நகுலன் வீடு

இணையத்தில் தேடிக் கொண்டிருந்த போது தற்செயலாக கண்ட பதிவிது.நகுலன் இறந்த போது மலையாள எழுத்தாளர் உண்ணி ஆர் எழுதிய அஞ்சலிக்குறிப்பு

**

நகுலன் வீடு

உண்ணி.ஆர்.

டி.கே.துரைசாமி என்ற நகுலன் காலமானார்இந்த மரண அறிவிப்பின் மீது சாய்ந்து நின்று என் சக ஊழியர் கேட்டார்: யார் இவர்? நான் சொன்னேன்: தமிழ் எழுத்தாளர்.

கண்களை விரித்து நம்பிக்கையில்லாத குரலில் அவர் சொன்னார்: கேள்விப்பட்டதே இல்லை.

எல்லாக் காதுகளாலும் கேட்க முடியாத சில ஓசைகளும் எல்லாக் கண்களாலும் காண முடியாத சில காட்சிகளும் இருக்கின்றன என்று சொல்லத் தொடங்கிய நான் ,ஒருவேளை அந்த பதில் குளிர்பதனப்படுத்தப்பட்ட செய்தி அறையில் உருவாக்கக் கூடிய இயல்பின்மையை நினைத்து ஒரு அசட்டுச் சிரிப்பில்
என் எதிர்வினையைச் சுருக்கிக்கொண்டேன்.

பல்கிப் பெருகுகிற செய்திகளுக்கிடையிலும்யார் இவர்?’ என்ற கேள்வி என்னை விட்டுப் போகாமல் பின்னால் பதுங்கியும் என்னை விடப் பெரிதாக வளர்ந்தும் ஒரு நிழல்போலக் கூடவே வந்து கொண்டிருந்தது.

நான் அப்போது நகுலனுடன் எனக்கு நேர்ந்த முதலும் கடைசியுமான சந்திப்பைப் பற்றி யோசித்தேன்.வீட்டுக்குள்ளிருந்த இருட்டுக்கும் வெளியிலிருந்த
வெளிச்சத்துக்கும் நடுவில் நகுலன் நின்றிருந்தார்.

யார் நீ? எதற்காக வந்தாய்? போபோ..

உலர்ந்து மெலிந்த அந்த வயோதிக சரீரம் மூச்சிறைக்கக் கோபித்துக்கொண்டது. பிறகு இருட்டுக்குத் திரும்பியது.

அதே இருட்டிலிருந்து ஒரு பெண்மணி வெளியே வந்தார்: அவருக்கு எல்லாரைப் பார்த்தாலும் பயம்.யாரையும் பார்க்க விரும்புவதில்லை.

பிறகு எத்தனையோ முறை அந்த வீட்டை முன்னால் கடந்து போயிருக்கிறேன். என் வண்டியின் பின்னிருக்கையில் உட்கார்ந்திருப்பவரிடம்,அது யாராக இருந்தாலும்
நான் சொல்வேன்:

இதுதான் நகுலன் வீடு.தனியாக அந்த வழியைத் தாண்டும்போதும் பொர் பிரார்த்தனைபோல உச்சரிப்பேன்:

நகுலன்வீடு.

திருவனந்தபுரத்தில் பணக்காரர்கள் மட்டும் வசிக்கும் இடம் கால்ப் லிங்க்ஸ் ரோடு. கவடியார் அரண்மனை மதிலையொட்டிய இடம். பிரதாபம் அஸ்தமித்தவரானாலும் ஒரு ராஜாவாக இருப்பவரின் பக்கத்து வீட்டுக்காரர்கள் நாங்கள் என்று உள்ளுக்குள்ளே பெருமைப்பட்டுக்கொள்ளும் மனிதர்களின் வசிப்பிடம்.

வழியின் இரு புறமும் பெரிய வீடுகள்.அந்த வழி சென்றடைவது திருவனந்தபுரத்து உயர்மட்டத்தினருக்கு மட்டும் நுழைய அனுமதியுள்ள கால்ப் கிளப்பில்.வெட்டிச் சீரமைத்த பெரிய புல்வெளி, ராஜாங்க ஆடம்பரமுள்ள கட்டிடம், மதுவும் கர்வமும் மணக்கும் இராப்பகல்கள் கொண்ட அந்தக் கிளப்புக்கு முன்னால்தான் நகுலனின் வீடு.

பொதுவழியையும் வீட்டையும் பிரிப்பதற்கு மதிலில்லை.காட்டுச் செடிகள் படர்ந்து கிடக்கும் முற்றம். முன்பு எப்போதோ இருந்த மதிலின் ஞாபக மிச்சம் புதர்களுக்கிடையில் ஒளிந்திருக்கிறது.

வீட்டுக்கு மேலே தலைசாய்த்துக் கிடக்கும் புளியமரம்.ஒரு புளி
வாகை.காய்த்துக் நிற்கும் பப்பாளி,பெயர் தெரியாத அநேக மரங்கள்.அதைக் கட்டிப்பிடித்துக்கொண்டும் தளர்வாகக் கைகள் விரித்துக்கொண்டும் படர்ந்திருக்கும் கொடிகள்.நிறம் மங்கிய சுவர்களுள்ள வீட்டின் ஜன்னல்கள் அபூர்வமாகவே திறந்திருக்கும்.

வரிசை தவறிய ஓடுகள் வேய்ந்த வீட்டின் மேல் அணில்கள் கிரீச்சிட்டுக்கொண்டு ஓடுவதைப் பார்க்கலாம்.நகுலனை மீண்டும் பார்க்கலாம் என்ற ஆர்வத்துடன் அந்த வீட்டு முன் சென்று நின்றபோது அருகிலுள்ள கடைக்காரன் சொன்னான்: மார்ச்சுவரியில் வெச்சிருக்காங்க.

வெறுமனே அந்த வீட்டைப் பார்த்துக்கொண்டு நின்றபோது நான் யோசித்தேன்:

இந்த மனிதர் எனக்கு யார்?முற்றிலும் அறிமுகமற்றவர்

.பின் எதற்காக ஒருமுறையாவது பார்த்து விட வேண்டும் என்று காத்து நிற்கிறேன்?

நகுலன் வாழ்க்கையிலும் எழுத்திலும் ஒற்றையான மனிதராக இருந்தார் என்பதாலா?

அல்லது எல்லாரும் மறந்துபோன ஓர் எழுத்தாளரை நினைவுபடுத்திக்கொள்ளும் சுயநலமா?

நீங்க சாருக்கு என்ன வேணும்? கடைக்காரன் கேட்டான்.நான் பதில் சொல்லவில்லை.

நிழலில்ஒதுங்கிநின்றேன்.

தமிழின் எல்லை தாண்டி நகுலனைத் தேடி யாராவது ஓர் எழுத்தாளர் வந்திருந்தால் என்று வெறுமனே விரும்பினேன்.

அப்படி ஒருவர் வந்திருந்தால் நிஷ்களங்கமாகக் கேட்க ஒரு கேள்வியும் என்னிடம் இருந்தது: நீங்கள் ஏன் நகுலனை மறதிக்குள் விலக்கி நிறுத்தினீர்கள்?

ஆனால் யாரையும் நான் பார்க்கவில்லை.

நகுலனின் உடல் மலையாள மண்ணில் அடங்கியது.இனி ஜன்னலின் இருட்டுக்கு அப்பால் நின்று பீதியுடன் பார்க்கும் அந்த இரண்டு கண்கள் இருக்காது.

ஆனால்,நாளைக்கு அந்த வீட்டு முன்னாலிருக்கும் காட்டுச் செடிகள் பிடுங்கப்படும்.காற்றில்
யாருக்கும் அஞ்சாமல் அசையும் மரங்கள் வெட்டப்படும்.ரோட்டுக்கும் வீட்டுக்கும்
இடையில் எல்லை நிர்ணயிக்கப்படும்.

நிறம் குலைந்துபோன அந்த வீட்டின் இடத்தில் பெரிய ஒரு வீடு வரும்.அப்படியாக, கால்ப் லிங்க்ஸ் ரோட்டிலுள்ள மற்ற வீடுகளிடமிருந்து வித்தியாசமற்றதாக அந்த மண்ணும் மாறும்.

எல்லாரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய காட்சியாக மாறும் அந்த மண்ணில் நகுலன் இருக்கமாட்டார்.

@

உண்ணி.ஆர். – மலையாளச் சிறுகதையாசிரியர்.

நன்றி  : கவிஞர் சுகுமாரன்

அந்திமழை.காம்

0Shares
0