தேடலின் சித்திரம்

துணையெழுத்து / வாசிப்பனுபவம்

பிரேமா

ஏராளமான புத்தகங்களின் வாசிப்பும் அதிக எண்ணிக்கையிலான பயணங்களும் தேடல்களும் கொண்டிருப்பவர் எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள். தான் காணும் சிறுசிறு நிகழ்வுகளையும் சந்தித்த மனிதர்களையும் கருவாகக் கொண்டு தான் படித்திருந்த புத்தகங்களின் கருத்துக்களை உடன் இணைந்து புதிய புத்தகத்தை ஆசிரியர் எஸ்.ராமகிருஷ்ணன் அளித்திருக்கிறார். நெடுந்தொலைவு தொடர் பயணங்களும் தேடி அலைந்து பெற்ற புத்தகங்களின் அனுபவங்களும் அவரது வாழ்நாளின் எவ்வளவு காலங்களை விலையாகப் பெற்றிருக்குமோ? என்ற கேள்வியில் இந்த புத்தகத்தின் ஒவ்வொரு துணைக் கால்களும் நம்மை வியக்க வைக்கிறது. தனது தேடல்களில் அவர் அறிமுகப்படுத்தியிருக்கும் துணை எழுத்தே இத்தனை அனுபவங்களைக் கொண்டு வாழ்க்கையைப் பேசுகிறது எனில், அவரது முதல் எழுத்தும் முக்கிய எழுதும் எத்தனை சிறப்பு மிக்கதாக இருக்கும் என்ற ஆவலைக் கொடுக்கிறது. ஓவியர் மருது அவர்களின் தொழில் நுட்பத்தில் முன்னேறி இருக்கும் டிஜிட்டல் ஓவியங்கள் ஆசிரியரின் கசப்பான அனுபவங்களையும் மீறி ரசிக்க வைக்கிறது. புத்தகத்திற்கு கூடுதல் அணியாக சித்திரங்கள் சிறப்பாக அமைந்திருக்கிறது.

விகடனில் தொடராக வெளிவந்த இப்புத்தகத்திலுள்ள ஒவ்வொரு தலைப்பில் அமைந்த துணை எழுத்துக்கள், சாதாரணமான நிகழ்வுகளின் ஆழமான கருத்துக்களால் அமைந்த எழுத்தாக்கத்தால் நம் மனதை ஈர்க்கிறது. தன் வீட்டின் கட்டிலின் அடியில் உதிர்ந்து கிடந்த தலையில்லாத பொம்மையை கண்டபிறகு அவரது நினைவில் வந்த நிகழ்ச்சிகளாக, யோவானின் தலையை பரிசாக கேட்டவளின் காதல், தாமஸ்மானின் மாறிய தலைகள், விக்கிரமாதித்யனின் தலை, பரசுராமன் தகப்பனுக்காக தாயின் தலையை துண்டித்தது, என புத்தகத்தில் அவர் அறிந்திருந்த பட்டியல்கள் நீளுகிறது‌. இப்படி ஒவ்வொரு சிறு சிறு அனுபவங்களும் லேசர் கொண்டு குவித்தது போலச் செய்திகளில் செறிவாக அமைந்திருக்கிறது.

எழுத்தாளர் புதுமைப்பித்தன் அவர்கள் சென்னையில் தங்கியிருந்த அறையை அவரது பழைய விலாசத்தில் நூலாசிரியர் தேடிய போது நகரத்தின் பரிணாம வளர்ச்சியில் கிட்டாமல் போன அவரது பழைய அறை, அவர் வாழ்ந்த பொழுது அவர் கொண்டிருந்த கனவுகளையும் அலைக்கழிப்புகளையும் குடும்பத்திலிருந்து பிரிந்து வாழ்ந்து வந்த அவரது துக்கங்களையும் அப்படியே விழுங்கி விட்டு அவரது புத்தகங்களில் மட்டுமே தற்போது பதிந்திருக்கிறது என்பது வேதனையைக் கொடுப்பதாக இருக்கிறது. புதுமைப்பித்தன் அவர்கள் தங்கங்களை விற்கும் சாலையில் வறுமையில் வாழ்ந்திருக்கிறார். தமிழ்நாட்டில் முக்கியமான எழுத்தாளர்கள் ஒருவருக்குக்கூட முறையான வாழ்க்கை சரித்திரமே எழுதப் படாமல் இருக்கும் சூழ்நிலையை வருத்தமாக நூலாசிரியர் குறிப்பிட்டிருக்கிறார்.

தொட்டிச் செடிகள் எனும் தலைப்பில்,”நாம் உணவாகக் கொள்ளும் கீரைகள் காய்கறிகள் பழங்கள் தானியங்கள் தூய காற்று யாவும் இயற்கை தந்துகொண்டே இருக்கும் நன்றி செலுத்த முடியாத தானங்கள். நம் உடல் என்பது தாவரங்களின் சாரம்.”என்று பகிர்ந்து, தான் வாழும் நகரத்தில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வளரும் தொட்டிச் செடி மாதிரி தானே நாமும் நடக்க இடம் இல்லாமல் குடிக்க தண்ணீர் இல்லாமல் நல்ல காற்று இல்லாமல் வாழ்கிறோம் என்பதெல்லாம் எதிர்காலம் பற்றிய பயத்தை நமக்கு கொடுக்கவே செய்கிறது.

சொல்லாத சொல் எனும் தலைப்பில் மௌனத்திற்கு ஒரு இலக்கணமே வகுத்திருக்கிறார். மௌனம் எத்தனை ஆழமானது என்பதை சொல்லின் வலியை உணர்ந்தவர்களே உணர முடியும். சொல்லின் வலியை சொல்லால் வெளிப்படுத்த முடியாது என்பதிலும், பேச்சை கற்றுக் கொள்வதைப் போல மௌனத்தை எளிதில் கற்றுக்கொண்டு விடமுடியாது. பூக்கள் வாசனையால் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதை போல சொற்கள் இல்லாமல் நம்மை வெளிப்படுத்திக் கொள்வது தான் மௌனம் என்பதிலும் வியக்க வைக்கிறார்.இதைவிட வேறு என்ன மௌனத்தைப் பற்றி சொல்லிவிட முடியும்?

இப்படி ஒரு இலக்கியத்துக்கான அனுபவ புத்தகத்தை நமக்கு அளித்திட அவர் கொண்ட பயணத்தில் வரவேற்பும் உபசாரங்களும் மட்டுமே இருந்து விடவில்லை. அவர் சந்தித்த நிராகரிப்புகளையும் வெளிப்படையாகப் பகிர்ந்திருக்கிறார். ஒவ்வொரு மனிதனின் மனக் குகையிலும் என்ன இருக்க வேண்டும் என்பதை அவர் அவர்களே முடிவு செய்கிறார்கள். அன்பான ஆதரவான மக்களின் மதிப்பினை உணர்ந்து கொள்ள வெறுப்பினை உமிழும் மக்களும் உலகில் தேவைப்படுகிறார்கள். உலகம் அதனால் தானே இயங்கிக் கொண்டிருக்கிறது?

பொய்யைப் பற்றி பேசுகையில், பொய் ஒரு விதை இல்லாத தாவரம் காற்றைப் போல எல்லா இடங்களிலும் பரவி வளரக் கூடியது. என்று அறிமுகப்படுத்திவிட்டு, அப்படி அவர் சொன்ன பொய் எப்படி எல்லாம் பரவி அடுக்கடுக்காக வளர்ந்தது என்பதை சிறிது நகைச்சுவை உணர்வுடன் படித்தால் இப்புத்தகத்தின் இடையே சிறிது இடைவெளி கிட்டியது போல் இருக்கிறது. கிட்டத்தட்ட காந்தியின் சுயசரிதம் இந்நூல். பொய்யைப் பற்றி பேசும் போது கூட உண்மையை மட்டுமே பேசியிருக்கிறார்.

அகத் தனிமை எனும் தலைப்பில் சாதாரணமாக ஜன்னலில் வந்து எட்டிப் பார்த்துவிட்டு ஓடும் அணிலைப் பின்தொடர்ந்து சென்று, தமிழ்நாட்டில் ஸ்ரீவில்லிபுத்தூரில் செண்பகதோப்பு மட்டுமே பறக்கும் அணில் இருக்கிறது என்பதை நம்மில் பெரும்பாலானோர் அறிந்திராத தகவலாகக் கண்டடைந்து கட்டுரை எழுதியிருக்கிறார். அப்படியே அந்த வனத்தில் வாழும் பளியர்கள் பற்றிய அவர்களது இயற்கையோடு இயைந்த வாழ்க்கையையும் பகிர்ந்திருக்கிறார். காட்டில் இயல்பாக வாழும் இந்த மக்களின் இருப்பிடம் நகர்ப்புற மக்களின் வன வளத்தின் தேடலால் அழிகிறதே என்கிற பதைப்பும் நமக்குள் எழுகிறது.

இப்படி இந்த நூலில் ஒவ்வொரு தலைப்பிலும் அவரது பயண அனுபவங்களில் சந்தித்த நிகழ்ச்சிகளையும் மக்களையும் தனது புத்தக அனுபவங்களோடு இணைத்து புதிய வடிவம் கொடுத்து எழுதியிருப்பது ஏதோ ஒரு நசுக்கப்பட்ட நபர்களின் மீதும் சமூகத்தின் மீதும் நமது கவனத்தை அதன் ஒரு வரிகளிலாவது நம்மை திருப்பி கவனிக்க வைக்கிறது.

இந்த நூலுடன் கழிந்த பொழுதுகள் அற்புதமான தருணங்கள். தனது தொடர்ந்த பயணத்தில் செறிவான அனுபவங்களை நூலாக தருவித்த ஆசிரியருக்கு பேரன்பும் நன்றியும்.

••

0Shares
0