ஜப்பானில் ரஜினிகாந்த் படங்கள் மிகவும் விரும்பி பார்க்கபடுகின்றன. அவர் டான்சிங் மஹாராஜா என்ற பெயரில் அழைக்கபடுகிறார். அவரது படங்கள் தொலைக்காட்சிகளில் திரும்பத் திரும்ப ஒளிபரப்பு செய்யப்படுகின்றன என்ற செய்திகள் தமிழ்சினிமா ரசிகர்கள் அறிந்த ஒன்று. ஆனால் அதற்கு காரணமாக இருந்தவர்கள் யார் என்று நாம் அறிந்திருக்கவில்லை
ரஜினிகாந்தின் படங்களை ஜப்பானில் மொழியாக்கம் செய்து அவரது திரைப்படங்களை ஜப்பானிய ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தவர் பேராசிரியர் ஹிரோசி யமாஷிடோ. இவர் டோஹகு பல்கலைகழகத்தில் மொழியியல் பேராசிரியராக பணியாற்றுகிறார். சென்னை பல்கலைகழகத்தில் திராவிட மொழியியல் பற்றி தமிழில் ஆய்வு செய்த மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மூன்று வாரங்களுக்கு முன்பாக சென்னை வந்திருந்த அவரை சந்தித்து நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தேன். தமிழ் சினிமா குறித்து இவர் தனது மனைவி நோபு கேதரின் ஒகமிட்சுவுடன் இணைந்து ஒரு ஆய்வை மேற்கொண்டு வருகிறார்.
தமிழ் சினிமாவின் 75 ஆண்டுகால சரித்திரம் மற்றும் வர்த்தக சினிமாவின் முக்கிய கூறுகள் எவை. அதற்கு காரணம் என்ன? என்ன வகையான படங்கள் தமிழில் வெளியாகின்றன. ஏன் அவை வெற்றி பெறுகின்றன என்பதை பற்றிய விரிவான ஆய்வை அவர்கள் மேற்கொள்கிறார்கள். இதன் ஒரு பகுதியாக நான் ரஜினிகாந்தின் பாபா திரைப்படத்தில் பங்குபெற்றது தொடர்பாகவும் தமிழ்சினிமாவின் போக்குகள் குறித்தும் நேர்முகம் செய்தார் யமாஷிடோ.
தமிழ்நாட்டில் ஆங்கிலம் கலக்காமல் தமிழ்பேசுகின்றவர்களை வெகு அரிதாகவே சந்திக்க நேர்கிறது. ஆனால் ஜப்பானிலிருந்து வந்திருந்த யமாஷிடோ ஒரு வார்த்தை ஆங்கிலம் கலக்காமல் தூய தமிழில் பேசுகிறார். சென்னையில் நாலைந்து வருடங்கள் தங்கியிருந்த நாட்களை பசுமையோடு நினைவு கொள்கிறார்.
தமிழ் சினிமா கதாநாயகர்களில் வேஷ்டி கட்டிக் கொண்டு நடிப்பவர்கள் யார் ? ஏன் திரைப்படங்களில் எவரும் தரையில் உட்கார்ந்து சாப்பிடுவதேயில்லை, ஏன் தமிழ்சினிமாவில் கனவு காணும்போது பாடுகிறார்கள். நகைச்சுவை நடிகர்கள் எதற்காக எப்போதும் அடி உதை வாங்குகின்றவர்களாக சித்தரிக்கபடுகிறார்கள். ஏன் இப்போதைய படங்களில் கிளப் டான்ஸ், ரேப் சீன் போன்றவை இடம்பெறுவதில்லை.
தமிழ் மக்களுக்கு விருப்பமான கதாநாயகிகள் யாவரும் சற்றே பருமனாக இருக்கிறார்களே அதற்கு என்ன காரணம். தமிழ்நாட்டில் புதிதாக திருமணம் செய்து கொள்கின்றவர்கள் அவசியம் ஒன்றாக சினிமாவிற்கு செல்லவேண்டும். அதுவும் ஒரு சடங்கு என்கிறார்களே அது நிஜமா? சினிமாவில் ஜாதகம் ஜோசியம் போன்றவை மிக முக்கியமான பங்கை ஆற்றுகின்றன என்கிறார்களே அது எவ்வளவு உண்மை ? சமீபத்தைய படங்களில் ஏன் நகைச்சுவை நடிகை என யாரும் உருவாகவேயில்லை.
இப்படி அவர்கள் கேட்டகேள்விகள் மிக சுவாரஸ்யமானவை. வெளியில் இருந்து அவர்களை போன்றவர்கள் தமிழ்சினிமாவைப் பார்க்கிறார்கள். அப்போது தான் தமிழ்சினிமா எவ்வளவு அபத்தங்கள், அதீத நம்பிக்கைகள் மற்றும் புரிந்துகொள்ள முடியாத விசித்திரங்கள் கொண்டிருக்கின்றது என்பது கண்ணில் படுகின்றது.
எப்படி ரஜினிகாந்த் ஜப்பானுக்கு அறிமுகமானார் என்பதை சொல்லுங்கள் என்று நான் அவரிடம் கேட்டேன்.
சிரித்தபடியே டாக்டர் பட்ட ஆய்வு செய்தவற்காக சென்னை வந்திருந்த நாட்களில் தான் நிறைய தமிழ் படங்கள் பார்த்துள்ளதாகவும், ஜப்பானுக்கு திரும்பி சென்ற பிறகு தமிழ் இலக்கியங்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற ஆசையில் ஜெயகாந்தன் கதைகளை ஜப்பானில் மொழியாக்கம் செய்திருப்பதாகவும் அதற்கு கிடைத்த வரவேற்பு நவீன தமிழ் இலக்கிய அறிமுகங்களை செய்ய காரணமாக இருந்தது அதன் தொடர்ச்சியே தான் சினிமாவிற்கு வந்தது.
ஜப்பானிய சினிமா தமிழகத்திற்கு அறிமுகமான அளவு தமிழ் சினிமா குறித்து ஜப்பானிய மக்கள் அறிந்திருக்கவில்லை. ஒன்றிரண்டு ஹிந்திபடங்கள் வெளியாகி உள்ளன. ஆனால் அவை வெற்றிபெறவில்லை.
முப்பது வருடங்களுக்கு முன்பாக ஜப்பானுக்கு வருகை தந்து படம் எடுத்தவர் எம்.ஜி.ஆர். அந்த நாட்களில் தமிழ்படங்கள் குறித்தும் ஜப்பானில் எவருக்கும் எதுவும் தெரியாது. ஆனால் எம்ஜிஆர் ஒசாகாவிற்கு வந்து எக்ஸ்போவை படமாக்கினார். அந்த படத்தில் வரும் ஜப்பானிய காட்சிகள் சிறப்பாக படமாக்கபட்டிருக்கின்றன. குறிப்பாக எக்ஸ்போ அரங்குகள் நன்றாக படமாக்கபட்டிருக்கிறது.
1990 களில் ஜப்பானிய வெகுஜன சினிமாவில் அனிமேஷன் திரைப்படங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. அதிசாகசம் செய்யும் கதாநாயகனை கொண்ட அனிமேஷன் படங்கள் வசூலில் சாதனை புரிந்தன. அந்த நாட்களில் தான் ரஜினியின் முத்துவை ஜப்பானில் வெளியிட அதன் விநியோகதஸ்தர்கள் முயன்றார்கள்.
பொதுவாக ஜப்பானில் டப்பிங் செய்யப்பட்ட படங்களுக்கு வரவேற்பு கிடையாது. சப்டைட்டில் உடன் படம் பார்க்கவே மக்கள் அதிகம் விரும்புகிறார்கள். அப்படி 1992ல் முத்துவை ஜப்பானில் வெளியிட முயன்ற போது என்னை தொடர்பு கொண்டு அதை ஜப்பானில் சப்டைட்டில் செய்து தர முடியுமா என்று கேட்டார்கள்.
நான் அதன்முன்பு இதுபோல திரைப்படங்களுக்கு சப்டைட்டில் செய்து தந்ததில்லை. ஆகவே சற்று தயங்கினேன். பிறகு அதை ஒத்துக் கொண்டு செய்தேன். நல்ல வரவேற்பு கிடைத்தது. அதிலிருந்து ரஜினியின் படங்கள் யாவும் நான் சப்டைட்டில் செய்தவையே. தமிழ் சினிமா குறித்து நிறைய விரிவுரைகளும் ஆற்றியிருக்கிறேன்.
அதை தவிர மணிரத்னத்தின் படங்கள் யாவும் நான் மொழியாக்கம் செய்து ஜப்பானில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. வேறு எந்த இந்திய இயக்குனரையும் விட மணிரத்னத்திற்கு இங்கே ரசிகர்கள் அதிகம். அவரது திரைப்படங்களை அமெரிக்காவின் முக்கிய இயக்குனர்களின் படங்களுக்கு இணையாக மக்கள் விரும்பி பார்க்கிறார்கள். அதுபோலவே சுஹாசினி இயக்கிய இந்திரா படத்தையும் ஜப்பானிய மக்கள் ரசித்து பார்த்தார்கள். இன்று தொடர்ச்சியாக தமிழ்படங்கள் ஜப்பானில் சப் டைட்டில் செய்யப்பட்டு வெளியாகின்றன.
ஜப்பானில் தமிழ்படங்களுக்கு உள்ள வரவேற்பு ஹிந்தி படங்களுக்கு கிடையாது. பெரும்பான்மையான வெற்றிபெற்ற ஹிந்திபடங்கள் ஜப்பானில் சப்டைட்டில் உடன் திரையிடப்படுகின்றன. ஆனால் அவை மக்கள் வரவேற்பை பெறவில்லை.
தமிழ்படங்களில் உள்ள பாடல்களும் அழகான கதாநாயகிகளும் முக்கிய காரணம் என்றே சொல்வேன் என்று சிரிக்கிறார் யமாஷிடோ
இன்றைய ஜப்பானிய சினிமாவில் தொழில்நுட்ப வளர்ச்சி மிகவும் உச்சசத்திற்கு வந்துவிட்டிருக்கிறது. ஆனால் கதை சொல்வதில் அது ஹாலிவுட் பாணியை அதிகம் சார்ந்திருக்கிறது. அகிரா குரசோவா, ஒசு, மிசுகுஷி, போன்ற இயக்குனர்கள் இன்று உருவாகவில்லை. ஜப்பானிய தொலைக்காட்சிகளுக்கு கிடைக்கும் வரவேற்பு மிக பெரியது. அதிலிருந்து உருவானவர்களே டகாசி கிடானோ போன்ற நடிகர்கள்.
சூப்பர்மேன் ஸ்பைடர்மேன் போல ரஜினிகாந்தை ஜப்பானிய மக்கள் ரசிக்கிறார்கள். அவரது திரைப்படங்கள் பற்றிய செய்திகள் கூட ஜப்பானில் விரும்பி வாசிக்கபடுகின்றன. சமீபத்தில் ஜப்பானில் உள்ள டொஹடோ என்ற நிறுவனம் தனது மெக்ஸிகன் சில்லி சிப்ஸ் பாக்கெட் ஒன்றின் முகப்பாக ரஜினியின் உருவப்படத்தை வெளியிட்டு பெரிய வெற்றி பெற்றிருக்கிறது. சிப்ஸ் சாப்பிட்டவர்கள் அந்த பாக்கெட்டை அப்படியே பாதுகாத்து வைத்துக் கொள்கிறார்கள் அந்த அளவு ஹாட் ரஜினி , அவர் ஜப்பானுக்கு வருவாரா என்று மக்கள் காத்திருக்கிறார்கள்.
அவரிடம் உள்ள ஆன்மீக தேடுதலும் எளிமையும் ஜப்பானிய மக்களை வெகுவாக கவர்ந்த அம்சம். அது போன்று ஆன்மிக ஈடுபாடு கொண்ட நடிகர் வேறு யாராவது இருக்கிறார்களா என்று நாங்கள் விசாரித்து கொண்டிருக்கிறோம். யாருமேயில்லை. என்று சொல்லி சிரிக்கிறார் யமாஷிடோ
தமிழகத்தில் உள்ள எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள் பலரையும் யமாஷிடோசந்தித்து உரையாடியிருக்கிறார். இந்த ஆய்விற்காக முக்கியமான திரைப்பட இயக்குனர்கள், நடிகர்கள், விமர்சகர்கள் பலரையும் சந்தித்திருக்கிறார்.
ஜப்பானில் தமிழர்கள் அதிகமில்லை. நவீன தமிழ் இலக்கியம் குறித்த அறிமுகமும் ஜப்பானில் மிக குறைவே. ஆனால் சோழர்களுக்கும் ஜப்பானிய தேசத்திற்குமான தொடர்பு குறித்து தொடர் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. நாங்கள் தமிழ் சினிமாவின் முக்கிய போக்குகள் மாற்றங்கள் குறித்து ஒரு புத்தகம் ஒன்றை எழுத முயன்றிருக்கிறோம். அதற்கான முதல்கட்ட ஆய்வு இது என்று தன் பயண நோக்கினை விவரித்தார்
அவர்கள் தங்கியிருந்த அறையில் நாளிதழ்களில் வெளியான சினிமா பற்றிய செய்திகள், விளம்பர நறுக்குகள் நிரம்பியிருந்தன. தமிழில் வெளியாகி உள்ள சினிமா புத்தகங்கள், குறுந்தகடுகள், ஆங்கிலத்தில் வெளியான தமிழ்சினிமா பற்றிய கட்டுரைகள் என்று ஒரு புத்தகம் எழுவதற்கு அவர்கள் மேற்கொள்ளும் கடும் உழைப்பு கண்முன்னே விரிந்து பரந்து கிடந்தது.
ரஜினியை நேரில் சந்தித்து இருக்கிறீர்களா என்று கேட்டேன். சில ஆண்டுகளுக்கு முன்பாக பெங்களுரில் உள்ள அவரது இல்லத்தில் ஒரு ஜப்பானிய குழுவோடு ஒருமுறை சந்தித்திருக்கிறேன். ஆனால் அதிகம் உரையாடியதில்லை என்றார்.
தமிழ்சினிமாவில் உருவாகி உள்ள மாற்றங்கள். பாலா, பாலாஜிசக்திவேல், அமீர், சேரன் ஆகியோரின் திரைப்படங்கள், மற்றும் தமிழ் சினிமாவிற்கு உலகம் தழுவிய சந்தை உருவாகி வரும் விதம் பற்றி நிறைய பேசிக் கொண்டிருந்தோம்.
ஜப்பானிய மக்கள் எந்த அளவு நன்றிக்கு முக்கியத்துவம் தருகின்றவர்கள் என்பது யமாஷிடோவிடம் பேசிக்கொண்டிருக்கும் போது உணர முடிந்தது. ஒவ்வொரு தகவலை நான் சொல்லும் போது அவர் ஒருமுறை நன்றி சொல்வார். அதுபோலவே அவர்கள் கேட்ட கேள்விக்கு நான் பதில் சொல்லியதும் அதற்கும் ஒரு நன்றி. இப்படி மூன்று மணி நேர உரையாடலுக்குள் நூறு முறை நன்றி சொல்லியிருப்பார். ஏன் அப்படி என்றுகேட்டதற்கு அது தங்களுக்கு இயல்பானது என்று சொல்லி சிரித்தார்
தமிழ்சினிமா குறித்து ஆங்கிலத்தில் அதிகம் எழுதப்படுவதில்லை தமிழிலும் கடந்த ஐம்பதாண்டுகால சினிமாவை பற்றிய விரிவான புத்தகங்கள் எழுதப்படவில்லை. சமூகரீதியான ஆய்வுகள், உளவியல் ரீதியான பார்வைகள் மற்றும் புதிய இயக்குனர்களின் திரைப்படங்கள் உருவாக்கிய மாறுதல்கள் குறித்து புத்தகங்கள் இல்லை என்று ஆதங்கப்பட்டார். பலரது ஆதங்கமும் அதுதான், அகிராகுரசோவை பற்றி தமிழில் வாசிக்க புத்தகங்கள் இருக்கின்றன. ஆனால் தமிழ்சினிமாவின் புதிய மாற்றங்கள் பற்றி வாசித்து அறிந்து கொள்ள புத்தகம் எதுவுமில்லை என்பது பெரும்குறையே என்றேன்.
புகழ் பெற்ற சினிமாநடிகர்கள் போலவே வேஷம் அணிந்து கொண்டு அதே குரலில் பேசி நடிக்கும் மிமிக்ரி கலைஞர்களை பற்றி விவரித்தேன். அவர்களையும் தாங்கள் சந்திக்க விரும்புவதாக சொல்லி குறித்துக் கொண்டார்
பேச்சின் முடிவில் தமிழகம் முழுவதும் கடந்த சில வருசங்களில் இடிக்கபட்ட மூடப்பட்ட திரை அரங்கங்கள் பற்றி விவரித்தேன். மதுக்கடைகளை கூட அரசாங்கமே நடத்தும் போது திரை அரங்கங்களை மட்டும் ஏன் நடத்துவதில்லை என்று கேட்டார். அது தான் மிகப்பெரிய முரண் என்றேன்.
தமிழ்சினிமாவில் விளங்கி கொள்ள முடியாத எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. அதில் இதுவும் ஒன்று சொல்லி சிரித்தார் யமாஷிடோ. அதுதான் உண்மையில்லையா?
***