கோவை ஆர்.எஸ். புரம் கவுலி பிரவுன் ரோட்டிலுள்ளது மாவட்ட மைய நுாலகம். தமிழகத்தில் முதல்முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கான அதிநவீன நுாலகப்பிரிவு இங்கே திறக்கப்பட்டுள்ளது.
கோவைக்குச் சென்றிருந்தபோது நண்பர் PUCL சந்திரசேகர் அந்நூலகத்தைப் பார்வையிட அழைத்துச் சென்றார். சந்திரசேகர், நூலகத்திற்கு தன்னார்வத்துடன் பல்வேறு சேவைகள் செய்து வருபவர். தீவிர வாசகர். களச்செயல்பாட்டாளர்.
முற்றிலும் குளிர் சாதன வசதி செய்யப்பட்ட நூலகப்பிரிவு மிக அழகாக வடிவமைக்கபட்டுள்ளது.
பார்வையற்றவர்களுக்கான பிரெய்ல் புத்தகங்கள். பிரைலி கம்யூட்டர்கள் ஆட்டிசம் பாதிப்பு உள்ள குழந்தைகள், செவித்திறனை இழந்த குழந்தைகள் எளியமுறையில் புத்தகங்களை எடுத்து படிக்கவும், கம்ப்யூட்டரை இயக்கவும் நவீன வசதிகளுடன் இம்மையம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆடியோ புத்தகங்கள். கணிணியின் உதவி கொண்டு எழுதுவது, ஸ்கேனர்கள், நவீன மென்பொருட்கள், புதிர் விளையாட்டுச் சாதனங்கள் என யாவும் ஒரு சேர அமைக்கபட்டுள்ளன.
சக்கரநாற்காலியின் துணையோடு புத்தக அடுக்குகளைப் பார்வையிடலாம். கற்றல் குறைபாடு கொண்ட சிறார்களுக்காக விசேச கணிணிபலகைகள், புத்தகங்கள் இங்குள்ளன.
இந்த நூலகத்தில் மாற்றுதிறனாளிகள் படிப்பதற்கும் எழுதுவதற்கும் தன்னார்வமிக்கவர்கள் உதவி செய்கிறார்கள். தமிழகம் முழுவதும் இது போல மாற்றுதிறனாளிகளுக்கான தனி நூலகப்பிரிவு உருவாக்கபட வேண்டும்.
நூலகர் கார்த்திகேயனைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தேன். மிகுந்த ஈடுபாட்டுன் மாற்றுதிறனாளிகளுக்கு நூலகம் எவ்வளவு முக்கியமானது என விளக்கிச் சொல்லிக் கொண்டிருந்தார்.
அத்துடன் மாற்றுதிறனாளிகள் போட்டி தேர்வு எழுதுவதற்குக் கூட நாங்கள் முழுமையாக உதவிகள் செய்கிறோம். தேவையான மாற்றுதிறனாளிகள் இந்த நூலகத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனக்கூறினார்
கோவையில் உள்ள பலருக்கும் இந்தச் சிறப்பு நூலகப்பிரிவு பற்றித் தெரிந்திருக்கவில்லை. உங்களுக்கும் தெரிந்த மாற்றுதிறனாளி குழந்தைகளை இந்நூலகத்திற்கு அழைத்துச் செல்லுங்கள். படிக்க உதவி செய்யுங்கள். அவர்களைச் சந்தோஷப்படுத்த வேண்டியது நமது கடமை.
••
முகவரி