நடிப்பு என்றாலும்

மதுரையில் உள்ள நாடக நடிகர் சங்கத்திற்குச் சென்றிருந்தேன், அது ஒரு தனி உலகம், சுவரில் வரிசை வரிசையாகத் தொங்கும் நடிகர் நடிகைகளின் தேதி கேட்டுப் பதியும் அட்டைகளை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன்,
நான் சென்றிருந்த நேரம் கிராமத் திருவிழாவில் வள்ளிதிருமணம் நாடகம் போடவேண்டும் என்பதற்காக மேலூர் அருகில் உள்ள கிராமத்தவர்கள் வந்திருந்தார்கள், இன்றைக்கும் மேடைநாடக உலகிற்கென தனிப்புகழ் கொண்ட நடிகர்கள் இருக்கிறார்கள், அவர்களின் தேதி கிடைப்பது குதிரைக்கொம்பு தான் என்பதை அவர்களது  பேச்சில் அறிந்து கொண்டேன்,
அப்போது ஒரு குறிப்பிட்ட நடிகை வள்ளியாக நடிப்பாரா என கிராமத்து ஆள் கேட்டபோது, அந்த அம்மா இந்த ஆளோட ஜோடி போட மாட்டாங்கப்பா, பின்னாடி எழுதி இருக்கும் பாரு என்றார் நடிகர் சங்க நிர்வாகி,
நடிகையின் தேதி அட்டையைப் பின்னால் திருப்பிக் காட்டினார்கள், தான் எந்தெந்த நடிகர்களுடன் இணைந்து நடிக்க மாட்டேன் என்பதை அந்தப் பெண் பதிவு அட்டையில் எழுதியிருந்தார்,
இது தான் நாடக உலகின் நடைமுறை, இதற்குக் காரணம் மேடையில் வள்ளியாக நடிப்பவரை வாதம் செய்வதில் தோற்கடிக்க மிகவும் கீழான முறையில் நடந்து  கொள்ளும் சில நடிகர்கள் இருக்கிறார்கள், அவர்களுடன் இணைந்து நடிக்க முடியாது என்பதற்கே இந்தக் கட்டுபாடு என்றார்கள்
நிறைய வள்ளி திருமண நாடகங்களைப் பார்த்தவன் என்ற முறையில் எங்கள் ஊரிலே ஒரு முறை வள்ளிதிருமண நாடகத்தில் வள்ளிக்கும் நாரதருக்கும் சண்டை வந்த சம்பவம் நினைவிற்கு வந்தது,
நீண்ட நேர வாதத்தில் தோற்றுப்போன  நாரதர் , வள்ளியை பார்த்து, நீ என்னடி ஒவராப் பேசுறே, உன் வள்ளல் எனக்கு தெரியாதா, நீ யாரு, செக்காலை சீனிச்சாமி மக தானடி, பெருசா பேச வந்துட்டே எனக் கத்தினார், அதற்கு வள்ளியும் கோபத்துடன் ஏய் நீ மட்டும் என்ன யோக்கியமா, நீ ஜெய்ஹிந்துபுரம் கணேசன் மகன் தானே,  பீடிக்கு வக்கத்த நாயி பேச வந்துட்டே பேச்சு என்று நாரதராக நடிப்பவரின் உள்ளுர் விபரங்களை சொல்லி சண்டையிட, மக்கள் வெடித்துச் சிரித்தார்கள்,
ஹார்மோனியம் வாசிப்பவர் குறுக்கிட்டு நாடகத்தின் நிலையை மறந்து நீங்கள் சண்டையிட வேண்டாம், தாங்கள் இப்போது வள்ளி, அவர் நாரதர்,  என்று சமாதானம் செய்து வைத்தது நினைவிற்கு வந்தது
நாடகத்திற்கான உடை அலங்காரம், ஒப்பனை செய்பவர்கள், சவுண்ட் சர்வீஸ், ஏஜென்ட், என இன்றும் ஒரு சிறிய உலகம் தனித்து இயங்கிக் கொண்டேதானிருக்கிறது,
தமிழ் நாடக உலகினைப் பற்றிய முழுமையான பதிவுகளோ, ஆவண்பபடுத்துதலோ  நம்மிடம் அதிகமில்லை,  நடிகரும் , நாடக இயக்குனருமான நண்பர் பார்த்திபராஜா திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில்  தமிழ்த்துறை விரிவுரையாளராக பணியாற்றுகிறார், இவர் மேடை நாடக உலகம் குறித்து  நிறைய  தரவுகளைச் சேகரித்து தமிழ்நாடக உலகின் மரபுகளை ஆவணப்படுத்தியிருக்கிறார்,
நாடக உலகின் மீட்சிக்காக தனி நபராக அவர் மேற்கொள்ளும விடா முயற்சிகள் மிகுந்த பாராட்டிற்குரியவை,
அவரது கல்லூரிக்குச் சமீபத்தில் சென்றிருந்தேன், நாடகம், நவீன இலக்கியம் என்று  சமகால இலக்கிய  முயற்சிகளுக்குப்பெரிதும் துணை செய்யும் அற்புதமான கல்வி நிலையமாகச் செயல்படுகிறது, பார்த்திபராஜாவின் பிரதியிலிருந்து மேடைக்கு நாடகச் சிந்தனைகளை உள்ளடக்கிய சிறந்த புத்தகமாகும்
••

0Shares
0