திரையில் ஒடிய ரயில்

தமிழ் சினிமாவிற்கும் ரயிலுக்கும் உள்ள தொடர்பு விசித்திரமானது. சாமிக்கண்ணு வின்சென்ட் என்ற ரயில்வே ஊழியர் தான் மௌனப்படங்களை ஊர் ஊராக எடுத்துச் சென்று திரையிட்டவர். ஆரம்ப கால கறுப்பு வெள்ளைப் படங்களில் கதையில் ஏற்படும் கால இட மாற்றங்களைத் தெரிவிப்பதற்காகவே ரயில் பயன்படுத்தபட்டிருக்கிறது.

தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் இரண்டு ரயில் காட்சிகள் எப்போதும் பசுமையாக உள்ளன. ஒன்று தில்லானா மோகனாம்பாள் படத்தில் சிவாஜி பத்மினி இருவரும் ரயிலில் செல்லும் காட்சி. அதுவும் பத்மினியின் அருகாமையில் உட்காருவதற்காக பாலையாவை இடமாற்றம் செய்வதும் அதற்குப் பாலையா சொல்லும் காரணமும் பத்மினியின் அம்மா முறைப்பதும், கொசுக்கடி ஜாஸ்தியா இருக்கில்லை என்று பாலையா புலம்புவதும் இன்றைக்கும் சிரிக்கும்படியாக உள்ளது.

மற்றது மூன்றாம்பிறை படத்தில் இடம் பெறும் ரயில்காட்சிகள். குறிப்பாக தன்னை அடையாளம் மறந்து போன ஸ்ரீதேவிக்கு தான் யார் என்பதை நினைவுபடுத்துவதற்காக மலைரயில் நிலையத்தில் குட்டிக்கரணம் போட்டு மின்சாரக் கம்பத்தில் மோதி விழும் கமலின் நடிப்பும், நிஜம் தானா எனப்புரியாத ஸ்ரீதேவியின் கலக்கமும் கொண்ட காட்சி.

லூமியர் காலத்தில் இருந்தே சினிமாவின் பிரதான களம் ரயில். லூமியர் ரயில் வருவதையே முதன்முதலில் படம் பிடித்துக் காட்டினார். அதே ரயில் நிலையத்தில் லூமியரின் நுற்றாண்டைக் கொண்டாடும் விதமாக மின்சார ரயில் வருவதை அதே காட்சிக்கோணத்தில் அதே கேமிராவால் படமாக்கியிருப்பதை சமீபத்தில் பார்த்தேன்.
சத்யஜித்ரே தனது நாயக் என்றபடம் முழுவதையும் ரயிலிலே படமாக்கியிருப்பார். அதுபோலவே மதராஸ் மெயில் என்ற மலையாளப்படமும் ரயிலுக்குள்ளாகவே படமாக்கப்பட்டிருக்கிறது.

ரயில் இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத காட்சிப்பொருள். பயன்படுத்துகின்ற இயக்குனருக்கு ஏற்ப அதன் முக்கியத்துவம் குறியீடாகவோ பொழுதுபோக்காகவோ மாறியமைகிறது. கறுப்பு வெள்ளைப் படங்களில் பட்டணத்தைக் காட்ட வேண்டும் என்றால் உடனே சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தையும் ரயில் வந்து நிற்பதையும் தான் காட்டுவார்கள். ரயிலின் வருகை நகரமயமாவதன் குறியீடாக முன்வைக்கபட்டது.

ரயில் மையப்பொருளாக வந்த தமிழ்ப் படங்களில் மூன்று குறிப்பிடத்தக்கவை. ஒன்று கிழக்கே போகும் ரயில். பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளியான காதல் கதை. பிரிந்த காதலர்கள் ஒருவரோடு மற்றவர் தொடர்பு கொள்வதற்கும் தூது செல்வது போல ரயிலைப் பயன்படுத்திக் கொள்வார்கள். கூட்ஸ் ரயிலின் பின்னால் எழுதப்பட்ட வாசகங்களும், அதை நகரில் வாழும் கதாநாயகன் வாசித்து அறிந்து கொள்வதும் அந்த நாட்களில் பெரிதாகப் பேசப்பட்டது. ஆனால் படம் கிராம வாழ்வைப் பற்றியது என்பதால் நகரத்திற்கும் கிராமத்திற்குமான இணைப்பாக மட்டுமே ரயில் அடையாளப்படுத்தபட்டிருந்தது.

மற்றது ஒரு தலை ராகம். கல்லூரிக்கு ரயிலில் செல்லும் நுற்றுக்கணக்கான இளைஞர்களின் அன்றாட வாழ்வை இப்படம் விவரித்தது. மாயவரத்தில் உள்ள கல்லூரிக்கு ரயிலில் செல்லும் மாணவர்களுள் ஒரு தலையாக காதல் செய்யும் சங்கரின் வாழ்வைப் படம் விவரிக்கிறது. ரயில் நிலையம். ரயிலில் செல்லும் மாணவர்கள். அவர்களுக்குள் நடக்கும் கேலி, காதல் என்று படம் முழுவதும் ரயில் சார்ந்த நிகழ்வுகள் காரணமாக இந்த படம் வெகுஜன ரசனையில் மிகப்பெரிய வெற்றி பெற்றிருந்தது.

சமீபமாக மணி ரத்னத்தின் அலைபாயுதே. இதுவும் காதல் கதையே. மின்சார ரயிலில் பயணம் செய்யும் மருத்துவக்கல்லூரி மாணவியான ஷாலினியை எப்படி மாதவன் துரத்தித் துரத்தி காதலிக்கிறான் என்பதை விவரிக்கிறது. படம் மின்சார ரயில் நிலையத்தில் துவங்குகிறது. மின்சார ரயில் சார்ந்த காட்சிகளும். ரயில் நிலைய படிக்கட்டுகளில் கூட்டத்தின் ஊடே இருவரும் பேசி சண்டையிடுவதும் மனைவியை காணமல் தேடி சலித்து அமரும் இரவு நேர ரயில்வே நிலைய காட்சிகளும் என்று ரயிலை மிக அழகாகப் பயன்படுத்தியிருந்தார் மணி ரத்னம்.

இப்படத்தில் மட்டுமில்லை. அவரது எல்லாப் படங்களிலும் ரயில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. தளபதியில் பிறந்த குழந்தையை ரயிலில் விடும் காட்சி, உயிரே படத்தில் மனிஷாவை ரயில் நிலையத்தில் சந்தித்த முதல்நிமிசத்தில் காதல் கொள்வது, மௌனராகத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ரயில்வே தண்டாவளங்களின் நடுவில் ஒன்று சேர்வது. குரு படத்தில் வீட்டைவிட்டு ஒடும் ஐஸ்வர்யாவை குரு ரயிலில் சந்திப்பது. அடிவானத்து சூரியனோடு சேர்ந்த ரயில் வருகை. என்று பழைய நீராவி என்ஜின் காலத்திலிருந்து மின்சார ரயில் வரை பல்வேறுவகைப்பட்ட ரயிலும், ரயில் சார்ந்த காட்சிப்பதிவுகளும் அவரது படங்களில் இடம் பெற்றுள்ளன.

அவரது திரைப்படங்களில் ரயில் நிலையம் எதிர்பாராத சந்திப்பிற்கான ஒரு நிகழ்வெளி. அல்லது சில நேரமே தோன்றி மறைந்து போகும் விந்தை. இந்த இரண்டு நிலையிலுமே ரயில் தொடர்ந்து பயன்படுத்தபட்டிருக்கிறது. ஆனால் அதைக் காட்சிப்படுத்தியுள்ள விதம் தமிழ் சினிமாவில் புதியது.

நான் பார்த்த ரயில் காட்சிகளில் சிறந்தது என்று பிரேசில் நாட்டுப் படமான சென்ட்ரல் ஸ்டேஷன் படத்தில் வரும் ஆரம்பக் காட்சியையும், டேவிட் லீன் இயக்கிய டாக்டர் ஷிவாகோ படத்தில் வரும் சைபீரியாவிற்கு செல்லும் ரயிலையும் சொல்வேன்.

உயிரே படத்தின் ஆரம்ப காட்சிகள் தமிழ் சினிமாவில் புதியது

மழை பெய்த இரவு. தீக்குச்சி தேடி அலையும் இளைஞன். தாமதமாக வரும் ரயில். சூறைக்காற்றும் மின்னல் வெட்டும் சேர நிமிச நேரத்தில் தோன்றி மறையும் பெண் உருவம். அவளுக்காக தேநீர் வாங்கச் செல்வது. அதற்குள் ரயில் வந்துவிடவே அவள் புறப்படுவது. மழைத் துளி வீழ்ந்த தேநீரை கையில் வைத்தபடியே ஒடிவருவதற்குள் ரயில் கிளம்பிப் போவது. உலகிலே மிகக் குறைவான நேரத்தில் தோன்றி முடிந்து போன காதல் இதுவாக தான் இருக்க கூடும் என்ற வசனம் என்பவை மணிரத்னம் ரயிலை எந்த அளவு கதையின் பிரிக்கமுடியாத பகுதியாகப் பயன்படுத்துகிறார் என்பதற்குச் சிறந்த உதாரணம்.

சத்யஜித்ரேயின் பதேர் பாஞ்சாலி படத்தில் ரயிலைப் பார்க்க அப்பும் அவனது அக்காவும் ஒடுவார்கள். புகையோடு ரயில் கடந்து செல்வதை வியந்து பார்ப்பார்கள். அதைக் நவீனத்துவத்தின் குறியீடு என்று சினிமா விமர்சகர்கள் விளக்கம் கொடுக்கிறார்கள். காட்சிப்படுத்தபட்ட முறையில் அது காவியத்தன்மை கொண்டது. ஆனால் தமிழ் சினிவமாவில் இது போன்ற குறியீடுகள் முக்கியமானவை அல்ல. வணிக முயற்சிக்கான உத்தியாகவே ரயில் பெரிதும் பயன்படுத்தபடுகிறது.

குறிப்பாக ரயிலைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் பாடல் காட்சிகள். அதிலும் கூட மணிரத்னத்தின் உயிரேயில் இடம் பெற்றுள்ள தைய்ய தைய்யா பாடலும் அவரது தயாரிப்பில் வெளியான பைவ் ஸ்டார் படத்தில் இடம்பெற்ற ரயிலே ரயிலே ஒரு நிமிசம் என்ற பாடலுமே முக்கியமானவை. தைய்ய தைய்யா பாடல் ஊட்டி ரயிலில் தான் படமாக்கப்பட்டுள்ளது.

ஒரு பக்கம் பாடல் என்றால் இன்னொரு பக்கம் சண்டை. ஷோலே படத்தின் துவக்கத்தில் இடம்பெற்ற ஒடும் ரயிலின் சண்டைக் காட்சி தமிழ் படங்களில் இன்று வரை ரயிலில் சண்டை வைப்பதற்கு தொடர்ந்த தூண்டுதலாகவே உள்ளது. குறிப்பாக முரட்டுகாளை. கேப்டன் பிரபாகரன், போன்ற படங்களில் ரயில்ச்சண்டைகள் சிறப்பாகப் படமாக்கபட்டிருந்தன.

பச்சை விளக்கில் துவங்கி, ரிதம். காதல்கோட்டை, அன்பே சிவம், பிதாமகன், பச்சைகிளி முத்துசரம் சமீபத்தில் வெளியான எவனோ ஒருவன் போன்று பல படங்களில் கதையின் முக்கிய நிகழ்வுகள் ரயிலில் நடைபெறுவதாக காட்சிபடுத்தபட்டுள்ளன. இதில் அன்பே சிவம் படத்தில் இடம் பெற்றுள்ள ரயில் விபத்துக் காட்சியும் எதிர்பாராமல் ரயில் நிறுத்தப்படுவதும், ஆள் அற்ற ரயில் நிலையத்தின் இரவு காட்சிகளும் தேர்ந்த ஒளிப்பதிவு செய்யப்பட்ட குறிப்பிடத்தக்க காட்சிகளாகும்.

சமீபத்தைய ரயில்வே துறையின் கெடுபிடிகள் ரயில் சார்ந்த காட்சிகளை படமாக்குவதில் பெரிய சிக்கலை உருவாக்கியுள்ளன. தற்போதைய படங்களில் ஹெலிகாப்டர் வேண்டும் என்றால் கூட எளிதில் கிடைத்துவிடும். ஆனால் உண்மையான ரயில் நிலையமும் ரயிலும் தேவை என்றால் அது மலையைப்புரட்டும் செயல். அதன் காரணமாகவே பெரும்பான்மை படங்களில் ரயில் காட்சிகள் தவிர்க்கபடுகின்றன.

இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது புறப்பட்ட கடைசி ரயிலில் கூட்டம் கூட்டமாக வீடிழந்த அகதிகளான மக்கள் ரயிலின் உச்சியில் ஏறி உட்கார்ந்து பயத்துடம் தப்பிபிழைக்கும் உயிராசையுடனும் இருந்த புகைப்படங்கள் ரயில் பற்றிய அழியாத படிமமாக என் மனதில் நிற்கின்றன. அந்தக் கடைசிரயில் பயணத்தை மட்டுமே ஒரு படமாக்கலாம். இது போன்ற வலுவான காட்சிப் படிமமாக தமிழ் சினிமாவில் ரயிலை யாரும் இதுவரை பயன்படுத்தவில்லை என்ற ஆதங்கம் தொடர்ந்து இருக்கவே செய்கிறது.

           – சண்டே இந்தியன் வார இதழின் ரயில் சிறப்பிதழில் வெளியான கட்டுரை.

0Shares
0