சிறிய உண்மைகள் 5 மண்டோவின் அதிசயம்

சதத் ஹசன் மண்டோவின் குறுங்கதைகளில் பெரும்பான்மை பிரிவினையின் போது ஏற்பட்ட மதக்கலவரத்தை முன்வைத்து எழுதப்பட்டவை. வீடு புகுந்து கொள்ளையடிப்பது. தீவைப்பது. கூட்டமாகச் சேர்ந்து அப்பாவிகளைக் கொலை செய்வது, பெண்களை வன்புணர்ச்சி செய்து கொல்வது போன்றவற்றை மண்டோ உண்மையாகப் பதிவு செய்துள்ளார்.

அதில் ஒரு கதையில் ஒரு வீட்டினை கொள்ளையடிக்கக் கும்பல் ஒன்று திரண்டு போகிறார்கள். ஒரு ஆள் கதவை ஏன் தேவையில்லாமல் உடைக்கப் போகிறீர்கள். நானே திறந்துவிடுகிறேன் என்று திறந்துவிடுகிறான். இது போலவே வீட்டில் உள்ள நகை பொருட்களை எடுத்து அவர்களிடம் ஒப்படைக்கிறான். எந்தப் பொருளையும் சிதைக்க அவன் அனுமதிக்கவில்லை. பொறுப்பாக அவர்களுக்கு உதவி செய்கிறான்.

கதையின் முடிவில் நீ யார் என்று கும்பலின் தலைவன் கேட்கிறான். நான் தான் இந்த வீட்டின் உரிமையாளர் என்கிறான் அந்த ஆள்.

ஒரு ஆள் தன்வீட்டை யாரோ கொள்ளையடிக்க அமைதியாக உதவி செய்வது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த மனது அவனுக்கு எப்படி வந்தது. ஏன் அவன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

கும்பல் தன்னைக் கொன்றுவிடும் என்ற பயம் தான் அவனைப் பணிந்து போகச் செய்கிறது. அவன் உயிர்வாழ்ந்தால் இந்தச் சொத்தை, வீட்டைச் சம்பாதித்துக் கொள்ள முடியும் என்று நம்புகிறான். அவனது பணிவு ஒரு தந்திரம். உபாயம். ஆனால் ஒவ்வொரு பொருளை அவர்கள் அபகரித்துக் கொள்ளும் போதும் அவனுக்குள் வலித்திருக்கும். ஆனால் காட்டிக் கொள்ளவில்லை.

உழைத்துச் சேர்த்து வைத்திருந்த பொருட்களை, சேமிப்பினை கண்முன்னே மௌனமாகப் பறிகொடுப்பது என்பது தாளமுடியாத வேதனை. கோபத்தை அடக்கிக் கொள்வது ஒரு கலை. அந்த மனிதனின் சிறிய முகச்சுழிப்பு கூடப் பெரிய எதிர்வினையை உருவாக்கிவிடும் என்று அறிந்திருக்கிறான். ஆகவே . யார் வீட்டையோ கொள்ளையடிப்பதற்கு உதவி செய்பவன் போல நடந்து கொள்கிறான். எதிர்ப்பு இல்லாமல் கொள்ளையடிப்பது கலவரக்கும்பலுக்குச் சலிப்பு ஏற்படுத்துகிறது. அவர்கள் காரணமில்லாமல் கொல்வதில் ருசி கொண்டிருக்கிறார்கள். அது தான் கலவரத்தின் நிஜமான மனநிலை.

இன்னொரு கதையில் கலவர நேரத்தில் பலரும் கிடைத்த பொருட்களைக் கொள்ளையடித்துத் தன் வீட்டில் பதுக்கி வைத்துக் கொள்கிறார்கள். திருட்டுப் பொருட்களை வைத்திருப்பவர்கள் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள் என்று தெரிந்தவுடன் திருடிய பொருட்களை வெளியே தூக்கி எறிந்துவிடுகிறார்கள்.

எதையும் திருடாதவர்கள் கூடத் தங்கள் சொந்தப் பொருட்களில் ஒன்றிரண்டைத் தூக்கி எறிகிறார்கள். காரணம் அப்படிச் செய்யாவிட்டால் அரசாங்கம் நம்பாது என்பது தான்.

ஒருவன் இரண்டு மூட்டை சர்க்கரையைக் கொள்ளையடித்துப் பதுக்கி வைத்திருக்கிறான். அதை எப்படி வெளியே கொண்டு போவது எனத் தெரியாமல் தன்வீட்டுக் கிணற்றில் கொண்டு போய்ப் போட முயல்கிறான். ஒரு மூட்டையைக் கிணற்றில் போட்டுவிடுகிறான். மறுமூட்டையைப் போடும் போது அவனே தவறி கிணற்றினுள் விழுந்துவிடுகிறான்.

உதவி கேட்டு அவன் கூப்பாடு போட்டும் யாரும் வரவில்லை. பின்பு கிணற்றில் விழுந்துகிடந்த அவனை ஆட்கள் கண்டுபிடித்து மீட்கும் போது இறந்து போயிருந்தான். ஆனால் அந்தக் கிணற்றுத் தண்ணீர் இனிப்பாக மாறியிருந்தது.

அவ்வளவு தான் மக்கள் அந்தக் கிணற்றை வழிபடத்துவங்கிவிட்டார்கள் என்று மண்டோவின் கதை முடிகிறது.

இந்தக் கதையில் வரும் சர்க்கரை மூட்டையைத் திருடியவன் ஒரு விநோதமான ஆள். கலவர நேரத்தில் எதற்காக ஒருவன் இரண்டு மூட்டை சக்கரையைக் கொள்ளையடிக்கிறான். அதை என்ன செய்வான். விற்பதற்காக வைத்திருக்கிறானா. இல்லை ஆசை தீர இனிப்புச் செய்து சாப்பிட நினைக்கிறானா. அதைப் பற்றி மண்டோ விளக்கவில்லை. ஆனால் அவன் தான் மாட்டிக் கொள்ளக்கூடாது என்ற பதைபதைப்பில் சர்க்கரை மூட்டையைக் கிணற்றில் கொண்டு போய்ப் போடப்பார்க்கிறான். ஆனால் விஷயம் தலைகீழாகிவிடுகிறது.

சர்க்கரை மூட்டையால் தான் கிணற்றுத் தண்ணீர் இனிப்பானது என்று யாருக்கும் தெரியாது. ஆனால் இந்த அற்புதம் அவர்களுக்கு வியப்பளிக்கிறது. ஒரு கலவரத்தின் ஊடாக அற்புதம் உருவாவது கலையில் மட்டுமே சாத்தியம்.

இந்தக் கதையை வாசிக்கத் துவங்கும் போது அது இப்படி முடியும் என யூகிக்க முடியாது. அது தான் மண்டோவின் மேதமை. நெருக்கடியின் போது மனிதர்கள் நடந்து கொள்ளும் விதம் வியப்பானது. யார் எப்படி இருப்பார்கள் என்று முடிவு செய்யமுடியாது.

பிரிவினையின் போது நண்பர்களால் காட்டிக் கொடுக்கப்பட்டவர்கள் ஏராளம். வேலையாட்களே எஜமானனைக் கொன்று அவரது வீட்டை அபகரித்துக் கொண்டிருக்கிறார்கள். எந்தக் கட்டுப்பாடும் கிடையாது என்பதால் விரும்பிய பெண்களை அடித்துச் சித்ரவதை செய்து வன்புணர்வு கொண்டிருக்கிறார்கள். இறந்த பெண்ணின் பிணத்தோடு உடலுறவு கொண்டவனைப் பற்றியும் மண்டோ எழுதியிருக்கிறார்.

இந்தக் குறுங்கதையின் ஊடாக எதையும் திருடாதவர்கள் தன் சொந்த பொருளை வீசி எறிந்து அரசின் நம்பிக்கையைப் பெறுகிறார்கள் என்பதில் மண்டோவின் கேலியான விமர்சனம் வெளிப்படுகிறது.

இன்னொரு கதையில் முச்சந்தியில் உள்ள ஒரு தலைவரின் சிலையினைக் கூட்டம் ஏறி உடைக்கிறது. முகத்தில் தார் பூசுகிறது. சிலையின் கைகளைத் துண்டாடுகிறது. அப்போது கலவரக்காரர்களில் ஒருவன் தவறி கீழே விழுந்துவிடுகிறான். அடிபட்டு ரத்தம் சொட்டும் அவனைச் சிலையாக நிற்கும் தலைவரின் நினைவாக உருவாக்கப்பட்ட மருத்துவமனைக்கு அவசரமாகக் கொண்டு போகிறார்கள் என்று கதை முடிகிறது.

கலவரத்தில் யாரும் எதையும் தெரிந்து செய்வதில்லை. அது ஒரு கொந்தளிப்பு. அந்த அலையின் வேகம் அவர்களை இழுத்துக் கொண்டு போகிறது.

நெருக்கடிகளின் போது மனிதர்கள் மிகுந்த சுயநலத்துடன் நடந்து கொள்வதே இயல்பு. அது போன்ற தருணங்களில் நீங்கள் காட்டும் அன்பும் உதவியும் தான் உங்களின் மேன்மையை, கருணை வெளிப்படுத்துவதாக அமையும். வயது வேறுபாடின்றி ஆண்கள் கலவரத்தில் ஒன்று போலவே பெண்களிடம் குரூரமாக நடந்து கொண்டிருக்கிறார்கள் என்ற உண்மையை அழுத்தமாகச் சொல்கிறார் மண்டோ.

Garm Hava என்ற எம்.எஸ்,.சத்யூ இயக்கிய படத்தில் ஒரு இஸ்லாமியக் குடும்பம் பாகிஸ்தானுக்குச் செல்ல விருப்பமின்றித் தாங்கள் பிறந்து வளர்ந்த இந்தியாவில் இருக்க விரும்புகிறார்கள். குடும்பத்தின் தலைவரான சலீம் மிர்சாவுக்குச் சொந்தமாகக் காலணி தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. அதில் வேலை செய்த பலரும் பாகிஸ்தான் போய்விடுகிறார்கள். அத்துடன் வங்கி அவர்களுக்குக் கடன் கொடுக்க மறுக்கிறது. குடும்பத்திற்குள்ளாகவே பாகிஸ்தானுக்கு ஏன் போகக்கூடாது என்ற சச்சரவு ஏற்படுகிறது.

ஆக்ராவைப் பின்புலமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப் படம், இந்தியப் பிரிவினைக்குப் பிந்தைய காலகட்டத்தில், ஒரு முஸ்லீம் தொழிலதிபர் மற்றும் அவரது குடும்பத்தினர் சந்திக்கும் நெருக்கடிகளை மிகச்சிறப்பாக விவரிக்கிறது

மிர்சாவின் குடும்பம் ஒரு பெரிய வீட்டில் வசிக்கிறது. காந்தியின் மரணத்தின் பின்பு அமைதியும் நல்லிணக்கமும் விரைவில் திரும்பும் என்று மிர்சா நம்புகிறார்,

வங்கிகள் மற்றும் வட்டிக்கடை நடத்துபவர்கள் முஸ்லீம் வணிகர்கள் கடனை திருப்பிச் செலுத்தாமல் நாட்டை விட்டு வெளியேறிவிடுவார்கள் என்ற அச்சத்தில் கடன் கொடுக்கத் தயங்குகிறார்கள். தொழிற்சாலை நடத்த நிதி வசதியின்றி நெருக்கடி ஏற்படுகிறது. இதில் அவரது வியாபாரம் பாதிக்கப்படுகிறது.

மிர்சாவின் சகோதரர் பாகிஸ்தானுக்குக் குடிபெயர்ந்து போனதால் அவர்களின் பாரம்பரிய வீடு இப்போது அரசாங்கத்தின் கைக்குப் போய்விடுகிறது. இதனால் வீட்டைக் கையகப்படுத்த அரசு முயல்கிறது. மிர்சாவின் குடும்பத்தை அந்த வீட்டை விட்டு வெளியேறக் கட்டாயப்படுத்துகிறார்கள். , இதை மிர்சாவின் வயதான தாயால் ஏற்கமுடியவில்லை. வேறு வழியின்றி ஒரு வாடகை வீட்டிற்கு அவர்கள் மாறுகிறார்கள். இந்த வேதனைகளைத் தாங்கமுடியாமல் மிர்ஸாவின் தாய் மரணமடைகிறார். மிர்சா குடும்பம் காற்றில் அடித்துச் செல்லப்படும் மணல் போலாகிறது

இந்தக் கதை பிரிவினைக்குப் பின்பு இந்தியாவிலிருந்த சூழலை அழகாக வெளிப்படுத்துகிறது

அரசியல் காரணங்களுக்காக உண்மைகள் மறைக்கப்பட்ட போது கலையும் இலக்கியமும் தான் பிரிவினையின் துயரத்தை உண்மையாகப் பதிவு செய்திருக்கின்றன. இன்றும் அந்த அழியாத நினைவுகளைப் பகிர்ந்து கொண்டேயிருக்கின்றன. வரலாற்றிலிருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ளவேண்டும் என்பார்கள். வரலாறு என்பது யாரோ எழுதிப்போன வரலாற்றுப் புத்தகமில்லை. இது போன்ற இலக்கியப் பதிவுகளே வரலாற்றின் உண்மையான சாட்சியங்கள்.

0Shares
0