கும்பகோணம் அரசு கவின்கலைக் கல்லூரி மாணவர் பூபதி எனது சஞ்சாரம் நாவலின் ஒரு பகுதியை காமிக்ஸ் வடிவில் உருவாக்கியிருப்பதாக விரிவுரையாளரும் நண்பருமான கோ.வில்வநாதன் தெரிவித்தார். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. பூபதியை நேரில் காண வேண்டும் என அழைத்து வரச் சொன்னேன். சில தினங்களுக்குப் பிறகு எனது அலுவலகத்திற்கு வந்திருந்தார்கள்.
திரைப்படங்களுக்கான ஸ்டோரி போர்ட் வரைவதில் முனைப்புடன் செயல்படுகிறார் பூபதி
தனது விருப்பத்திற்காக சஞ்சாரம் நாவலின் முதல் அத்தியாயத்தை காமிக்ஸ் வடிவில் உருவாக்கியிருக்கிறார்.
மிக அழகான ஓவியங்கள். கருப்பு கோவிலையும் அங்கு நடக்கும் விழாவையும் நன்றாக வரைந்திருக்கிறார்
நாவல் முழுவதையும் காமிக்ஸாக உருவாக்கினால் பெரிய புத்தகமாக வரும். விலை அதிகமாகிவிடும். ஆகவே அதை 100 பக்க அளவில் காமிக்ஸ் புத்தகமாகக் கொண்டுவரலாம் என ஆலோசனை செய்தோம்.
தமிழில் நேரடியாக காமிக்ஸ் கொண்டு வர வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. சில ஆண்டுகளுக்கு முன்பு ஜப்பானிய மாங்கா போல ஒரு காமிக்ஸ் புத்தகம் ஒன்றை உருவாக்க முனைந்தோம். அது முழுமையடையவில்லை.
ஆகவே சஞ்சாரம் நாவலைக் காமிக்ஸ் வடிவில் கொண்டு வரலாம் என்ற எண்ணம் இப்போது துளிர்விடத் துவங்கியுள்ளது.