வீட்டில் உள்ளவர்கள் பகலில் உறங்கும் போது சிறுவர்கள் உறங்குவதில்லை. பெரியவர்கள் உறங்குகிற நேரத்தில் சிறார்கள் மிகுந்த சுதந்திரமாக உணருகிறார்கள்.

கையில் கிடைத்த துணியைப் போலப் பகலைச் சுருட்டி எறிந்து விளையாடுகிறார்கள். நிழலைப் போல வீட்டிற்குள் சப்தமில்லாமல் நடக்கிறார்கள்.
பிரிட்ஜை சப்தமில்லாமல் திறந்து குளிர்ந்திருந்த கேக்கை எடுத்து ஒரு கையால் வாயைப் பொத்திக் கொண்டு சாப்பிடுகிறார்கள். உறங்குகிறவர்களை ஏமாற்றுவது எவ்வளவு பெரிய சந்தோஷம்.
உறங்கும் போது பெரியவர்கள் சிறுவர்களாகி விடுகிறார்கள். குறிப்பாக அவர்களின் திறந்த வாய் பசித்த சிறுவர்களின் வாய்ப் போலிருக்கிறது.
தரையில் உறங்குபவர்களைத் தாண்டி நடப்பது ஆனந்தமானது. உறங்குகிறவர்களின் மீது அடிப்பது போல சிறார்கள் பொய்யாகக் கையை ஒங்குவது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது.
உறங்குகிறவர்கள் ஏணியின் மீதேறி நிற்பவர்கள் போலிருக்கிறார்கள். விழிப்பு வந்தவுடன் கிழே வந்துவிடுவார்கள்.
பகல் நேர உறக்கத்திலிருக்கும் வீடு என்பது சாய்ந்து கிடக்கும் டம்ளர் போன்றது என்பது சிறுவர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.
••
இது போன்ற புனைவற்ற குறிப்புகளாக நிறைய எழுதி வைத்திருக்கிறேன்.
இதனை எப்படி வகைப்படுத்துவது எனத் தெரியவில்லை.
ஆங்கிலத்தில் Micro essays, Micro memoirs, Micro stories எனப் பல்வேறு வகைமைகள் இருக்கின்றன. அமெரிக்காவில் நிறைய இளம்படைப்பாளிகள் 100 சொற்களுக்குள் இந்த வகைமையில எழுதுகிறார்கள்.
தமிழில் இதை நுண்ணெழுத்து என்று சொல்லலாம்.