ஹாலிவுட்டின் பிரபல இயக்குநர் சிட்னி லூமட் எழுதிய Making Movies அவரது திரையுலக வாழ்க்கை மற்றும் திரைக்கலையின் நுட்பங்களை விவரிக்கக் கூடியது. சிட்னி லூமட் இயக்கிய 12 Angry Men (1957), Serpico (1973), Dog Day Afternoon (1975), Network (1976) and The Verdict (1982) போன்ற படங்கள் குறிப்பிடத்தக்கவை.
ஒரு திரைப்படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு உங்களுக்கு வந்தால் ஒரு போதும் மறுத்துவிடாதீர்கள். உங்களது தயக்கங்கள் யாவும் தேவையற்றவை. சினிமா ஒரு கூட்டு உழைப்பு. அதிலும் முதற்படம் என்பது யாராலும் முடிவு செய்ய முடியாதது. சினிமா இயக்க வேண்டும் என்ற ஆசைப்பட்ட அனைவருக்கும் அந்த வாய்ப்பு கிடைத்துவிடவில்லை. உங்களுக்குக் கற்பனையும் கடின உழைப்பும் இருந்தால் போதும் சினிமாவை கற்றுக் கொண்டு விடலாம். நல்ல தொழில்நுட்ப கலைஞர்களின் உதவியும் ஒருங்கிணைப்பும் உங்கள் படத்தைச் சிறப்பதானதாக்கிவிடும். ஆகவே சினிமா இயக்கம் என்பது ஒருவருக்குக் கிடைக்கும் பேரதிர்ஷடம் என்கிறார் சிட்னி லூமட்
நாடக இயக்குநராக இருந்த அவருக்குத் திரையுலகின் கதவுகள் திறந்த போது அவர் யோசிக்கவேயில்லை. வெற்றி தோல்விகளைப் பற்றிய கவலையின்றிக் களம் இறங்கினார்.
எப்படி ஒரு கதையைத் திரைப்படமாக்கத் தேர்வு செய்கிறார் என்பதற்கு லூமட் சொல்லும் விளக்கம் அற்புதமானது. சினிமாவில் எந்தக் கதை வெற்றியடையும் என்று யாராலும் கணிக்க முடியாது. உங்களுக்கு அந்தக்கதை பிடித்திருக்கிறதா, படமாக்கத் தூண்டுகிறதா என்பது தான் முக்கியம்.
வெற்றிபெற்ற படங்கள் இவ்வளவு பெரிய வெற்றியைப் பெறும் எனக் கதையை வைத்துக் கணக்கிட முடியாது. அப்படியே தோல்வியும். மெலோடிராமா உள்ள கதைகள் படமாக்குவதற்கு ஏற்றவை என்பதே தனது அனுபவம் என்கிறார் லூமட்
நாடகவுலகில் எழுத்தாளர் தான் முக்கியமானவர். அவரது பிரதியைத் தான் மேடையேற்றப்போகிறார்கள்.ஆகவே எழுத்தாளர் ஒரு நட்சத்திரம் போல நடத்தப்படுவார். சில நேரம் நாடகத்தில் ஒரு வாக்கியத்தை மாற்றினால் கூட எழுத்தாளர் கோபம் கொண்டுவிடுவார். சினிமா அப்படியில்லை. அது திரை நட்சத்திரங்களின் உலகம். அவர்கள் விரும்பாவிட்டால் ஒரு நிமிஷத்தில் எவரும் மாற்றப்பட்டுவிடுவார்கள். அது இயக்குநராக இருந்தாலும், எழுத்தாளராக இருந்தாலும் ஒன்று தான். ஒன்றிரண்டு நடிகர்களே திரைக்கதையில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறவர்கள். மற்றவர்கள் இயக்குநர் சொல்வதைக் கேட்டு நடிப்பவர்களே என்கிறார் லூமட்
படத்தின் செலவைக் கட்டுப்படுத்த என்ன செய்வது. படப்பிடிப்புத் தளத்தில் என்ன நடக்கும். இயக்குநரின் பொறுப்புகள் எவை என்பதைப் பற்றித் தனது அனுபவத்தின் மூலம் விரிவாக விளக்குகிறார் லூமட்
12 Angry Men படத்தை மொத்தம் 18 நாட்களில் முடித்திருக்கிறார். ஆனால் அதற்கான ஒத்திகை இரண்டு மாதங்கள் நடந்திருக்கிறது.ஒரே அறையில் நடக்கும் கதை என்பதால் படமாக்குவது பெரிய சவாலாக இருந்தது. திரும்பத் திரும்ப நடிகர்கள் மீதே காட்சிகள் நகர்ந்து கொண்டிருக்கும். அதைச் சரிக்கட்ட வெளியே மின்னல் வெட்டுவது போலப் புறச்சூழலை உருவாக்க வேண்டியதாகியது. வெக்கையும் இறுக்கமும் அமைதியின்மையும் ஒன்று கலந்த சூழலை நடிகர்களின் உணர்ச்சி வெளிப்பாடு மூலம் அழகாகப் பொருந்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தனது படங்கள் யாவும் நீதிமன்றத்தை, நீதியை முதன்மைப்படுத்தியதே.. ஒருவகையில் ஒரு இயக்குநர் வேறுவேறு திரைப்படங்களாக எடுத்த போதும் அவரது உள்ளார்ந்த விருப்பம் அவரை அறியாமல் படங்களில் வெளிப்படவே செய்யும்
படப்பிடிப்புத் தளத்தில் பதற்றம் ஆவதன் மூலம் படப்பிடிப்பு தாமதமாகவே செய்யும். தேவையற்ற பிரச்சனைகளும் ஏற்படும். விளையாட்டு வீரர்களுக்குத் தெரியும் பதற்றம் ஆனால் நிச்சயம் காயம் ஏற்படும் என்று. ஆகவே முடிந்த அளவு இயக்குநர் பொறுமையுடன் காத்திருக்க வேண்டும்.
எழுத்தாளர்களுடன் பணியாற்றுகிற போது எழுதிக் கொடுக்கப்பட்ட வரிகளை எப்படியாகப் படமாக்க வேண்டும் என்பது இயக்குநரின் முடிவாக இருக்க வேண்டும். அதில் தான் ஒரு இயக்குநரின் தனித்திறமை வெளிப்படுகிறது.
ஒரு இயக்குநரான நிறைய வசனங்கள் கொண்ட காட்சியை தனக்குப் பிடிக்கும். அந்தக் காட்சிகள் நடிகர்களுக்குச் சவாலானவை. இயக்குநர் அது போன்ற காட்சிகளைக் கையாளுவது கடினம். ஆனால் தன்னால் நீண்ட வசனம் கொண்ட காட்சியைச் சிறப்பாகப் படமாக்க முடியும் என்கிறார் லூமட்
தயாரிப்பாளரின் கட்டுப்பாடுகள். நெருக்கடிகள் குறித்துச் சண்டையிட்டுக் கொண்டேயிருந்தால் படம் எடுக்க முடியாது. Murder on the Orient Express படத்தில் ஒரு குறிப்பிட்ட காட்சியை ஏன் படமாக்கவில்லை என்று தயாரிப்பு நிர்வாகி கோபமாகக் கேட்டார். அது இனிமேல் தான் படமாக்கப் போகிறது என்று சொல்லிச் சமாளித்தார் லூமட். உண்மையில் அக்காட்சி தேவையற்றது என்று நீக்கிவிட்டார். அதன் படப்பிடிப்பும் முடிந்துவிட்டது. படத்தை எடிட் செய்து காட்டிய போது தயாரிப்பாளருக்கோ, நிர்வாகிக்கோ அந்தக் குறிப்பிட்ட காட்சி தேவைப்படவில்லை. இப்படிச் சமாளிப்பதை விட்டு முன்னதாகச் சண்டையிட்டால் தன்னால் படத்தை விட்டு வெளியேற வேண்டியதாகியிருக்கும் என்கிறார் லூமட்
Making Movies நூலில் உள்ளவை இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட்டின் நடைமுறை. அனுபவங்கள். இன்று ஹாலிவுட் பெரிதும் மாறியிருக்கிறது. ஆனால் லூமெட்டின் அனுபவங்களிலிருந்து ஒரு இயக்குநர் தனக்குத் தேவையான பல்வேறு விஷயங்களைக் கற்றுக் கொள்ள முடியும். தவிர்க்க முடியும் என்பதாலே இன்றும் இந்நூல் முக்கியமானதாக வாசிக்கப்படுகிறது
••