எமி பிரஸ்டன் நடுத்தர வயது பெண். அவளது கணவர் ஜிம் ஒரு டிம்பர் நிறுவனத்தில் வேலை செய்கிறார். திருமணமாகி இருபது ஆண்டுகள் சந்தோஷமான வாழ்க்கையைத் தொடர்கிறாள். பதின்வயதிலுள்ள மகன் பிரைன் பேச்சுப் போட்டியில் ஆர்வம் கொண்டவன். அவர்கள் லண்டனின் சிறிய குடியிருப்பு ஒன்றில் வசிக்கிறார்கள். ஐம்பதுகளில் கதை நடக்கிறது.

ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில் படம் துவங்குகிறது. எமி பிரஸ்டனுக்கு வானொலியில் இசை கேட்பது பிடித்தமானது. சமையலறையில் உணவு தயாரித்தபடியே சங்கீதம் கேட்கிறாள். வேறு பக்கம் கவனம் திரும்பவே அடுப்பு தீப்பற்றி எரிகிறது. ரொட்டித்துண்டு கருகிப்போகிறது. கருகிப்போன பகுதியை நீக்கிவிட்டு மீதமுள்ளதைக் கணவனுக்குச் சாப்பிடத் தருகிறாள். ஜிம் அவசரமாக வெளியே கிளம்பிக் கொண்டிருக்கிறான்.
வீட்டை விட்டு வெளியே போகாத எமி பிரஸ்டன் எப்போதும் அழுக்கான டிரஸ்ஸிங் கவுனை அணிந்து கொண்டிருக்கிறாள். வீடு தான் அவளது உலகம்.
பகல் முழுவதும் இரவு உடையில் இருப்பதைப் பற்றி அவள் பெரிதாகக் கருதவேயில்லை. அடிக்கடி சிகரெட் பிடிக்கிறாள். பத்திரிக்கை குறுக்கெழுத்துப் போட்டியில் ஆர்வமாகயிருக்கிறாள். அதில் நிச்சயம் ஒரு நாள் வெற்றி பெறுவோம் என நினைக்கிறாள்.

எப்போதும் பதற்றமாக இருக்கும் அவள் எதையும் கவனமாகச் செய்வதில்லை. வீடு அலங்கோலமாக உள்ளது. மீதமான உணவு சமையல் மேடையில் கொட்டிக்கிடக்கிறது. பல நேரம் அடுப்பைக் கவனிக்க மறந்துவிடுகிறாள். நாற்காலி. மேஜையில் தேய்க்க வேண்டிய துணிகள் குவிந்து கிடக்கின்றன. படுக்கையில் கண்டபடி கிடக்கும் பொருட்கள். என எதிலும் ஒழுங்கேயில்லை.
ஊசி நூலைத் தேடுவதற்காக எல்லா டப்பாக்களையும் எடுத்துக் கொட்டிவிட்டு அப்படியே வேறு வேலையைக் கவனிக்கக் கூடியவள் எமி. இத்தனை களேபரங்களுக்கு இடையிலும் அவள் மகிழ்ச்சியாக இருக்கிறாள். அன்பாக நடந்து கொள்கிறாள். ஜிம் ஞாயிற்றுக்கிழமையும் அலுவலகத்தில் வேலையிருக்கிறது என்று சொல்லி அவசரமாகக் கிளம்பிப் போகிறான்
உண்மையில் அலுவலகத்தில் வேலை செய்யும் ஜார்ஜியா என்ற இளம்பெண்ணுடன் அவன் நெருங்கிப் பழகுகிறான். ரகசியமாக அவள் வீட்டினைத் தேடிப் போகிறான்.

அவளோ வீட்டை அழகாகப் பராமரிக்கிறவள். இனிமையாகப் பேசுகிறவள். அழகான உடை அணிந்திருக்கிறாள். அவளுடன் நெருங்கிப் பழகும் ஜிம் தன் மனைவியை விட்டு விலகி அவளைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறான்
மனைவியை விவாகரத்து செய்யாவிட்டால் அவளைத் தேடி வரவேண்டாம் என ஜார்ஜியா வலியுறுத்துகிறாள்.
இதைப் பற்றி மனைவியிடம் எப்படிப்பேசுவது என அவனுக்குத் தெரியவில்லை. இரவில் வீடு திரும்பும் அவனுக்குப் பிடித்தமான உணவைச் சாப்பிடத் தருகிறாள் எமி . அவனோ கவனமில்லாமல் சாப்பிடுகிறான். அவன் சொல்லாமலே ஏதோ பிரச்சனை இருக்கிறது என்பதை எமி கண்டுபிடித்துவிடுகிறாள். உடல்நலமில்லையா என ஆறுதலாக விசாரிக்கிறாள்.
அவன் கோபம் கொண்டு சண்டை போடுகிறான். அதில் அவளை விவாகரத்துச் செய்யப்போவதாகச் சொல்கிறான். அந்தக் கோபத்தைக் கூடத் தன்னைக் கேலி செய்வதாகவே எமி நினைத்துக் கொள்கிறாள். ஆனால் அது உண்மை என்று அவன் உரக்கக் கத்தவே ,அதிர்ந்து போகிறாள்.
தன்னை ஏன் பிடிக்கவில்லை என்று திரும்பத் திரும்பக் கேட்கிறாள்.
நீ அன்பான மனைவி தான். ஆனால் அழகாக இல்லை. கனிவாகப் பேசுவதில்லை. இனிமையாக நடந்து கொள்ள தெரியவில்லை. வீட்டைச் சுத்தமாக வைத்துக் கொள்ள உன்னால் முடியவில்லை என்று குற்றச்சாட்டுகளை அடுக்குகிறான். அத்தனை தவறுகளையும் ஏற்றுக் கொண்டு இனி திருந்திவிடுகிறேன் என்று கண்ணீர் விடுகிறாள். ஆனால் ஜிம் பிடிவாதமாக அவளைவிட்டுப் போவதிலே குறியாக இருக்கிறான்.
என்னை விட்டுச் சென்றால் சந்தோஷமாக இருக்கும் என்றால் அதையும் உங்களுக்காக அனுமதிக்கிறேன். ஒரேயொரு முறை ஜார்ஜியாவை நம் வீட்டிற்கு அழைத்துக் கொண்டு வா, அவளுடன் பேச வேண்டும் என்கிறாள்

அதன்படியே ஜார்ஜியாவை தனது வீட்டிற்கு அழைத்து வர ஒத்துக் கொள்கிறான் ஜிம்
இத்தனை ஆண்டுகள் தன்னைக் கவனிக்கவேயில்லை என உணரும் எமி உடனடியாக ப்யூட்டி பார்லருக்குச் சென்று தலையலங்காரம் செய்து கொள்ள முயலுகிறாள். அவனுக்குப் பிடித்தமான மதுவை வாங்குவதற்கு மோதிரத்தை அடகு வைக்கிறாள்.
ப்யூட்டி பார்லரில் அவள் அழகாகத் தயாராகி வரும் காட்சி அபாரமானது. இரவு உடையிலிருந்த எமி தானா இது என வியப்பளிக்கிறது.
எதிர்பாராத மழை அவளது ஆசைகளைக் கலைத்துவிடுகிறது. முடிவில் ஈர உடையுடன் வீடு திரும்புகிறாள், ஏமாற்றத்தைத் தாங்க முடியாமல் தனி ஆளாக மொத்த மதுவையும் குடித்துப் போதையில் மயங்கிப் போகிறாள்.
ஜிம், ஜார்ஜியாவை அழைத்துக் கொண்டு வருகிறான். மயங்கிக் கிடக்கும் எமிக்குத் தேநீர் தயாரித்துத் தருகிறாள் ஜார்ஜியா
அதைக் கண்ட மகன் இவளை ஏன் வீட்டிற்கு அழைத்து வந்தீர்கள் எனத் தந்தையிடம் சண்டையிடுகிறான். ஆத்திரத்தில் பிரைனை ஜிம் அடித்துவிடுகிறான். இதனால் பிரைன் கோவித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே போகிறான்.

மயக்கம் கலைந்து எழுந்து வரும் எமி, ஜார்ஜியாவிடம் அமைதியாகப் பேசுகிறாள். குற்றச்சாட்டுகள் போலின்றித் தான் அறிந்த உண்மைகளை எடுத்து வைக்கிறாள்
உனக்கு இவரைப் பற்றி என்ன தெரியும். இத்தனை ஆண்டுகள் மணவாழ்க்கையில் நான் அறியாத எதை நீ அறிந்து வைத்திருக்கிறாய். அவரது முழங்கால் வலி பற்றி உனக்குத் தெரியுமா. படுக்கையில் குறட்டை விடுவதைக் கேட்டிருக்கிறாயா. இருபது ஆண்டுகள் சந்தோஷமாக வாழ்ந்தோம். எதற்காக எங்கள் வாழ்க்கையில் குறுக்கிடுகிறாய். என்று முகத்திற்கு நேராகக் கேட்கிறாள். இதனால் ஜார்ஜியா கோவித்துக் கொண்டு வெளியேறுகிறாள்.‘
தானும் வீட்டைவிட்டுப் போவதாக அறிவிக்கும் ஜிம் தனது உடைகளை எடுத்துப் பெட்டியில் அடுக்குகிறான். அப்போதும் எமியே உதவிக்கு வருகிறாள். அவனது உடைகளை, உள்ளாடைகளை, சாக்ஸ் டைகளைத் தனியே எடுத்து மடித்துப் பெட்டியில் வைக்கிறாள். தானும் தன் மகனும் தனியே வாழ்ந்துவிடுவோம் என்று தைரியமாக அவனுக்கு விடை தருகிறாள்
இனி அவளது வாழ்க்கை என்னவானது என்பது தான் படத்தின் மீதப்பகுதி
கணவனின் அலுவலகத்திற்கு எமி பிரஸ்டன் தொலைப்பேசி செய்து பேசும் காட்சி முக்கியமானது. அது தான் திருப்புமுனை.
அவள் ஏற்கனவே ஜார்ஜியாவோடு ஜிம்மிற்கு உள்ள ரகசிய உறவை அறிந்திருக்கிறாள். அதற்காக அவனுடன் சண்டையிடவில்லை. ஆனால் எத்தனையோ ஆண்கள் இருக்கும் போது வயதில் மூத்த தன் கணவனை ஏன் மயக்கி பிடித்துக் கொண்டாள் என்று ஜார்ஜியா மீது தான் கோபம் கொள்கிறாள்.

உண்மையான அன்பு மட்டும் போதாது தானா என்பது தான் எமி பிரஸ்டன்யின் கேள்வி. நடுத்தர வயது பெண்ணின் தவிப்பை எமி அழகாக வெளிப்படுத்துகிறார்.
தன்னாலும் அழகாகத் தோற்றம் அளிக்க முடியும் என நம்பும் அவள் தன் மகனிடமிருந்து பத்து ஷில்லிங் கடன் வாங்குகிறாள். தலை அலங்காரம் செய்ய அம்மா பணம் கேட்பதைக் கண்டு மகன் கேலி செய்கிறான். விஸ்கி போத்தல் வாங்குவதற்காக அவளது நிச்சயதார்த்த மோதிரத்தை மூன்று பவுண்டுகளுக்கு அடகு வைக்கிறாள். அன்று தான் முதன்முறையாக அடகுக் கடைக்கு அவள் செல்கிறாள். அந்தக் காட்சி மறக்கமுடியாதது
தன்னுடைய வாழ்க்கை கைநழுவிப் போவதை உணரும் ஒரு பெண் அதைத் தக்கவைத்துக் கொள்ள என்னவெல்லாம் செய்வாள் என்பதை அழகாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.
Takes 20 years to build a home and you can break it up in five minutes.
I was going on my knees to you!
Yes, I was.
என எமி ஜார்ஜியாவிடம் சொல்கிறாள். இந்த மன்றாடுதலில் அவள் தோற்றுப் போகவே செய்கிறாள். ஆனால் ஜிம்மிற்கு தன்னை புரிய வைத்துவிடுகிறாள் என்பது தான் சிறப்பு.
படம் மெலோடிராமா தான். ஆனாலும் மனது கரைந்து போகவே செய்கிறது.

குடும்பக் கதைகளின் காலம் முடிந்துவிட்டது என்று இன்றைய சினிமா சொல்லிக் கொண்டிருக்கிறது. அது உண்மையில்லை. இன்றும் இந்தப்படம் பார்வையாளருக்கு நெருக்கமாகவே உள்ளது. இதே extra-marital relationship கதைக்களத்தில் தமிழிலே நிறையப் படங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன ,சில வெற்றி பெற்றிருக்கின்றன. ஆனால் அந்தப் படங்களில் இல்லாத யதார்த்தம் இதில் கைகூடியிருக்கிறது.
குறுக்கெழுத்துப் போட்டிக்கு விடைதேடும் எமியின் செயல் அவள் வாழ்க்கையின் ரகசியம் போலவே உணர்த்தப்படுகிறது. தினசரி வாழ்க்கையின் சலிப்பு தான் அவளை இப்படி மாற்றியிருக்கிறது. ஆனால் அதை அவள் வெளிப்படுத்தவில்லை. வெளியுலகின் இன்பங்களைத் தேடி ஓடவில்லை. இருப்பிடத்திற்குள்ளாகவே விரும்பியதைச் செய்து கொள்ள முயல்கிறாள். தடுமாற்றத்தில் நிறையக் குளறுபடிகளைச் செய்கிறாள். ஆனால் அத்தனையும் அவளது அன்பின் வெளிப்பாடு என்பதைக் குடும்பம் உணர்ந்தேயிருக்கிறது.
Guns of Navarone, Mackenna’s Gold போன்ற ஆக்சன் படங்களை எடுத்த J. Lee Thompson இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இயக்குநரின் சொந்த வாழ்க்கையைப் பிரதிபலிக்கக் கூடிய படம் என்பதால் உண்மைக்கு நெருக்கமாக உருவாக்கியிருக்கிறார் என்கிறார்கள்.
Yvonne Mitchell எமியாகச் சிறப்பாக நடித்திருக்கிறார். I am what I am என்பதைக் கடைசிக்காட்சி வரை நிரூபித்துக் காட்டுகிறார். wide angle மற்றும் extreme close up வழியே கதாபாத்திரங்களின் இயல்பை வெளிப்படுத்துவது படத்தின் தனிச்சிறப்பு
ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தனது செயல்களுக்கான சரியான ஒரு காரணமிருக்கிறது. இதில் எவரும் குற்றவாளியில்லை. படத்தில் டிரஸ்ஸிங் கவுன் என்பது குறியீடாக மாறியிருக்கிறது.
படத்தின் முதற்காட்சியிலே I thought you were joking என்கிறாள் எமி. அது வேடிக்கையில்லை என்று ஜிம் கண்டிப்பாக சொல்கிறான். படம் முழுவதும் இந்த இடைவெளி தொடருகிறது. ஜிம் சிகரெட் பாக்கெட்டினை மறந்து போகையில் வீட்டிலிருந்து சப்தம் கொடுத்து சிகரெட் பாக்கெட்டை தூக்கி வீசுகிறாள் எமி. அது தண்ணீரில் விழுகிறது.
பழைய பாடல்கள். பழைய நண்பர்கள். பழைய வாழ்க்கை என அவளது உலகம் மாறாதது. எமி ஏன் இப்படி ஆனாள். அவளது இரண்டாவது பிரசவமும் அதைத் தொடர்ந்த குழந்தையின் துயரமும் தான் காரணம். அதை ஒரு காட்சியில் அவளே சொல்கிறாள். அதன்பிறகு அவள் கண்ணாடி பார்ப்பதை நிறுத்திவிட்டாள். தனக்கு ஊட்டசத்து குறைவு என்று தானாக சமாதானம் சொல்லிக் கொள்ளத் துவங்கிவிட்டாள்.
குடும்பத்தின் நலனை மட்டுமே நினைத்துக் கொண்டிருந்த எமிக்குத் தன்னைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறான் ஜிம். அவள் கடைசி வரை மாறவேயில்லை. ஆனால் குடும்பத்தில் தனது இடத்தைப் புரிந்து கொள்கிறாள்.
நல்ல மனிதர்களுக்கு வரும் சோதனை காலத்தைப் பேசும் படமிது என்கிறார் கதாசிரியர் டெட் வில்லிஸ். எமியின் வாழ்க்கையை மட்டுமின்றி ஐம்பதுகளில் நடுத்தரவர்க்கம் எப்படியிருந்தது என்பதையும் படம் நுணுக்கமாக விவரிக்கிறது.
•••
.