இரண்டு நாட்களுக்கு முன்பாக ஒன்றாம் வகுப்பில் படிக்கும் எனது பையன் ஆகாஷ் டிராகன் ஒன்றுக்கு பெயர் வைக்க வேண்டும். நல்லதாக ஏதாவது ஒரு பெயர் சொல்லுங்கள் என்று கேட்டான். எதற்காக என்றதும் ஆங்கிலத்தில் டிராகன் பற்றி தான் ஒரு கதையை எழுதிக் கொண்டிருப்பதாகவும் அதில் வரும் டிராகனுக்கு பெயர் வைக்க வேண்டும் என்றான். டிராகனுக்கு என்ன பெயர் வைப்பது என்று உடனே நினைவிற்கு வரவில்லை.
ஏன் டிராகன்களுக்கு பெயர் வைக்க வேண்டும் என்றே தோன்றிக் கொண்டிருந்தது. அத்தோடு என் பால்யத்தில் நான் டிராகன் என்ற வார்த்தையைக் கூட கேட்டதில்லை. இப்போதும் கூட டிராகன் பற்றிய கதைகள் எதுவும் தெரியாது. என்ன பெயர் டிராகனுக்கு பொருத்தமாக இருக்கும் என்று யோசித்தபடியே இருந்தேன்.
இது போன்ற விஷயங்களில் நான் உபயோகமற்றவன் என்பது போல பையனே பென் என்பது எப்படியிருக்கிறது என்று கேட்டான். நன்றாகத் தானிருக்கிறது என்றேன். அவனாக பென் என்ற பெயரை நாலைந்து முறை சொல்லிப் பார்த்து கொண்டுவிட்டு தனது கதையை கணிப்பொறியில் எழுதத் துவங்கியிருந்தான்.
நான் தனியே அமர்ந்தபடியே எனக்கு தெரிந்த நரி, முதலை,கரடி, காகம், குரங்கு ,சிங்கம், புலி, பாம்பு போன்றவற்றை நினைத்தபடியே அவை எல்லாம் இன்றைய கதையுலகில் இல்லையே என்று யோசித்துக் கொண்டிருந்தேன். இன்று சிறுவர் கதையில் வரும் டைனோசர், ஏலியன்ஸ், பிளாக் தண்டர்,பவர் ரேஞ்சர், ரோபோ எதுவும் அன்றைய கதைகளில் இல்லை. இன்றுள்ள சிறுவர்கள் இந்த விசித்திர உயிரினங்களை நேரில் பார்த்ததும் இல்லை. ஆனால் அவர்கள் மனதிற்கு மிக நெருக்கமாக மாறியிருக்கின்றன
அம்புலிமாமாவில் படித்திருந்த கதைகளில் மட்டுமே மிருகங்களுக்கு பெயர்கள் இருந்தன. அதிலும் கணேஷ் என்ற பெயர் நிறைய மிருங்களுக்கு வைக்கபட்டிருந்தன. கணேஷ் என்ற குரங்கு ஒன்றும் குணசத்ரு என்ற நரியின் பெயரும் இன்றும் என் நினைவில் இருக்கிறது. மற்றபடி நான் கேட்டிருந்த கதைகளில் வரும் நரி அதன் உருவ அமைப்புக்கு தக்கபடி நீல நரி என்றோ குள்ள நரி என்றோ ஒற்றைகண் நரி என்றோ தான் அழைக்கபட்டது.
கதைகளில் வரும் மிருகங்கள் பேசக்கூடியவை. சிரிக்க கூடியவை. சண்டையிடக்கூடியவை. சில தந்திரசாலிகள், சில அப்பாவிகள். அல்லது ஏமாளிகள். மனிதர்களை போலவே.
உலகில் உள்ள எல்லா மிருகங்களையும் பற்றி கதைகள் இருக்கிறதா என்ன? கதையில்லாத மிருகங்களை பற்றி நினைக்கையில் ஏனோ வருத்தமாக இருந்தது.
எத்தனையோ உயிரினங்களுக்கு கதைகள் கிடையாது. இன்று வரை நான் கடற்குதிரையை பற்றிய தனிக்கதை எதையும் தமிழில் படித்ததில்லை. யானைகளை பற்றி ஆயிரம் கதைகள் இருக்கின்றன. ஆனால் நீர்யானை பற்றிய கதைகள் அதிகமில்லை. காண்டாமிருகத்திற்கு கதையிருக்கிறதா என்ன? அது போலவே வண்ணத்துபூச்சிகள் கதைகளில் முக்கியத்துவம் கொண்ட அளவிற்கு கரப்பான்பூச்சிகள் முக்கியத்துவம் பெற்றதேயில்லை.
எலிகள் மேல் கொள்ளும் கவனம் பெருச்சாளிகளுக்கு கிடைப்பதில்லை. எறும்பு தின்னியை பற்றி ஏதாவது கதையிருக்கிறதா என்ன? கதையில்லாத மிருகங்கள் மனித நினைவில் அதிகம் தங்குவதில்லை.
பல மிருங்கங்களை வாழ்வில் நேர் கண்டிராத போதும் கதைகளின் வழியே பரிச்சயமாகி ஸ்நேகம் கொண்டுவிடுகின்றன. அப்படி கதை வழியாக நான் அறிந்த அண்டரண்டாபட்சி, ஐந்து தலை நாகம், அன்னபட்சி போன்றவற்றை இன்றும் நிஜம் என்றே நம்புகிறேன்
சிறுவயதில் தினம் ஒரு கதை கேட்டிருக்கிறேன். மாலை அடங்கியதும் கதை சொல்லல் துவங்கிவிடும். அப்போது இரவு நிறைய மீதமிருந்தது. இன்றுள்ள குழந்தைகளுக்கு இரவு பதினோறு மணி வரை டிவி பார்ப்பது பள்ளிபாடம் எழுவது என ஏதாவது வேலையிருக்கிறது.
ஆனால் பால்யத்தில் எனக்கோ ஆறு மணியிலிருந்து ஒன்பது மணி வரையான மூன்று மணி நேரத்தை எப்படி செலவழிப்பது என்று தெரியாது. எவ்வளவு தான் கதைபேசினாலும் இரவு நீண்டு கொண்டேதானிருக்கும்.
தெருவிளக்குகளைத் தவிர வேறு வெளிச்சமற்ற கிராம வீதிகள் இரவில் கொள்ளும் தோற்றம் அலாதியானது. பகலில் நாம் பார்த்த ஆட்டுஉரலும் வேலிபுதர்களும் இரவானதும் மர்மமாக தோற்றம் கொள்ளத் துவங்கிவிடும். ஆடு கட்டியிருந்த சந்தினை பகலில் ஆயிரம் முறை கடந்து போயிருப்பேன்.
ஆனால் இரவில் அந்த வீதியில் கால்நீட்டியபடியே ஒரு பேய் உட்கார்ந்திருப்பதாக கேட்ட கதையிலிருந்து ஒவ்வொரு நாளும் அன்னம்மா என்ற பேய் அந்த வீதியில் கால் நீட்டி உட்கார்ந்திருந்தாள். அவள் காலைத் தாண்டிக் கொண்டு போகமுடியாது. போனவர்களை அவள் தலைமயிரால் கழுத்தை சுருட்டி இறுக்கி கொன்றுவிடுவாள் என்ற துணைகற்பனையும் சேர்ந்து கொள்ள அந்தச் சந்தில் பகலில் மட்டுமே நடமாடுவேன்.
அன்று கதை தெரியாத சிறுவர்களே இல்லை. அது போலவே சிறுவர்களுக்கு விருப்பமாக கதை சொல்லும் பெரியவர்களும் இருந்தார்கள். ஊர் கிணற்றடியின் ஒரு பக்கம் தான் கதை சொல்லும் களம். இரவிலும் யாராவது ஒரு பெண் தண்ணீர் இறைக்க வந்து கொண்டேயிருப்பாள். கிணற்றில் வாளி விழும் சப்தம் கேட்பது ஆனந்தமாகயிருக்கும். கிணற்றை சுற்றிலும் சிமெண்டால் கட்டியிருப்பார்கள். அத்துடன் கிணற்றடியில் எப்போதும் குளிர்ச்சியிருக்கும்.
அங்கே நாலைந்து பேராக துவங்கும் கதை சொல்லும் நிகழ்ச்சியின் முடிவில் பத்துபேருக்கு மேலாக ஆகிவிடும். நாவிதர், மாட்டு தரகர் , சமையற்காரர், சலவை தொழிலாளி இவர்களே ஊரில் அதிகம் கதை அறிந்தவர்கள். பள்ளி ஆசிரியர்கள் எவருக்கும் தெரியாத கதைகள் இவர்களிடமிருந்தன. பெண்கள் இரவில் கதை சொல்வதில்லை. பலரும் பகலில் வேலை செய்தபடியே கதை சொல்லக்கூடியவர்கள். அதிலும் திருகை திரித்தபடியோ, நெல்அவித்தபடியோ, தென்னை ஒலையை பின்னியபடியே கதையை வளர்த்து சொல்வார்கள்.
அப்படி எண்ணிக்கையற்ற கதைகளை கேட்டிருக்கிறேன். கதை கேட்கும் ஒவ்வொரு சிறுவனும் தானே ஒரு கதையை சொல்ல துவங்கிவிடுவான். இதில் சுப்பையா என்ற சிறுவன் தினமும் கதை சொல்வான். அவன் எந்தக் கதையை துவக்கினாலும் நடுராத்திரி பனிரெண்டுயிருக்கும். ஒரு ஊர்ல ஒரு ராஜா என்று தான் ஆரம்பிப்பான். அவனுக்கு நடுராத்திரி பனிரெண்டு மணி என்பது அச்சமூட்டும் ஒரு நேரம். அதை விலக்கி அவனால் ஒரு போதும் கதை சொல்ல முடியாது.
இன்னொருவன் பாண்டி. அவன் சொல்லும் கதையில் வரும் பூதமும், மனிதனும் மாறி மாறி சாப்பிட்டுக் கொண்டேயிருப்பார்கள். பூதம் ஆசை ஆசையாக உள்ளுர் இட்லி கடையில் கிடைக்கும் உளுந்து வடையும், மசாலா மொச்சையும் சாப்பிடும். டீ குடிக்கும். குடல்கறி தின்னும் சில வேளைகளில் கொத்து பரோட்டா வேண்டும் என்று சப்தமிடும்.
கதை சொல்லத் தெரியாத ஒருவன் செல்வராஜ். அவன் கதையைத் திணறித் திணறி ஆரம்பிப்பான். நீச்சல் பழகுகின்றவன் பாதி தண்ணீரை குடித்து மூச்சுமுட்டி கைகால்களை அடித்து உதறி சிரமப்படுவது போலிருக்கும். ஒரு ஊர்ல ஒரு ராஜா. அவரு பேரு..பேரு.. என்றபடியே வேறு யோசனைக்கு போய்விடுவான். அவன் கதையை மற்றவன் முடித்து வைப்பான்.
கதை ஒரு விளையாட்டாக இருந்தது. ஊரில் உள்ள ஒவ்வொன்றையும் பற்றி கதையிருந்தது. இடிந்த வீடுகள், தற்கொலை செய்து கொண்ட கிணறுகள். புதையல் உள்ள மேடு, முறிந்து போன ஆலமரம், திருடர்கள், ஊருக்கு வரும் சாமியார்கள், சாணை பிடிப்பவன், பேயோட்டுபவன், கருவாடு விற்பவன் என யாவரும் கதையை கொண்டிருந்தார்கள். புதிதாக வந்த ரேடியோ, டார்ச் லைட், கடிகாரம் என எல்லாவற்றையும் பற்றி கதை சொன்னார்கள். கதை ஒரு அறிதல் முறையாகவே இருந்தது.
கதை சொல்லி முடித்தபிறகு சிலர் வீடுகளுக்கு உறங்க போய்விடுவார்கள். சிலர் தெருவிலே உறங்குவார்கள். நான் தெருவில் உறங்கக் கூடியவன். ஆகாசத்தை பார்த்தபடியே படுத்துகிடப்பேன். நட்சத்திரங்கள் நகர்ந்து போவதும் வழி தவறிய பறவை தட்டழிவதையும் பார்த்தபடியே இருப்பேன். சில இரவுகளில் ஆகாசம் கொள்ளும் அற்புதம் சொல்லில் அடங்காதது. பின்னிரவில் தனியே ஊர்ந்து கொண்டிருக்கும் நிலவும் குளிர்ச்சி கொண்ட காற்றும் உறங்குபவர்கள் அறியாதது. அது போலவே விடிகாலைகளின் மென்னொளியும் புலரின் வாசமும் அற்புதமானது.
பள்ளியின் இடைவேளைகளில் கதையில் வந்த பரிகாசத்தை பரிமாறிக் கொள்வோம். நீதிபோதனை என்றொரு வகுப்பிருந்தது அதில் கதை சொல்வது வழக்கம். அதில் தான் அத்தனை பையன்களும் கதை சொல்வார்கள். எல்லோர் சொன்ன கதைகளை விடவும் சங்கரி என்ற மாணவி சொல்லும் கதைகள் வியப்பானவை. கதையை துவக்கிய இரண்டாவது வரியில் அவள் மாய உலகிற்கு சென்று விடுவாள். நத்தைகள் பறந்து கொண்டிருக்கும். தங்ககோட்டைக்கு போவதற்கு புதிரான வழிகள் இருக்கும். மாயமான ஆறுகள், பேசும் மீன்கள் என்று ஏதேதோ சொல்வாள்.
ஒவ்வொரு முறையும் அதிக கை தட்டு அவளுக்கே கிடைக்கும். அவள் எங்கிருந்து இந்த கதைகளை படிக்கிறாள் என்று ஆசிரியர் கேட்டபோது அவள் தன் வீட்டிலிருந்து நடந்து வரும் வழியில் இது போல யோசித்து கொண்டே வருவேன் என்றாள்.
அவள் வீடு ஊரிலிருந்து மூன்று மைல் தள்ளியிருந்தது. விவசாய குடும்பத்திலிருந்து படிக்கும் முதல்மாணவி. அவள் கதையை தன் நிழலை போல கூடவே வைத்துக் கொண்டிருந்தாள். கதை அவள் நாவிலிருந்து விரிந்து எல்லையற்று நீண்டது. பாதி படிப்பிலே அவள் நின்று போய்விட்டாள். அதன்பிறகு கதை சொல்வதில் பெரிய போட்டி வந்ததில்லை
இன்று யோசிக்கையில் அந்த சங்கரி என்னவாகியிருப்பாள் , ஆண்களை விட பெண்கள் வேகமாக வயதாகிவிடுகிறார்கள். இன்று அவள் வாழ்வின் பின்பாதி அத்தியாயத்திற்குள் சென்றிருப்பாள். நிச்சயம் அவளது மகளுக்கே திருமணமாகி குழந்தைகள் இருக்கும்.
பள்ளி முடித்த பிறகு அவள் யாருக்காவது கதை சொல்லியிருப்பாளா? அவள் வாழ்க்கைபாடுகளில் கதை என்னவாகியிருக்கும். என்றைக்காவது தான் நன்றாக கதை சொல்வேன் என்று யாரிடமாவது அவள் வெளிப்படுத்தியிருப்பாளா? யாராவது அவளிடம் இப்போதும் கதை கேட்பார்களா? அவள் சொல்வாளா? வாழ்க்கை நிச்சயம் அவளது கற்பனைகளின் சிறுபகுதியை கூட நிறைவேற்றியிருக்காது. கதைகள் அவளுக்குள்ளாகவே புதையுண்டு போயிருக்கும்.
எனக்கு அவள் முகம் மறந்து போய்விட்டது . ஆனால் அவள் கதை சொல்லும் முறையும் அந்த கதையின் மாயமும் நினைவில் அப்படியே இருக்கிறது , கதைகளில் வரும் மந்திரபெண்களை போலவே அவளும் மாயமாகி தான் போய்விட்டாள் இல்லையா?
வயது வளர வளர கதைகள் மாறிக் கொண்டேயிருந்தது. கதைகளில் இருந்த மாயலோகம் மறைந்து அந்த இடத்தை பெண்கள் ஆக்ரமித்து கொண்ட பதின்வயதில் சொல்லித் தீராதபடியே பெண்கதைகள் இருந்தன. கதைகள் வழியாகவே இச்சைகள் வளர்ந்தன. தனக்கு பிடித்தமான பெண்ணை பற்றிய கதையை ஒவ்வொரு ஆணும் வளர்த்து கொண்டேயிருந்தான்.
சைக்கிளில் நின்றபடியே எவ்வளவு நேரம் பேசிக் கொண்டிருந்தோம் என்பதை மறந்து பெண்களை பற்றிய விசித்திர கதைகளை பரிமாறிக் கொண்டிருந்தோம். சில கதைகள் உண்மையிலிருந்து உண்டானவை. சில கதைகள் உண்மையாக வேண்டியவை. சில கதைகள் ஒரு போதும் உண்மையாகிவிடக்கூடாதவை. அந்த நாட்களில் கதை ஒரு உற்சாக பானம். எவ்வளவுஅருந்தியும் போதாத பானம். கள் வெறி கொண்டது போல கதை வெறி கொண்டிருந்தோம்
வேலை, திருமணம் , குடும்பம் என்று ஆக்டோபûஸ போல அன்றாட வாழ்வின் கரங்கள் பற்றி இழுக்க ஆளுக்கு ஒரு ஊர் என பிரிந்து போன நண்பர்கள் மெல்லக் கதையிலிருந்து விடுபட்டு போனார்கள். பிறகு அவரவர் வாழ்க்கைபாடுகள் கதைகளை விடவும் சிக்கலானது
ஆனால் வாழ்வின் ஒட்டத்தில் அவரவர் குழந்தைகளின் உலகம் துவங்கியதும் மீண்டும் கதைகள் முக்கியத்துவம் கொள்ள ஆரம்பித்தன. ஆனால் கதை சொன்ன, கதை கேட்ட எவரும் இன்றும் தன் பிள்ளைகளுக்கு கதை சொல்லும் இயல்பில் இல்லை. கதை சொல்வதற்கான தனி ஆட்களும் இல்லை. ஆனால் எல்லா குழந்தைகளும் எப்போதும் கதை கேட்பதில் ஆர்வம் கொண்டேயிருக்கிறார்கள். கதையை பரிமாறிக் கொள்கிறார்கள்.
என் பால்யத்தில் நான் கேட்டது போன்று தினம் ஒரு கதையை என் பையன் கேட்க வாய்ப்பில்லை. அந்த இடத்தை தொலைக்காட்சியும் வீடியோ கேம்களும் இணையமும் பிடித்து கொண்டுவிட்டது. ஆனால் கதை புத்தகங்கள், கதை பேசுவது என்பது என் வீட்டின் இயல்பான சூழலாக இருப்பதால் என் பையன்கள் மற்றவர்களை விட அதிகம் கதையோடு நெருக்கம் கொண்டிருக்கிறார்கள். சில கதைகளை அவர்களுக்காக மட்டுமே எழுதியிருக்கிறேன். அவர்களுக்காக சில விளையாட்டுகளை உருவாக்கி தந்திருக்கிறேன்.
பெரும்பான்மை பெற்றோர்களுக்கு வேலை, அது தரும் சலிப்பு காரணமாக வீடு திரும்புதல் ஒய்விற்கான இடமாக மட்டுமே சுருங்கிப் போயிருக்கிறது. விடுமுறை நாட்கள் என்றால் நிம்மதியாக சாப்பிடுவதும் உறங்குவதும் மட்டுமே முக்கியப் பணியாகிவிட்டது. சிறுவர்களும் பள்ளி சுமையின் ஊடே நுண்ரசனைகளை அழித்து கொண்டுவருகிறார்கள்.
பத்து வருடங்களுக்கு முன்பு ராஜஸ்தானில் இருந்து மரபொம்மைகளாக நூற்றிற்கும் மேலாக வாங்கி வந்தேன். அந்த பொம்மைகளை வைத்து விளையாடி கதை சொல்வது பிடித்திருந்தது. அதை வெவ்வேறு பள்ளிகளில் செய்து பார்க்கலாமே என்று தோன்றியது. சென்னையில் உள்ள சில சிறார் பள்ளிகளில் கதை சொல்லத் துவங்கினேன்.
கதை சொல்வதற்கு முக்கியமான தேவை நல்ல குரல் வளம். அதன் பிறகு உடல்மொழி . அத்தோடு கற்பனைத் திறன். மூன்றும் இணையும் போது தான் கதை சுவாரஸ்யப்படும். எந்த வயது சிறுவர்களுக்கு கதை சொல்கிறோம் என்பது முக்கியம். காரணம் பத்து வயதிற்கு பிறகு சிறுவர்கள் கதைகளை விடவும் கதைகளில் இடம் பெறும் நிகழ்வுகளின் மீதும், கதாபாத்திரங்கள் மீதும் அதிக கவனமும் கேள்விகளும் கொண்டுவிடுகிறார்கள்
நாலு வயது முதல் எட்டுவயது வரை உள்ள குழந்தைகளை எனது பார்வையாளர்களாக நான் தேர்வு செய்து கொண்டிருந்தேன். அநேகமாக ஒரு வருடத்தில் நாற்பது, ஐம்பது கதை சொல்லும் நிகழ்ச்சிகள் செய்திருப்பேன். ஒவ்வொன்றும் ஒரு அனுபவம்.
ஒரு பள்ளியில் பலூன்களை வாங்கி நிரம்பி ஒவ்வொன்றின் மீதும் ஒரு பெயரை எழுதினேன். பிறகு அந்த பலூனை சிறுவர்கள் கையில் கொடுத்தேன். ராஜா என்ற பலூன் வைத்திருப்பவன் ராஜா. குரங்கு என்ற பலூன் வைத்திருப்பன் குரங்கு, ஆறு என்ற பலூன் வைத்திருப்பன் ஆறு . இப்படியாக பிரித்து கொண்டு நான் கதையை சொல்ல சொல்ல சிறுவர்கள் ஒடுவார்கள் குதிப்பார்கள். ஆடுவார்கள். இது வேடிக்கையாக இருந்தது.
இன்னொரு பள்ளியில் ஆளுக்கு ஒரு வரி சொல்லி ஒரு கதையை பல மணி நேரம் முடிக்கவிடாமல் நீட்டிக் கொண்டேயிருந்தோம்.
கதை சொல்வதில் முக்கிய இடம் பரிகாசத்திற்கே இருக்கிறது. வேடிக்கையாக கதை சொல்ல தெரிந்தால் மட்டுமே சிறுவர்கள் நம்மை கவனிப்பார்கள். அந்த வேடிக்கை நிஜமானதாக இருக்கே வேண்டும். அது போலவே அடிக்கடி தன்னை கேலி செய்து கொள்ள வேண்டும். அது தான் சிறுவர்களுக்கு ரொம்ப பிடித்த விஷயம்.
என் நிகழ்வில் ஒரு பாதி நான் கதை சொல்வதும் மறுபாதி சிறுவர்கள் கதை சொல்வதுமாக இருக்கும். அப்படியான நிகழ்வில் சிறுவர்கள் சொன்ன கதைகள் அற்புதமானவை. ஒரு சிறுவன் சிங்கம் பற்றிய கதையை சொன்னான். அந்த சிங்கம் பசியில் சாப்பிட ஏதாவது கிடைக்குமா என்று பிரிட்ஜை தேடியது. ஐஸ் வாட்டர் குடித்தது. ஸ்கூட்டரில் காட்டில் போனது. அத்துடன் சிங்கம் இரவில் மாத்திரைகள் சாப்பிட்டது. அந்த சிங்கம் அவனது அப்பா தான் என்பதில் என்ன சந்தேகம்.
இன்னொரு சிறுமி டிவியில் இருந்து ஒரு கை வெளியே வந்து அவளது வீட்டில் உள்ள பொருட்களை திருடுவதைப் பற்றி கதை சொன்னாள். இன்னொரு சிறுவன் கதை சொல்லி முடித்தபிறகு இதில் வரும் சிறுவன் தன்னுடைய தம்பி என்று சொல்லி அவன் என்னை பத்தி நிறைய கதை வச்சிருக்கான் அதான் நானும் அவனை பத்தி கதை சொன்னேன் என்றான்.
நான் சென்ற பள்ளிகளில் கதை சொல்வதால் என்ன பிரயோஜனம் என்ற கேள்வி பெரும்பான்மை ஆசிரியர்களுக்கு இருந்தது. சிலர் அனுமதிக்கவேயில்லை. சில நேரங்களில் அரைமணி கதை சொல்லும் நிகழ்விற்காக ஒரு நாள் முழுவதும் காத்திருக்க வேண்டியிருந்தது.பலநேரம் கதை சொல்லி முடிந்த பிறகு ஆசிரியர்கள் மாணவர்களிடம் இதை எல்லாம் நினைப்பில் வைத்து கொண்டு வீட்டுபாடம் செய்ய மறந்துவிடாதீர்கள் என்று எச்சரிக்கை செய்து அனுப்புவார்கள். நான் நினைத்தது போல கதை சொல்லும் கலையை என்னால் மீள்உருவாக்கம் செய்ய முடியவில்லை என்ற மனச்சோர்வும் சலிப்பும் பற்றிக் கொள்ள கதை சொல்வதில் இருந்து விடுபட்டு போனேன். அதன் பிறகு சிறுவர்களுக்கான கதைகளை எழுதலாம் என்று தோன்றியது.
ஆலீஸின் அற்புத உலகம் என்ற உலகப்புகழ் பெற்ற குழந்தைகள் நாவலை தமிழில் மொழிபெயர்த்தேன். கால் முளைத்த கதைகள் என்று இயற்கையை பற்றிய குழந்தைகளுக்கான கதைகள் தொகுத்து தனி நூலாக வெளியிட்டிருக்கிறேன். கிறுகிறுவானம், ஏழு தலை நகரம் என்று இரண்டு குழந்தைகள் நாவல் எழுதி வெளிவந்திருக்கிறது.
தமிழகத்தில் அறிவொளி இயக்கம் நடைபெற்ற நாட்களில் அவர்களுக்காக ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சனின் கதையொன்றை சிறுவர் படிக்கும் முறையில் மாற்றி எழுதி தந்தேன். அது ஆயிரக்கணக்கான பிரதிகள் விற்றது.நிறைய கிராமங்களில் கதை சொல்லும் முகாம்களை நடத்தி கதை கேட்டிருக்கிறேன்.
தினம் ஒரு கதை சொல்வது இன்றுள்ள சூழலில் பெற்றோர்களுக்கு இயலாமல் போயிருக்கலாம். ஆனால் வாரம் ஒரு கதை சொல்வது எளிதானது என்றே தோன்றுகிறது. கதை சொல்லாவிட்டாலும் சரி குழந்தைகளை கதை சொல்ல சொல்லி கேட்கலாம். படித்து காட்டலாம். அல்லது கதையில் வரும் பறவைகள், மிருகங்களை பட்டியலிட்டு கொண்டு அதை தேடி போய் பார்த்துவரலாம். இயற்கையை நாம் நெருங்கி செல்வதற்கு மிக எளிமையானதும் ஆழமானதுமான வழி கதை கேட்பது சொல்வதே.
கதை சொல்வதை ஒரு கலையாக கொண்டவர்கள் உலகெங்கும் இருக்கிறார்கள். தமிழில் உள்ள சிறந்த கதைசொல்லியாக எழுத்தாளர் கி.ராஜநாராயணனை குறிப்பிடுவேன். அவர் தேர்ந்த கதை சொல்லி.
அவர் போல உலகம் எங்கும் உள்ள கதை சொல்லிகளை பற்றியும் கதை சொல்பவர்களின் உடல் மொழி மற்றும் பாவனைகளை அறிந்து கொள்ள இந்த வீடியோ இணைப்புகள் உதவக்கூடும்.
Ki. Rajanarayanan Telling a Story
https://www.youtube.com/watch?v=bBkSEVzn46I
Traditional African Story Telling.
https://www.youtube.com/watch?v=WP_LTtFYt3A
Native American Indian Story Teller
https://www.youtube.com/watch?v=gAk5auElCDo
arab story teller
https://www.youtube.com/watch?v=izSfwz2Ewh4
Marrakesh Storyteller
https://www.youtube.com/watch?v=zYrOii-zHZo
Chinese Storyteller Eric Shepherd
https://www.youtube.com/watch?v=ephWySu6lQk&feature=related
Rakugo Japanese Storyteller
https://www.youtube.com/watch?v=Vaf0esKLMZg
கதைக்கு கால் இருக்கிறதா என்று பொதுவாக கேட்பார்கள். என்வரையில் கதைகளுக்கு கைகால்கள் மட்டுமில்லை இதயமும் இருக்கிறது. அது எப்போதும் துடித்துக் கொண்டேதானிருக்கிறது.
**