சூடி மறையாத சூரியன்

குறுங்கதைகள் பற்றிய வாசிப்பனுபவம்

சக்திவேல்

குறுங்கதைகள் தொகுப்பு

•••

உங்களின் பூக்களை வரையும் சிறுமி குறுங்கதை வாசித்தேன். ஓவியத்தை வரைந்து நீருற்றி வளர்க்க முயலும் சிறுமி, ஒருகட்டத்தில் சலித்து முடியாமையால் விலகி விடுகிறாள். பின்பொரு நாள், தன் ஓவியம் மாறாது நிலைப்பது என்ற உணர்தலை அறிந்தவுடன் இயற்கையோடு முரண் கொள்வதிலிருந்து விடுபட்டு ஆனந்தத்தைச் சூடிக் கொள்கிறாள்.

அவள் வரையும் அந்தச் செடியும் மலருமான ஓவியம் என்பது இயற்கையில் ஒருகணத்தில் சுடர்ந்தொளிரும் அற்புதம் அல்லவா. நம் நினைவுகள் அப்படித் தான் இருக்கின்றன. மனிதரோ, விலங்கோ, இயற்கை நிகழ்வோ எதுவானாலும் அதன் உன்னதத்தை ஏதோவொரு கணத்தில் கண்டுவிடுகிறோம், அதன்பின் அவற்றிடம் மீள மீள அதைக் கேட்கிறோம். கிடைக்காத போது துன்புற்று ஏங்கி சலிக்கிறோம். பின்னர் என்றோ ஒருநாள் அந்தச் சிறுமியைப் போல அறிகையில் விடுதலை கொள்கிறோம். அப்படி நிகழ்வதற்கு நமக்குள்ளிருக்கும் அந்தக் கள்ளமின்மையைப் பாதுகாப்பவருக்கே அது நிகழ்கிறது.

அன்று மாறும் இயற்கையின் முன் மாறாத கனவொன்றைச் சூடி மறையாத சூரியன் என்று நிற்கிறோம். அந்தப் பிரகாசமான சூரியனைப் போன்ற கனவைத் தலைமுறைகளுக்குக் கையளித்துப் போவதற்காகத் தான் மனிதன் சிற்பம், இலக்கியம், இசை, ஓவியம் எனக் கலைகளை ஆக்கினான் எனத் தோன்றச் செய்தாள் பூக்களை வரையும் சிறுமி.

***

விளையாட்டு சிறுவன் குறுங்கதையை வாசித்தேன். வாசு என்ற சிறுவன் கள்ளன் போலிஸ் விளையாடுகிறான். யாருக்கும் தெரியாதிருக்க நெல் வைக்கும் குலுக்கையினுள் மறைந்து கொள்கிறான். தன்னை யாரும் கண்டுபிடிக்க இயலாது என மகிழ்கிறான். பின்னர் எல்லோரும் அவனை விட்டுவிட்டு விளையாடச் சென்றுவிடுகிறார்கள். வெளியே ஏறிவர முடியவில்லை. அவனது குரல் யாருக்கும் கேட்கவில்லை. இரவு மாமா மயங்கி கிடப்பவனை டார்ச்லைட் அடித்துப் பார்த்துத் தூக்கி வந்து படுக்க வைக்கிறார். காலையில் எழுந்தவன் நேராகச் சென்று குலுக்கையை ஒரு குத்து விடுகிறான். குலுக்கை ஏதோ முணுமுணுக்கிறது எனக் கதை முடிகிறது.

முதல் நோக்கில் மிக எளிய கதையாகத் தோன்றுவது. வாசித்து முடிக்கையில் முகத்தில் ஒரு புன்னகையைத் தவழச் செய்வது. நம்மில் சிலரது வாழ்வில் நடந்திருக்கவும் கூடும்படியான நிகழ்வு. ஒவ்வொரு கல்லிலும் ஒரு சிற்பம் உண்டு. அதைக் காணும் கண் உள்ள சிற்பியால் மட்டுமே சிற்பத்தை உலகுக்குக் கொண்டு வர முடியும்.

இந்தக் கதையும் அதுபோலத்தான். மனிதர்கள் ஒருவருக்கொருவர் செய்துகொள்ளும் அத்தனை செயல்களும் உச்சி முனை சிகரத்தில் நின்று பார்க்கையில் வெறும் விளையாட்டு தானே. காலப் பெருவெள்ளத்தில் என்றோ ஒருநாள் எல்லாம் வானில் கரைந்து போகையில் இவற்றிற்கெல்லாம் பொருளென்று ஒன்று இருக்க முடியுமா. உண்மையில் பொருள் என்பது இங்காடுதலின் மகிழ்வாகவே இருக்க முடியும்.

மனிதர்கள் வாசுவைப் போலவே தங்கள் அகங்களை மறைத்தாடுகிறார்கள். அந்தக் குலுக்கைகள் என்றுமிருப்பவை. எதற்குள் நெல் மணி உண்டோ, அதற்குள்ளேயே தான் எலிப்புழுக்கைகளும் உள்ளன. இருளில் ஒளிவதில் ஓர் இன்பம் உண்டு. ஆனால் ஒளி காணாத இருளென்பதே நரகம் எனப் பின்னர் அறிகிறோம். அத்தனை மீட்புகளும் நமக்கப்பால் நாமறியாத போது நடப்பவை தான். அதற்கு நேசம் மிகுந்த மெய்யறிவோன் வரவேண்டியிருக்கிறது.

விடுதலைக்குப் பின் சிறுவனைப் போலத்தான் நாமும் குலுக்கையைக் குத்துவிடுகிறோம். அந்தக் குலுக்கை என்ன முணுமுணுத்திருக்கலாம். பாவம் பையன் என்று சிரித்திருக்கலாம்.. வெளியே நிற்கையில் பெரிய ஆள் போலத் தெரியலாம். உள்ளே சென்றால் தான் தெரியும்.

இதைக் குறுங்கதை என்பதை விடக் கதையாகிய கவிதை என்று சொல்லலாம். காணும் கோணத்திற்கேற்ப தன்னை உருமாற்றிக் காட்டும் கலைடாஸ்கோப்.

***

காலச்சுவடில் வெளியான குறுங்கதைகள் பற்றி

தருண்

உங்கள் மூன்று குறுங்கதைகள் காலச்சுவடு இதழில் வந்திருப்பதாக நேற்று உங்கள் தளத்தில் வந்தபோது அறிந்துகொண்டேன். உடனடியாகக் காலச்சுவடு இதழை வாங்கி வாசித்தேன். முதல்கதையான பதினேழாவது ஆள் படித்து முடித்தவுடன் மனம் அடுத்த கதைகளுக்குத் தாவ ஒப்புக்கொடுக்க மாட்டேங்குது. அவ்வளவு மனக்கொந்தளிப்பு வாசித்த பிறகு. நிச்சயமாகச் சொல்வேன், உலகின் தலைசிறந்த கதைகளில் ஒன்று இது‌. சில ஆயிரம் பக்கங்கள் கூடத் தந்து விடாத உணர்ச்சி வேகத்தை இக்குறுங்கதை எனக்கு அளித்தது.

அந்தப் புதிதாகத் தோன்றிய இளைஞன் வேறு யாரும் இல்லை கல்யாணியின் காதலன் தான். அக்குடும்பம் கல்யாணியின் காதலை புரிந்துகொள்ளவில்லை. அவ்வளவு அலட்சியம் கல்யாணியின் காதல் மேல் அவளது குடும்பத்திற்கு , எந்த அளவுக்குப் பிடிக்காது என்றால் கல்யாணி காதலிக்கும் அந்த இளைஞனை அவர்கள் பார்த்ததோ இல்லை அணுகியதோ கிடையாது. ஏன், அவர்கள் காதலைக் கூட வாழ்வில் அனுபவித்ததோ இல்லை அணுகியதோ இல்லை. அவனும் கல்யாணி இல்லாத உலகத்தில் இன்று இல்லை. அவளுடன் அரூபமாக இருக்கிறான். அரூப காலத்தில். Craft இல் இருக்கும் absurdity யும் எனக்குப் பிடித்திருந்தது. அதி அற்புதமான குறுங்கதை . நன்றி எஸ். ரா இப்படி ஒரு கதை மூலம் எங்களை நிலை இல்லாமல் ஆக்கியதற்க்கு .

•••

0Shares
0