சிரித்தால் மட்டும் போதுமா ?


நாகேஷை இரண்டு முறை சந்தித்திருக்கிறேன். ஆறு வருசங்களுக்கு முன்பு ஒரு முறை இயக்குனரான எனது நண்பர் தனது படத்தில் நடிக்க வைப்பதற்காக நாகேஷை  பார்க்க அழைத்து சென்றார். அந்த நேரத்தில் அவர் நடிப்பதிலிருந்து ஒதுங்கியிருந்தார். நட்பிற்காக சில படங்கள் ஒத்துக் கொண்டதோடு சரி.  வீட்டில் எளிமையான நாலு முழ வேஷ்டி, பனியன் அணிந்தபடியே அவர் அமர்ந்திருந்த விதம் வெகு இயல்பாக இருந்தது. படத்தில் நடிக்க தனக்கு விருப்பமில்லை என்று மறுத்துவிட்டார்.



விடைபெறும் போது இயக்குனரிடம் என்னை எதுக்குப்பா கூப்பிடுறே.சம்பளம் குறைச்சலா தந்தா போதும்னு தானே. என்று கேலியாக கேட்டார். அதெல்லாம் இல்லை சார் நீங்க எவ்வளவு பெரிய நடிகர் என்று இயக்குனர் வியந்த போது நீ என்ன பாக்க வெறுங்கையை வீசிகிட்டு வந்ததில் இருந்தே நான் எவ்வளவு பெரிய ஆளுனு தெரியுதே. ஏம்பா ஒரு எலுமிச்சம்பழம் கூடவா வாங்கிட்டு வந்திருக்க கூடாது என்று சொல்லி சிரித்தார்.


நண்பர் சங்கடத்துடன் அப்படியில்லை என்றதும் சும்மா கேலிக்கு சொன்னேன் என்றபடியே விடை தந்தார். காரில் வரும்போதெல்லாம் நாகேஷை பற்றியே பேசிக் கொண்டு வந்தார் இயக்குனர். ஆனால் எனக்கு நாகேஷ் மனதில் தனக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற ஆதங்கம் இருப்பதை உணர்ந்தேன்.


அதன் சில ஆண்டுகளுக்கு பிறகு ஒரு படப்பிடிப்பு தளத்தில்  பின்மதியத்தின்  போது  நாகேஷை தற்செயலாக பார்த்தேன். தனியே அமர்ந்திருந்தார். கறுப்பு நிற பேண்ட், கோடு போட்ட சட்டை, வயோதிக தோற்றம். அருகில் யாருமேயில்லை. வெயில் அவர் காலில் பட்டுக் கொண்டிருந்தது. அதை அவர் பொருட்படுத்தவில்லை.


கடந்து போன ஒரு வயதான லைட்மேனை அவர் பெயர் சொல்லி கூப்பிட்டவுடனே அவர் அண்ணே என்று அருகில் வந்து பவ்வியமாக குனிந்து நின்றார். உட்காருடா என்று அருகில் இருந்த நாற்காலியை காட்டினார். அந்த ஆள் நின்று கொண்டேயிருந்தார். இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள்.


படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க நாலைந்து இளம்பெண்களும் பையன்களும் வந்திருந்தார்கள். அவர்கள் நாகேஷை கடந்து சென்றார்கள். ஒருவர் கூட அவரிடம் நின்று பேசவோ, அவரை பார்த்து வியப்பு அடையவோ இல்லை.
உள்ளே இருந்த கதாநாயகனை நோக்கி உற்சாகமாக போய்க் கொண்டிருந்தார்கள். அதை நாகேஷ் கவனித்திருக்க வேண்டும் தன்னோடு பேசிக் கொண்டிருந்தவரிடம் சொன்னார்.


பாத்தியாடா.. நம்மளை ஒரு ஆளா கூட இந்த பொண்ணுக கவனிக்கலை. நான் பாக்காத ஹீரோவா? நானே எத்தனை படத்தில் ஹீரோவா நடிச்சிருக்கேன். இவங்களுக்கு எல்லாம் ஹீரோன்னா அருவாளை தூக்கிட்டு வெட்டணும்.  வானத்தில பறந்து பறந்து சண்டை போடணும். ஜிகினா டிரஸ் போட்டுகிட்டு கட்டிபுடிச்சி ஆடிணும். நான் அப்படி எதுவும் பண்ணலை. காமெடியன் தானே. அதான் கடந்து போய்கிட்டே இருக்காங்க என்றார்.


எனக்கு சார்லி சாப்ளின் நினைவு வந்தது. அவர் லைம் லைட்ஸ் என்றொரு படம் இயக்கியிருந்தார். அது வயதான காலத்தில் ஒரு கோமாளி கொள்ளும் மனவேதனைகளை பற்றியது. கோமாளிக்கு கண்ணாடியில் தன் உருவத்தை பார்க்கும் போது கடந்தகால கைதட்டல்கள் காதில் விழும்.


லைம் லைட்ஸ் படத்தில் ஹாலிவுட்டின் இன்னொரு பிரபலமான நகைச்சுவை நடிகர் பஸ்டர் கீட்டன் நடித்திருப்பார். கீட்டனும் இப்படம் நடித்த காலத்தில் புறக்கணிப்பிலும் தனிமையிலும் தான் வாழ்ந்து கொண்டிருந்தார். இந்த படம் கோமாளியின் அந்தரங்கவலிகளை சிறப்பாக வெளிப்படுத்தியது. சிரிப்பின் பின்னே ஒளிந்திருக்கும் அழுகையை அடையாளம் காட்டியது.


ஒருவகையில் அன்று நான் பார்த்த நாகேஷ் சிரிப்பின் பின்னே ஒளிந்திருக்கும் வேதனை கொண்ட நடிகரே.


உலகெங்கும் நகைச்சுவை நடிகர்கள் மக்களை சிரிக்க வைக்கிறார்கள். ஆனால் அவர்களது சொந்த வாழ்க்கை சிக்கலும் பிரச்சனைகளும் வலியும் தனிமையும் நிரம்பியதாகவே இருந்திருக்கிறது. அதற்கு நிறைய உதாரணங்கள் இருக்கின்றன.
குழந்தைகளின் கனவு நட்சத்திரமான சாப்ளினுக்கு சிறுவர்களையே பிடிக்காது. சொந்த பிள்ளைகளை கூட வெறுத்தார், மனைவியை விவகாரத்து செய்தார். உடன் வேலை செய்பவர்களை மோசமாக நடித்தினார் என்று எண்ணிக்கையற்ற புகார்கள். தமிழில்  என்எஸ் கிருஷ்ணன், சந்திரபாபு, போன்றவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையும் துயர் நிரம்பியதே.


உலகையே சிரிக்க வைப்பவன் மனம் நிரம்பிய வேதனையில் இருப்பது ஒருவகையில் சாபம் போலும். நாகேஷ் வாழ்க்கையும் அப்படிதானிருந்தது.


அந்த படப்பிடிப்பு தளத்தில் நாகேஷ் உடன் பேசிக் கொண்டிருந்த லைட்மேனை பின்னொருநாள் சந்தித்த போது இந்த சம்பவத்தை நினைவுபடுத்தி கேட்டேன். அவர் ஆதங்கத்துடன் நாகேஷ் ஷ÷ட்டிங்கிற்கு வருவதற்காக எம்.ஜி.ஆர். சிவாஜி எல்லாம் காத்துகிட்டு இருந்ததை பாத்திருக்கேன் சார் என்றபடியே


திருவிளையாடல் பட ஷ÷ட்டிங், சிவாஜி சார் மேக்கப் போட்டு சிவனாக ரெடியாகி காத்துகிட்டு இருக்காரு .நாகேஷ் வரலை. லேட்டா வந்தாரு. சிவாஜிக்கு கோபம் அதை காட்டி காட்டிகிடாம ஷாட் ரெடியானு கேட்டாரு. தருமியாக நாகேஷ் சிவன் பின்னாடி நடந்து போற மாதிரி சீன். சிவாஜி கம்பீரமா நடக்கிறாரு. பின்னாடி நாகேஷ் உடம்பை வளைச்சி தரையில விழந்துட போறவரு மாதிரி நடக்க தன் பின்னாடி நாகேஷ் ஏதோ காமெடி பண்றாருனு சிவாஜிக்கு புரியுது. ஆனா திரும்பி பார்க்க முடியலை, மேல இருந்த லைட்மேன்களுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.ஷாட் முடிஞ்சதும் நினைச்சி நினைச்சி சிரிச்சோம். எப்பேர்பட்ட நடிகர் நாகேஷ் என உணர்ச்சிவசப்பட்டு சொன்னார்.


அப்படித்தானிருந்தது நாகேஷின் காலம்.  அவர் நகைச்சுவையில் கொடி கட்டி பறந்த நாட்களில் ஒய்வின்றி நடித்திருக்கிறார். மக்கள் திரையில் நாகேஷை பார்த்த நிமிசம் சிரித்திருக்கிறார்கள்.


இன்று பல நகைச்சுவை நடிகர்களை குரலால் பாவனை செய்துவிட முடியும். மிமிக்ரி செய்பவர்கள் அதை சாதித்து காட்டுகிறார்கள். நாகேஷை அப்படி மிமிக்ரி செய்பவர்களை நான் கண்டதேயில்லை. காரணம் நாகேஷை குரலால் மட்டும் பாவனை செய்துவிட முடியாது. நாகேஷாக பாவனை செய்ய நாகேஷாகவே மாறவேண்டும்,  உடல்மொழி வேண்டும்,வேறு வழியேயில்லை.


எல்லா அரிய விஷயங்களையும் காலம் ஒரு நாள் கண்டுகொள்ளாமல் விட்டு போய்விடுகிறது. அது பெரும்பான்மை திரை நட்சத்திரங்களுக்கு அவர்கள் கண்முன்னே நடந்துவிடுகிறது. புறக்கணிப்பு தான் அவர்களின் மிகப்பெரிய வலி. அன்று படப்பிடிப்பு தளத்தில் நான் கண்டதும் அத்தகைய ஒன்று தான்.


தமிழ் சினிமாவில் தனித்த ஆளுமையாக இருந்த போதும் நாகேஷ் தேசிய அளவிலான எந்த அரசு அங்கீகாரமும் கிடைக்காமல் போன கலைஞனே.


அவரது நகைச்சுவை இயல்பானது. அது நினைத்து நினைத்து சிரிக்க கூடியது. அடுத்தவரை புண்படுத்தாதது. துளியும் ஆபாசமற்றது. அவரது நகைச்சுவைக்கு நம் மரபில் நீண்ட தொடர்ச்சியிருக்கிறது. தெருக்கூத்தில் வரும் கட்டியக்காரன். நாடகமேடையில் வரும் பபூன் என்று நமக்கான மரபிலிருந்த உடல்மொழியும் பகடியும் அவர் சரியாக உள்வாங்கியிருந்தார். அதே நேரம் அவர் சாப்ளினை, ஜெரி லூயிசை போல தன் உடலை நகைச்சுவையின் வெளியீட்டு வடிவமாக்கி கொண்டிருந்தார்


வேகம் தான் அவரது நகைச்சுவையின் பிரதான அம்சம். நடந்து செல்வதாகட்டும். துள்ளி விழுவது ஆகட்டும் எதிலும் மிகுவேகம் கொண்டிருந்தார். அதே நேரம் குணசித்திர வேஷங்களில் நடிக்கும் போது தனது வழக்கமான நடிப்பு வந்துவிடாமல் கவனமாக விலகி, ஆழமாகவும் மிகையின்றியும் தன்னை வெளிப்படுத்திக் கொண்ட சிறந்த நடிகர்.


நாகேஷின் மெலிந்த உடல் தான் அவரது பலம். ஒரு படத்தில் வில்லன் அவரை பார்த்து கொத்தவரங்காய் மாதிரி உடம்பை வச்சிகிட்டு எவ்வளவு வேலை காட்டுறே என்று கேட்பார். அது தான் நிஜம். தன்னியல்பாக அவருக்குள் நகைச்சுவை உணர்வு இருந்தது. அதை அவர் வெளிப்படுத்தும் பாங்கு அற்புதமானது. திருவிளையாடல் தருமியும், தில்லானா மோகனாம்பாள் வைத்தியும், சர்வர் சுந்தரமும், என எத்தனையோ மறக்கமுடியாத நகைச்சுவை பாத்திரங்கள்.


எனக்கு வேட்டைகாரன் என்ற படத்தில் வரும் நாகேஷின் நகைச்சுவை ரொம்பவும் பிடிக்கும். படம் முழுவதும் சீட்டுவிளையாடுவதில் விருப்பம் உள்ளவராக இருப்பார். பாதி தூக்கத்தில் சீட்டை அவர் விரித்து காட்டும் அழகும், அதை வைத்து அவர்  செய்யும் வேடிக்கைகளும் வாய்விட்டு சிரிக்க வைப்பவை. 


நாகேஷின் நகைச்சுவை உணர்வை மட்டுமின்றி அவருக்குள் இருந்த அற்புதமான நடிப்பு திறனை முழுமையாக வெளிப்படுத்தியவர் கே. பாலசந்தர். இந்த இருவரின் கூட்டணி தமிழ் சினிமாவில் உருவாக்கிய புத்துணர்ச்சி இன்றும் வியப்பளிக்க வைக்கிறது. குறிப்பாக மேஜர் சந்திரகாந்த், எதிர்நீச்சல், சர்வர் சுந்தரம், பாமா விஜயம் அனுபவி ராஜா அனுபவி, நீர்குமிழி, என்று எத்தனை வெற்றிபடங்கள்.


வெற்றி  சினிமாவில் பலருக்கும் தன்னை பற்றிய மிகையான பிம்பத்தை உருவாக்கிவிடுகிறது. நாகேஷ் விஷயத்திலும் அது நடந்திருக்கிறது. நண்பர்களை விட்டு விலகியிருக்கிறார் சினிமா தானே என்று நினைத்து நாகேஷ் செய்த படங்கள் பல அவரது இயல்பான நகைச்சுவையை கூட நிறைவேற்ற முடியாமல் தோற்றுபோனது. தன்னை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று மறு எத்தனிப்பில் அவர் ஒத்துக் கொண்ட படங்களும் அவரது புறக்கணிப்பிற்கு கூடுதல் காரணங்களாகின.


பாலசந்தருக்கு அடுத்தபடியாக நாகேஷை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டவர் கமலஹாசன். கமலோடு நாகேஷ் நடித்த படங்களில் நாகேஷின் நகைச்சுவை அற்புமாக அமைந்திருந்தது. நாகேஷை வில்லனாக மாற்றிய அபூர்வ சகோதரர்கள், பிணமாக நடித்த மகளிர் மட்டும் , அவ்வை சண்முகி, பஞ்ச தந்திரம் உள்ளிட்ட எத்தனையோ படங்கள் நாகேஷிற்கு நடிப்பின் புதிய பரிமாணங்களை உருவாக்கியது.


நாகேஷின் பாணி தான் இன்றும் தமிழ் நகைச்சுவைக்கு அடிப்படையாக இருக்கிறது. அவரை போல வசனங்களை வெளிப்படுத்துவதில் உள்ள தனித்துவமும் உடலை தன் கட்டிற்குள் வைத்திருந்த நடிப்பும், துள்ளல் நடனமும், சட்டென மாறும் முகபாவங்களும் இன்று வரை வேறு நகைச்சுவை நடிகருக்கு முழுமையாக கூடி வரவில்லை.


சிரிப்பின் உச்சம் அழுகையில் முடியும் என்பார்கள். தனது துயரங்களுக்கான அழுகையை சிரிப்பாக மாற்ற தெரிந்தவனே உயர் கலைஞன். நாகேஷ் அதற்கொரு தனி அடையாளம்.


அவரது மரணம் ஏற்படுத்தியுள்ள வெற்றிடம் பிறரால் நிரப்பபட முடியாதது.


இன்றைக்கும் தொலைக்காட்சியில் நாகேஷின் நகைச்சுவை காட்சி துணுக்கு ஏதாவது வந்தால் கடந்து சென்றுவிடமுடியாமல் முழுமையாக பார்க்க தூண்டுகிறது. அது தான் அவரது மிகப்பெரிய அங்கீகாரம்.


*
ஆஸ்திரேலியாவிலிருந்து வெளியாகும் உதயம் இதழில் வெளியான கட்டுரை


 

0Shares
0