எனது நண்பரும் தீவிர இலக்கிய வாசகருமான டாக்டர் ராமானுஜம் திருநெல்வேலியில் உளவியல் மருத்துவராகப் பணியாற்றுகிறார், அவர் எனது துயில் நாவல் பற்றி எழுதிய விமர்சனம்
••
துயில்: நோய்மையின் வரலாற்று, உளவியல் பதிவு
மனிதனுக்கு நேரும் சிக்கல்களிலேயே அவன் மிகவும் அஞ்சுவது நோய்க்குத்தான். வேறு எதையும் விட அவனால் தாங்கமுடியாதது மர்மங்களை.மற்ற பிரச்சனைகளைத் தீர்க்க முடியாவிட்டாலும் ஏன் வந்தது என்ற காரணத்தையாவது அறிந்திருப்பான்.ஆனால் நோய் வந்தவுடன் அவன் மருத்துவரிடம் கேட்கும் முதல் கேள்வி ‘இது ஏன் வந்தது’ என்பதுதான்ஆனால் பெரும்பாலான நோய்கள் ஏன் வந்தன,அதிலும் தனக்கு மட்டும் ஏன் வந்தது என்ற கேள்விக்கு விடை தெரியாமலிருப்பது அவனால் தாங்கிக் கொள்ள இயலாததாக இருக்கிறது.
எந்த நோயும் தனியே வருவதில்லை. பயமும் நிச்சயமின்மையும் சேர்ந்தே வருகின்றன.நவீன மருத்துவத்தில் பல நோய்களுக்குச் சிகிச்சை இருப்பினும் நோய் பற்றிய கற்பனைகளும் பயங்களும் மனிதனை அலைக்கழிக்கின்றன.விடை தெரியாத போது ஆன்மீகம் ,மதம் என்று திசை திரும்புகிறான்.எங்கு பயமும்,நிச்சயமின்மையும் சேர்கிறதோ அங்கு மதம் நுழைகிறது.
ஒவ்வொருவரும் நோயை ஒவ்வொரு விதமாய் எதிர்கொள்கின்றனர்.நான் முதன் முதலில் தூத்துக்குடி அருகேயுள்ள ஆத்தூரில் மருத்துவனாகப் பணியாற்றிய போது அங்குள்ள எளிய மக்கள் உடலைப் பற்றியும் நோய்த்தடுப்பு முறைகளைப் பற்றியும் பெரிய ஆர்வம் காட்டாமல் இருப்பது கண்டு கோபப்படுவேன்.அதே நேரம் அந்த மக்கள் எவ்வளவு பெரிய நோயையும் எளிதில் தாங்கிக் கொள்வதை வியப்புடன் கண்டிருக்கிறேன்.
கீழைத் தேச மக்கள் நோய்மையை எதிர்கொள்வதற்கும் மேலைத் தேச மக்கள் எதிர்கொள்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது.மேற்கத்தியப் பார்வை உடலைப் பருப்பொருளாகப் பார்க்கிறது.நம்முடையதைப் போன்ற மரபோ உடலை ஆன்மீக மற்றும் பிரபஞ்ச இயக்கத்தின் ஒரு பகுதியாகவே பார்க்கிறது.சுயம் முன்னிருத்தப் படுவது குறைவே.
இதுபோன்ற நோய் மற்றும் நோய்மையோடு தொடர்புடைய வரலாற்று,சமூக உளவியல் பார்வைகளைத் தன் வசீகர மொழியால் ‘துயில்’ நாவலில் ஆவணப் படுத்தியிருக்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன்.
நாவல் மூன்று தளங்களில் இயங்குகிறது.தெக்கோடு எனும் கிராமத்தைச் சுற்றியே கதைக்களம் அமைத்திருக்கிறார். 1982 ஆம் ஆண்டு மனைவிக்குக் கடற்கன்னி வேடமிட்டுத் திருவிழாவில் ஷோ நடத்தத் தெக்கோடு கிராமத்துத் துயில்தரு மாதாவின் திருவிழாவுக்குச் செல்லும் அழகர் மற்றும் அவனது மனைவியின் இருத்தலியல் சிக்கல்கள் ஒரு புறம் .மறு புறம் அதே கால கட்டத்தில் அந்தத் திருவிழாவிற்குச் சென்றால் நோய்கள் தீரும் என்ற நம்பிக்கையில் செல்லும் நோயாளிகள் வழியில் எட்டூர் என்ற இடத்தில் தங்கித் தங்கள் நோய்மையின் காரணங்களையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்வது சித்தரிக்கப் பட்டிருக்கிறது. இன்னொரு தளத்தில் கொல்கத்தாவிலிருந்து மருத்துவ சேவையாற்றுவதற்காகத் தெக்கோடு கிராமத்துக்கு வரும் கிருத்துவ மருத்துவர் ஏலன் பொவார் அடையும் அனுபவங்கள்.இது 1870 களில் நடக்கிறது.
அழகர் முற்றிலும் முழுமையான இருத்தலியல்வாதியாகச் சித்தரிக்கப் படுகிறான்.நாவலின் மையக் களமான நோய்மைக்கும் அழகரின் அனுபவங்களுக்கும் பெரிய தொடர்பு இல்லை எனினும் அடிப்படைத் தேவைகளான பசி ,காமம் போன்றவை அவனை ஆட்டிப்படைக்கின்றன.இளவயதில் ஏற்படும் அனுபவங்கள் அவனது ஆளுமையைச் செதுக்குகிற விதம் நன்கு சித்தரிக்கப்படுகிறது.
வீட்டை விட்டு ஓடி பழனியில் ஒரு ஓட்டலில் வேலைக்குச் செல்கிறான்.ஓட்டலில் தங்கியிருப்பவர்களின் துயரங்களைப் பிரிவுகளைச் சின்னச் சின்ன சந்தோஷங்களைக் காட்டுகிறார். எல்லாப் பெரிய ஓட்டல்களுக்கு அருகிலும் அவற்றின் கழிவுகள், குப்பைகளால் நிரம்பிய ஒரு மிக அழுக்கான சந்து இருக்கும். அது போல் அன்றாடம் நாம் சந்திக்கும் எளிய மனிதர்களுக்கு உள்ளே உள்ள அறியப்படாத வெளிகளை அழகரின் கதை மூலம் எட்டிப் பார்க்கிறது நாவல்.
பாலியல் தொழிலாளி(எஸ்.ரா வின் பாணியில் ‘வேசை’ ) ஜிக்கியுடன் சென்று அவளுக்கு உதவியாக இருக்கிறான். ஓட்டல் வேலையைப் போன்று இங்கும் அழகர் வலி வேதனைகள் ,நம்பிக்கைத் துரோகங்கள் போன்றவற்றைக் காண்கிறான்.பின்னர் தன் மனைவியைக் கடல்கன்னி வேடமிட்டுக் காட்சிப் பொருளாக்கிச் சம்பாதிக்கிறான்.
அழகர் வரும் பகுதி முழுதும் விளிம்பு நிலை மனிதர்களின் அன்றாடச் சிக்கல்கள்,அதை அவர்கள் எதிர்கொள்ளும் முறை அவர்களுக்குள் நிலவும் உறவுமுறை,அவர்களது நம்பிக்கைகள்,ஆச்சரியங்கள்,கொண்டாட்டங்கள் பற்றிய நுட்பமான பதிவுகள் காணப் படுகின்றன.திருவிழாவில் ஷோ நடத்தும் பல்வேறு வகையான மனிதர்களைப் பற்றி இவ்வளவு விவரங்களுடன் வேறு ஒரு நாவல் வந்திருக்குமா என்பது சந்தேகமே.
கொல்கத்தாவிலிருந்து மருத்துவ சேவை செய்ய தெக்கோடு கிராமம் வரும் ஏலன் பவார் ஆரம்பத்தில் மக்களின் நம்பிக்கையைப் போராட வேண்டியிருந்தது.நவீன மருத்துவம் விஞ்ஞானத்தின் நீட்சியாதலால் மத நம்பிக்கைகளுக்கும்,பாரம்பரிய மருத்துவ முறைகளுக்கும் எதிரானதாகவே இருக்கிறது.எனவே உள்ளூர் மக்கள் மட்டுமின்றி அவ்வூரின் பாதிரியாரும் அவளது முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றார்.
ஏலன் பவார் கல்கொத்தாவில் உள்ள தலைமைப் பாதிரியார் லகோம்பிற்கு எழுதும் கடிதங்கள் மதத்திற்கும் மருத்துவத்திற்கும் நடக்கும் முரணியக்கத்தைக் கவித்துவமாக வெளிப்படுத்துகின்றன.கரமசாவ் சகோதரர்களில் வரும் பாதிரி ஜோசிமாவுக்கும் அல்யோஷாவிற்கும் நடக்கும் உரையாடலை நினைவுபடுத்தும் செறிவு கொண்டது.ஏலன் பவார் கூறுகிறாள் “உண்மையில் மருத்துவத்தின் முதல் எதிரி மதம் தான். நோயைச் சொல்லித்தான் மனிதர்களை மதம் தன்வசம் இழுக்கிறது.இந்த பயத்தால்தான் அவர்கள் கடவுளை வணங்குகிறார்கள்”.
நவீன மருத்துவத்தின் வளர்ச்சிக்கும் கிருத்துவ மதம் நம் நாட்டில் பரவியதற்கும் நெருங்கிய தொடர்பு இருந்தாலும் ஒரு சில மிஷினரிகள் ஆரம்ப காலத்தில் நவீன மருத்துவம் பரவினால் மக்களிடம் கடவுள் மதம் மீது நம்பிக்கை குறைந்துவிடுமோ என்று அச்சப் பட்டனர் என்பதை பவார் விளக்குகிறாள். ஆனால் உண்மையான கிருத்துவரான லகோம்ப் மூலம் மருத்துவமும் ஆன்மீகம் ஒரே தளத்தில் இயங்குபவையே என்பதை ஆசிரியர் வெளிப்படுத்துகிறார்.
பாதிரி லகோம்பே கூறுகிறார் “மதம் என்ற மாளிகைக்கு நான்கு தூண்கள் அடிப்படையாக இருக்கின்றன.அதில் ஒன்று நோய்.மற்றது பசி.மூன்றாவது காமம்.நான்காவது அதிகாரம்.இந்த நான்கிலுருந்தும் உலகில் எந்த மதமும் விலக முடியாது.”
“நோயாளிகள் தன்னைப் பற்றிச் சொல்வதில் எப்போதும் பாதி அளவே உண்மையிருக்கிறது.அந்தப் பாதி உண்மைகளைக் கூட அவன் தன் வலி தாங்க முடியாமல்தான் சொல்கிறான்.”
எட்டூர் மண்டபத்திற்கு வரும் நோயாளிகளின் கதைகளும் அதற்கு அவர்களுக்குச் சேவை செய்யும் கொண்டலு அக்கா என்பவர் கூறும் பதில்களும்தான் கதையின் மைய ஓட்டமான நோய்மையைப் பற்றிய விவாதங்களாக இருக்கின்றன.உடல் மனத் தொடர்பு குறித்துத் தத்துவவாதிகள்,ஆன்மீகவாதிகள்,அறிவிலாளர்கள் என்று பலரும் விவாதித்துள்ளனர். நவீன மருத்துவம் மனதை உடலின் ஒரு அங்கமாக ஒரு பருப்பொருளாகப் பார்க்கிறது.இது தட்டையான பார்வையாக இருந்தாலும் உடல் மனத் தொடர்பு நோய் உருவாகுவதையும், நோயை எதிர்கொள்வதையும் விளக்குகிறது.ஒரே நோய் இருவருக்கு வந்தாலும் இருவரும் வேறு வேறானவர் என்பது மருத்துவத்தின் பால பாடம்.
நோயுற்றவர்கள் அனைவருக்கும் பொதுவான சில இயல்புகளைக் கதை படம் பிடிக்கிறது.நோயுற்றவர்கள் அனைவரது முகங்களும் ஒரே மாதிரி ஆகிவிடுகின்றதன;நாம் நோயுறும் போது அடுத்தவரோடு அதைப் பற்றிப் பேச விரும்புகிறோம்.மனதுக்குள் புதைந்த நினைவுகள் நோய்களாகின்றன;இதுபோன்ற கருத்தாக்கங்கள் எட்டூர் மண்டப விவாதங்களில் வெளிப்படுகின்றன.நோயுற்றவர்களும் உடன் இருப்பவர்களும் பரஸ்பரம் மற்றவரை வெறுக்கத் துவங்குகின்றனர்.
நோய்மை மனதின் சிக்கல்களிலிருந்து உருவாகுவதையும் ,அதை ஒவ்வொருவரும் தனித்தன்மையுடன் எதிர்கொள்வதையும் நோயுற்றவர் மீது சுற்றமும் சமூகமும் காட்டும் வெறுப்பையும் இந்தப் பகுதியில் வெளிப்படுத்தியிருக்கிறார் எஸ் ரா.
ஒரு பறவைப் பார்வையில் சொன்னால் அழகர் சம்பந்தப்பட்ட பகுதிகள் ‘நாளை மற்றுமொரு நாளே’ வின் இருத்திலியல் பார்வையைப் போன்றும், ஏலன் பொவார் வரும் பகுதி ‘கரம்சாவ் சகோதரர்களின்’ தத்துவ விவாதப் பகுதி போன்றும், எட்டூர் மண்டபப் பகுதி ‘பசித்த மானுடம்’ போல் நோயுற்றவர்களின் வாழ்வையும் வீழ்ச்சியையும் சித்தரிப்பதாகவும் அமைந்திருக்கிறது.தெக்கோடு என்னும் முடிச்சில் இம்மூன்று சரடுகளும் இணைகின்றன.
நோய்மையின் வரலாற்று சமூக உளவியல் கூறுகளைத் தன் கவித்துவ மொழி மூலம் அழியாத பதிவாக்குகிறார்.தீவிரத் தளத்தில் இயங்கும் இந்நாவலில் சில இடங்களில் பாத்திரங்கள் இயல்பு மொழியன்றிச் செந்தமிழில் பேசுவது சற்று ஒட்டாமல் இருக்கிறது எனினும் அங்கு ஆசிரியரின் குரலே ஒலிக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
நோயை அறிந்து கொள்வதை விட நோயாளியைப் புரிந்து கொள்வது முக்கியம்.இந்த நாவலை மருத்துவத்தை மக்கள் சேவையாக நினைக்கும் மருத்துவர்களுக்குச் சமர்ப்பணம் செய்திருக்கிறார்.மருத்துவர்கள் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய நாவல் .ஆனால் அவர்களது வாசிப்புப் பழக்கம் குறித்து அறிந்தவர்களுக்கு அது ஒரு இன்பக்கனவே என்று புரியும்.
(துயில்: உயிர்மை வெளியீடு; 527 பக்கங்கள்; விலை ரூ.350)