நிழல் உண்பதில்லை

புதிய சிறுகதை. காலம் இதழில் வெளியானது. 2025

விமான நிலையத்திலிருந்த புத்தகக் கடைப்பெண் சலிப்பான குரலில் சொன்னாள்.

“கவிதைப் புத்தகங்களை யாரும் வாங்குவதில்லை. இரண்டு வருஷங்களாக இந்தக் கடையில் வேலைபார்க்கிறேன். நீங்கள் தான் கவிதைப் புத்தகம் கேட்ட முதல் ஆள்“.

“எனக்கு வானத்தில் கவிதைகள் வாசிக்கப் பிடிக்கும்“ என்றான் மதன்குமார்.

“நீங்கள் கவிஞரா“ என்று கேட்டாள் அப்பெண்

“இல்லை. கவிதை வாசகன். உங்களுக்குச் சாக்லேட் பிடிக்குமா. “

“ஆமாம்“ என்று தலையாட்டினாள்.

“நான் சாக்லேட்டிற்குப் பதிலாகக் கவிதைகளைச் சுவைக்கிறவன். உங்கள் கடையின் வலப்பக்க சுவரில் எழுதிப்போட்டிருக்கிறதே A thing of beauty is a joy for ever அது கூடக் கீட்ஸின் கவிதை வரி தான். “

“அது பொன்மொழியில்லையா“ எனக்கேட்டாள் கடைப்பெண்

“மொழியைப் பொன்னாக்குவது தான் கவிதை“ என்றான் மதன்குமார். அவன் குடித்துவிட்டு வந்திருக்கிறானோ எனச் சந்தேகப்படுவது போலப் பார்த்தாள் அந்தப் பெண். பின்பு எதையோ தேடுவது போலப் பாவனைச் செய்தபடியே திரும்பி நின்று கொண்டாள்.

அந்தப் புத்தகக் கடை மிகவும் சிறியது. முகப்பில் பெரிய ஸ்டேண்டில் பரபரப்பாக விற்பனையாகும் ஆங்கில நாவல்கள். அரசியல், சமூகக் கட்டுரைபுத்தகங்கள். வாழ்க்கை வரலாற்றுப் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இந்தி சினிமா நடிகர் திலீப்குமாரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் புத்தகத்தை ஒரு வரிசை முழுவதும் அடுக்கி வைத்திருந்தார்கள். அதைப் பார்க்கும் போது அவனுக்கு மொகலே ஆசாம் படம் நினைவிற்கு வந்து போனது. படம் முழுவதும் கவிதையாக வசனம் எழுதியிருப்பார்கள். சுயமுன்னேற்றப் புத்தகங்கள், வாழும்கலை பற்றிய புத்தகங்கள் இன்னொரு பக்கம் முழுவதும் அடுக்கி வைக்கபட்டிருந்தன. மலிவு விலை நாவல்களுக்கு இடையில் காமசூத்ராவின் அழகிய பதிப்பு ஒன்றும் காணப்பட்டது.

விமானநிலையத்திலிருக்கும் புத்தகக் கடைகள் யாவும் ஒன்று போலிருக்கின்றன. அவற்றில் கிடைக்கும் புத்தகங்களும் கூட.

கடையில் வேலைக்கு இருந்த பெண்ணிற்கு முப்பது வயதிருக்கக் கூடும். மெலிதான பிரேம் கொண்ட மூக்கு கண்ணாடி அணிந்திருந்தாள். சாம்பல் வண்ண காட்டன் சேலை. சற்றே துருத்திக் கொண்டிருந்த கழுத்து எலும்பு. கழுத்தில் ஒரு முத்துமாலை. கையில் சிவப்புக்கயிறு கட்டியிருந்தாள். அவளுக்குப் புத்தகம் படிக்கும் பழக்கம் இருக்குமா எனத் தெரியவில்லை.

பில்போடும் கம்ப்யூட்டர் அருகில் இலையோடு ஒரு கொய்யப்பழம் இருந்தது. அவள் வீட்டிலிருந்து பறித்துக் கொண்டுவந்திருக்கக் கூடும். கடையில் யார் இலையோடு கொய்யாப்பழம் விற்கிறார்கள். அந்தக் கொய்யாவைப் பார்த்தவுடன் I imagine the sun tastes like guava என்ற கவிதைவரி நினைவில் வந்து போனது. யாருடைய வரியது.

கடையை விட்டு அவன் வெளியேறிப் போய்விட்டால் நன்றாக இருக்கும் என்பது போல அந்தப் பெண் ஏறிட்டுப் பார்த்தாள். பேசிக் கொள்ள எதுவும் இல்லாத போது எரிச்சல் பீறிடத் துவங்கிவிடுகிறது. ஒருவரை வெறுக்க ஆரம்பிக்கிறோம். அதைப் புரிந்து கொண்டவன் போல மதன்குமார் அவளிடம் சொன்னான்

“இங்கிருக்கும் ஒவ்வொரு புத்தகமும் ஒரு எழுத்தாளின் நிழல். ஆவி..அந்த நிழல்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். “

அந்தக் கேலியை அவள் புரிந்து கொள்ளவில்லை.

“நீங்கள் பேராசிரியரா“ என்று கேட்டாள்

“இல்லை. மருந்துக் கம்பெனி நடத்துகிறேன் “.

மருந்துக் கம்பெனி நடத்துகிற ஒருவன் ஏன் கவிதைகளைத் தேடுகிறான் என்று அவளுக்கு ஆச்சரியமாக இருந்திருக்கக் கூடும். அதைக் காட்டிக் கொள்ளாமல் சொன்னாள்

“காலையில் இருந்து இரண்டு புத்தகங்கள் தான் விற்றிருக்கிறேன்“.

“நிச்சயம் நான் ஒரு புத்தகம் வாங்கிக் கொள்வேன். ஆனால் எதை வாங்குவது என்று தான் தெரியவில்லை“

“நீங்கள் கதைப்புத்தகம் படிக்க மாட்டீர்களா“ என ஆதங்கமாகக் கேட்டாள்

“நாவல்கள் படிப்பேன். ஆனால் குறைவாகக் கதை உள்ள நாவல்கள் பிடிக்கும்“

அவன் சொன்னது அவளுக்குப் புரியவில்லை

“சின்ன நாவல்களா“ எனக் கேட்டாள்

“அதை எப்படிச் சொல்வது எனத் தெரியவில்லை. நாவலில் நிறையக் கதை இருக்கிறது. தலைவாழை இலை சாப்பாடு போல. எனக்கு அவ்வளவு கதை தேவையில்லை. அல்மாண்ட் சாக்லேட் போல ஒரேயொரு பாதம் அதைச் சுற்றி நிறையச் சாக்லேட். அப்படியான நாவல் தான் எனக்குப் பிடிக்கும்“

அவளுக்கு முழுவதும் புரியாவிட்டாலும் ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்தாள். சில நாட்கள் மதியம் வரை ஒருவர் கூடக் கடைக்கு வராமல் வெறுமனே உட்கார்ந்திருக்கிறாள். அதை விடவும் இப்படி ஒருவருடன் பேசிக் கொண்டிருப்பது பரவாயில்லை என்றே அப்போது தோன்றியது

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது இரண்டு கைகளிலும் இரண்டு பையுடன் வந்த, பருத்த உடல் கொண்ட நடுத்தர வயது மனிதர் காலடியில் ஒரு பையை வைத்துக் கொண்டபடி அவளிடம் “புதிதாக ஏதாவது சமையல்புத்தகம் வந்திருக்கிறதா“ என்று கேட்டார்

“இடது கைப் பக்கம் பாருங்கள்“ என்று சொன்னாள்

அவர் இன்னொரு பையையும் தரையில் வைத்துவிட்டு இடுப்பை விட்டு கிழே இறங்கியிருந்த பேண்டினை உயர்த்திப் போட்டுக் கொண்டு குனிந்து அந்த அடுக்கில் இருந்த புத்தகங்களைப் புரட்டினார்.

Indian Cooking, Incredible India Cuisines, 1000 salads., book of bread, breakfast of Italy போன்ற புத்தகங்களைச் சலிப்போடு பார்த்தபடி “போலிகள் பெருகிவிட்டன“ என்று முணுமுணுத்துக் கொண்டார்.

ஏதோ கேட்கிறார் என்பது போலக் கடைப்பெண் எழுந்து அருகில் சென்று லக்னோ பிரியாணி பற்றிய புதிய புத்தகம் ஒன்றை அவரிடம் காட்டினார்.

அதை வேண்டாம் என மறுத்தபடியே “அல்வான்-இ-நேமட் புதிய மொழிபெயர்ப்பு வந்துள்ளதாகப் பேப்பரில் படித்தேன். அந்தப் புத்தகம் இருக்கிறதா“ எனக் கேட்டார்

அப்படி ஒரு பெயரைக் கூட அவள் கேள்விபட்டதில்லை. இல்லை என்று தலையாட்டினாள்

“அல்வான்-இ-நேமட் என்பது முகலாயப் பேரரசர் ஜஹாங்கீர் மற்றும் ராணி நூர் ஜெஹானிற்காகத் தயாரிக்கபட்ட உணவுவகைகள் பற்றிய பதினைந்தாம் நூற்றாண்டுப் புத்தகம். அதன் 1926ம் வருடப் பதிப்பு என்னிடமுள்ளது. புதிய பதிப்பில் பதினாறு பக்கம் கூடுதலாகச் சேர்க்கபட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். அதற்காக வாங்க வேண்டும்“ என்றார்

ஒரு பக்கம் கவிதைக்கிறுக்கன் மறுபக்கம் சாப்பாட்டு ராமன், இப்படியான ஆட்களுக்கு இடையில் ஏன் மாட்டிக் கொண்டோம் என்பது போல அந்தப் பெண் அமைதியாக நின்றிருந்தாள்.

புத்தக அடுக்கின் கடைசியில் இருந்த ஒரு புத்தகத்தைக் குனிந்து எடுக்க முயன்றார். அவரது தொப்பை தடுத்தது.

“சிறிய ஸ்டூல் இருக்கிறதா“ எனக்கேட்டார்

“ஸ்டூல் கிடையாது. நானே எடுத்துத் தருகிறேன்“ என்றபடியே அருகில் வந்து குனிந்து அந்தப் புத்தகத்தை எடுத்து அவரது கையில் கொடுத்தாள்

“நவல் நஸ்ரல்லாவின் இந்தப் புத்தகத்தைப் படித்திருக்கிறேன். அவர் ஈராக்கிய உணவு வரலாற்றாசிரியர்“ என்றபடியே அவர் புத்தகத்தை அவளிடமே கொடுத்தார்.

அவருக்கு உதவி செய்வது போல அந்தப் பெண் சொன்னாள்

“நீங்கள் கேட்ட புத்தகம் ஆன்லைனில் கிடைக்கக் கூடும்“

அவர் எரிச்சலான குரலில் சொன்னார்

“நான் ஆன்லைனில் புத்தகம் வாங்குவது கிடையாது. புத்தகக் கடைக்குப் போய் விருப்பமான புத்தகத்தைக் கையில் எடுத்துப் புரட்டி நாலைந்து பக்கம் வாசித்த பின்பு தான் வாங்குவேன். ஆன்லைனில் புத்தகம் வாங்குவது என்பது புகைப்படத்திற்கு முத்தம் கொடுப்பது போலிருக்கிறது. நிஜமான நெருக்கமில்லை“.

அவரது தேர்ந்த ஆங்கிலத்தையும் அதிலிருந்த கேலியையும் ரசித்தபடியே மதன்குமார் நின்றிருந்தான். அந்தப் பெண் இருவரையும் விட்டு விலகி தனது இருக்கைக்குச் சென்று அருகிலிருந்த பச்சை நிற பாட்டிலில் இருந்த தண்ணீரை எடுத்துக் குடித்தாள். கம்ப்யூட்டரில் எதையோ தேடுவது போலப் பாவனைச் செய்தாள். பின்பு நெற்றியை வலதுகையால் அழுத்தித் தடவிக் கொண்டபடி பெருமூச்சிட்டாள்.

“நீங்கள் பதார்த்த குண சிந்தாமணி படித்திருக்கிறீர்களா“ என ஆங்கிலத்தில் கேட்டான் மதன்குமார்

தலையாட்டியபடியே “தேரையர் எழுதியது தானே. படித்திருக்கிறேன். பதார்த்த குண சிந்தாமணி மிகவும் நல்ல புத்தகம், நிறைய வியப்பூட்டும் செய்திகள் உள்ளன. அதில் தான் உறக்கத்தின் வகைகளைப் பற்றிப் படித்தேன். ஆயுர்வேத சம்ஹிதையிலும் இது போன்ற குறிப்புகள் இருக்கின்றன. நீங்கள் மருத்துவரா“ என்று கேட்டார் அந்த மனிதர்

“மருந்துக் கம்பெனி நடத்துகிறேன். என் பெயர் மதன்குமார்“ என்று சொன்னான்

“என்னை எப்படி அறிமுகம் செய்து கொள்வது என்று தெரியவில்லை. என் பெயர் முகமது கோயா, உணவைப் பற்றிப் பல வருஷங்களாக ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறேன். என் உடம்பை பார்த்தாலே நன்றாகச் சாப்பிடுகிறவன் என்று உங்களுக்குப் புரிந்திருக்கும்“ என்றார்

தன்னைக் கேலி செய்து கொள்கிறவர்களை அவனுக்குப் பிடிக்கும். ஆகவே அவன் அவரது நகைச்சுவையை ரசித்தபடியே கேட்டான்

“எந்தப் பல்கலைகழகத்தில் ஆய்வு செய்கிறீர்கள்“ என்று கேட்டான்

“சொந்தச் செலவில். அதுவும் பாட்டன்பூட்டன் சம்பாதித்த சொத்தில்“ என்று சொல்லி சிரித்தார்.

“ உங்களால் தமிழ் புத்தகத்தை எப்படிப் படிக்க முடிந்தது“

“என்னால் ஒன்பது மொழிகளில் வாசிக்க முடியும். நானாகக் கற்றுக் கொண்டேன். தமிழில் என்னால் நன்றாகப் படிக்க முடியும். சில சொற்களுக்கு அர்த்தம் புரிவது தான் சிரமம். “

“உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. நாம் இருவர் கேட்ட புத்தகங்களும் இந்தக் கடையில் இல்லை. விமான நிலையப்புத்தகக் கடைகள் ஏமாற்றம் அளிக்கின்றன“ என்றான் மதன்குமார்

“அப்படி சொல்லாதீர்கள். நான் கொச்சி விமானநிலையக்கடையில் அரியதொரு புத்தகம் வாங்கியிருக்கிறேன். அகஸ்டே எஸ்கோஃபியர் எழுதியது. அச்சில் இல்லாதது“.

“எனக்கு அப்படியான அதிர்ஷ்டம் கிடைத்ததில்லை. ஒருமுறை விமானத்தில் உடன் வந்த பயணி ஆச்சரியமாக ஆகா ஷாஹித் அலியின் கவிதைகளைப் படித்துக் கொண்டு வந்தார். சிறுவர்கள் வாசிப்பது போல ஒவ்வொரு வாக்கியமாக அவர் மெல்லிய சப்தத்தில் வாசித்துப் படித்தது எனக்குப் பிடித்திருந்தது. இடையில் ஒருமுறை என்னைப் பார்த்துச் சிரித்துக் கொண்டார். விமானத்தை விட்டு இறங்கும் போது அந்தப் புத்தகத்தை எனக்குப் பரிசாகத் தந்துவிட்டார்“.

“இப்படித்தான் நடக்கும். அரிய புத்தகங்கள் தானே தனக்கான வாசகனை தேடி வந்துவிடும்“ என்றார்

இருவரும் கடையில் நின்று கொண்டு தங்களுக்குள் ஏதோ பேசி சிரித்துக் கொண்டிருப்பதை ஏமாற்றத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள் கடைப்பெண்

“உணவைப் பற்றி என்ன ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறீர்கள்“ எனக்கேட்டான் மதன்குமார்

“உண்மையைச் சொன்னால் நான் உயிரைப் பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறேன். அதை நேரடியாகச் செய்ய முடியாதல்லவா. அதனால் தான் உணவின் வழியே அதை நோக்கி செல்கிறேன். “

“மருத்துவம் உயிரைப் பற்றி நிறைய ஆராய்ச்சி செய்திருக்கிறதே“

“அதை என்னால் முழுமையாக ஏற்க முடியவில்லை. அப்படிச் சொல்வது கூடத் தவறு. முழுமையாக நம்ப முடியவில்லை. உயிர் பற்றி இன்னும் நாம் முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை. “

“உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே’ என்கிறது திருமந்திரம். நீங்கள் திருமந்திரம் பற்றிக் கேள்விபட்டிருக்கிறீர்களா“ எனக் கேட்டான் மதன்குமார்

“என் ஆராய்ச்சியும் அது தான். உங்களுக்குக் கதை கேட்க விருப்பம் இருக்கிறதா.. எந்த ஊருக்குப் போகிறீர்கள். எத்தனை மணிக்கு விமானம்“

“சென்னை செல்கிறேன். நாலரை மணிக்கு விமானம்“

“நான் மும்பை செல்கிறேன். ஆறு மணிக்கு விமானம். நிறைய நேரமிருக்கிறது“

“இங்கே நாம் கதை பேச முடியாது. நீங்கள் எனக்காக ஒரு புத்தகம் சிபாரிசு செய்யுங்கள். அதை வாங்கிக் கொள்கிறேன். பிறகு நாம் அருகிலுள்ள ஸ்டார்பக்ஸிற்குப் போகலாம்“ என்றான் மதன்குமார்

“எனக்கும் அப்படிப் புத்தகம் நீங்கள் சொல்ல வேண்டும். “

அடுத்தச் சில நிமிடங்களில் ஆளுக்கு ஒரு புத்தகத்தைத் தேர்வு செய்து பில் போடுவதற்காகக் கொண்டு போய்க் கொடுத்தார்கள். அந்தப் பெண் புத்தகத்தின் விலையைத் தான் முதலில் பார்த்தாள். ஒன்றின் விலை ரூபாய் 750 மற்றொன்று ரூபாய் 1350. அவள் மகிழ்ச்சியோடு பில்போட்டபடியே கேஷா, கார்டா என்று கேட்டாள்

மதன்குமார் “கேஷ்“ என்றான். அவர் “கார்ட்“ என்றார்

அவள் “இரண்டையும் ஒரே பில்லாகப் போட்டுவிட்டேன்“ என்றாள்

“அப்படியானால் நானே பணம் தந்துவிடுகிறேன்“ என்றான் மதன்குமார்

“ஸ்டார்பக்ஸ் எனது செலவு“ என்று சொல்லிச் சிரித்தார் முகமது கோயா

நீண்ட காலம் பழகிய இரண்டு நண்பர்கள் திரும்பச் சந்தித்துக் கொண்டது போல அவர்கள் நடந்து கொண்டது ஆச்சரியமளித்தது.

`இரண்டாயிரத்து ஐநூறு ரூபாயை அவளிடம் நீட்டினான்

“சில்லறை இல்லை. நான் வாங்கி வருகிறேன்“ என்று அவள் எழுந்து கடையை விட்டு வெளியே நடந்தாள்

“சமையல் புத்தகங்களுக்கென்ற நான் ஒரு நூலகம் வைத்திருக்கிறேன். எனது சேமிப்பில் மூவாயிரத்துக்கும் அதிகமான புத்தகங்கள் இருக்கின்றன“ என்றார் கோயா

“சமையல் புத்தகம் எதையும் நான் படித்ததேயில்லை“ என்றான் மதன்குமார்

“அபூர்வமான சமையல்புத்தகங்களை எழுதியவர்கள் ஆண்கள். உணவுப்பண்டங்களின் பெயர்கள் எப்படி உருவானது என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா. சப்பாத்தி என்ற சொல் அக்பரின் காலத்தில் எழுதப்பட்ட அயினி அக்பரியில் உள்ளது. இனிப்பு வகைகளுக்குப் பெயர் வைத்தவன் நிச்சயம் கவிஞனாகத் தானிருக்கக் கூடும். தி விண்டர்ஸ் டேல் நாடகத்தில் ஷேக்ஸ்பியர் அரிசி பற்றி எழுதியிருக்கிறார். ஷேக்ஸ்பியரின் காலத்தில், “சாலெட்” என்பது கலவையான கீரைகளின் உணவைக் குறிக்கும். அவர் நடிகர்களை வெங்காயம், பூண்டு சாப்பிட வேண்டாம் என்று சொல்கிறார். 15 ஆம் நூற்றாண்டில் லண்டனில் உள்ள பெரும்பாலான தெருக்கள் அங்கு விற்கபடும் பொருட்களின் பெயரால் அழைக்கபட்டன. கேக்குகளுக்குப் பெயர் பெற்ற வூட் ஸ்ட்ரீட் இன்றும் அதன் பெயரை மாற்றிக் கொள்ளவில்லை. மன்னர்களின் வரலாற்றைப் படித்தால் உணவில் விஷமிடப்பட்டுத் தான் நிறைய இறந்து போயிருக்கிறார்கள். உணவின் கதை என்பது வரலாற்றின் இனிப்புப் பண்டம் என்றே கருதுகிறேன். “

ஆர்வமிகுதியில் அவர் கடகடவெனப் பேசிக் கொண்டேயிருந்தது வியப்பளித்தது.

“பாப்லோ நெரூதா தக்காளிக்கு ஒரு கவிதை எழுதியிருக்கிறார். அதில் அடுப்பில் வதக்கப்படும் தக்காளி வெங்காயத்தைத் திருமணம் செய்து கொள்வதாக ஒரு வரி இருக்கிறது. “ என்றான் மதன்குமார்

“கவிஞர்களுக்கு உணவின் ரகசியம் தெரியும். மனிதன் பூமியில் வாழத் துவங்கி எத்தனையோ ஆயிரம் ஆண்டுகள் கடந்த பின்பும் அன்புக்கும் உணவுக்கும் இடையே உள்ள பிணைப்பு மாறவேயில்லை“

“நீங்கள் உணவு பற்றிப் புத்தகம் எழுதலாமே“

“அப்படி எண்ணமேயில்லை. எனது கவனம் முழுவதும் பசியைப் புரிந்து கொள்வது தான்“

“சமையல்குறிப்புகளை ஏன் ஆவணப்படுத்துகிறார்கள். ஒவ்வொரு இரண்டு மணி நேர தூரத்துக்கும் இடையே உணவின் ருசியும் சமைக்கும் முறையும் மாறிவிடுகிறதே“ எனக்கேட்டான் மதன்குமார்

“இந்தியாவில் மட்டும் பல்லாயிரம் விதமான சமையல்முறைகள் இருக்கின்றன. அவற்றை எவராலும் முழுமையாகத் தொகுக்க முடியாது. உண்மையில் அது ஒரு ஞானம். சமையலின் வழியே அவர்கள் நிறையக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அந்தக் கால ராஜா ராணிகள் தனக்கெனத் தனியே சமையல் புத்தகம் வைத்திருந்தார்கள். அந்த ஏடுகளைப் பிறர் படிக்க முடியாது. அவை ஒரு தலைமுறையிடமிருந்து இன்னொரு தலைமுறைக்குப் பரிசாக அளிக்கபட்டன. உண்மையில் அவர்கள் நித்யத்தைக் கண்டறிய முயன்றிருக்கிறார்கள். அமரத்துவம் பற்றி உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா“

“இருக்கிற வாழ்க்கையைக் கடந்து செல்வதே பெரும் சவாலாக இருக்கிறது. இதில் அமரத்துவம் பற்றி என்ன நினைப்பது“ என்று கேட்டான் மதன்குமார்

“சமையல் புத்தகங்களுக்குள் அமரத்துவம் பற்றிய ரகசியங்கள் மறைந்திருக்கின்றன. நான் ஆராய்ந்து வருகிறேன். “

“இங்கே ஏதாவது கருத்தரங்கிற்காக வந்தீர்களா“ எனக்கேட்டான் மதன்குமார்

“ஒரு பெண்ணைச் சந்திப்பதற்காக வந்தேன். நீங்கள் பசவபுரா என்ற ஊரைப் பற்றிக் கேள்விபட்டிருக்கிறீர்களா“

“இல்லை“ என்று தலையாட்டினான்

“அங்கே ஒரு பெண் வசிக்கிறாள், அவளது பெயர் பார்கவி. அவளைப் பற்றி விரிவாகச் சொல்ல வேண்டும். நாம் ஸ்டார்பக்ஸிற்குப் போய்விடுவோம்“

புத்தகக் கடைப்பெண் சில்லறையோடு திரும்பி வந்திருந்தாள். மீதப்பணத்தை அவனிடம் கொடுத்துவிட்டு அந்தப் பெண் “அடுத்த முறை கடைக்கு வாருங்கள். கவிதை புத்தகம் வாங்கி வைத்திருப்பேன்“ என்றாள். மதன்குமார் அவளுக்கு நன்றி சொல்லியபடியே அவரது பைகளில் ஒன்றை தான் வாங்கிக் கொள்ள முயன்றான். அவர் தானே கொண்டுவருவதாகச் சொல்லி இரண்டையும் தூக்கிக் கொண்டார். அவருக்காக வாங்கிய புத்தகத்தைத் தானே கையில் எடுத்துக் கொண்டபடி கடையை விட்டு வெளியே வந்தான் மதன்குமார்

ஸ்டார்பக்ஸ் நோக்கி அவர்கள் நடந்தார்கள். கோயாவின் கையில் இருந்த ஒரு பை எடை அதிகமாக இருந்தது போலும். அதை அவரது நடையில் காண முடிந்தது. அவர் மூச்சுவாங்க ஸ்டார்பக்ஸில் காலியாக இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டார். அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தான் மதன்குமார்

“உங்களுக்கு என்ன காபி வேண்டும்“ எனக்கேட்டார் கோயா

“நான் குடிக்கும் பில்டர் காபி இங்கே கிடைக்காது. கேப்பச்சினோ சொல்லுங்கள்“ என்றான்

அவர் கவுண்டரை நோக்கி நடந்தார். இரண்டு கேப்பச்சினோவும் சிக்கன் சாண்ட்விட்ச்சும் வரும்வரை அவர் ஒரு வார்த்தை பேசவில்லை. நிதானமாகத் தனது சாண்ட்விட் சாப்பிட்டபடியே சொன்னார்

“நான் ஒரு பெண்ணைச் சந்திக்கச் சென்றதாகச் சொன்னேன் இல்லையா“..

“ஆமாம் பெயர் கூடப் பார்கவி. “

“உங்களுக்கு நல்ல ஞாபக சகத்யிருக்கிறது. அந்தப் பெண் சிமோகாவில் ஒரு கார்மெண்ட் பேக்டரியில் வேலை செய்கிறாள். அவள் கடந்த ஒன்பது வருடங்களாகச் சாப்பிடாமல் உயிர்வாழுகிறாள். அந்தச் செய்தி பேப்பரில் வெளியாகியிருக்கிறது. அவளைத் தான் சந்திக்கச் சென்றிருந்தேன்“

“சாப்பிடாமல் எப்படி அவளால் உயிர் வாழ முடிகிறது“

“அதை தெரிந்து கொள்ளத்தான் அவளைச் சந்தித்தேன். அவளுக்கு இது ஒன்றும் ஆச்சரியமான விஷயமாக இல்லை. பசிப்பதில்லை என்று மட்டும் சொல்கிறாள். அவள் வேலை செய்யும் கார்மெண்ட் பேக்டரிக்குச் சென்றிருந்தேன். அங்கே உள்ள பெண்கள் அவள் சாப்பிடுவதில்லை என்பதை உறுதி செய்தார்கள். நாலைந்து மருத்துவர்கள் அவளை மருத்துவப் பரிசோதனை செய்து பார்த்திருக்கிறார்கள். அவள் எதையும் சாப்பிடாமலே உயிர் வாழுகிறாள் என்று தான் ரிப்போர்ட் வந்திருக்கிறது. “

“அது எப்படிச் சாத்தியம்“ எனக்கேட்டான் மதன்குமார்

“நான் அவளிடம் இந்தக் கேள்வியைக் கேட்கவில்லை. கேட்கமாட்டேன். அவளிடம் நீ வீட்டில் சமைக்கிறாயா என்று கேட்டேன்“

அவள் “ஆமாம். ஆனால் முன்பு போல எளிதாக இல்லை. மனதிற்குப் பிடிக்காமல் செய்கிறேன்“ என்றாள்

“ஏன் அப்படிச் சொல்கிறாள்“.

“அப்படிதான் ஆகிவிடும். நான் அவளை நம்புகிறேன். “

“என்னால் நம்ப முடியவில்லை“.

“அயர்லாந்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது என்று படித்திருக்கிறேன். அப்போது நானும் நம்பவில்லை. இப்போது நம்புகிறேன்“

“இது எப்படி நிஜமாக இருக்கும்“

“ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு அவளுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. குறைப்பிரவசம். பிறந்த குழந்தை போதுமான எடையில்லை. அத்தோடு அக்குழந்தை அழவேயில்லை. குழந்தை அழுதால் மட்டுமே உயிர்வாழும் என்று டாக்டர் சொல்லியிருக்கிறார். அந்தக் குழந்தையை எப்படி அழ வைப்பது என்று அவளுக்குத் தெரியவில்லை. அவளால் முயன்ற பல்வேறு வழிகளைச் செய்திருக்கிறாள். முடிவில் அந்தக் குழந்தை இறந்துவிட்டது. அதன் மறுநாளில் இருந்து அவளுக்குப் பசிக்கவில்லை. இந்த ஒன்பது வருஷங்களில் எதையும் அவள் சாப்பிடவில்லை, தான் வெறும் நிழல். நிழல் எதையும் உண்பதில்லை என்று சொன்னாள் “

“எதனால் அவளுக்குப் பசியற்றுப் போனது“

“நமது பசிக்கான முதல் உணவை தாயிடமிருந்தே பெறுகிறோம். அதை அவளால் தர இயலாத குற்றவுணர்வு தான் பசியற்றுப் போகச் செய்துவிட்டது“

“அறிவியல் பூர்வமாக அப்படி நடக்காதே“ என்றான்

“அறிவியல் பூர்வமாக விவரிக்க முடியாத நிகழ்வுகள் நம்மைச் சுற்றி நடக்கதானே செய்கின்றன. “

“அந்தப் பெண் இயல்பாகத் தனது அன்றாடக் காரியங்களைச் செய்து கொள்கிறாளா“. எனக்கேட்டான் மதன்குமார்

“அவளுக்குக் கனவுகளே வருவதில்லை என்று மட்டும் சொன்னாள். உணவில்லாவிட்டால் கனவு வராது “

என்றபடியே முகமது கோயா தனது சாண்ட்விட்சை தின்று முடித்துக் காபியை குடித்தார். மதன்குமார் பார்கவியைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தான்.

அவர் எழுந்து கழிப்பறையை நோக்கி சென்றார். திரும்பி வந்த போது அவரது முகம் மாறியிருந்தது

“இதை கதை என நினைக்கிறீர்களா“ எனக் கேட்டார்

அவன் பதில் சொல்லவில்லை

“கதையே தான். இப்படிப் பேசி பொழுதைப் போக்கவில்லை என்றால் நேரத்தை எப்படிக் கொல்வது. இந்தக் கதையைப் பலரிடமும் சொல்லியிருக்கிறேன். எல்லோரும் ஏமாந்து போயிருக்கிறார்கள்“ என்று புன்சிரிப்புடன் சொன்னார்.

“நீங்கள் சொன்னது நிஜமில்லையா“ எனக்கேட்டான்

“நிஜமாகத் தோன்றுகிறதா. பேசாமல் ஆராய்ச்சி செய்வதை விட்டுவிட்டு கதை எழுதலாம் என்று நினைக்கிறேன். விமான நிலையத்தில் நேரத்தைக் கொல்வதற்கு இப்படி எதையாவது செய்யத் தானே வேண்டியிருக்கிறது “ என்று சொல்லி சிரித்தார்.

பின்பு அவன் தனக்காக வாங்கிக் கொடுத்த புத்தகத்தின் முகப்பில் தனதுபெயரை எழுதி பைக்குள் வைத்துக் கொண்டார். தனது விமானத்திற்கு நேரமாகிவிட்டது என மதன்குமார் புறப்பட்ட போது அவர் இன்னொரு சாண்ட்விட் சாப்பிடப்போவதாகச் சொன்னார்

அவன் தனது விமானம் புறப்படும் இடம் நோக்கி வந்தான்.

நீண்ட வரிசையில் ஆட்கள் நின்றிருந்தார்கள்.

விமானத்தில் ஏறி தனது இருக்கையில் அமர்ந்தபின்பு பார்கவி ஒன்பது வருஷங்கள் உணவில்லாமல் வாழும் பெண் சிமோகா என்று கூகிளில் தேடினான்.

பார்கவியின் புகைப்படம் தோன்றியது.

முகமது கோயா சொன்ன செய்தி உண்மையாக இருந்தது.

••

0Shares
0