ஜெயகாந்தனின் திரைப்படங்கள்.


 


 


 


 


 


 


சிங்கப்பூரில் இருந்து வந்திருந்த நண்பர் மூர்த்தியுடன் நேற்று எழுத்தாளர் ஜெயகாந்தனைக் காண்பதற்காக கே.கே.நகரில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றிருந்தேன். நண்பர்களைச் சந்திப்பதற்காக வீட்டின் மாடியில் தனியாக  ஒரு அறை வைத்திருக்கிறார். கூரை வேய்ந்தது. முன்னதாக சில முறை அங்கே சென்றிருக்கிறேன். உரத்த சிந்தனைகளுடன் உற்சாகமாக பேசக்கூடியவர். இடையில் அவர் புகைப்பதும் குடிப்பதும் இயல்பாக நடந்து கொண்டிருக்கும்.


அவரைத் தினசரி சந்திக்கும் நண்பர்கள் இருக்கிறார்கள். அது ஒரு வித்வசபை. அதை வழிநடத்துகிறவர் ஜெயகாந்தன். அரசியல் சமூகம் இலக்கியம் சினிமா என்று பல்வேறு பொருள் சார்ந்து உரையாடுவதும் விவாதிப்பதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது


கிரேக்கத்தில் சாக்ரடீஸ், அரிஸ்டாடில் போன்றவர்கள் இப்படி தனக்கு விருப்பமான நண்பர்களுடன் கூடி அமர்ந்து சமூக விஷயங்கள் குறித்துபேசி விவாதம் செய்து தர்க்க நியாயங்களை எடுத்துச் சொல்வார்கள் என்று வாசித்திருக்கிறேன். அதை பல வருடமாக நடைமுறை படுத்திக் கொண்டிருப்பவர் ஜேகே.


தனது மீசையை தடவிவிட்டபடியே கம்பீரமான பார்வையும் புன்னைகயுமாக ஜேகே பேசுவதை கேட்பது அலாதியான அனுபவம். இந்த முறை நாங்கள் சென்ற நேரம் பின்மதியம் என்பதால் அவர் மட்டும் தனித்திருந்தார். அப்படி ஜேகேயைக் காண்பது அபூர்வம். சமீபமாக உடல்நலமற்று மருத்துவமனையில் சிகிட்சை பெற்று வந்த காரணத்தால் அவர் சற்று தன் சபையின் வேகத்தை குறைத்திருக்கிறார் என்று தோன்றியது.


அவரது அறை மிக எளிமையானது. பிளாஸ்டிக் நாற்காலிகள். நீண்ட மேஜையொன்று. அவர் அமர்வதற்கான சுழல்நாற்காலி. ஒரமாக கண்ணில் படும் காலிடம்ளர்கள், சாம்பல்கிண்ணம், நாலைந்து புத்தகங்கள். எட்டிப்பார்க்கும் தென்னைமரம். ஜேகேயின் இளமைதோற்றம் கொண்ட சித்திரம், அவர் விருது வாங்கும் புகைப்படம், மாறாத புன்னகையுடன் எதிரில் அமர்ந்திருக்கும் ஜேகே. தோற்றத்தில் சோர்வும் அசதியும் படிந்திருந்த போதும் பேச்சில் கம்பீரம் அப்படியே இருந்தது.


அன்றைய பேச்சு அவரது இயக்கிய திரைப்படங்கள், அவர் கதைகள் படமாக்கபட்டது பற்றியதாக இருந்தது. ஜேகே தயாரித்து இயக்கிய உன்னைப்போல் ஒருவன் திரைப்படத்திற்கு திரைக்கதை வசனம் தனி புத்தகமாக வெளியாகியிருக்கிறதா என்று நண்பர் மூர்த்தி கேட்ட போது திரைக்கதை என்பது இயக்குனருக்கான ஒரு கைடுலைன். ஒரு மேப் அவ்வளவு தானே என்று இயல்பாக சொன்னார் ஜேகே.


இருபது வருடங்களுக்கு முன்பாக சிலநேரங்களில் சில மனிதர்கள் திரைக்கதை புகைப்படங்களும் மிக அழகாக வெளியிட்டப்பட்டது. தமிழில் அது தான் முதல் திரைக்கதை புத்தகம் என்று நினைக்கிறேன் என்று சொன்னேன்.


ஜேகே அதை ஆமோதித்து அது மிகச் சிறப்பாக வடிவமைக்கபட்டிருந்தது. தற்போது வெளியாகி உள்ள பதிப்பில் காட்சிகளுக்கு ஏற்ற புகைப்படங்கள் இல்லை என்றார். அந்த பதிப்பு எங்கே கிடைக்கும் என்று உடனே மூர்த்தி கேட்கத் துவங்கி நண்பர்களுக்கு போன் செய்ய ஆரம்பித்தார். என்னிடம் ஒரு பிரதியிருந்தது. ஆனால் அது எங்கேயிருக்கிறது என்று தேடுவது கடினம் என்றேன். அது போல ஏன் உன்னைப்போல ஒருவனுக்கு திரைக்கதை புத்தகம் வெளியிடக்கூடாது என்று தன் ஆசையை வெளிப்படுத்தினார் மூர்த்தி.


மூர்த்தி இலங்கையை சேர்ந்தவர். ரஷ்யாவில் படித்தவர். ரஷ்யாவிற்கு ஜெயகாந்தன் வந்த நாட்களில் நண்பராகி இன்று வரை அவர் மீது மிகுந்த அபிமானமும் நேசமும் கொண்டவர். ஜேகேயை பற்றிய அத்தனை தகவல்கள் புத்தகங்கள் வீடியோ என்று தேடித்தேடி சேகரித்து வைத்துக் கொண்டிருப்பவர்.


உன்னைப்போல் ஒருவன் திரைப்படம் தேசிய விருது பெற்ற படம். 1965ம் ஆண்டு வெளியானது. அந்த ஆண்டு சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டது சத்யஜித்ரேயின் சாருலதா. ரேயோடு ஜேகேயின் படமும் போட்டியிட்டது என்பது பெருமைக்குரியதாக இருக்கிறது.


ஒரு எழுத்தாளர் தனது விருப்பத்தின்படியே ஒரு திரைப்படத்தை உருவாக்கி அதற்கு தேசிய விருது கிடைத்தது மிகப்பெரிய சாதனை. அந்தப்படத்தின் பிரிண்ட் எங்கேயிருக்கிறது. அதன் டிவிடி கூட இப்போது கிடைப்பதில்லை என்று கேட்டதும் அதன் பிரிண்ட் தன்னிடம் இல்லை. யூமாடிக் ஒன்று உள்ளது. அதிலிருந்து பிரதி எடுத்து வைத்திருக்கிறேன் என்று சொன்னார்.


அப்படம் சோவியத் யூனியனில் திரையிடப்பட்டது இல்லையா. அப்படியானால் அவர்கள் தங்கள் சேமிப்பில் படத்தின் பிரதியை வைத்திருப்பார்கள் தானே என்று கேட்டதற்கு உண்மை ஆனால் அந்த சோவியத் யூனியனே இப்போது இல்லையே. அதை எப்படி தேடுவது என்று ஆதங்கப்பட்டார்.


தேசிய விருதுபெற்ற படங்களின் பிரதிகளை மத்திய அரசு விலைக்கு வாங்கி பாதுகாத்து வைத்திருப்பது வழக்கம் அப்படி பூனாவில் உள்ள தேசிய திரைப்பட காப்பகத்தில் உங்களது படத்தின் பிரதியொன்று இருக்ககூடும் அல்லவா என்று சொன்னேன். தெரியவில்லை. இருக்கிறதா என்று யாராவது விசாரித்து பார்க்க வேண்டும் என்றார்


அதே ஆண்டுவெளியான சத்யஜித்ரேயின் சாருலதா இன்று டிஜிட்டில் முறையில் புத்துருவாக்கம் செய்யப்பட்டு உலகம் முழுவதும் விநியோகம் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் அத்தோடு தேசிய விருது பெற்ற ஜெயகாந்தனின் திரைப்படத்தின் பிரதி என்ன ஆனது என்று கூட அறிந்து கொள்ள முடியவில்லை என்பது வேதனைக்கு உரிய விஷயம்.


சத்யஜித்ரேயின் சில படங்களுக்கும் இது போன்று மூலப்பிரதிகள் அழிந்தும் தீக்கு இரையாகியும் போயின. ஆனால் சில வருடங்களுக்கு முன்பு ஹேவ்லாக் பெகட் என்ற நிறுவனம் ரேயின் படங்களை பாதுகாத்து ஆவணப்படுத்துவதற்காக பலகோடி நிதியுதவி செய்திருக்கிறது. அதன்படி அவரது படத்தின் பிரதிகளை தேடி எடுத்து அமெரிக்காவில் உள்ள நவீன டிஜிட்டில் டிரான்ஸ்பர் முறையில் புத்துருவாக்கம் செய்திருக்கிறார்கள்.


ஜேகே ஞானபீடம் பரிசு பெற்ற படைப்பாளி. நாடறிந்த சிந்தனையாளர். சினிமாவில் தனக்கென தனிஅடையாளம் பதித்தவர்.  இவ்வளவு சிறப்பு கொண்டவராக இருந்தும் அவர் இயக்கிய படங்களை இன்று வீடியோவாக காண்பதற்கு கூட வழியில்லாமல் தானிருக்கிறது.


ஜேகேயின் உன்னைப்போல் ஒருவன், யாருக்காக அழுதான், சில நேரங்களில் சில மனிதர்கள், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், எத்தனை கோணம் எத்தனை பார்வை, புதுசெருப்பு கடிக்கும் போன்ற படங்களை சேகரம் செய்து டிஜிட்டில் டிரான்ஸ்பர் செய்தால் அதைத் தனியான ஒரு திரைவிழாவாக நடத்தலாம். ஆனால் இந்தப் படங்களின் மூலப்பிரதிகள் எங்கே யாரிடம் இருக்கின்றன. எப்படி கண்டுபிடிப்பது என்பது பெரிய கேள்வி.


இயக்குனர் லெனின் ஜெயகாந்தனின் ஊருக்கு நூறு பேர் கதையை படமாக்கி அது தேசிய திரைப்படவிழாவில் பங்குபெற்றது. அதைப் பார்த்திருக்கிறேன்.  ஆனால் அதன் டிவிடி கிடைப்பதில்லை.  சினிமாவுக்கு போன சித்தாளு கௌதமன் இயக்கத்தில் வெளியாகி இருக்கிறது என்றார்கள். அதை நான் இதுவரை கண்டதில்லை.


தற்போது இளையராஜாவின் தயாரிப்பில் ரவிசுப்ரமணியம் இயக்கி ஜெயகாந்தனை பற்றிய  மிக நேர்த்தியான ஆவணப்படம் வெளியாகி இருக்கிறது. இது போலவே முன்பு சா.கந்தசாமி ஜேகே பற்றி ஒரு ஆவணப்படத்தை தயாரித்து இருக்கிறார். சிங்கப்பூர் தொலைக்காட்சி ஒரு ஆவணப்படத்தை தயாரித்து இருக்கிறது. இவை முழுமையாக எவரது சேமிப்பிலும் இல்லை.


சிலநேரங்களில் சில மனிதர்கள் டிவிடியாகக் கிடைக்கின்றது. சிவாஜி, எஸ்விசுப்பையா நடித்து வெளியான காவல்தெய்வம் ஜெயகாந்தனின் கதை. அது டிவிடியாக கிடைக்கிறது. மற்றபடங்கள்  இன்று பார்வைக்கு கிடைப்பதில்லை. முன்பு ஒருமுறை ராஜ்டிவி யாருக்காக அழுதான் படத்தினை ஒளிபரப்பு செய்தது. அதன்பிறகு அதுவும் காண கிடைப்பதில்லை.


ஜெயகாந்தன் பாடல் எழுதிய பாதை தெரியுது பார் திரைப்படத்தின் பிரதியும் இன்றில்லை. சிட்டுக்குருவி பாடுது தன் பெட்டைத் துணையை தேடுது என்ற அருமையான பாடல் அப்படத்தில் உள்ளது.


ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் படத்தின் நெகடிவ் வலம்புரி சோமநாதனிடம் உள்ளது என்று ஜேகே சொன்னார். அதை அவர் வைத்துக் கொண்டு என்ன செய்வார்.ஏதாவது ஒரு நிறுவனமோ ஆர்வலரோ அவரிடமிருந்து வாங்கி டிவிடியாக வெளியிட்டால் பயனுள்ளதாக அமையும்


அது போலவே ஜெயகாந்தனின் திரைப்படங்களின் பிரதியோ, நகல்பிரதியோ யாரிடமாவது இருந்தாலோ, அல்லது அது பற்றிய தகவல்கள் தெரிந்தாலே அதை தெரியப்படுத்தவும்.


திரைப்பட காப்பகம் என்று தமிழில் எதுவுமில்லை. இவ்வளவு கோடிக்கணக்கில் முதலீடு செய்து திரைப்படங்களை உருவாக்கும் தமிழகத்தில் படங்களின் பிரிண்டுகளை பாதுகாக்க முறையான ஏற்பாடுகள் இல்லை. விருதுபெற்ற படங்களை பார்வையிடுவதற்கு வழிகள் இல்லை. லேப்பில் வைத்து பாதுகாக்கபட்ட படங்களே முறையான பராமரிப்பு இன்றி சிதைந்து போய்விட்ட அவலத்தை இயக்குனர் பாலுமகேந்திரா அவர்கள் ஒருமுறை வருத்தம் தோயத் தெரிவித்தார்.


பூனாவில் உள்ள தேசிய திரைப்பட காப்பகம் போல ஒன்று தமிழகத்திற்கு கட்டாயம் தேவை. அதைச் சாத்தியமாக்குவது அரசின் கையிலும், திரைப்பட உலகின் கையிலும் தானிருக்கிறது.


ஜெயகாந்தனின் திரைப்படங்கள் மிக முக்கியமானவை. அவை வெறும்கேளிக்கை படங்கள் அல்ல. அவர் இயக்கிய படங்களில் காணப்படும் யதார்த்தமும் அடித்தட்டு மக்களின் வாழ்வும் சமூக கோபமும் மிக முக்கியமானவை. சில நேரங்களில் சில மனிதர்கள் நடிகை நாடகம் பார்க்கிறாள் போன்ற படங்களில் விவாதிக்கபடும் பெண் சுதந்திரம் மற்றும் ஆண்பெண் உறவு குறித்த விவாதங்கள் தீவிரமானவை. இந்த படங்களில் நடித்து லட்சுமி தேசிய விருது பெற்றிருக்கிறார்.


இருபது வருடங்களுக்கு மேலாக இருக்கும். மதுரை அமெரிக்கன் கல்லூரி ஜெயகாந்தனுக்கு ஒரு வார காலம் விழா நடத்தியது. அதில் ஜெயகாந்தன் நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் யாவும் விவாதித்திற்கு உட்படுத்தபட்டன. நேருக்கு நேர் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்வில் ஜெயகாந்தனின் திரைப்படங்களும் திரையிடப்பட்டன. ஒரு எழுத்தாளருக்கு கல்லூரி ஒன்று ஒருவார கால நிகழ்ச்சி நடத்தியது அதுவே முதல்முறை. மிக சிறப்பாக அமைந்திருந்தது.


இன்று அது போல ஜெயகாந்தனின் திரைப்படங்கள் ஒரே சேரத் திரையிடப்பட்டு அது குறித்து விமர்சனங்கள் விவாதங்கள் நடைபெற வேண்டிய அவசியம் உள்ளது. இதற்கு யாவரும் ஒன்றிணைந்து முன்முயற்சி கொள்ள வேண்டும். அதற்கு முதல்தேவை அவரது படத்தின் பிரதிகள். அதை தேடுவதும் சேமிப்பதும் நம் முயற்சியில் தானிருக்கிறது.


**


 

0Shares
0