் எனலாம். ஆனால், கொரியக் கவிஞரான கோ யுன், இதுவரை 150 கவிதைத் தொகுப்புகளுக்கும் மேலாக வெளியிட்டிருக்கிறார். இவற்றில் பாதிக்கும் மேல் 400-லிருந்து 500 பக்கங்கள் கொண்டவை.

அவரைப் பற்றிய ஆவணப்படம் ஒன்றைப் பார்த்தேன். அதில் அவரது படிப்பறை கன்னிமாரா நூலகம்போல பல்லாயிரம் புத்தகங்கள் கொண்டதாக இருக்கிறது. அங்கே கோ யுன் ஒரு மேஜையில் அமர்ந்தபடியே துண்டுச்சீட்டில் தனது கவிதைகளை எழுதிப் போட்டபடியே இருக்கிறார். எந்தக் கவிதைக்கும் தலைப்பு கிடையாது. மேஜையில் சிதறிக் கிடக்கும் கவிதைகளை அவரது உதவியாளர் சேகரித்து, அடுக்கி, கணினியில் அச்சிட்டுச் சேமித்துக்கொள்கிறார்.

அவர் எப்படிக் கவிதை எழுதுகிறார் என நேர்காணல் செய்கிறவர் கேட்கும்போது, சிரித்தபடியே கோ யுன் சொல்கிறார்:

“ஷவரிலிருந்து தண்ணீர் கொட்டுவதுபோல என் மனதிலிருந்து கவிதைகள் கொட்டுகின்றன. அவற்றைக் காகிதத்தில் பதிவுசெய்வதே எனது வேலை.”

இன்னொரு நேர்காணலில், “கூட்டமாகப் பறந்து வரும் வண்ணத்துப்பூச்சிகளைப் போலக் கவிதைகள் எனக்குள்ளிருந்து கூட்டமாக வெளிவருகின்றன” என்கிறார்.

ஒரு நாளில் நாற்பதோ ஐம்பதோ கவிதைகளை எளிதாக தன்னால் எழுதிவிட முடியும் என்று சொல்கிறார் கோ யுன். ‘நிறைய எழுதினால் நீர்த்துப்போய்விடும்’ என்பார்கள், அது  பொய். சொட்டுவது தண்ணீர்க்குழாயின் இயல்பு; கொட்டுவது அருவியின் இயல்பு. கோ யுன் எதைத் தொட்டாலும் அது கவிதையாகிவிடுகிறது. அவர் கவிதையின் மந்திரக்கோலைக் கையில் வைத்துள்ள மந்திரவாதி. மகத்தான கவிகள் பலரிடம் இருந்த மந்திரக்கோல்தான் அது.

கவிதைகள் மட்டுமின்றி நாவல், சிறுகதை, கட்டுரை, கவிதை குறித்த சொற்பொழிவுகள், பத்திரிகைப் பணி, கவிதைகள் கற்பிக்கும் பேராசியர் பணி எனப் பன்முகம் கொண்டவர் கோ யுன். இரண்டு முறை நோபல் பரிசுக்கு சிபாரிசு செய்யப்பட்டவர். சமகாலத்தின் மகத்தான கவியாகக் கொண்டாடப் படுகிறார்

கோ யுன் 1997-ல் திபெத் வந்து 40 நாள்கள் தங்கியிருந்தார். அப்போது, இந்தியாவுக்கும் வந்திருக்கிறார். தனது இமய அனுபவத்தைக் கவிதைத் தொகுப்பாகக் கொண்டு வந்திருக்கிறார். அதில் ஒரு கவிதையில்,  ‘பெரிய மலைகளுக்குத்தான் பெயர்கள் இருக்கின்றன, சிறிய மலைகள் பெயரற்றவை. நான் சிறிய மலைகளைப் பாடுகிறவன்’ என்ற வரிகள் இடம்பெற்றுள்ளன.

மலைகளின் பெயர்கள் மட்டுமல்ல. மனிதர்களின் பெயரும் ஒரு சுமையே என்கிறார் கோ யுன். அவரது இன்னொரு கவிதையில், ‘மனிதர்கள் தங்கள் பெயரை உயர்த்திப் பிடிக்கவே விரும்புகிறார்கள். பெயர் என்பது வெறும் அடையாளமல்ல. அது ஒரு சிறை. கூட்டமாகச் செல்லும் பறவைகளுக்குத் தனித்தனிப் பெயர்கள் கிடையாது. எல்லாப் புறாவும் புறாதான். மனிதர்கள் தங்கள் பெயர்களின் வழியே தன்னைச் சுற்றி ஒரு வட்டத்தை உருவாக்கிக் கொள்கிறார்கள்’ என்கிறார்.

‘Ten thousand lives’ என்ற கவிதை வரிசையினை 30 தொகுதிகளாக வெளியிட்டிருக்கிறார். தன் வாழ்நாளில் சந்தித்த பல்வேறு துறை சார்ந்த மனிதர்களைப் பற்றிய கவிதைகளின் தொகுப்பு இது. 5,500 மனிதர்களைப் பற்றிய 4001 கவிதைகளை உள்ளடக்கியது. ‘Ten Thousand Lives’ என்ற கவிதைத் தொகுப்பு, இவரது உச்சபட்ச சாதனை. பத்தாயிரம் வாழ்க்கை என்பது முடிவற்ற வாழ்க்கை என்பதன் குறியீடு. ஆயிரத்து ஓர் இரவுகளைப்போலப் பத்தாயிரமும் ஒரு குறியீடே.

இந்தத் தொகுப்பிலிருந்து 160 கவிதைகள் ஆங்கிலத்தில் ஒரு தொகுப்பாகவும் 200 கவிதைகள் இன்னொரு தொகுப்பாகவும் வெளியாகியுள்ளன. இந்தத் தொகுப்புகளின் வழியாகவே கோ யுன்னைக் கண்டடைந்தேன். கோ யுனின் ஒரு கவிதைத் தொகுப்பிற்குக் கவிஞர் ஆலன் கின்ஸ்பர்க்  சிறப்பானதொரு முன்னுரை எழுதியிருக்கிறார்.

கோ யுனின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருப்பவர் பிரதர் ஆண்டனி. இவர் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளர். இவர் கோ யுன் பற்றிக் கூறும்போது, ‘ஓர் எரிமலை வெடித்து சீறுவதுபோல இவருக்குள்ளிருந்து கவிதைகள் பீறிடுகின்றன. அரசியலும் வரலாறும் அழகியலும் ஒன்றுசேர்ந்த அற்புதமான கவிதைகளை எழுதிவருகிறார். தனது பௌத்த துறவு வாழ்க்கையைப் பற்றி நாவலும் எழுதியிருக்கிறார். கொரியாவின் தேசியக்கவியாக கோ யுன் கொண்டாடப் படுகிறார்’ என்கிறார்.

கொரியாவில் அதிகம் விற்பனையாவது கவிதை நூல்களே. புத்தகக் கடைகளுக்குப் போனால், முன்வரிசையில் வரிசை வரிசையாகக் கவிதை நூல்களே அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளைப்போல நாவல்களுக்கு இங்கே முதன்மை இடம் கிடையாது.

சீன இலக்கியத்தின் தாக்கம் கொரிய இலக்கியத்தில் அதிகம். நமது சங்கக் கவிதைகளைப்போலவே கொரியாவின் செவ்வியல் கவிதைகளும் இயற்கையைப் புகழ்ந்து பாடுகின்றன. வாழ்வின் சுக துக்கங்களை இயற்கை நிகழ்வுகளுடன் இணைந்து பாடுவது கொரியக் கவிதையின் மரபு.

ஜப்பானிய இலக்கியங்கள் உலக அரங்கில் பெற்ற கவனத்தை, கொரிய இலக்கியங்கள் பெறவில்லை. தமிழில் கொரிய நாவலோ, சிறுகதைத் தொகுப்புகளோ, கவிதை நூல்களோ எதுவும் வெளியானதில்லை. ஒன்றிரண்டு சிறுகதைகள், கவிதைகள் மொழியாக்கம் செய்யப் பட்டிருப்பதோடு சரி. ஜப்பானிய இலக்கியங்கள் உலக அரங்கில் கொண்டாடப்படுவதற்கு அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் முதன்மையான காரணமாக இருந்தன.

1945-ல் ஜப்பானிடமிருந்து விடுதலை பெற்ற பின்னரே கொரியாவின் அடையாளங்கள் மறுஉருவாக்கம் பெறத் தொடங்கின. 1950-ல் நடைபெற்ற கொரியப் போர், தேசத்தை இரண்டாக்கியது. வட கொரியா, தென் கொரியா என இரண்டு தேசமாகியது.   இரண்டு கொரியாக்களுக்கும் பொதுவான சமயமாக பௌத்தம் நிலவுகிறது. அத்துடன் கன்பூசியம், கிறிஸ்தவம் போன்ற சமயங்களும் கடைப்பிடிக்கப்படுகின்றன. கொரிய மொழியின் எழுத்துமுறை ‘ஹான்குவல்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த எழுத்து முறையை அறிமுகப்படுத்தியவர், 14-ம் நூற்றாண்டில் கொரியாவை ஆட்சிசெய்த செயோங்.

1933-ல் தென் கொரியாவில் பிறந்தவர் கோ யுன். அப்போது ஜப்பானின் காலனியாக கொரியா இருந்தது.  ஜப்பானின் ஆட்சியில் இருந்த காராணத்தால், பள்ளிகளில் ஜப்பானிய மொழியே பிரதான மொழியாகக் கற்பிக்கப்பட்டது. ஆகவே, கோ யுன் தனது வீட்டில் கொரிய மொழியைக் கற்றுக்கொண்டார். தனது 16-வது வயதில் தற்செயலாகக் கொரியக் கவிஞர் ஹன் ஹாவின் கவிதைத் தொகுப்பினை  வாசிக்க நேர்ந்த அவருக்குக் கவிதைகளில் தீவிர ஈடுபாடு உருவாகியது. கவிஞர் ஹன் ஹாவைப்போலவே தானும் ஒரு கவிஞராக வேண்டும் என முடிவுசெய்துகொண்டார்.

1953-ல் நடந்த கொரிய யுத்தம் காரணமாக அவரது குடும்பத்தினரும் நண்பர்களும் கொல்லப்பட்டார்கள். அந்நாளில் கைவிடப்பட்ட பிணங்களைத் தூக்கிச் சென்று புதைக்கும் வேலை செய்தார் கோ யுன். போரின் பேரழிவும் சிதிலமும் அவரது மனநிலையை மிக மோசமாக்கின. அழிவின் உச்சத்தை நேரடியாகக் கண்டதால், வாழ்க்கையின் மீதான பற்று அறுபட்டுப்போனது. இதனால் மனமுடைந்து தற்கொலை முயற்சியை மேற்கொண்டார். ஆனால், சாவிலிருந்து தப்பித்து வந்தார்.

தனது 19-ம் வயதில் புத்த மடாலயத்தில் துறவியாகச் சேர்ந்தார். சங்க்சாங்க் என்னும் புத்தப் பெயரைச் சூட்டிக்கொண்டார்.  மடாலய வாழ்க்கை, போரினால் ஏற்பட்ட காயங்களை ஆற்றியதுடன் நிதானத்தையும் அன்பையும் கற்றுத் தந்தது. துறவியாக வாழ்ந்த நாள்களிலேயே தனது முதல் கவிதைத் தொகுப்பை வெளியிட்டார். ‘Other World Sensibility’ என்ற அந்தக் கவிதைத் தொகுப்பு அதிகம் கவனத்தைப் பெறவில்லை.

பின்பு, மடாலயத்தின் முக்கியப் பொறுப்பிற்கு உயர்த்தப்பட்ட கோ யுன், சில ஆண்டுகளில் மடாலயத்திற்குள்ளும் அதிகாரப் போட்டி, பாலியல் வேட்கை,  ஊழல் மலிந்திருப்பதைக் கண்டு துறவு வாழ்க்கையை முடித்துக்கொண்டு இயல்பு வாழ்விற்குத் திரும்பினார்.

கொரியாவின் சேஜு தீவுக்கு இடம் மாறி, அங்கே கலை மற்றும் மொழி கற்றுத்தரும் ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கினார். அந்த நாள்களில் ‘Seaside Poems and God’, ‘The Last Village of Languages’ ஆகிய இரண்டு கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டார். வாழ்வின் வெறுமையைத் தாங்க முடியாமல் பலமுறை தற்கொலை முயற்சிகள் செய்துள்ள இவர், ஒருமுறை இரண்டு மாத காலம் கோமா நிலையிலும் இருந்திருக்கிறார். வெறுமையும் நம்பிக்கையின்மையும் இவரது ஆரம்பக் கவிதைகளில் தீவிரமாக வெளிப்பட்டன.

1970-களில் கொரியாவின் அரசியல் தலைமையில் மாற்றம் உருவானது. புதிய தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டன. இன்னொரு பக்கம் மக்கள் கடுமையான பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்தார்கள். கோ யுன் நேரடியாக சமூகப் போராட்டங்களில் பங்குபெறத் தொடங்கிய தோடு, தீவிர அரசியல் கவிதைகளை எழுதவும் தொடங்கினார். இது ஆட்சியாளர்களுக்குக் கோபத்தை உருவாக்கியது. அவரது எதிர்ப்புக் குரலை ஒடுக்க வேண்டுமெனக் கருதி, வீட்டுச்சிறையில் அடைத்தது அரசு. ஆனாலும், அவர் தொடர்ந்து எதிர்ப்புக் கவிதைகளை எழுதிவந்தார். அத்துடன் தொழிலாளர்கள் மத்தியில் தனது கவிதைகளை நேரடியாக வாசித்துக்காட்டி எழுச்சி பெறவும் செய்தார்.

1980-ல் கொரிய ஜனநாயக விடுதலை இயக்கத்தில் பங்கேற்றதால் கோ யுன் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.  சர்வதேச அளவில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இரண்டு ஆண்டுகளில் விடுதலை செய்யப்பட்டார்.

சிறையிலிருந்த நாள்களில் அவர் சந்தித்த மனிதர்களைப் பற்றியும் சிறை வாழ்க்கையைப் பற்றியும் நிறைய கவிதைகள் எழுதியிருக்கிறார். தன்னுடைய வாழ்நாளில் சந்தித்த மனிதர்கள் பலரையும் பற்றிக் கவிதைகள் எழுத வேண்டும் என்ற எண்ணம் சிறைச்சாலையில் அவருக்குள் உருவானது. அதுவே பின்பு ‘Maninbo’ என 30 தொகுதிகளாக எழுதி முடிக்கப்பட்டது. இந்தக் கவிதைகளே அவரைத் தேசியக்கவியாக உயர்த்தியது.

“என் கவிதைகள் அழிவைப் பாடுகின்றன. அதற்குக் காரணமாகயிருந்த அரசியலை, வரலாற்றை, சமூக நிகழ்வுகளைப் பாடுகின்றன.  புத்த சமயத் துறவியாகப் பத்து ஆண்டுகள் இருந்தேன். பௌத்தம் எனக்கு உணவு போன்றது. நான் பௌத்த சிந்தனைகளை உண்டு வளர்ந்தவன். ஆகவே, என் எழுத்தினுள் பௌத்தச் சாறு கலந்துள்ளது. பௌத்தச் சிந்தனைகள் வெறுமையை எதிர்கொள்ள கற்றுத் தந்தன. பௌத்த தியானம் வாழ்வின் நெருக்கடிகளை எதிர்கொள்ளவும் மீட்சியடையவும் வழிகாட்டின” என்கிறார்.

“என் தாயோ, தந்தையா, தாத்தாவோ படித்த அறிவாளிகளில்லை. ஆனால், அவர்களின் அன்றாடப் பேச்சுமொழியே கவித்துவமாகயிருந்தது. அவர்கள் தங்கள் உணர்ச்சிகளைக் கவிதையாகவே வெளிப்படுத்தினார்கள். மரபாகக் கவிதை உணர்வுகொண்ட கொரியர்கள் நவீனத்துவத்தின் வளர்ச்சியால் இந்த உணர்ச்சியை இழக்கத் தொடங்கி யிருக்கிறார்கள். செயற்கையான மொழியில் உரையாடுகிறார்கள்” என ஒரு நேர்காணலில் குறிப்பிடுகிறார் கோ யுன்.

கோ யுன்னின் கவிதைகள் நவீன கொரிய கவிதையுலகில் தனிக்குரலாக ஒலிக்கின்றன. எளிய மனிதர்களை, அவர்களின் வாழ்க்கைப்பாடுகளைச் சித்திரங்களாகக் கவிதையில் பதிவுசெய்கிறார் கோ யுன்.

‘தனது கவிதைகளில் இடம்பெறும் ‘நான்’ என்பது தன்னைக் குறிப்பதில்லை. அது ‘கவிதைசொல்லியின் நான்’ எனக் கூறுகிறார்.  ‘தனக்கும் கவிதைசொல்லிக்கும் கவிதையின் பாடுபொருளுக்குமான உறவும் ஊசலாட்டமும் விசித்திரமானது. குழந்தைகள் தங்களுக்குத் தாங்களே பேசிக்கொள்ளும்போது, தன்னை இன்னோர் ஆளாகக் கருதிக்கொண்டு பேசுமில்லையா அதுபோன்றதே தனது கவிதைகள்’ என்கிறார் கோ யுன்.  “பெரும்பான்மைக் கவிதைகள் சுயமொழிதல் போன்றவை. அவை யாரோ எதிரில் இருப்பவரிடம் பேசுவதுபோலத் தோற்றம் தருவதாகயிருந்தாலும் தனக்குள் பேசிக்கொள்ளும் குரலே. சில கவிதைகளில் நினைவுகளே ‘நான்’ என்ற தோற்றத்தை உருவாக்கு கின்றன. தியானத்தின்போது தான் அற்ற நிலை உருவாகிறதில்லையா, அது கவிதையிலும் சாத்தியம். அந்த நிலையில் கவிதை என்பதும் கவிஞன் என்பதும் வேறல்ல.

கவிஞனுக்குக் குறிக்கோள் வேண்டியதில்லையா என்று கேள்வி எழுப்புகிறார்கள். கவிஞன் உலகிடம் உரையாடுகிறவன். உலகின் சகல விஷயங்களும் அவனோடு தொடர்பு கொண்டவை. அதில் எதற்கெல்லாம் பதில் சொல்கிறான். எதையெல்லாம் கேள்வி கேட்கிறான் என்பது அவனது உரிமை. அரசியலை சமூகம் ஒரு தளத்தில் எதிர்கொள்கிறது. அதே தளத்தில் கவிதை எதிர்கொள்வதில்லை. கவிதை எல்லாவற்றையும் தனக்கான களத்தில் தனக்கான மொழியில்தான் சந்திக்கிறது; வெளிப்படுத்துகிறது. அதுவே கவிதையின் தனித்துவம்.

வரலாறு இல்லாமல் கவிதையில்லை. ஆனால், வரலாறு என்பது தொகுக்கப்பட்ட கடந்தகாலமில்லை. அதிகார மாற்றத்தின் வரிசையுமில்லை. வரலாறு என்பது ஓர் உணர்வு. ஒரு முடிவில்லாத தொடர்ச்சி. வரலாற்றைக் கவிதை தீண்டும்போது வரலாறு உயிர்பெறுகிறது. ‘மனிதர்கள் மரணத்தோடு முடிந்துபோகிறார்கள்’ என்கிறார் சிக்மண்ட் ஃபிராய்ட். இல்லை, மரணத்தின் பின்பும் அவர்கள் வாழ்ந்துகொண்டும் ஆதிக்கம் செலுத்திக்கொண்டும் இருக்கிறார்கள் என்கிறது கவிதை. இலக்கியவாதிகளுக்கு இறந்தவர்களும் முக்கியமானவர்களே.

ஒரு கவிதையில் அது சொல்லும் விஷயமும் சொல்லப்படும்விதமும் முக்கியமானவை. இரண்டும் ஒத்திசைவோடு இருக்க வேண்டும். புதிய கவிதை லயங்கள் சாத்தியப்பட வேண்டும். இருப்பு மற்றும் இன்மை குறித்து கவிஞனுக்குத் தனியாகச் சொல்வதற்கு இருக்க வேண்டும். கவிஞன் கண்டுபிடிப்பாளன்போலச் செயல்பட வேண்டும்.  வெறுமையும் அழிவும் விரக்தியும் கொண்ட கவிதைகளை எழுதியபோதும் வாழ்வின் மீது பெரும் நம்பிக்கை கொண்டவனாகவேதான் செயல்பட்டு வந்திருக்கிறேன். கவிதை எழுதப்பட்ட உயர் மனோநிலைக்கு வாசகன் பயணிக்க வேண்டும். அப்போதுதான் கவிதையை முழுமையாக அவனால் புரிந்துகொள்ள முடியும். பருவகாலம் மாறிக்கொண்டிருப்பது போல எனக்குள் கவிதையின் வெளிப்பாடும் மாறிக்கொண்டே இருக்கிறது. பல தருணங்களில் நான் சிறுவனைப்போலவே உலகை வியக்கிறேன். ‘Little Pilgrim’ நாவலில் வரும் சிறுவன் சுதானன் நான்தான். நாவலில் சுதானனுக்கு வயது ஏறுவதே இல்லை. நீடித்த பால்யகாலத்திலேயே இருக்கிறான். இந்த நாவலை முழுமையாக எழுதி முடிக்க 22 ஆண்டுகள் ஆனது. முதற்பகுதி மட்டும் தனி நூலாக வெளியானது” என்கிறார் கோ யுன்.

உலகெங்கும் பயணம் செய்து கவிதைகள் குறித்து உரையாற்றுகிறார் கோ யுன். இளம் கவிஞர்களுடன் கலந்துரையாடல் செய்கிறார். பல்வேறு கவிதை வாசிப்பு நிகழ்வுகளில் கலந்துகொண்டு கவிதை வாசிக்கிறார். அவர் கவிதை வாசிக்கும் வீடியோக்கள் இணையத்தில் காணக் கிடைக்கின்றன. மந்திரங்களை உச்சாடனம் செய்வதுபோலவே கவிதைகளை வாசிக்கிறார். கவிதை எழுதுவதுடன் கவிதை குறித்த விழிப்புஉணர்வை, கொண்டாட்டத்தை, வழிகாட்டலைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். இது தமிழ்ச் சூழலில் மூத்த கவிகள் பலரிடம் இல்லாத விஷயம்.

கோ யுன்னின் நூற்றுக்கும் மேற்பட்ட கவிதைத் தொகுதிகளிலிருந்து தேர்வுசெய்து ஒரு கவிதைத் தொகுப்பைத் தமிழில் கொண்டுவர வேண்டும். அப்படி வெளிவந்தால் அது நிச்சயம் தமிழ்க் கவிதை உலகுக்கு வளம் சேர்க்கும் முயற்சியாகவே இருக்கும்.

**

கோ யுன் கவிதைகள்

தமிழில்: சமயவேல்

***

பழைய காலத்தில் ஒரு கவிஞன் ஒரு முறை கூறினான்

பழைய காலத்தில் ஒரு கவிஞன் ஒருமுறை கூறினான்

நமது தேசம் அழிக்கப்படுகிறது

எனினும் மலைகளும் ஆறுகளும் பிழைத்திருக்கின்றன

இன்றைய கவிஞன் கூறுகிறான்

மலைகளும் ஆறுகளும் அழிக்கப்படுகின்றன

எனினும் நமது தேசம் பிழைத்திருக்கிறது.

நாளைய கவிஞன் கூறுவான்

மலைகளும் ஆறுகளும் அழிக்கப்படுகின்றன

நமது தேசம் அழிக்கப்படுகிறது அய்யோ!

நீங்களும் நானும் முற்றிலுமாக அழிக்கப்படுகிறோம்.

ஒரு எலி

வெடிகுண்டுகள் வீசப்பட்டப் பிறகு

ஒரு மிக மெலிந்த எலி வெளியே வந்தது

அது மகிழ்ச்சியடைந்தது.

‘எவ்வளவு பசியுடன் நீ இருக்கிறாய்!’

கால் இழந்த ஹி-சியோல் அவனது மரத் தலையணையை எறிந்தான்,

அறிவில்லாமல் அது எலியை மோதியது.

அதைச் சமைத்துச் சாப்பிட்டான்.

அது இறந்தபோது

எலி உண்டாக்கிய கீச்சுக் கதறலையும் அவன் சமைத்துச் சாப்பிட்டான்

யுத்தம் எப்போது முடியுமோ?

**

இமயமலைத் தொடர்கள்

ஞாபகப்படுத்துதல் குறுகியது, மிகுபுனைவு நீண்டது!

நான் ஒருபோதும் பிறந்திராத ஓர் இடம் அங்கே

ஒருபோதும் பிறந்திருக்கவே கூடாது—

இமயமலைத் தொடர்கள்.

யாருக்குப் பதிலாக

நான் அங்கு சென்றேன்?

எல்லா பத்து விரல்களும் நடுங்கியவாறே நான் சென்றேன்.

பல வகையான முட்டாள்தனங்களை நான் வீட்டில் விட்டதுடன்,

ஒருசில சிகரங்களை உயரே நோக்கி உற்றுப் பார்த்தேன்

எட்டாயிரம் மீட்டரில் பிரகாசம், அவற்றினது உயர்ந்து குவியும் தங்க விளிம்புகள்.

அதற்குப் பின்பு, மற்றும் பிறகு,

ஓர் அநாதையாக இருப்பதைத் தவிர வேறு வழியற்றுப்போனது.

ஆனால் எனக்கொரு நம்பிக்கை இருந்தது:

மனித முயற்சியால் இயலும்வரை இமயத்திடமிருந்து தூர விலகி இருப்பது

மற்றும் துன்புறுத்தும் கேள்விகளின் உலகத்திடம் இருந்தும்.

ஆமாம், அதுதான் இது.

**

தியானத்தின் ஓரங்கள்

ஒருசில நாட்களுக்கு முன்பு இறந்தவர்களில் ஒருவன் கல்லறையிலிருந்து திரும்ப வந்தான்.

அதே பழைய புன்னகையுடன்,

அவன் தினசரி அணியும் ஆடைகள் சாம்பலிலிருந்து மீட்கப்பட்டன,

அவனே அவனது முழு அனுபவத்தையும் கூறினான்.

எங்கிலும் அவனைச் சுற்றி ஒரு நீர்மையமான வெளிச்சம் ஒளிர்ந்தது.

எனக்கருகில் எனது தம்பி, உடலும் இதயமும் பரிசுத்தமாகி,

அவன் போவதைப் பார்க்கிறான்.

நாங்கள் இதைப்போலவே ஒவ்வொரு பிற்பகலையும் கழித்தோம்,

வரவேற்பதும் வழியனுப்புவதும்.

எப்போதாவது அழிந்துபோன பண்டைய கொரிய மொழி பேசுதலை நான் கேட்கிறேன்.

நான் நினைக்கிறேன், அவர்கள் வழக்கமாக ஒருசில விஷயங்களை நீக்கிவிடுகிறார்கள்.

ஓர் அற்பகாலப் புத்துயிர்ப்பில்

அவர்களால் எவ்வாறு எல்லாவற்றையும் வெளிப்படுத்த முடியும்?

அவர்களது கதைகள், அவர்கள் இறப்பதற்கு முன்பும் பின்பும்,

வெளிப்படுத்த முடிகிற ஒருசில சொற்களைவிடவும் கூடுதலானதவை.

அவர்கள் மறைவதைப் பார்த்த பிறகு, எனது தம்பி ஒரு காலிக் கிண்ணம்போல

அமைதியாக இருக்கிறான்.

கொஞ்சமாக உடைகள் அணிந்து, அப்பாலிலிருந்து வரும் பார்வையாளர்களை

அவன் எப்போதும் வரவேற்கிறான்.

கூடங்களில் அணிவகுத்து நிற்கும் விலக்கப்பட்ட புனிதங்களின்

தெளிந்த கண்ணாடித் தடுப்புகளுடன்.

அவர்கள் என்ன கூறினாலும் ஓர் அமைதியான குரலில் பதிலளித்தவாறு,

அவனது இதயம் திறந்திருக்கிறது, தனியே, எல்லாவற்றையும் பெறுவதற்குத் தயாராக.

ஒவ்வொரு பிற்பகலும் கல்லறைக்கு அப்பாலிருந்து வரும் விருந்தினர்களை

நாங்கள் வரவேற்கிறோம் மற்றும் வழியனுப்புகிறோம் .

ஜன்னலுக்கு அப்பாலிருந்து வரும் ஒளி ஒரு சூரியக் Wகடிகாரம்,

அதைக்கொண்டே நாங்கள் நேரத்தைக் கூறுகிறோம்.

இறந்தவர்களிடமிருந்து எனது சகோதரன் கேட்கும் ஒவ்வொரு வார்த்தையும்

முதலில் வெயிலில் உலர்த்தப்பட்டுப் பிறகு பாதுகாக்கப்படுகிறது.

உண்மையில், இந்த உலகம்தான், அந்த உலகமும்,

பிரமாண்டமானது மற்றும் பரந்துவிரிந்தது;

இந்த உலகம் ஒரு கல்லறை.

நாளை, அப்படி வருபவர்களை நாம் திருப்பி அனுப்பாமல் இருப்போம்,

நம்முடனேயே அவர்களை வாழவைப்போம்.

***

நன்றி

தடம் இலக்கிய இதழ்

கவிஞர் சமயவேல்

0Shares
0