சிறிய உண்மைகள் 2

பசியின் குரல்

பசியைப் பிணி என்கிறது மணிமேகலை. அட்சயபாத்திரத்தைக் கையில் ஏந்தி உலகின் பசிப்பிணியைப் போக்குகிறாள் மணிமேகலை. இப்படி ஒரு கதாபாத்திரமோ, அட்சய பாத்திரமோ இந்தியாவின் வேறு மொழி இலக்கியங்கள் எதிலும் இடம்பெற்றிருக்கிறதா என்று தெரியவில்லை. பசியாற்றுவதைப் அறமாகக் கருதிய தமிழ்ச் சமூகம் பசியால் ஏற்படும் இன்னல்களை. வறுமையால் ஏற்பட்ட பசிக்கொடுமையின் விளைவுகளையும் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறது.

புறநானூறு படித்தால் பசியின் குரல் தான் மேலோங்கி ஒலிக்கிறது. பசியும் வறுமையும் பற்றிச் சங்க இலக்கியம் ஏராளமாகப் பதிவு செய்திருக்கிறது. பசித்த கடவுள்கள் வாழும் நிலமிது.

பசியைப் போக்குவதற்குத் துறவியான வள்ளலார் தான் அணையா அடுப்பினை உருவாக்கினார். எந்த அரசனும் இது போன்ற அறச்செயலை முன்னெடுக்கவில்லை. பசியின் குரலை இலக்கியம் ஆழ்ந்து கேட்கிறது. ஆராய்கிறது. அதற்கான தீர்வினை முன்வைக்கிறது. இலக்கியத்தின் ஆதாரக் கருப்பொருட்களில் ஒன்று பசி.

உணவு தனிமனிதனின் தேவை மட்டுமில்லை. உணவு கொடுப்பது சமூகத்தின் பொறுப்பும் கடமையுமாகும். ஒரு காலத்தில் பட்டினிச்சாவு பற்றிய செய்திகள் அதிகமிருந்தன. பட்டினிச்சாவு என்பது எவ்வளவு கொடுமையானது. பஞ்சகாலத்தில் மட்டுமில்லை வறுமையால் உணவு கிடைக்காமல் பட்டினிச்சாவு அடைந்தவர்கள் பற்றிய செய்திகள் வரலாற்றில் இருக்கிறதே. பட்டினிச்சாவு என்பது ஒரு தேசத்திற்குத் தரப்படும் எச்சரிக்கை.

பசியின் உக்கிரத்தை, தவிப்பை இன்றைய தலைமுறை அறியவில்லை என்றே சொல்வேன். பசித்த நேரம் எதுவும் கிடைக்காமல் வெறும் தண்ணீரைக் குடித்து வயிற்றை நிரப்பிக் கொண்ட பழைய தலைமுறையின் வாழ்க்கை இவர்களுக்கு மிகை நாடகமாகத் தோன்றக்கூடும்.

பால்யத்தில் எனது கிராமத்தில் கண்டிருக்கிறேன். அரிசிச் சோறு என்பது பலருக்கும் கனவு. எப்போதாவது தான் நெல்லுச்சோறு பொங்குவார்கள். மற்ற நாட்களில் கூழ் அல்லது கஞ்சி தான். அதுவும் சூடாகக் கிடைக்காது. இன்று நம்முடைய வாழ்க்கைத் தரம் உயர்ந்திருக்கிறது. இலவசமாக அரிசி ரேஷனில் தரப்படுகிறது. பல நாள் பட்டினி என்ற பேச்சே இப்போது கிடையாது. உணவை வீணடிப்பதும் அதன் மதிப்பை அறியாமல் நடந்து கொள்வதும் அதிகமாகியிருக்கிறது.

ஏ.கே.ராமானுஜம் தொகுத்த இந்திய நாட்டுப்புறக்கதை புத்தகத்தில் ஒரு கன்னடக்கதை இருக்கிறது. அதில் அறிவாளியான பண்டிதன் ஒருவன் வறுமையில் வாழுகிறான். அவனுக்கு அன்றாடம் அரைவயிறு கால் வயிறு தான் உணவு கிடைக்கிறது ஒரு நாளாவது வயிறு நிறையச் சாப்பிடவே வேண்டுமென ஆசை கொண்டிருந்தான். ஆனால் அதற்குச் சந்தர்ப்பமே கிடைக்கவில்லை.

இந்தப் பண்டிதனின் அறிவாற்றலைப் பற்றிக் கேள்விப்பட்ட மன்னர் அரண்மனைக்கு அழைக்கிறார்.

நிச்சயம் பெரிய விருந்து கிடைக்கும் எனச் சந்தோஷமாக மன்னரைக் காணச் செல்கிறான். வரவேற்று உபசரித்து விருந்து தருகிறார்கள். பெரிய இலைபோட்டு விதவிதமான உணவு வகைகளைச் சாப்பிட தருகிறார்கள். இன்றாவது முழு வயிறு சாப்பிட வேண்டும் என்று நினைத்து ஆசை ஆசையாகச் சாப்பிடுகிறான்.

ஆனால் பாதிச் சாப்பாட்டில் காரை உதிர்ந்து உணவில் மண் கலந்துவிடுகிறது. அப்படியே இலையை மூடி வைத்துவிட்டு ஏமாற்றத்துடன் எழுந்து கொள்கிறான். விஷயம் அறிந்த மன்னர் அடுத்த நாள் இதைவிடப் பெரிய விருந்துக்கு ஏற்பாடு செய்வதாகச் சொல்கிறார்.

அரண்மனைக்கே வந்தாலும் நமக்கு வயிறுமுட்டசாப்பிடக் கொடுப்பினை இல்லை போலும் என நினைத்துக் கொண்டு மறுநாள் வரை காத்திருக்கிறான். மறுநாள் மிகப் பெரிய விருந்து வைக்கிறார்கள்.

இன்று சோற்றில் கல் விழுந்தாலும் மண் விழுந்தாலும் கண்ணை மூடிக் கொண்டு சாப்பிட வேண்டியது தான் என அள்ளி அள்ளி வயிற்றை நிரப்புகிறான். விதவிதமான இனிப்புகளை ருசிக்கிறான்.

இவன் பசியோடு விளையாட நினைத்த பிரம்மா தானே ஒரு கல்லாக மாறி சோற்றில் கிடக்கிறார். அவரையும் சேர்த்து பண்டிதன் விழுங்கி விடுகிறான். பிரம்மா அவன் வயிற்றுக்குள் சிக்கிக் கொள்கிறார். வாழ்நாளில் அன்று தான் அவனது பசியடங்கி முழு வயிறு சாப்பிட்ட திருப்தி வருகிறது.

நிரம்பிய வயிறு சந்தோஷம் எல்லாவற்றையும் விடப் பெரியது.

சந்தோஷமாக வீடு திரும்புகிறான். வயிற்றுக்குள் சிறைப்பட்ட பிரம்மாவை மீட்க தேவலோகமே அவன் முன்னால் வந்து மண்டியிடுகிறது. லட்சுமியும் சரஸ்வதியும் பிரம்மாவை விட்டுவிடும்படி வேண்டுகிறார்கள். தனக்குத் தேவையான பொன்னும் பொருளும் வசதிகளும் செய்து கொடுத்தால் மட்டுமே பிரம்மாவை வெளியே விடுவேன் என்கிறான் பண்டிதன். முடிவில் எல்லாச் செல்வங்களும அவனுக்குக் கிடைக்கின்றன. வாந்தி எடுத்து பிரம்மாவை வெளியே விடுகிறான்.

வேடிக்கையான கதையாக இருந்த போதும் ஒருவனின் வயிற்றுப் பசியோடு பிரம்மா விளையாடுகிறார் என்பது ஆழமான நம்பிக்கை. இந்தப் பண்டிதனைப் போல அரைவயிறு கால் வயிறு சாப்பிட்டு நாளை கடத்துபவர்கள் இன்றுமிருக்கிறார்கள்.

இருக்கும் உணவைப் பிள்ளைகளுக்குத் தந்துவிட்டு மிச்சம் மீதி இருக்கும் உணவைச் சாப்பிடும் அம்மாக்கள் அனைவரும் இந்தப் பண்டிதனைப் போன்றவர்களே. அவனுக்காவது என்றாவது ஒரு நாள் வயிறு முட்டச் சாப்பிட வேண்டும் என்ற ஆசையிருக்கிறது. அம்மாக்களுக்கு அதுவும் கிடையாது. அவர்கள் வாழ்நாள் முழுவதும் பசித்த வயிறு கொண்டவர்களே.

ஒரு முறை நண்பனின் அம்மா சொன்னார்

“சின்னவயசுல வீட்லே ரொம்ப வறுமை. மூணு வேளையும் சாப்பாடு கிடைக்காது. அதனால் பட்டினி கிடந்து வயிறு சுருங்கிப்போயிருச்சி தம்பி. இப்போது வசதி வந்துட்டாலும் ரெண்டு இட்லிக்கு மேலே சாப்பிட முடியலை“

இது தான் உண்மை. நீங்கள் விரும்பும் நேரத்தில் வயிறு அதை அனுமதிக்காது. இளமை பருவம் தான் பசியின் உக்கிரப் பருவம். அந்த வயதில் சாப்பிடுவதைப் போல வாழ்வின் வேறுபருவங்களில் சாப்பிட முடியாது.

கோபமும் வெறுப்பும் பசியைத் தான் ஆயுதமாகக் கையாளுகிறது. வீட்டில் சாப்பிடாமல் இருப்பது கோபத்தின் வெளிப்பாடு. வீட்டில் ஏற்பட்ட சண்டையில் கொடுத்துவிட்ட டிபன் பாக்ஸை திறந்து கூடப் பார்க்காமல் அப்படியே திரும்பிக் கொண்டுவரும் பள்ளி மாணவர்களைக் கண்டிருக்கிறேன். கோபம் ஏன் உணவின் பக்கமே திரும்புகிறது. வேறு வழியில் கோபத்தைக் காட்டினால் அதன் மதிப்பு ஏன் குறைந்துவிடுகிறது.

கோபத்தில் மட்டுமில்லை வெறுப்பிலும் உணவு தான் மையமாகிறது. வேண்டாதவர்கள் தரும் சாப்பாட்டினை யாரால் ருசித்துச் சாப்பிட முடியும்.

பந்தியில் உட்கார்ந்து இலை போட்டு இனிப்பு வைத்தபிறகு எழுந்து கொள்ளச் சொல்லிவிட்டார்கள் என்று இனி கல்யாண வீட்டில் சாப்பிடவே மாட்டேன் என்று வைராக்கியமாக இருக்கும் முத்தண்ணா என்பவரை அறிவேன். அந்த வடு ஆழமானது. இலையின் முன்னால் அமர்ந்தவனை எழுப்பி வெளியே அனுப்புவதைப் போன்ற பெரிய அவமானம் வேறில்லை.

பசியை மனிதர்களால் ஒரு போதும் வெல்ல முடியாது. தணிக்கமுடியும். கட்டுப்படுத்த முடியும் அவ்வளவே. பசி தான் மனிதனை வழிநடத்துகிறது. பசி தான் வெல்லுகிறது.

வயிற்றை மையப்படுத்திய இலக்கியங்கள் என்றே சில படைப்புகளை வகைப் படுத்துகிறார்கள். அந்த எழுத்தில் உணவு தான் கதையின் பிரதானம். விதவிதமான ருசியைப்பற்றியும், உணவின் பின்னுள்ள ரகசியம் வரலாறு நம்பிக்கை, சடங்குகள் மகிழ்ச்சியைப் பற்றி அந்தப் படைப்புகள் பேசுகின்றன. ரஷ்ய நாவல்களை வாசிக்கும் போது அவர்கள் சாப்பிடுகிற உணவு பற்றி விரிவாக எழுதப்பட்டிருக்கும். பிரெஞ்சு கதைகளிலும் உணவு பற்றி விரிவாக எழுதுவார்கள்.

ஆடம்ஸ் ரிப் என்றொரு ஹாலிவுட் படம் பார்த்தேன். அதில் ஒரு பெண் கணவனால் ஏமாற்றப்படுகிறாள். அவள் மூன்று குழந்தைகளின் தாய். கணவன் வேறு பெண்ணோடு பழகுகிறான். வீட்டிற்கே வருவதில்லை என்பதை நினைத்துக் கவலைப்படுகிறாள். இது பற்றிக் கணவனுடன் சண்டையிடுகிறான். அவனோ உன் வேலையைப் பார்த்துக் கொண்டு வீட்டில் முடங்கிக் கிட என்று அவளை அடிக்கிறான்.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அவள் ஒரு நாள் தனது சேமிப்புப் பணத்தில் ஒரு துப்பாக்கி வாங்குகிறாள். கணவனைக் கொல்வது என்று முடிவு செய்கிறாள்

அந்த எண்ணம் மனதில் தோன்றியவுடனே அவளுக்குள் பசி அதிகமாகிறது. துப்பாக்கியைக் கைப்பையில் மறைத்துக் கொண்டு அவனைத் தேடிப் போகிறாள். வழியில் ஒரு உணவகத்தில் விருப்பமான உணவைச் சாப்பிடுகிறாள். வயிறு நிறையச் சாப்பிட்டாலும் அவளது பசி அடங்கவில்லை. கணவன் அலுவலகத்திற்குச் சென்று அவனைச் சந்திக்கிறான். ஏன் இங்கே வந்தாள் என்று கோவித்துக் கொள்கிறான்.. மாலை வரை அவனது அலுவலகத்திலே காத்து கிடக்கிறாள். அப்போதும் பசி குறையவில்லை. அவனது அலுவலகக் கேண்டியனில் சாப்பிடுகிறாள். காபி குடிக்கிறாள். பசி தீரவேயில்லை. அது ஒரு நெருப்பு போல எரிந்து கொண்டேயிருக்கிறது

மாலை அவனைப் பின்தொடர்ந்து அவனது ஆசைநாயகியின் வீட்டிற்குப் போகிறாள். அந்த வீட்டுக்கதவைத் தட்டி உள்ளே போவதற்கு முன்பு இனிப்பு சாப்பிடுகிறாள் .வாய் நிறைய இனிப்போடு தனது துப்பாக்கியை எடுத்துச் சுடத்தெரியாமல் சுடுகிறாள். கணவன் அலறுகிறான். அவன் காலில் துப்பாக்கிக் குண்டு பாய்கிறது அவளைக் கைது செய்து போலீஸ் சிறையில் அடைக்கிறது

வழக்கறிஞர் அவளிடம் விசாரணை செய்யும் போது அவனைச் சுட்டபிறகும் தனது பசி அடங்கவில்லை என்கிறாள்.

அவளுக்குள் அடக்கி வைக்கப்பட்டிருந்த கோபம், வெறுப்பு தான் பசியாக மாறியிருக்கிறது. அடக்கி வைக்கப்பட்ட உணர்வுகள் தான் பசியாக உருமாறுகிறது, அல்லது பசியற்றுப் போகச் செய்துவிடுகிறது . இந்தப் பசியை உணவால் தீர்க்க முடியாது. அது தானே அணையும் வரை காத்திருக்க வேண்டும்.

அந்தப் பெண் ஏன் கணவனைக் கொல்லத் துப்பாக்கியை உயர்த்தும் முன்பு இனிப்பு சாப்பிடுகிறாள். தன்னுடைய கசப்பான வாழ்க்கையை அவள் கடந்து செல்ல விரும்புகிறாள். இனிப்பு தற்காலிக விடுதலை உணர்வைத் தருகிறது. அந்த இனிப்பு அவள் இதன் முன்பு சாப்பிடாத சுவை போலிருக்கிறது. இனிப்பைச் சுவைக்கும் போது அவள் சிறுமியாகிவிட்டாள் என்பது தான் நிஜம்.

அந்தப் பெண்ணின் பசியை எப்படி வகைப்படுத்துவது. அது உடலில் தோன்றிய பசியில்லை, மனதில் உருவான பசி. மனதிற்கு உணவு அளிப்பது எப்படி. சந்தோஷத்தால் மட்டுமே மனதின் பசியை அகற்ற முடியும். தணிக்க முடியும். பூவை ஆணையிட்டு மலரச் செய்யமுடியாது என்பது போலவே ஒருவரை ஆணையிட்டுச் சந்தோஷப்படுத்த முடியாது. தானே மகிழ்ச்சி அரும்ப வேண்டும்.

பண்டிதனும் இந்தப் பெண்ணும் பசியால் தான் அவதிப்படுகிறார்கள். ஆனால் பண்டிதனின் பசி வறுமையால் ஏற்படுகிறது. இவளது பசி புறக்கணிப்பால் உருவாகிறது.

கொலையாளிகள் பலரும் கொலையைச் செய்வதற்கு முன்பு விரும்பியதைச் சாப்பிடுகிறார்கள். அது தைரியம் தருகிறது என்கிறார்கள். அது போலவே திருடர்கள் வெற்றிகரமாகத் திருடிய பிறகு கட்டாயம் சாப்பிடுவார்கள். ஒரே ஆள் ஒரே இரவில் வேறுவேறு ஹோட்டல்களுக்குச் சென்று சாப்பிட்டிருக்கிறானா என்று தான் போலீஸ் விசாரிப்பார்கள். பசி அவனைக் காட்டிக் கொடுத்துவிடும்

சில வேடிக்கையான திருடர்கள் திருடிய வீட்டில் கிடைக்கும் உணவை ருசித்துச் சாப்பிட்டுப் போனதையும், சமைத்துச் சாப்பிட்டதையும் பத்திரிக்கைகளில் படித்திருக்கிறோம் தானே.

ஜாக் லண்டனின் உயிராசை கதையில் பலநாள் பட்டினி கிடந்தவனுக்குக் கப்பலில் உணவு கிடைக்கும் போது அதைப் பதுக்கி வைத்துக் கொள்ளவே முனைகிறான். படுக்கையின் அடியில் ரொட்டி துண்டுகளை ஒளித்து வைக்கிறான். அது தான் பசித்தவனின் உக்கிர நிலை.

கிரேக்கத்தில் தொன்மத்தில் சிறையில் அடைக்கப்பட்ட சிமோனுக்குப் பட்டினி தண்டனை விதிக்கப்படுகிறது. பசியால் வாடும் தந்தையைக் காண வரும் மகள் பெரோ அவரது பசித்துயரை தாங்க முடியாமல் அருகில் அணைத்து முலைப்பால் தருகிறாள். தந்தை மகளிடமிருந்து தாய்ப்பாலை அருந்துகிறார். தாய்மையின் முன்னால் வயது கிடையாது. தந்தை மகன் என்ற பேதமில்லை. பசியின் உக்கிரத்தை இதை விட எப்படி அழுத்தமாகச் சித்தரிக்க முடியும். இந்தக் காட்சியைக் கிரேக்கத்தில் சிற்பமாகச் செய்திருக்கிறார்கள். இன்றும் அது கருணையின் உச்சபட்ச வெளிப்பாடாகக் கருதப்படுகிறது

பசியின் முன்னால் மணிமேகலையும் பெரோவும் சகோதரிகள் போலவே தோன்றுகிறார்கள்.

வரலாறும் தத்துவமும் பேருண்மைகளை முதன்மைப்படுத்தும் சூழலில் இலக்கியம் பெரிதும் சிறிய உண்மைகளைப் பேசுகிறது. சிறிய உண்மைகளின் மீது வெளிச்சமிடுகிறது. சிறிய உண்மையின் குரலை ஓங்கி ஒலிக்கிறது.

**

0Shares
0