“When I know your soul, I will paint your eyes.”- Amedeo Modigliani
மோடிக்லியானி (Modigliani )புகழ்பெற்ற இத்தாலிய ஓவியர் . 35 வயதில் இறந்து போனவர். மரணத்திற்குப் பிறகே மோடிக்லியானி பெரும்புகழை அடைந்தார்.
பாப்லோ பிகாசோவிற்கு இணையான திறமை கொண்டிருந்த போதும் அங்கீகாரம் கிடைக்காமலே இறந்து போனார். பெருங்குடிகாரர். போதை பழக்கம் கொண்டவர். இவரது காதல் வாழ்க்கையையும், பாரீஸில் நடைபெற்ற ஒவியப்போட்டியில் கலந்து கொள்வதற்காக முயன்ற நிகழ்வினையும் மையமாக்கி உருவாக்கப்பட்டுள்ளது மைக் டேவிஸ் இயக்கிய மோடிக்லியானி திரைப்படம். படத்தில் மோடிக்லியானியாக நடித்திருப்பவர் ஆன்டி கார்சியா.
1900களில் பாரிஸ் நகரிலுள்ள உணவகங்களும், மதுக்கூடங்களும் ஒவியர்களுக்கான சந்திப்பு மையங்களாக விளங்கின. அங்கே பல்வேறு ஒவியர்கள் கலைஞர்கள் தினமும் ஒன்றுகூடுவார்கள். மாலை தொடங்கிப் பின்னிரவு வரை குடிப்பதும் விவாதிப்பதுமாகயிருப்பார்கள். மதுவிற்கும் உணவிற்கும் பணம் தரமுடியாத கலைஞர்களுக்கு மதுக்கூட உரிமையாளர்கள் கடன் அளித்தார்கள்.
மதுக்கூடங்களில் போதையில் மயங்கி கிடக்கும் கலைஞர்களை எக்காரணம் கொண்டும் எழுப்பமாட்டார்கள். கலைஞர்களுக்குள் எழும் சர்ச்சைகள் முற்றி வாய்ச் சண்டையாகவும் சில சமயங்களில் கைகலப்பிலும் முடிவதுண்டு. ஆனால் இந்தச் சண்டைகளில் காவலர்கள் ஒருபோதும் தலையிட்டதில்லை. அடித்துக் கொண்ட ஒவியர்கள் சிலநாட்களே ஒன்றாகிவிடுவார்கள்.திரும்பவும் கூடிக்குடிப்பார்கள். கட்டி அணைத்துக் கொள்வார்கள். ஆடிப்பாடுவார்கள். அது கலைஞர்களின் தனிஉலகம். யாரும் சொந்த விஷயங்களுக்காகச் சண்டையிட்டுக் கொள்வதில்லை. இந்தச் சூழலை தான் மோடிக்லியானி படமும் விவரிக்கிறது.
ஒவியம், இசை, சினிமா, இலக்கியம் எனப் பல்வேறு துறை சார்ந்த கலைஞர்களுக்குப் புகலிடமாக இருந்தது பாரீஸ் மாநகரம். பரஸ்பரம் நட்பு கொண்ட இக்கலைஞர்கள் ஒன்றாகப் பயணிப்பதும் ஒரே அறையில் தங்கி வாழ்வதுமாயிருந்தார்கள்
வூடி ஆலன் இயக்கிய Midnight in Paris படம் பாருங்கள். அது தான் உண்மையான பிரெஞ்சு கலைஞர்களின் இரவு வாழ்க்கை. . Midnight in Paris கவித்துவமாக உருவாக்கபட்டமிகச்சிறந்த படம். இந்தப் படத்திற்கு ஆதாரமாக இருப்பது A Moveable Feast என்ற ஹெமிங்வேயின் நூல். இது ஹெமிங்வேயின் பாரீஸ் நகர அனுபவங்களைப்பேசுகிறது.
பாரீஸில் தீவிர கலைமனதுடன் செயல்பட்ட ஒவியர்கள் தங்கள் ஒவியங்களை விற்பனைக்கு வைக்க மறுத்தார்கள். பணக்கார பிரபுக்களின் போலி ரசனைக்காகத் தனது ஒவியங்களை விற்கமுடியாது எனப் பிடிவாதமாக இருந்தார்கள். இதனால் வாழ்க்கைச் சிரமங்கள் ஏற்பட்ட போதும் அவர்கள் சுயமரியாதையுடனே வாழ்ந்தார்கள். தனித்தே இயங்கினார்கள்.
தன்னை விடவும் புகழ்பெற்றிருந்த பிகாசோ மீது மோடிக்லியானிக்கு கோபமும் பொறாமையிருந்தது. கூடவே நிச்சயம் தான் பிகாசோவை விடவும் சிறந்தவன் என்ற திமிரும் இருந்தது. அதை மதுக்கூடத்தில் பிகாசோ முன்பாகவே மோடிக்லியானி காட்டியிருக்கிறார். பிகாசோவை கடுமையாகக் கேலி செய்திருக்கிறார். இவரும் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் அவர்களுக்குள் நட்பிருந்தது. ஒன்றாகப் பயணம் செய்தார்கள். ஒரே ஒவியப்போட்டியில் கலந்து கொண்டார்கள். மோடிக்லியானி ஒவியமேதை எனப் பிகாசோ உணர்ந்தேயிருக்கிறார்.
படத்தின் ஒரு காட்சியில் இருவரும் காரில் பயணம் போகிறார்கள். வழியில் பிகாசோ நிறைய அறிவுரைகள் கூறுகிறார். அதைக்கேட்டு சிரித்த மோடிக்லியானி, பிகாசோவின் சுவிசேசங்களைத் தன்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என முகத்திற்கு நேராகவே கூறுகிறார்.
வெற்றி தான் கலைஞனின் இருப்பைத் தீர்மானிக்கிறது. நான் வெற்றியடைந்தவன் எனப் பிகாசோ அழுத்தமாகக் குறிப்பிடுகிறார். ஆனால் மோடிக்லியானி அதை ஏற்றுக் கொள்ளவில்லை. சிறந்த படைப்பு அதற்கான அங்கீகாரத்தைத் தானே தேடிக் கொள்ளும் என நம்பிக்கையோடு இருந்தார். அதுவே இன்று நிஜமாகியிருக்கிறது.
சுகுஹாரு ஃப்யூஜிடா என்ற ஜப்பானிய ஒவியர் பாரீஸிற்கு வந்த சில நாட்களில் மோடிக்லியானியின் நட்பை பெற்றார். ஃப்யூஜிடா பூனைகளை வரைவதில் விற்பன்னர். இவர் வரைந்த பூனை ஒவியங்கள் இன்றும் கொண்டாடப்படுகின்றன. ஃப்யூஜிடாவின் மாடலாக இருந்த ஜேன் ஹெபூடெர்னே என்ற இளம்பெண்ணை மோடிக்லியானிக்கு அறிமுகம் செய்து வைத்தார் சிற்பி சானா ஆர்லோஃப்.
பார்த்த முதல் நிமிஷமே ஜேனின் அழகில் மயங்கிய மோடிக்லியானி அவளைத் தனது ஒவியங்களுக்கான மாடலாகப் பயன்படுத்திக் கொள்ளதுவங்கினார். நிர்வாண ஒவியங்களை வரைந்தார். இருவரும் காதல் வசப்பட்டனர். ஜேன் கர்ப்பிணியானாள். பெண் குழந்தை பிறந்தது. அப்போதும் அவளை மோடிக்லியானி திருமணம் செய்து கொள்ளவில்லை. இதனால் அவளது குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டது. ஜேன் வீட்டை விட்டு வெளியேறி வாழ்ந்தாள்.
போதுமான வருமானமில்லாமல் குடும்பம் நடத்தமுடியாது என நினைத்த மோடிக்லியானி அவளையும் குழந்தையும் தனித்துவிட்டு மதுக்கூடங்களில் குடித்து மயங்கி கிடந்தார்.
இந்தச் சூழ்நிலையில் பாரீஸில் ஒவியப்போட்டி நடைபெறப்போவதாக அறிவிக்கபட்டது. முதற்பரிசு 5000 பிராங்குகள். அதில் மோடிக்லியானி கலந்து கொண்டால் நிச்சயம் பரிசை வெல்வார் என நண்பர்கள் வலியுறுத்தினார்கள். கட்டாயத்தின் பேரால் கலந்து கொள்ள வேண்டிய சூழல் உருவானது.
இதற்கிடையில் ஜேன் மீண்டும் கர்ப்பிணியாகிறாள். அவளைத் திருமணம் செய்து கொண்டேயாக வேண்டும் என்பதால் திருமணப் பதிவிற்கு ஏற்பாடு செய்தார். எந்த நாளில் திருமணப்பதிவு நடைபெறுகிறதே அன்றே ஒவியப்போட்டியும் நடைபெறுவதாகயிருந்தது.
போட்டிக்கு தனது ஒவியத்தை நண்பர் வழியாக அனுப்பி வைத்தார் மோடிக்லியானி. போட்டியில் மோடிக்லியானி வென்றாரா, அவரது இறுதிநாட்கள் எப்படியிருந்தன என்பதையே படத்தின் முடிவு விவரிக்கிறது.
1920 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் தேதி மோடிக்லியானி இறந்து போனார் மோடிக்லியானி இறந்து போன சில நாட்களில் அவரது காதல்மனைவி ஜேன் துயரம் தாங்காமல் ஐந்தாவது மாடியிலிருந்து குதித்து உயிர் துறந்து போனாள். பின்னாளில் அவளது உடலும் மோடிக்லியானி கல்லறை அருகிலே புதைக்கபட்டது. சொர்க்கத்திலும் தனது மாடலாக ஜேன் இருக்க வேண்டும் என்பதே மோடிக்லியானியின் ஆசை
படம் முழுவதும் கொண்டாட்டமும் உற்சாகமும் கொண்ட கலைஞனாகவே மோடிக்லியானி நடந்து கொள்கிறார். மதுக்கூடங்களில் நடனமாடுகிறார். முகமூடி அணிந்து வேடிக்கை செய்கிறார். பிகாசோவை கேலி செய்து ரோஜாப்பூ தரும் காட்சி அபாரம். சிறார்களைப் படம் வரையும் போது அவரது முகத்தில் வெளிப்படும் சந்தோஷம். அந்தக் குழந்தைகள் அடையும் வியப்பு சிறப்பாகக் காட்சிப்படுத்தபட்டுள்ளது
சிறுவயதில் அவரது வீடு ஏலம் விடப்பட்ட போது சுவரில் தான் வரைந்த ஒவியம் மட்டுமே மிச்சமிருந்தது என்பதை மோடிக்லியானி நினைவு கொண்டு கூறுமிடம் சிறப்பாக உள்ளது.
படத்தின் ஒரு காட்சியில் என்னை ஏன் இவ்வளவு வெறுக்கிறாய் மோடிக்லியானி எனப் பிகாசோ கேட்கிறார். அதற்கு மோடிக்லியானி உன்னை வெறுக்கவில்லை. என்னைத் தான் வெறுக்கிறேன். உன்னை மிகவும் விரும்புகிறேன் பாப்லோ எனக்கூறுகிறார்
ஒவியரைப்பற்றிப் படம் என்ற போதும் ஒவியஉலகை அதிகம் சித்தரிக்கவில்லை. மோடிக்லியானியின் காதல் மற்றும் நண்பர்களின் உலகமே படத்தின் மையம். படத்தில் பிகாசோவின் ஆளுமை கேலிக்குரியதாகவே சித்தரிக்கபட்டுள்ளது.
1910ல் மோடிக்லியானி பாரீஸில் வசித்த போது ரஷ்ய கவிஞரான அன்னா அக்மதேவாவை சந்தித்துப் பழகியிருக்கிறார். அன்னா தன் கணவருடன் அங்கே வந்து தங்கியிருந்தார். அன்னாவின் அழகில் மயங்கி அவரைக் காதலித்தார். அவளைச் சித்திரமாக வரைந்திருக்கிறார். அன்னா அப்போது தான் திருமணமானவர் என்ற போதும் அன்னாவின் மீதான காதல் குறையவில்லை. அன்னா அதைப்புரிந்து கொண்ட போதும் மோடிக்லியானியை ஏற்றுக் கொள்ளவில்லை.
அவரோடு பழகிய அனுபவத்தை அன்னா அக்மதேவா ஒரு கட்டுரையாக எழுதியிருக்கிறார். அதில் வறுமையில் பிச்சைக்காரரை போல வாழ்ந்த மோடிக்லியானி எப்போதும் கனவுலகிலே சஞ்சாரம் செய்துவந்தார். இரவு நேரங்களில் பாரீஸ் நகர வீதிகளில் சுற்றியலைவது அவரது வழக்கம். காசில்லாமல் எப்படி வாழ்ந்தார் என்பது வியப்பானது.
சில நாட்கள் தன்னை ம்யூசியத்திற்கு அழைத்துப் போய் எகிப்திய மன்னர்கள் ராணிகளின் சிலைகளைக் காட்டி வியப்பூட்டும் தகவல்களைக் கூறுவார். தனது கவிதைகளில் அவருக்கு விருப்பமில்லை. ஆனாலும் அவரது அன்பை புரிந்து கொண்டேயிருக்கிறேன். அவரது குரல் நினைவில் இன்றும் கேட்டுக் கொண்டிருக்கிறது என அன்னா அக்மதேவா குறிப்பிடுகிறார்.
ஒவியர்களைப் பற்றி நிறைய ஹாலிவுட் திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. அதில் ஒன்றாகவே இதைக் கருதுகிறேன். மோடிக்லியானியின் ஒவியங்களை ரசித்தவர்களுக்கு இந்தப் படம் அவரைப்பற்றிய எளிய அறிமுகத்தைத் தரக்கூடும். அதைத்தாண்டி திரைப்படமாக இது ஒரு சராசரியான படமே.