சிம்கோ ஏரி

டொரன்டோவில் இருந்து மூன்று மணிநேரப் பயணத்தில் உள்ள சிம்கோ  ஏரிக்குச் சென்றிருந்தேன், ஒன்டாரியோ ஏரியை விடச் சிறியது என்றாலும் சிம்கோ ஏரி மிகவும் அழகானது, ஏரியைக் காண்பதற்கு விருப்பமான நண்பர்களுடன் செல்வது கூடுதல் சந்தோஷம் தரக்கூடியது, அன்று என்னுடன் மூர்த்தி, நவம் மாஸ்டர், செல்வன் மூவரும் உடன் வந்தார்கள்,

ஏரிக்குச் செல்வதற்காக பிரதான சாலையை விட்டு விலகி மரங்கள் அடர்ந்த பசுமையான சாலையில் பயணம் செய்து கொண்டிருந்தோம், சூடான டிம் ஹார்டன் காபி, தொடர்ந்த இலக்கிய உரையாடல்கள், என பயணம் நீண்டது

சாலையோரம் உள்ள குப்பைத் தொட்டி ஒன்றில் கீரி போன்ற விலங்கு ஒன்று குப்பையைக் கிளறி எதையோ சாப்பிட்டுக் கொண்டிருப்பதை கண்டேன், அது mongoose என்றும் குப்பைத்தொட்டி தான் அதற்கு விருப்பமான உலகம் என்று சொன்னார்கள்,

பத்தொன்பதாம் நூற்றாண்டு காலக் குடியிருப்புகள் போல அடக்கமான வீடுகள், கல்படிகள் கொண்ட உயர்ந்த தேவாலயம்,  இளவெயிலில் புல்வெட்டிக் கொண்டிருக்கும் வயதான பெண்மணி, குரைக்க மனதில்லாத குட்டி நாய்கள், படகைக் காரில் ஏற்றிக் கொண்டு ஏரியை நோக்கி சென்று கொண்டிருக்கும் பயணிகள்,வாகனங்களில் எங்கும் எவரும் ஹார்ன் உபயோகிப்பதில்லை என்பதால் சாலையில் செல்லும் போதும் இரைச்சலேயில்லை,

படகுத்துறைக்குச் சென்ற போது அங்கிருந்து அருகாமையில் உள்ள ஜார்ஜினா தீவிற்குப் போய்வரலாமா என்று செல்வன் கேட்டார், சரி என்று சொன்னேன்

படகுதுறைக்கு கார் போய் நின்றது

காரை அப்படியே படகில் ஏற்றிக்கொண்டு தீவில் விட்டுவிடுவார்கள், தீவிற்குள் சுற்றிப் பார்க்கலாம், மாலை நான்கு மணியோடு படகுப் போக்குவரத்து முடித்துவிடும், திரும்ப மனமற்றவர்கள் அங்கேயே தங்கிக் கொள்ளலாம்,  என்றார்

எங்களது கார் ஒரு பெரிய படகில் ஏறி நின்றது, காருக்குள்ளே உட்கார்ந்து கொள்ளுங்கள் என்றார்கள், ஒரு படகினுள் காரில் அமர்ந்தபடியே போவது விசித்திரமான அனுபவம், பெரிய இயந்திரப்படகு அது, எங்கள் காரைப்போல பனிரெண்டு கார்களை ஏற்றிக் கொண்டு படகு கிளம்பியது, மெதுவாக செல்லத்துவங்கி சீராக வேகமெடுத்தது, கரையில் இருந்து பார்க்கையில் தொலைவில் நீலவானமாகத் தெரிந்தது,

ஏரியின் உள்ளே போகப்போக வெளிர்நீலமாகி, பளுப்பு வெண்மையாகி, முடிவில் கலங்கிய வெண்ணிற வானமாகத் தெரிந்தது, எங்களது காரின் முன்னால் இருந்த காரில் இருந்து ஒரு நாய்க்குட்டி வெளியே எட்டிப்பார்த்துக் கொண்டிருந்த்து

அடுத்த பிறவி ஒன்று இருந்தால் கனடாவில் நாய்க்குட்டியாக பிறக்க வேண்டும் என்று ஒரு நண்பர் சொல்லி சிரித்தார், ஏன் எனக்கேட்டபோது சொன்னார்

கனடாவாசிகள் நாயை நேசிப்பதைப் போல வேறு எவராலும் நாய்களை நேசிக்கமுடியாது, எங்கே போனாலும் நாய்களைத் தங்களுடன் கூட்டிப்போய்விடுவார்கள், நாய்களைச் சொந்தப் பிள்ளைகளை விடவும் கூடுதலாக நேசிக்கிறார்கள், நாய்களுக்கான விசேச உணவுவகைகள், மருந்துவிற்பனையகம் அலங்கார ப்யூட்டி பார்லர்கள் யாவும் இருக்கின்றன என்று  விளக்கினார்கள்

நானும் டொரன்டோ வந்து இறங்கியது முதல் பார்த்துக் கொண்டேயிருந்தேன், வயதானவர்கள் அத்தனை பேரும் ஆளுக்கு ஒரு நாயோடு தான் நடக்கிறார்கள், நாய் இல்லாத வீடுகளே இல்லே, ஒரு நண்பர் வீட்டிற்குப் போயிருந்த போது அவர் தனது நாய் புத்தகம் படிப்பதைத் தவிர வேறு எல்லா வேலைகளும் செய்யக்கூடியது என்றார்,

உங்களுக்கு தெரியாமல் அது புத்தகம் படிக்கவும் கூடும் என்றேன்,

நாய்களுக்குப் புத்தகங்கள் தேவையில்லை, அவை நம்மைப்போல அதிகம் யோசிப்பதோ, பயப்படுவதோயில்லை, விருப்பத்தை அடையப் போராடுகின்றன, அடைந்துவிடுகின்றன, அல்லது கைவிட்டுவிடுகின்றன, மனதிற்குள் போட்டு வைத்து சிக்கலாக்கிக் கொண்டிருப்பதில்லை, நமக்கு தான் புத்தகம் எல்லாம் தேவை என்றார்,

அவர் சொன்னதில் உண்மையிருப்பதாகவே பட்டது,

எங்கள் முன்னால் இருந்த காரில் இருந்த நாயும் விடுமுறைக் நாளை கழிக்க தீவிற்கு போய்க் கொண்டிருந்தது, அதிர்ஷடசாலி நாய் என்று நினைத்தபடியே அதையே பார்த்துக் கொண்டிருந்தேன், கரை தூரத்தில் தெரிந்தது, படகு கரையை ஒட்டி நின்றவுடன் கார்கள் தரையிறங்கி செல்லத்துவங்கின

சுற்றுலா பயணிகளுக்கான தீவு, ஆனால் ஆள் நடமாட்டமேயில்லாமல் இருந்தது, தீவின் உட்புறத்தினுள் காரை ஒட்டிச் சென்றோம், ஒரு இடத்தில் போர் வீரனது சிலை ஒன்றிருந்தது, மூர்த்தி அதன் முன்னால் யாவரையும் நிற்க சொல்லி புகைப்படம் எடுத்தார்,

முந்திய நாள் மழை பெய்திருக்க வேண்டும், ஆங்காங்கே சாலையில் தண்ணீர் தேங்கியிருந்த்து,  டொரன்டோவில் பெய்யும் கோடைமழை பத்து பதினைந்து நிமிஷங்கள் பெய்து நின்றுவிடுகிறது, ஆனால் பெய்யும் நிமிஷங்களில் அதன் சீற்றம் வலிமையானதாகவே இருக்கிறது,

கார் மரங்கள் அடர்ந்த நீண்ட மண்பாதையில் சென்றது, இரண்டு மரங்களுக்கு இடையில்  ஏரி கண்ணில் பட்டு மறைந்தது,  புற்கள் அடர்ந்த தீவு, சரிந்து செல்லும் மண்சாலைகள், பனிக்காலத்தில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுவிடும் என்றார்கள்,

ஒரு மண்சாலையில் வண்டியை நிறுத்திவிட்டு இறங்கி நடந்து சிம்கோ ஏரியின் முழுமையைக் காண்பதற்கு நெருங்கிச் சென்றோம், அடிவானம் தெரியாமல் விரிந்திருந்தது ஏரி,

தெளிந்த தூய்மையான தண்ணீர், மூழ்க்கிடந்த கற்கள் தண்ணீரின் குளுமையேறி அழகான வடிவம் கொண்டிருந்தன, காற்று தண்ணீரில் ஒவியம் வரைவது போல சிற்றலைகளை எழுப்பிக் கொண்டிருந்தது, வெண்திட்டுகளாக மேகங்கள், தண்ணீரில் பச்சைகலந்த நீலம், ஒரு நடுத்தர வயது ஆள் சிறிய படகினை ஒட்டியபடியே தனியே போய்க் கொண்டிருந்தான், மீன்பிடிப்பிற்காக ஆங்காங்கே சிறிய சிவப்பு பந்து போன்ற உருளைகள் மிதந்து கொண்டிருந்தன, மீன் வலை தண்ணீருக்குள் முழ்கியிருக்க கூடும்,

கறுப்பு நிற வாத்து ஒன்று தனியே மிதந்து போய்க் கொண்டிருந்தது, அதன் கழுத்துப்பகுதி சாம்பல் வண்ணத்திலிருந்தது, தொண்டைப்பகுதியில் மங்கிய நீலநிறம் போல தெரிந்தது, அந்த வாத்தின் நீந்துதலில் வேகமேயில்லை, தனது வீட்டில் இருந்து சோம்பலுடன் வெளியே சென்று கொண்டிருப்பது போல மெதுவாக போய்க் கொண்டிருந்தது,

சிம்கோ ஏரியை சுற்றிலும் ஒரு காலத்தில் பூர்வகுடிகள் வசித்தார்கள் என்றும் காலனிய ஆட்சியின் பிறகு அவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துபோய்விட்டதாகச் சொன்னார்கள்

தற்போது அவர்களின் வம்சாவழிகள் தனிக்குடியிருப்பாக வசிக்கிறார்கள், ஆனால் அந்தப் பகுதிக்குள் பொதுமக்கள் போய்வருவதில்லை, அவர்கள் தனியொரு சமூகமாக வசிக்கிறார்கள் என்றார்கள்,   எங்கே என்ற போது தொலைவைக் காட்டினார்கள்

சிம்கோ ஏரிக்கு வருவதற்கு முதல்நாள் அது போன்ற ஒரு மலைச்சரிவு ஒன்றினுள் சென்றிருந்தேன்

ஒக் மற்றும் செடார் மரங்கள் அடர்ந்த காடு அது, செங்குத்தாக கீழே இறங்கிச் செல்லும் சரிவினுள் இறங்கி அரைமணி நேரம் நடந்து உள்ளே போயிருந்தேன், வெளியுலகம் முற்றிலும் துண்டிக்கபட்டிருந்தது, காட்டின் அடிவயிற்றுனுள் இருப்பது போலவே உணர்ந்தேன், மக்கிய இலைகளின் வாசனை முகத்தில் அடித்தது. இப்படியே நடந்து போனால் சிம்கோஏரியின் மறுபக்கம் வந்துவிடும் என்று நண்பர் ஜீவா சொன்னார்,

அப்படி சுட்டிக்காட்டப்பட்ட  இடத்தை இப்போது சிம்கோ ஏரியில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தேன், அது தான் பழைய வழி, காட்டிற்குள்ளாகவே நடந்து ஏரியை சுற்றிவந்துவிடுவார்கள், ஏரிக்காற்று அலைகளை உருவாக்கியபடியே கடந்து கொண்டிருந்த்து

ஏரியின் தண்ணீரைப் பார்த்தபடியே நின்றிருந்தேன், ஈரக்காற்று காதுமடல்களை தொட்டு தடவிப்போனது, மனது மிகுந்த சந்தோஷத்தில் விம்மிக் கொண்டிருந்த்து, ஒரு சிறிய கல்லை எடுத்து ஏரியில் எறிந்தேன், இனி இது கரைக்கு வருவதற்கு எவ்வளவு காலம் ஆகுமோ, அது வரை என் நினைவும் ஏரிக்குள் கிடக்கும்,

எவ்வளவு முறை பார்த்தாலும் அலுக்காத ஒரே பொருள் தண்ணீர் தான், பார்க்க பார்க்க மனது ஆனந்தமாகிக் கொண்டேயிருக்கிறது என்றார் நவம் மாஸ்டர், அவர் ஒரு அற்புதமான மனிதர், நிறைய படித்திருக்கிறார், அவரது பேச்சின் தெளிவும் நுண்மையும் அசாத்தியமானது, ஆனால் எளியமனிதராக, சதா கண்களில் சிரிப்பு கொப்பளிக்க உற்சாகத்துடன் பேசிக் கொண்டு வருபவராக இருந்தார்,

பயணத்தின் முடிவில் எனது வயது என்னவென்று நினைக்கிறீர்கள் எஸ்ரா என்று மாஸ்டர் கேட்டார்,

ஐம்பது இருக்ககூடும் என்று நினைத்தேன், அவர் சொன்ன வயதைக் கேட்டு வியப்பாக இருந்தது,

நம்பமுடியவில்லையா என்று சொல்லி சிரித்தார்

தண்ணீருக்கு வயதைக் கண்டுபிடிக்க முடியாது, நீங்களும் அது போல தான் மாஸ்டர் என்றேன்,

சிரித்துக் கொண்டபடியே எழுத்தாளர் அப்படித் தானே பேசுவீர்கள் என்றார்

மூர்த்தி ஆவணப்படக்கலைஞர் என்பதால் அவர் நிறைய புகைப்படங்களை எடுத்துக் கொண்டிருந்தார், செல்வன் நாடக்கலைஞர், அவரது பேச்சு, யோசனை முழுவதும் நாடக உலகம் தொடர்பாகவே இருந்தது, ஏரியின் கரையில் நின்றபடியே நாங்கள் தமிழ் நாடகச் சூழல் பற்றி பேசிக் கொண்டிருந்தோம், துர்கனேவின் நாவல் ஒன்றில் இது போல பயணத்தில் இலக்கிய நண்பர்கள் ஒன்று சேர்ந்து ஒரு ஏரியின் கரைக்கு போய் பேசிக் கொண்டிருப்பார்கள் என்பது நினைவிற்கு வந்த்து, இவான் துர்கனேவைப் பற்றி நான் ஏன் அதிகம் பேசவோ, எழுதியதோ இல்லை என்று அந்த நிமிஷம் தோன்றியது,

எவ்வளவு அற்புதமான எழுத்தாளர், அவரது மூன்று காதல்களில் ஒன்றான ஆஸ்யா உலகின் தலைசிறந்த காதல்கதையில்லையா, துர்கனேவின் தந்தையும் தனையர்களும் அற்புதமான நாவல், அவர் பிரெஞ்சு இலக்கியவாதிகளின் மரபில் வரும் சிறுகதை ஆசிரியர், சிம்கோ ஏரியின் முன்னால் நின்றபடியே துர்கனேவை நினைவு கொண்டது ஏனோ சந்தோஷமாக இருந்தது,

தண்ணீரை கண்ணால் பார்ப்பதால் என்ன கிடைத்துவிடப்போகிறது என்ற கேள்வி பலருக்குமிருக்கிறது, இது தண்ணீருக்கு மட்டுமான கேள்வியில்லை, இயற்கையை நெருங்கி போகையில்  இது போல பல  கேள்விகள் நமக்குள் ஏற்படுகின்றன, காரணம் இயற்கையை நாம் பயன்பாடு சார்ந்த பொருளாக மட்டுமே நினைக்கிறோம், அதோடு ஒன்றிணைவதில்லை

ஒன்றிணைதல் என்றால் கற்பனை செய்து கொள்வதா எனக் கேட்டால், அது கற்பனை செய்து கொள்வதில்லை, தானும் இயற்கையும் வேறில்லை என்று உணர்வது, தனது உடல், மனம் யாவும் இயற்கையால் உருவானது, அது தனக்கான தருணம் வந்தவுடன் இயற்கையோடு பொருந்திப்போகிறது என்று அறிந்து கொள்வதேயாகும்

ரொம்ப எளிமைப்படுத்திச் சொல்வதாக இருந்தால் பல்ப் ஒன்று மின்சாரத்தில் பொருத்தப்பட்டவுடன் ஒளிர்வதைப் பரவுவதைப் போல உங்கள் இருப்பு இயற்கையின் எல்லையற்ற சக்தியோடு தன்னைப் பொருத்திக் கொள்ள முடிகின்ற தருணங்களில் அந்த ஒளிர்வு உங்களை பரவசப்படுத்துகிறது,

இயற்கையோடு ஒன்றிணைந்தவர்கள் அந்த உணர்வை கேட்டறியாத சங்கீதம் என்று சொல்கிறார்கள், அந்த சங்கீதம் எல்லா இடத்திலுமே இருக்கிறது, குறிப்பாக இது போன்ற ஏரிகள், மலைகள், பள்ளதாக்குகளில் அந்த சங்கீதத்தினை நம்மால் எளிதாகக் கேட்க முடியும்,

ஏரியில் உள்ள தண்ணீர் எப்போதுமே இரண்டு நிறங்களில் காணப்படுகிறது, ஒன்று தூரத்தில் பார்க்கின்றன போது தெரிகின்றன நீல நிறம், அது ஆகாசத்தின் பிரதிபலிப்பு, மற்றது கையில் அள்ளும் போது தெரிகின்ற பளுப்பும் நீலமும் கலந்த நிறம், சிம்கோ ஏரியும் அப்படிதானிருந்தது.

பார்த்துக் கொண்டிருந்த போதே மேகமூட்டமாக துவங்கியது, மழை பிடித்துக் கொண்டுவிட்டால் படகு பயணம் நிறுத்தப்பட்டுவிடும், ஆகையால் திரும்பி செல்ல வேண்டிய சூழல் வந்துவிட்டது என்று சொல்லி காரை மீண்டும் படகுதுறையை நோக்கி திருப்பினோம்

ஏரி என்பது பூமியின் கண்கள் , மரங்கள் அதன் புருவங்கள் என்று இயற்கையியலாளர் ஹென்றி டேவிட் தோரூ தனது வால்டன் நூலில் எழுதியது நினைவில் வந்து போனது.

எந்த ஒரு இடத்தையும் நான்கு பருவ காலங்களிலும் பார்க்க வேண்டும், அப்போது தான் அதைப் பார்த்திருக்கிறேன் என்று சொல்லிக் கொள்ள முடியும், இல்லாவிட்டால் அதை கொஞ்சம் பார்த்திருக்கிறேன் என்று தான் சொல்ல வேண்டும், இதற்காகவே ஒரு ஆண்டாவது கனடாவில் வாழ வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது

•••

0Shares
0