ஃபெர்னான்டோ ஸோரன்டினோவின் கதை ஒன்றில் ஸோரன்டினோ குடும்பத்தினர் பக்கத்துவீட்டில் உள்ளவர்களுடன் நட்பாகப் பழகுவதற்காகச் சிறிய பரிசு ஒன்றை அளிக்கிறார்கள். உடனே பக்கத்துவீட்டு வில்ஹெல்ம் அதை விடப் பெரிய பரிசு ஒன்றை திரும்ப அனுப்பி வைக்கிறார். அது போட்டி மனப்பான்மையை உருவாக்கிடவே ஒருவரையொருவர் மிஞ்சும் வகையில் பெரிய பெரிய பரிசுகளை மாறி மாறிக் கொடுத்துக் கொள்கிறார்கள். முடிவில் அது பேரழிவினை உருவாக்குகிறது.
பக்கத்துவீட்டுக்காரரின் நட்பு பற்றிய இந்த வேடிக்கையான கதையின் எதிர்வடிவம் போலவே ஜே சாங்கின் 4PM கொரிய திரைப்படத்தினை உணர்ந்தேன். மாறுபட்ட கதைக்களனும் கதாபாத்திரங்களும் கொண்ட திரைப்படம். Amélie Nothomb எழுதிய The Stranger Next Door கதையை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கபட்டிருக்கிறது

ஒய்வு பெற்ற தத்துவப் பேராசிரியர் ஜங்-இன் தனது மனைவி ஹியூன்-சூக்கோடு சியோலின் நகரவாழ்க்கையிலிருந்து விடுபட்டு கிராமப்புறத்திலுள்ள புதிய வீட்டிற்குக் குடியேறுகிறார். அழகான மரவீடு. இயற்கையோடு இணைந்த சுற்றுப்புறம். அவர்கள் வீட்டின் அருகே ஒரு பழைய வீடு தென்படுகிறது. அதில் யார் வசிக்கிறார்கள் எனத் தெரியவில்லை. ஆனால் அந்த வீட்டில் விளக்கு கூட எரிவதில்லை என்பதைக் காணுகிறார்கள்.
மறுநாள் அந்த வீட்டில் வசிப்பவர்களுடன் நட்பு பாராட்டுவதற்காகச் செல்கிறார்கள். வீடு பூட்டிக்கிடக்கிறது. ஆனால் உள்ளே யாரோ இருப்பதை உணருகிறார்கள். ஆகவே மாலை நான்கு மணிக்கு தேநீர் விருந்திற்கு வரும்படி அழைப்புக் கடிதம் ஒன்றினை கதவிடுக்கில் வைத்துவிட்டு வருகிறார்கள்
அன்று மாலை நான்கு மணிக்கு பேராசிரியரின் வீட்டுக்கதவு தட்டப்படுகிறது. பக்கத்துவீட்டில் வசிக்கும் டாக்டர் பார்க் யூக்-நாம் வெளியே நிற்கிறார். அவரது தோற்றமே விசித்திரமாக உள்ளது.
அவரை வீட்டிற்குள் அழைத்து இருக்கையில் அமர வைத்து தேநீர் தருகிறார்கள். அவர் ஒரு வார்த்தை கூடப் பேசுவதில்லை. தேநீரை குடிக்கவுமில்லை. ஏதோ யோசனையில் அமர்ந்தபடி அவர்களை வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார். என்ன கேட்டாலும் ஒரு வார்த்தையில் மட்டுமே பதில் பேசுகிறார். அவரை எப்படிக் கையாளுவது எனத் தெரியாமல் திகைத்துப் போகிறார்கள். அவரோ இரண்டு மணி நேரம் தியானம் செய்வது போல மௌனமாக அமர்ந்திருந்து விட்டு ஆறுமணிக்கு கிளம்பி போய்விடுகிறார்.
அவர் ஏன் இப்படி விசித்திரமாக நடந்து கொண்டார் என்று அவர்களுக்குப் புரியவில்லை. இரவில் அதை நினைத்துச் சிரித்துக் கொள்கிறார்கள்.

மறுநாளும் அதே நான்கு மணிக்கு அழைப்பு மணி ஒலிக்கிறது. அதே டாக்டர் வாசலில் நின்று கொண்டிருக்கிறார். இன்றைக்கும் அதே இருக்கையில் அமர்ந்தபடி தேநீர் கேட்கிறார். அவர்களின் கேள்விக்கு ஒன்றிரண்டு வார்த்தைகளில் பேசுகிறார். மற்றபடி அதே தியானநிலையில் இரண்டு மணி நேரம் அமர்ந்துவிட்டு புறப்படுகிறார். எதற்காக இரண்டாவது நாள் அவர்களைத் தேடி வந்தார் என்று அவர்களுக்குக் குழப்பமாகிறது
அதன்பிறகு தினமும் மாலை நான்குமணிக்கு டாக்டர் பார்க் யூக்-நாம் அவர்கள் வீட்டுக் கதவை தட்டுகிறார். உரிமையோடு உள்ளே வந்து உட்கார்ந்து கொள்கிறார். வெறித்துப் பார்க்கிறார். இரண்டு மணி நேரம் அமைதியாக இருந்துவிட்டு வெளியேறி போய்விடுகிறார். . இந்தத் தொல்லையை அவர்களால் சமாளிக்கமுடியவில்லை. அவரை எப்படித் துரத்துவது என்றும் தெரியவில்லை. அவர் நிரந்தர விருந்தாளியாக மாறிவிடுகிறார்.
இந்தத் தொந்தரவால் பேராசிரியரின் மனைவி ஹியூன் பயந்து போகிறார் ஒரு வேளை டாக்டர் ஒரு சைகோவாக இருக்ககூடுமோ என நினைத்துப் புலம்புகிறாள்.

டாக்டர் யூக்-நாமை வெளியே அனுப்பவோ அல்லது வருவதை நிறுத்த சொல்லவோ பேராசிரியர் ஜங்-இன் மிகவும் தயங்குகிறார். எனவே ஒரு நாள் அவர்கள் மதியம் மூன்று மணிக்கு அருகிலுள்ள காட்டிற்குள் சென்று விட்டுத் தாமதமாக வீடு திரும்ப வேண்டும் என முடிவு செய்கிறார்கள். அவர்கள் திரும்பி வரும் போது மழை பிடித்துக் கொள்கிறது. அவசரமாக வீடு திரும்பும் போது டாக்டர் மழையோடு அவர்கள் வீட்டின் முன்பு காத்துநிற்பதைக் கண்டு அதிர்ச்சி அடைகிறார்கள்.
அதன் மறுநாள் தனது மனைவிக்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகப் பேராசிரியர் சொன்னாலும் டாக்டர் கேட்பதில்லை. உரிமையோடு அவர்கள் வீட்டிற்குள் வந்து அமர்ந்து கொள்கிறார். தேநீர் வேண்டுமெனக் கேட்கிறார். டாக்டரின் அச்சமூட்டும் மௌனத்தை அவர்களால் ஏற்க முடியவில்லை.
இந்த நிலையில் வெளிநாட்டில் வசிக்கும் பேராசிரியரின் வளர்ப்பு மகள் ஊர் திரும்புகிறாள். அவள் தங்களின் வீட்டிற்கு அழையா விருந்தாளியாக வரும் பார்க் யூக்-நாமின் விநோத நடவடிக்கைகளைக் கண்டு எரிச்சல் அடைகிறாள். தந்தை ஏன் இதனை அனுமதிக்கிறார் எனக் கோவித்துக் கொண்டு வீட்டைவிட்டு வெளியேறி போய்விடுகிறாள்.
இதனைத் தாங்க முடியாத பேராசிரியர் ஆத்திரத்தில் பார்க் யூக்-நாமைத் தாக்குகிறார். அப்படியும் டாக்டரின் வருகையைத் தடுக்க முடியவில்லை. இப்போது பேராசிரியர் முழுவதுமாக வன்முறையைக் கையாளத் துவங்குகிறார். அதன் முடிவு அதிர்ச்சி அளிக்கிறது.
நான்கு மணி ஆனவுடன் பேராசிரியரும் அவர் மனைவியும் அடையும் பதட்டத்தைப் படம் சிறப்பாகச் சித்தரித்துள்ளது. குறிப்பாகத் தனது கோபத்தை வெளிப்படுத்த டாக்டருடன் தொடர்பில்லாத தத்துவ விஷயங்களைப் பேராசிரியர் பேசுகிறார். டாக்டர் அதை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருக்கிறார். அது போலவே கடைசிக்காட்சியில் காரில் வரும் போது வெளிப்படும் டாக்டரின் சிரிப்பு நம்மையும் அச்சப்பட வைக்கிறது. படத்தில் நம்மை அதிகம் கவருபவர் அந்த டாக்டரே.
டாக்டர் ஏன் அப்படி நடந்து கொள்கிறார் என்பதற்கும் சரியான காரணமிருக்கிறது. படத்தின் துவக்கத்தில் வரும் பேராசிரியரின் வகுப்பறைக்காட்சியும் கார் விபத்தும் ஒட்டுமொத்த படத்திற்கான திறவுகோல் போலிருப்பதாக உணர்ந்தேன். அன்பான விருந்தோம்பல் எப்படித் தொந்தரவான மற்றும் பதட்டமான அனுபவமாக மாறிவிடக்கூடும் என்பதைப் படம் அழகாக விவரிக்கிறது.
படத்தில் வரும் பேராசிரியர் ஜோர்ஜ் லூயி போர்ஹெஸின் தீவிர வாசகர். போர்ஹெஸ் பற்றி ஒரு காட்சியில் பேசுகிறார். போர்ஹெஸின் கதையில் வரும் புதிர்பாதை போன்றதே டாக்டரின் நான்கு மணி வருகையும்.
••