திரைக்குப் பின்னால்

Mank என்ற டேவிட் பிஞ்சர் இயக்கிய படத்தைப் பார்த்தேன். இந்த ஆண்டு ஆஸ்கார் பரிந்துரை பட்டியலில் இருக்கிறது. நிச்சயம் விருது பெறும் என்றே நம்புகிறேன். கறுப்பு வெள்ளையில் மிகச் சிறப்பாகப் படமாக்கியிருக்கிறார்கள்.

ஆர்சன் வெல்ஸ் இயக்கிய சிட்டிசன் கேன் ஹாலிவுட் சினிமா வரலாற்றில் சாதனைப்படமாகக் கொண்டாடப்படுகிறது. இந்தப் படத்தை இயக்கியபோது ஆர்சன் வெல்ஸிற்கு 24 வயது.

படத்திற்குச் சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கார் விருது அறிவிக்கபட்ட போது அதைப் பெற்றுக்கொள்ள வெல்ஸ் நேரில் செல்லவில்லை. படத்தின் திரைக்கதையை அவர் பெயரையும் போட்டுக் கொண்டார். உண்மையில் அந்தத் திரைக்கதையை எழுதியவர் ஹெர்மன் மான்கிவிச்.

அவரது பெயரும் திரைக்கதை ஆசிரியர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. மான்கிவிச்சும் ஆஸ்கார் விழாவில் கலந்து கொள்ளவில்லை. வீட்டிலிருந்தபடியே தான் விருது நிகழ்ச்சியினைத் தெரிந்து கொண்டார். சிட்டிசன் கேனைப் பற்றிப் பேசும் எவரும் மான்கிவிச்சை பற்றிப் பேசுவதில்லை. மகத்தான திரைக்கதை ஒன்றை எழுதிய எழுத்தாளன் ஏன் இருட்டடிக்கப்படுகிறான். ஏன் தான் எழுதாத திரைக்கதையில் ஆர்சன் வெல்ஸ் தன் பெயரை போட்டுக் கொண்டார். இதற்காக அவரும் மான்கிவிச்சும் எப்படிச் சண்டையிட்டுக் கொண்டார்கள் என்ற. மறைக்கப்பட்ட இந்த உண்மைகளை வெளிச்சமிட்டுக்காட்டியிருக்கிறார் டேவிட் பிஞ்சர்.

படுக்கையில் கிடந்தபடியே மான்கிவிச் எப்படி ஒரு திரைக்கதையை எழுதினார் என்பதை மிகச்சிறப்பாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். கேரி ஒல்ட்மேன் மான்கிவிச்சாகப் பிரமாதமாக நடித்திருக்கிறார்.

1940 ஆம் ஆண்டில் படம் நடக்கிறது. படத்தின் துவக்கத்தில் ஒரு கார் விபத்தில் சிக்கிய கால் முறிந்து தொலைதூர பண்ணை வீட்டின் படுக்கையில் கிடக்கும் மான்கிவிச்சை தனது புதிய படத்திற்கான திரைக்கதையை எழுதுவதற்காக ஆர்சன் வெல்ஸ் நியமிக்கிறார்.

பத்திரிக்கையாளரான மான்கிவிச் பணம் சம்பாதிப்பதற்காக மட்டுமே ஹாலிவுட் ஸ்டுடியோவிற்குள் எழுத்தாளராக நுழைந்தவர். கதை இலாக்காவில் அவரையும் ஒருவராக இணைத்துக் கொள்கிறார்கள். மிதமிஞ்சிய குடியும் ஞானமும் ஒன்று சேர்ந்த அவரை ஸ்டுடியோவால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் நடிகர்களின் நட்பு கிடைக்கிறது.

ஹாலிவுட் ஸ்டுடியோ என்பது மிகப்பெரிய தொழிற்சாலை. அங்கே நடிப்பது, எழுதுவது, படம் எடுப்பது எல்லாமும் வேலைகள் தான். எதிலும் சுதந்திரமாக, கலாப்பூர்வமாக ஈடுபடமுடியாது. பணம் மட்டுமே ஸ்டுடியோவின் குறிக்கோள். முந்தைய படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதே பார்மூலாவில் படம் எடுப்பதே ஸ்டுடியோ பாணி. அவர்கள் மாதசம்பளத்திற்கு ஆட்களை வைத்திருந்தார்கள். பகலிரவாக வேலை செய்ய வேண்டிய சூழல். சூதாட்டக்கூடம் போல அதிர்ஷடம் இருந்தால் பணத்தை அள்ளிக் கொண்டு போகலாம் என்ற நிலையே அன்றிருந்தது.

படத்தின் இயக்குநரால் சுதந்திரமாகச் செயல்பட முடியாது. தயாரிப்பாளர் தான் படத்தின் இறுதி வடிவை முடிவு செய்வார். தேவையான மாற்றங்களை அவரே வேறு ஒரு இயக்குநரை வைத்து எடுத்துக் கொள்வார். ஆகவே படம் வெளியாகி திரையரங்கில் ஓடும்வரை இயக்குநர் தலைக்கு மேலே கத்தி தொங்கிக் கொண்டுதானிருக்கும்.

ஸ்டுடியோ உலகின் நிஜத்தை படம் துல்லியமாகச் சித்தரித்துள்ளது, எழுத்தாளர்களின் அறையும் அங்கே நடக்கும் விவாதங்களும் ஸ்டுடியோ முதலாளிகள் ஊழியர்களை நடத்திய விதத்தையும் படத்தில் உண்மையாகக் காட்டியிருக்கிறார்கள்.

சிட்டிசன் கேன் திரைக்கதையை வில்லியம் ராண்டால்ஃப் ஹியர்ஸ்ட் என்ற தொழிலதிபரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டே உருவாக்கியிருக்கிறார்.

குறிப்பாகச் சிட்டிசன் கேனில் வரும் சார்லஸ் ஃபாஸ்டர் கேன் கதாபாத்திரம் ராண்டால்ஃப் சாயலில் தான் உருவாக்கப்பட்டிருக்கிறார். ஹியர்ஸ்ட் பத்திரிக்கை உலகில் நுழைந்த விதம். குற்றம் மற்றும் பாலியல் சார்ந்த விஷயங்களைத் தலைப்பு செய்திகளாக வெளியிட்டுப் பரபரப்பாகச் செய்தித்தாளை விற்றவிதம். நாடு முழுவதும் தனது பத்திரிக்கை அலுவலகங்களை உருவாக்கியது. மேயர் தேர்தலில் போட்டியிட்டது. அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட காதல் மற்றும் மனைவியின் காரணமாக உருவான பிரச்சனைகள். போன்றவற்றை மான்கிவிச் அப்படியே தனது திரைக்கதையில் மறு உருவாக்கம் செய்திருக்கிறார்

படம் முழுவதும் மான்கிவிச்சின் பேச்சு ரசிக்கும்படியாக உள்ளது. நினைவிலிருந்து அவர் இலக்கியமேற்கோட்களை அடிக்கடி வெளிப்படுத்துகிறார். ஆழ்ந்த படிப்பும் புரிதலும் கொண்டவர் என்பதை அழகாகக் காட்டுகிறார்கள்

குடிபோதையில் அவர் தனது அன்றாட வாழ்வின் கஷ்டங்களை மறக்க முயலுகிறார். போதை கலையும் நேரங்களில் மட்டுமே எழுதுகிறார். அவரைக் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் திரைக்கதை எழுத வைப்பது பெரிய சவால். ஆனால் அதைத் துணித்து முயற்சிக்கிறார் ஆர்சன் வெல்ஸ்.

மான்கிவிச்யை எழுத வைப்பதற்காகப் பெட்டிபெட்டியாக விஸ்கி பாட்டில்களை அனுப்பி வைக்கிறார் ஆர்சன் வெல்ஸ்.

மான்கிவிச் சொல்லச் சொல்ல டைப் செய்வதற்காக ரீட்டா என்ற பெண் உதவிக்கு இருக்கிறாள். பெருங்குடிகாரரான மான்கிவிச் எப்படித் திரைக்கதையை எழுதும் போதே அவரது கடந்தகால நினைவுகள் பீறிடுகின்றன. முன்பின்னாகச் செல்லும் கதைப்போக்குப் படத்திற்குத் தனிசுவாரஸ்யத்தைத் தருகிறது.

இந்தப்படத்திற்கான ஸ்கிரிப்ட்டை டேவிட் பிஞ்சரின் தந்தை ஜாக் பிஞ்சர் 1990களில எழுதியிருக்கிறார். அதை உடனடியாகப் படமாக்க முடியாத டேவிட் பிஞ்சர் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது படமாக்கியிருக்கிறார்

மாங்க் படத்தில் எம்ஜிஎம் ஸ்டுடியோ எப்படி இயங்கியது என்பதைத் துல்லியமாகச் சித்தரித்திருக்கிறார்கள்.

லூயிஸ் பி. மேயரின் பிறந்தநாள் விழாவில் நடக்கும் நிகழ்வுகளும் அங்கே மான்கிவிச் கலந்து கொண்டு போதையில் பேசுவதும் தேர்தலில் போட்டியிடும் அப்டன் சிங்ளேர் பற்றிச் சொல்வதும் அழகான காட்சி.

எம்.ஜி.எம். ஸ்டுடியோ நிர்வாகிகள் அப்டன் சிங்ளேருக்கு எதிராகப் பிரச்சாரம் செய்கிறார்கள். இதற்காகப் பிரச்சாரப்படங்களைத் தயாரிக்கிறார்கள். ஆனால் அவர்கள் முயற்சி பலிக்கவில்லை.

அந்த நாட்களில், எழுத்தாளர்களை ஸ்டுடியோக்கள் சொற்ப பணத்தைக் கொடுத்து எழுதி வாங்கிவிடுவார்கள். படத்தின் டைட்டிலில் அவர்கள் பெயர் இடம்பெறாது. கதை இலாக்கா என்பதே இந்த இருட்டடிப்பிற்கான கவசம் தான்.

மான்கிவிச் அப்படிப் பணத்தை மட்டும் வாங்கிக் கொண்டு தி விஸார்ட் ஆஃப் ஓஸ் எழுதுவதில் துணை செய்திருக்கிறார். ஆனால் தான் தீவிரமாக உழைத்து எழுதிய சிட்டிசன் கேன் கதையை அப்படிப் பணத்தை மட்டும் வாங்கிக் கொண்டு ஒதுங்கிவிட மனமின்றி அவர் ஆர்சன் வெல்ஸிடம் தன்னுடைய பெயர் படத்தில் இடம்பெற வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்.

இதை ஆரம்பத்தில் வெல்ஸ் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் மான்கிவிச்சின் பிடிவாதம் காரணமாக அவரது பெயரை தன்பெயரோடு சேர்ந்து திரைக்கதை என டைட்டிலில் போடுகிறார்.

பல்வேறு பிரிவுகளில் அந்தப்படம் ஆஸ்கார் விருதுக்குப் போட்டியிட்டபோதும் சிறந்த திரைக்கதைக்காக மட்டுமே விருது பெற்றது. ஆனால் அதைப் பெற இருவருமே நேரில் செல்லவில்லை

ஹாலிவுட் ஸ்டுடியோக்களின் மான்கிவிச் அடைந்த அனுபவங்களைத் தான் அந்தப்படத்தில் காட்சிகளாக்கியிருக்கிறார். இதைப் படமாக்கிய விதத்தில் தன் மேதைமையை ஆர்சன் வெல்ஸ் நிரூபித்திருக்கிறார். ஆனால் அவரைப் போன்ற பெருங்கலைஞரும் கூடத் தான் எழுதாத கதைக்குத் தன் பெயரைப் போட்டுக் கொள்ள ஏன் முன்வருகிறார்கள் என்பது புதிரான விஷயமே.

சிட்டிசன் கேனிற்குப் பிறகு மான்கிவிச் முக்கியமான படம் எதையும் எழுதவில்லை. குடியும் மனச்சோர்வு மிக்க வாழ்க்கையும் அவரை முடக்கிவிட்டது. ஆனால் இந்த ஒரேபடம் என்றைக்கும் அவரது பெயரை ஹாலிவுட்டில் உச்சரிக்கவைத்துக் கொண்டேயிருக்கிறது

இந்தப்படத்தைக் கறுப்பு வெள்ளையில் உருவாக்கியதே தனிச்சிறப்பு. கறுப்பு வெள்ளை சினிமா இன்றில்லை. ஆனால் அந்த நினைவுகள் நமக்குள் அழியாமல் இருக்கின்றன. இப்போதும் கூட ஹாலிவுட்டின் புகழ்பெற்ற கறுப்பு வெள்ளை படங்களைக் காணும் போது வியப்பாகவே இருக்கிறது

மான்க் போராடி தனது பெயரை திரையில் இடம்பெறச் செய்துவிட்டார். ஆனால் எத்தனையோ எழுத்தாளர்களால் தனது திரைக்கதை வேறு யாரோ பெயரில் வெளியான போதும் ஒன்றுமே செய்ய இயலவில்லை. இன்றும் அமெரிக்காவில் திரைக்கதையைப் பதிவு செய்யும் அமைப்புகள் தீவிரமாகச் செயல்படுகின்றன. இப்படி ஏமாற்றிவிட முடியாது. முறையான ஒப்பந்தம் இன்றி ஒரு படமும் உருவாக்கப்படுவதில்லை.

ஆஸ்கார் போட்டியில் இந்த முறை பெரும்பாலும் பீரியட் படங்களே அதிகமுள்ளன. சமகாலப் பிரச்சனைகளை விட்டு ஒதுங்கி ஏன் இப்படி நூற்றாண்டுகளுக்கு முந்தைய உலகை நோக்கி ஹாலிவுட் திரும்பியிருக்கிறது என்பதிலும் வணிகம் தவிர வேறு நோக்கம் எதுவுமில்லை.

இன்று வாழ்க்கை வரலாற்றுப் படங்கள் வசூலில் பெரிய வெற்றி பெறுகின்றன. நூறு ஆண்டுகளுக்கு முந்தைய சமூகப்பிரச்சினைகளைத் திரையில் காண மக்கள் விரும்புகிறார்கள். போரையும், மதத்தையும் வைத்து ஆண்டுக்கு ஒரு வெற்றிபடம் கொடுக்கும் ஹாலிவுட் வணிகம் தற்போது மாறத்துவங்கியிருக்கிறது.

அமெரிக்கச் சினிமாவில் வேறு தேசத்தின் இயக்குநர்கள் முதன்மையான இடம்பெறத் துவங்கிவிட்டார்கள். சென்ற ஆண்டு Parasite வெற்றி பெற்றது அதன் துவக்கம் மட்டுமே.

இந்த ஆஸ்கார் பட்டியலில் Nomadland, News of the World. Sound of Metal. The Trial of the Chicago 7போன்ற படங்கள் சிறப்பாக உள்ளன. இந்தப்படங்கள் நிச்சயம் விருதுகளைப் பெறக்கூடும்.

••

0Shares
0