சென்னை அண்ணாநகரில் எழுத்தாளர் தமிழ்மகன் நடத்தும் பொக்கிஷம் புத்தகக் கடையில் நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான நாகிப் மாஃபஸ் எழுதிய அரேபிய இரவுகளும் பகல்களும் நாவல் குறித்து உரையாற்றினேன். அரங்கு நிரம்பிய கூட்டம். நாவல்குறித்து வாசகர்களின் கலந்துரையாடல் சிறப்பாக நடைபெற்றது.
மொழிபெயர்ப்பாளர் சா. தேவதாஸ் நிகழ்வில் கலந்து கொண்டு தனது மொழிபெயர்ப்பு அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.
டிஸ்கவரி புக் பேலஸ், பனுவல், அகநாழிகை, பொக்கிஷம் என சென்னையில் உள்ள புத்தக கடைகள் தொடர்ந்து இலக்கிய நிகழ்வுகளை நடத்திவருவது மிகுந்த சந்தோஷம் தருகிறது.
•••
ராமநாதபுரம் புத்தகக் கண்காட்சியில் வருகின்ற 26ம் தேதி மாலை ( 26.09.2014) ஆறுமணிக்கு புத்தகம் துணை கொள் என்ற தலைப்பில் உரையாற்றுகிறேன்
••
மதுரையில் நண்பர் முத்துகிருஷ்ணன் பசுமை நடை என்ற சூழலியல் இயக்கத்தை வெற்றிகரமாக நடத்திவருகிறார்
பசுமை நடையின் சார்பில் சென்ற ஆண்டு விருட்சத்திருவிழா மிகச்சிறப்பாக நடைபெற்றது, இந்த ஆண்டு செப்டம்பர் 28, ஞாயிறு அன்று பசுமை நடை தனது 40வது நடையைப் பாறைத் திருவிழாவாகக் கொண்டாட திட்டமிட்டுள்ளது, இந்த விழாவில் நான் கலந்து கொள்கிறேன்.
•••