The Adoration of the Magi என்ற இயேசுவின் பிறப்பைக் குறித்த ஓவியத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். 1440 ஆண்டு வரையப்பட்ட அந்த ஓவியத்திலுள்ள மயில் என்னை மிகவும் கவர்ந்தது. மாட்டுத்தொழுவம் மீது அமர்ந்துள்ள அந்த மயிலின் தோற்றம் அலாதியானது.

இந்திய மினியேச்சர் ஓவியங்களில் மயில் மிக அழகாகச் சித்தரிக்கப்படுவதைக் கண்டிருக்கிறேன். குறிப்பாக ராஜஸ்தானிய நுண்ணோவியங்களிலும், மொகலாய நுண்ணோவியங்களிலும் மயில் முக்கியமான இடத்தைக் கொண்டிருக்கிறது.
இயேசுவின் பிறப்பை விவரிக்கும் இந்த ஓவியத்தில் மயில் இடம்பெற்றிருப்பது தனிக்கவனத்தைப் பெறுகிறது.
கலை விமர்சகரான ரஸ்கின் சொல்கிறார்
“Great nations write their autobiographis in three manuscripts, the book of their deeds the book of their words and the book of their art. Not one of these books can be understood unless we read the two others, but of the three the only trustworthy one is the last”
அந்த வகையில் கலையின் வழியே தான் ஒரு தேசம் தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறது. குறிப்பாகப் பிரம்மாண்டமான தேவாலயங்களைக் கட்டியதும் அதில் புகழ்பெற்ற ஓவியர்களின் ஓவியங்களை வரையச் செய்ததும் சிற்பங்களைச் செய்து நிறுத்தியதும் சமய வளர்ச்சியில் மிக முக்கியப் பங்கு வகித்திருக்கிறது
இதைப் பற்றிக் குறிப்பிடும் கலைவிமர்சகர் கென்னத் கிளார்க், மேற்கத்திய கலைவளர்ச்சியில் தேவாலயங்களை உருவாக்கியது முக்கியமான இடத்தை வகிக்கிறது. ஆரம்பக் காலத் தேவாலயங்களில் சிலுவையில் அறைப்பட்ட இயேசுவின் உருவம் முதன்மையாக இடம்பெறவில்லை. அவர் நிகழ்த்திய அற்புதங்களே முக்கியமாக இடம்பெற்றிருந்தன. பத்தாம் நூற்றாண்டின் பின்பே சிலுவையில் அறையப்பட்ட இயேசு முதன்மையாகச் சித்தரிக்கப்பட்டார் என்கிறார்.

கிறிஸ்துவ ஓவியங்களில் மயில் நித்தியத்துவத்தின் அடையாளமாகச் சித்தரிக்கப்படுகிறது. கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைக் குறிப்பதற்காகவும் மயில் உருவத்தை வரைகிறார்கள். நீர் குடுவைகளில் மயிலின் உருவம் செதுக்கப்படுவதற்கான காரணம் நித்தியத்துவத்தின் நீரை அருந்துகிறோம் என்ற உணர்வு ஏற்படுவதற்காகவே. மயில் தோகையிலுள்ள கண்கள் கடவுளின் முடிவில்லாத கண்களை அடையாளப்படுத்துவதாகவும் கூறுகிறார்கள்.
நித்தியத்தின் அடையாளமாக மயில் சித்தரிப்படுவது பொருத்தமானதே.
என் பால்ய வயதில் கரிசல் நிலத்தில் மயில் தனியே அலைந்து கொண்டிருப்பதைக் கண்டிருக்கிறேன். அடிவானத்தினை நோக்கி மயில் தனியே செல்லும் காட்சி மனதில் அழியாப் பிம்பமாக உறைந்துள்ளது.
இயேசுவின் பிறப்பை அறிந்து அவருக்கான காணிக்கைகளுடன் மூன்று ஞானியர் கிழக்கிலிருந்து வருகை தந்தார்கள் என்கிறது பைபிள். அந்தக் காட்சியைத் தான் இந்த ஓவியம் சித்தரிக்கிறது. ஓவியத்தின் வண்ணங்களும் உருவங்களும் தனித்துவமாக உள்ளன.

தொழுவத்திலுள்ள மாட்டின் கண்களில் வெளிப்படும் பாவம். கன்னிமேரியின் சாந்தம். இயேசுவின் பிறப்பைக் காணவரும் மக்களின் முகத்தில் வெளிப்படும் ஆனந்தம், பணிவு, தொழுது நிற்கும் நிலை.வியப்பு. இரண்டு குதிரைகள் ஒன்றையொன்று தொட்டுக் கொண்டு நிற்கும் காட்சி. மடங்கிய நிலையில் வரையப்பட்ட பாதங்கள். ஆடைகளின் மடிப்பு, சிவப்பு மற்றும் நீலநிறத்தின் வசீகரம். இயேசுவின் கையிலுள்ள மாதுளை. அதன் முத்துகள் என மிகவும் நுணக்கமாக வரையப்பட்டிருக்கிறது.
டிரெஸ், ரேயெஸ், மேகோஸ் என்ற அந்த மூன்று ஞானியர் வருகையைப் பற்றி நான் ஒரு குறுங்கதையை எழுதியிருக்கிறேன். அக்கதையில் அவர்கள் இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு முந்திய இரவு மீண்டும் வருகை தருகிறார்கள். இயேசுவுடன் உரையாடுகிறார்கள்.
மூன்று ஞானியரின் வருகை சித்தரிக்கும் இந்த ஓவியத்தை வரைந்தவர் ஃப்ரா ஏஞ்சலிகோ . அவர் இந்த ஓவியத்தை முழுமையாக வரைந்து முடிக்கவில்லை. அவரது மரணத்தின் சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு, அதை முழுமையாக்கியவர் ஃப்ரா பிலிப்போ லிப்பி என்கிறார்கள்.
கிறிஸ்துவச் சமயத்துறவியாக வாழ்ந்த இருவரும் சிறந்த கலைஞர்களாக இருந்திருக்கிறார்கள் இந்த ஓவியத்தில் ஒளியை நேர்த்தியாகப் பயன்படுத்தி, நிழலுடன் கூடிய மாதிரி முப்பரிமாணத்தை உருவாக்கியிருக்கிறார்கள். .

ஹரப்பா தொல் சின்னங்களிலே மயில் காணப்படுகிறது. முருகனின் வாகனமாகவும், கம்பீரம், காதல் மற்றும் தெய்வீகத்தின் அடையாளமாகவும் மயில் ஓவியங்களில் சித்தரிக்கப்படுகிறது. காஞ்சிபுரத்தைச் சேர்ந்த நெசவாளர்கள் தாங்கள் நெய்யும் புடவைகளில் மயில் உருவத்தை அதிகம் பயன்படுத்தியுள்ளனர். புடவையின் பார்டர்களிலும், பல்லுவிலும், அதே போல் புடவையின் உடல் முழுவதும் சிறிய வடிவங்களில் மயிலைக் காணலாம். மயில் சக்கரம் திருமணப் புடவைகளுக்கு என்றே வடிவமைக்கப்படுகிறது.

புத்தர் முந்தைய பிறவியில் தங்க மயிலாக இருந்தார் என்கிறது புத்த ஜாதகக்கதை. ஆகவே பௌத்த ஓவியங்கள் மற்றும் சிற்பங்களிலும் மயில் தொடர்ந்து இடம் பெறுகிறது. சாஞ்சி ஸ்தூபியின் வடக்கு நுழைவாயிலில் மயிலின் உருவம் செதுக்கப்பட்டிருக்கிறது.
மயில் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டது, இந்திய வர்த்தகர்களால் பண்டைய பாபிலோனுக்குக் கொண்டு செல்லப்பட்டது என்கிறார்கள்.
அலெக்சாண்டரின் வெற்றிக்குப் பின்னரே கிரேக்கர்கள் மயிலைப் பற்றி அறிந்தனர். மயிலை அரிஸ்டாட்டில் பாரசீக பறவை என்று குறிப்பிடுகிறார். கிரேக்கர்கள் மயிலை தங்களின் தெய்வீக பறவையாகச் சேர்த்துக் கொண்டார்கள். வான்கடவுளாகக் கருதப்படும் கிரேக்கத் தெய்வமான ஹேராவின் தேரை மயில்கள் இழுத்துச் செல்கின்றன.
ரோமானியர்கள் குறிப்பாக மயிலை அதன் அழகிற்காக மட்டுமின்றி ருசிமிக்க உணவு என்பதாலும் நேசித்தார்கள். ரோமானியர்கள் தங்கள் பளிங்கு மற்றும் ஓவியங்களில் மயிலை அலங்காரமாகப் பயன்படுத்தினர்.
கிரேக்கத் தத்துவஞானியும் கணிதவியலாளருமான பித்தகோரஸ், ஹோமரின் ஆன்மா ஒரு மயிலுக்குள் புகுந்து கொண்டது என்று எழுதியிருக்கிறார்.
சொர்க்கத்தில் நுழைவதற்குச் சாத்தனுக்கு உதவியதற்காக மயில் தண்டிக்கப்பட்டது அதன் காரணமாகவே அது தன் குரலின் இனிமையை இழந்து போனது. என்றொரு கதையும் இருக்கிறது

The Adoration of the Magi யை புகழ்பெற்ற ஓவியரான ரஃபேல் 1502 இல் வரைந்திருக்கிறார். ரஃபேலின் பாணி மிகவும் மாறுபட்டது. அவரது ஓவியத்தில் மயில் இடம்பெறவில்லை. அதில் வெள்ளைக் குதிரையும் கறுப்பு நாய் ஒன்றும் மிகுந்த அழகுடன் வரையப்பட்டிருக்கிறது. இதில் மாட்டுத் தொழுவம் இடிந்த நிலையில் காணப்படுகிறது. மரியாளின் முகபாவமும் துறவிகளின் முகபாவமும் ஃப்ரா ஏஞ்சலிகோ ஓவியத்திலிருந்து மாறுபட்டிருக்கிறது. குழந்தை இயேசுவைக் காணக் கூடியுள்ளவர்கள் பிரகாசமான வண்ண ஆடைகளை அணிந்திருக்கிறார்கள். ஓவியத்தில் ஒரு மேய்ப்பன் ஒரு ஆட்டுக்குட்டியைப் பிடித்துக்கொண்டு பக்கத்தில் நிற்கிறான், அது இயேசுவின் அடையாளமாகச் சித்தரிக்கப்படுகிறது.
ஆட்கள் மற்றும் நாய், குதிரையின் மென்மையான நிழல்களை வரைந்திருப்பது தான் ரஃபேலின் தனித்துவம். பயன்படுத்திய நீல வண்ணம் இதில் இடம்பெறவில்லை.

ஃப்ரா ஏஞ்சலிகோ வரைந்த ஓவியத்திலுள்ள கறுப்பு குதிரையின் கண்கள் மற்றும் பற்களைப் பாருங்கள். எவ்வளவு நுணுக்கமாக வரையப்பட்டிருக்கிறது. இயேசுவைக் காணக்கூடியுள்ள மனிதர்களின் விதவிதமான தோற்றம். உயர்த்திய கைகள். மார்பின் குறுக்கே குவிந்த கைகள். விரிந்த விரல்கள். சுருள் கூந்தல்.அவிழ்ந்த, இறுக்கமான தலைப்பாகைகள் ,சோகமும் தவிப்புமான முகங்கள். கூர்மையான நாசி. எந்த இருவரின் முகபாவமும் ஒன்று போல இல்லை.

இடிபாடுகளில் நிற்கும் பணியாளர்களின் ஒற்றை ஆடை. கூடியுள்ள அந்த முகங்களில் வெளிப்படும் உணர்ச்சி அபாரமாக வயைரப்பட்டிருக்கிறது. இரண்டு குதிரைகளின் இடைவெளியில் தெரியும் முகங்களைப் பாருங்கள். குறிப்பாக மேல்நோக்கிய அந்தக் கண்கள் அபூர்வமாக வரையப்பட்டிருக்கின்றன.

மூன்று ஒட்டகங்களை வரைந்துள்ள விதமும் சிறப்பானது. குறிப்பாக அதன் மூக்கு மற்றும் முகபாவம் மிகவும் அழகாக உள்ளது.

பகட்டான உடைகள். நெற்றியில் அணிந்துள்ள மாலையிலுள்ள முத்து மணிகள். தங்க ரேகைகள் கொண்ட தலையலங்காரம். இயேசுவுடன் புனிதமேரி அமர்ந்துள்ள விதம். காலடியில் முளைத்துள்ள காட்டுப்பூக்களின் வசீகரம் என இந்த ஓவியம் மிகுந்த கலைநேர்த்தியுடன் வரையப்பட்டிருக்கிறது
.

ஆழ்ந்து கேட்கக் கேட்க இசை நமக்குள் விரிவு கொள்வதைப் போன்றதே ஓவியங்களும். அதை ரசிக்கத் துவங்கியதும் ஓவியத்தின் லேயர்கள் இதழ் இதழாக விரியத் துவங்குகின்றன. ஓவியத்திற்குள் நாம் ஒரு பறத்தலை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. அப்படி நுண்மையாக அவதானிக்கும் போது அதன் நிகரற்ற அழகு உணரப்படுவதுடன் கலைஞனின் மேதமையும் நமக்குப் புலப்படுகிறது.
•••