டல்ஹெளஸியின் ஆரஞ்சு இரவு

சம்யுக்தா மாயாவின் முதல் கவிதைத் தொகுப்பு டல்ஹெளஸியின் ஆரஞ்சு இரவு.

இவரது கவிதைகள் எதையும் இதற்கு முன்பாக நான் வாசித்ததில்லை. தொகுப்பாக இவரது கவிதைகளை ஒருசேர வாசித்த போது பெருமகிழ்ச்சி அடைந்தேன். மிகச்சிறந்த கவிதைகளை எழுதியிருக்கிறார்.

இக் கவிதைகளின் தனித்துவம் எளிய வார்த்தைகளின் வழியே உருவாகும் மகத்தான அனுபவங்களாகும். புதிய கவித்துவ மொழியில் உணர்ச்சிபூர்வமாக கிளைவிடுகின்றன வரிகள்.  அதில் வெளிப்படும் படிமங்களும் உவமைகளும் சிறப்பாக உள்ளன.

எனக்குப் பிடித்த கவிதைகளில் ஒன்று அரூப முத்து.

முதல் இரண்டு வரிகள் எளிதாகத் துவங்குகின்றன. மூன்றாவது வரியில் தொலைவிலிருந்து பசியாற்றும் திறன் அதற்கு உண்டெனும் உனது நம்பிக்கைகள் என்பதில் கவிதையின் மீது புதிய வெளிச்சம் படரத்துவங்குகிறது.

அந்த வரியைச் சட்டென வாசித்துக் கடந்து போய்விடக்கூடாது. மெல்ல அசைபோட்டுக் கொண்டேயிருக்க வேண்டும். தொலைவிலிருந்து பசியாற்றும் பழம் என்பது ஒரு புது அனுபவம். அது தான் இக்கவிதையின் திறவுகோல். அதன் வழியே தான் பிரிவு அடையாளப்படுத்தபடுகிறது.

கழுவிட முடியாத உதிரக் கறையென

இருகைகளிலும் பரவுகிறது இளங்கனியின் சாறு

என்ற வரிகள் வழியாக வாழ்வின் இக்கணம் சுட்டிக்காட்டப்படுகிறது

இறுதி சந்திப்பின் போது களவு போய்விட்ட அரூபமான அந்தச் சிவந்த நல்முத்து காதலை தவிர வேறு எதுவாக இருக்கமுடியும்.

இக்கவிதை அழிவற்ற காதலின் அடையாளமாக மாதுளம் பழத்தை உருமாற்றிவிடுகிறது. அது தான் கவிதையின் சிறப்பு. கவிதையில் ஒரு சொல் அதிகமில்லை. வழக்கொழிந்து போன பிரயோகங்களில்லை. மாதுளையின் முத்து போலவே இக்கவிதையும் தனியழகில் ஒளிர்கிறது.

••

அரூப முத்து

ஒரு மாதுளம்பழம் பிரியத்துக்குரியவர்களை

உனக்கு நினைவூட்டுவதாய்ச் சொல்வாய்

தொலைவிலிருந்து பசியாற்றும் திறன் அதற்கு

உண்டெனும் உனது நம்பிக்கைகள்

இப்போதும் உண்மையா

நான் ஒரு மாதுளையைப் பிளக்கிறேன்

உன்னைப் பற்றிய நினைவுகள் சிதறுகின்றன

கழுவிட முடியாத உதிரக் கறையென

இருகைகளிலும் பரவுகிறது இளங்கனியின் சாறு

இன்னும் கண்டுபிடிக்கபடவில்லை

இறுதி சந்திப்பின் போது நம்

உணவு மேசையிலிருந்து களவு போய்விட்ட

அரூபமான

சிவந்த

ஒற்றை நல் முத்து

••

கறுக்கும் தேநீர் எனக்குப் பிடித்த இன்னொரு சிறந்த கவிதை

••

கறுக்கும் தேநீர்

சூரியன் ஒரு பெரிய எலுமிச்சையென நீருக்குள் மூழ்குகிறது

அந்தியின் அலைகள் பொன்னிறத்தில் உன்னைக் கிறங்கடிக்கும்

உலகின் மிகப்பெரிய குவளையில் தளும்புகிறது லெமன் டீ

என்கிறாய்

நேரம் செல்லச் செல்ல ஆறிக்கொண்டே இருக்கிறது

நீயும் அருந்தாத நானும் பருகாத

கறுத்துக் கொண்டிருக்கும் இவ்வளவு `தேநீரை`

எந்தக் கடலில் போய்க் கொட்டுவது

••

காணும் உலகை காணா உலகாக மாற்றும் விந்தையே கவிதையின் சூட்சுமம். இக்கவிதையில் சூரியன் எலுமிச்சையென உருமாறுவதுடன் உலகின் மிகப்பெரிய குவளையில் தளும்புகிறது லெமன் டீ என நீளும் மூன்றாவது வரியின் வழியே தரும் முற்றிலும் புதிய அனுபவம் உருவாகிறது. கறுத்துக் கொண்டிருக்கும் தேநீர் உறவின் குறீயிடாக மாறுகிறது. கடைசி வரிக்கேள்வி என்பது இயலாமையை. தவிப்பை சுட்டுவதாகவே உணர்ந்தேன்

••

மாயாவின் கவிதைகளில் பெருமளவு புதிய சொற்கள். பிரயோகங்களைக் காணமுடிகிறது. கயிற்றில் நடக்கும் சிறுமிக்குப் பயமிருக்காது.  அந்தரத்தில் நடப்பதை அவள் வியப்பாகக் கருதமாட்டாள். வாழ்க்கை நெருக்கடியே அவளை அந்தரத்தில் நடக்க வைக்கிறது. ஆனால் அக்காட்சி பார்வையாளர்களுக்கு வியப்பாக இருக்கும், மாயாவின் கவிதைகளும் அது போன்றவையே.

பிரிவும் தனிமையும் அன்பிற்கான ஏக்கமும் கொண்ட இக்கவிதைகள் சுய இரக்கத்தை முன் வைக்கவில்லை. மாறாகப் பிரிவை , துயரை, தனிமையை எதிர்கொண்ட விதத்தை அழுத்தமாக முன்வைக்கின்றன. தனிமையை மிக நுண்மையாக உணர்ந்த ஒருவரின் மென்குரல் போலவே கவிதைகள் ஒலிக்கின்றன.

முதல் தொகுப்பின் வழியே கவிதையுலகில் தனித்துவமான அடையாளத்தைப் பதித்துள்ள சம்யுக்தா மாயாவிற்கு எனது மனம் நிரம்பிய பாராட்டுகள்

சிறந்த கவிஞரை அறிமுகம் செய்துள்ள உயிர்மை பதிப்பகத்திற்கும் நன்றி

••

0Shares
0