நூரெம்பெர்க் விசாரணை.


 


 


 



நேற்றிரவு ஹாலிவுட் கிளாசிக் படங்களில் ஒன்றான  ஜட்ஜ்மெண்ட் அட் நூரெம்பெர்க் (Judgment at Nuremberg ) திரைப்படத்தை மறுபடியும் பார்த்தேன். தமிழ் சினிமாவில் கோர்ட் ரூம் டிராமா எனப்படும் தனிவகை படங்கள் மிகக் குறைவே. ஆனால் நீதிமன்ற காட்சிகளும் அதன்வாதபிரதிவாதங்களுக்காகவும் பராசக்தி துவங்கி விதி முதலான பல படங்கள் வெற்றிகரமாக ஒடியிருக்கின்றன. குற்றம், தண்டனை குறித்த ஆழ்ந்த பார்வைகள் கொண்ட படங்கள் தமிழில் உருவாக்கபடவேயில்லை.



புகழ்பெற்ற எழுத்தாளரான காப்காவின் விசாரணை (The Trail by Franz Kafka) நாவலில் காரணம் ஏதுவுமின்றி கே இரண்டு காவலர்களால் கைது ஒரு நாளில் செய்யப்படுகிறான். எதற்காக கைது செய்யப்பட்டிருக்கிறான். என்ன குற்றம் என்பது அவனுக்குப் புரிவதில்லை. அதை காவலர்களும் விளக்குவதில்லை, அவன் நீதிமன்றத்தில் காத்துகிடக்கிறான். குழப்பமான நடவடிக்கைகளுக்கு உட்படுத்தபடுகிறான்.  எதற்காக  கைது செய்யப்பட்டான் என்று தெரியாமலே காத்திருக்கும் அபத்தம் நாவலில் பீறிடுகிறது. காப்காவின் நாவல் நீதிவிசாரணைக்கு முன்பின் உள்ள நீண்ட காத்திருத்தல்கள், தண்டனையின் மீதான பயம் மற்றும் நீதி மன்றம் உருவாக்கும் ஆழ்ந்த மனப்பாதிப்புகளை விவரிக்கிறது



நம்மில் எவரும் எந்த நேரமும் எந்த முகாந்திரமும் இல்லாமல் கைது செய்யப்படக்கூடும் என்ற உண்மையே இந்த நாவல் முழுவதும்  வெளிப்படுகிறது. இந்த நாவல்  படமாக்கபட்ட போது நாவல் உருவாக்கிய மனவெழுச்சிகள் எதையும் தரவில்லை. 


இன்று இந்தியாவின் பல்வேறு சிறைகளில் ஏதேதோ காரணங்களுக்காக அடைக்கபட்டு உரிய விசாரணை மறுக்கபட்டு, பொய் குற்றசாட்டுகளால் தண்டனை பெற்று வாழ்கின்றவர்கள் ஏராளம். ஒருவனை குற்றவாளியாக்க வேண்டும் என்று அரசு முடிவு செய்தால் அதற்காக காரணத்தை அதுவே உருவாக்கிவிடும் என்று பிளேட்டா தன் உரையொன்றில் குறிப்பிடுவது நினைவிற்கு வருகிறது.


காப்காவிற்கு நீதிமன்ற நடவடிக்கைகள் ஒரு துர்சொப்பனத்திற்கு நிகரானவை. அவரது படைப்புகளின் ஊடாக அந்த கோபம் துல்லியமாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது.


நீதிவிசாரணையின் அபத்தங்கள் மற்றும் தவறாக குற்றம்சாட்டப்பட்டவர் தன்னை விடுவித்துக் கொள்ள போராடும் முயற்சிகள் எப்போதுமே கதைகளாகவும் நாவல்களாகவும் திரைப்படங்களாகவும் வெளியாகிபடி உள்ளன. ஆனாலும் காரணமற்ற குற்றவாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிக் கொண்டுதானிருக்கிறது


ஹாலிவுட் சினிமா தன் துவக்ககாலத்திலிருந்தே யுத்த சாகசங்கள், பரபரப்பான கொலைவழக்குகள், கிளாசிக் காதல்கதைகள் என்ற மூன்று கச்சாபொருட்களில் அமைந்த படங்களை திரும்ப திரும்ப உருவாக்கி வந்திருக்கின்றது


இந்நாள் வரை அமெரிக்காவினுள் எந்த யுத்தமும் நடந்ததில்லை. உள்நாட்டு சண்டைகளை தவிர. ஒரே விதிவிலக்கு பியர்ல்ஹார்பர் தாக்குதல். ஆனால் இன்று வரை அமெரிக்கபடைகள் பல்வேறு நாடுகளில் சென்று சண்டையிட்டிருக்கின்றன.  அதிகார அட்டுழியங்கள் செய்திருக்கின்றன. அந்த சாகசங்களை அமெரிக்க சினிமா தன் பெருமிதம் போல திரும்ப திரும்ப எடுத்துக் காட்டி வருகிறது. ஒருவகையில் அமெரிக்க ராணுவம் சினிமாவின் வழியே தான் தன்புனிதபிம்பத்தை தக்க வைத்திருக்கிறது.


வார் மூவிஸ் எனப்படும் தனியான திரைப்பட வகை ஹாலிவுட்டில் உள்ளது. எப்போதெல்லாம் அமெரிக்க சினிமாவில் சோர்வும் தள்ளாட்டமும் ஏற்படுகிறதோ அப்பது ஒரு யுத்தசாகசப்படம் வெளியாகி ஹாலிவுட் சினிமாவை மறுபடியும் தலைதூக்க வைக்கும்.


இது போலவே நாஜிகளின் படுகொலைகள் குறித்தும் நூற்றுக்கணக்கான படங்கள் வெளியாகி உள்ளன. சமீபத்தில் மேற்கொள்ளபட்ட ஆய்வு ஒன்றின்படி பல நாஜி படுகொலை பற்றிய நாவல்கள், குறிப்புகள் கற்பனையாக உண்டாக்கபட்டவை என்கிறார்கள். லட்சக்கணக்கான நாஜிகள் கொல்லபட்டதும் கூட இன்று சினிமாவின் வணிகதந்திரங்களுக்கு பயன்படும் பொருளாக மாறிவிட்டிருக்கிறது.


ஹாலிவுட் சினிமாவின் முக்கிய கருப்பொருளில் ஒன்று பரபரப்பான  கொலைவழக்குகள். அநேகமாக நாளிதழ்களில் வெளியாகி மக்கள் கவனத்தை பெற்ற அத்தனை வழக்குகளும் திரைப்படங்களாக எடுக்கபட்டிருக்கின்றன. தமிழில் இந்த வகையே இல்லை என்றே சொல்வேன்.


நீதிமன்ற விசாரணையை மையப்பொருளாக கொண்டு வெளியான திரைப்படங்களில் மூன்று படங்கள் மிக முக்கியமானவை. ஒன்று புலிட்சர் பரிசு பெற்ற நாவலின் திரைவடிவமான To Kill a Mockingbird. . இது அப்பாவி ஒருவன் எப்படி குற்றவாளியாகிறான். அவனை விடுவிப்பதற்கு எந்த அளவு வழக்கறிஞர் போராட வேண்டியிருக்கிறது என்பதை விவரிக்கும் மிக நுட்பமான படம். குற்றவிசாரணை பற்றிய ஆழமான கேள்விகளை இந்தப் படம் எழுப்புகிறது


இன்னொரு படம் 12 Angry Men, இது ஜுரிகள் எனப்படும் நீதிமன்ற நடுவர் குழுவினர்கள் 12 பேரை பற்றியது. தன் தரப்பு நியாயத்தை எடுத்து சொல்லி நடுவர் குழுவினர்களை எப்படி புரிய வைக்க போராடுகிறார் என்பதே படத்தின் மையக்கதை. ஒரே செட்டில் படமாக்கபட்டது. ஒவ்வொரு நீதிமன்ற நடுவரும் ஒருவிதமான நீதியைப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொருவரும் ஒருவித மூர்க்க மனநிலை கொண்டவர்கள். அவர்களை ஒன்று சேர்த்து நியாய உணர்வை புரியச் செய்ய எவ்வளவு போராட வேண்டியிருக்கிறது என்பதை படம் விவரிக்கிறது.


இந்த இரண்டு படங்களும் தனிநபர் குற்றங்களையும் அதன் பின்னால் உள்ள நீதிமன்ற நடைமுறை சிக்ல்களையும் பற்றி உண்மைக்கு நெருக்கமாக பேசுகின்றது.


ஆனால் இதை இரண்டையும் விட மிகச்சிறப்பான படம் Judgment at Nuremberg 1961 ஆண்டு வெளியான இந்த படத்தை இயக்கியிருப்பவர் ஸ்டான்லி கிராமர். பதினோறு ஆஸ்கார் விருதுகளுக்கு இந்த படம் சிபாரிசு செய்யப்பட்டு இரண்டு விருதுகளை பெற்றிருக்கிறது



இரண்டாம் உலகப்போரின் போது ஹிட்லர் லட்சக்கணக்கான யூதர்களை கொன்று குவித்தான்.  யுத்த முடிவில் ஹிட்லர் இறந்து போகிறான். ஆனால் இந்தக் குற்றங்களுக்கு யார் பொறுப்பு ஏற்பது. யாரை குற்றவாளி என்று விசாரணை செய்வது என்ற கேள்வி எழுந்தது.


யூதர்களை படுகொலை முகாம்களுக்கு அனுப்ப உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளை கைது செய்து அவர்களை நீதிமன்ற விசாரணைக்கு உத்திரவு இடவேண்டும் என்று முடிவு செய்தார்கள். அதன்படி ஹிட்லரின் அரசாட்சியில் முக்கிய நீதிபதிகளாக இருந்த நான்கு பேர் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டு அவர்கள் மீது நீதிமன்ற விசாரணை நடைபெற்றது. 


இந்த நீதிவிசாரணை ஜெர்மனியில் உள்ள நூரெம்பெர்க் நகரில் நடைபெற்றது. இந்த விசாரணையும் அதில் நடைபெற்ற வாதபிரதிவாதங்களுமே இத்திரைப்படம்


அரசின் தலைமையில் செய்யப்பட்ட குற்றங்களுக்கு தனிநபர்களான அதிகாரிகள் பொறுப்பு ஏற்பது சரியா? ஒரு அரசு அதிகாரியை அவர் மேற்கொண்ட அரசு நடவடிக்கைகளுக்காக குற்றவாளி என்று அறிவித்து தண்டனை தர முடியுமா? தனிநபர் குற்றங்களை இந்த அளவு கண்டிக்கும் நீதிமன்றம் அரசு செய்யும் குற்றங்களை எப்படி அணுகுகிறது. அல்லது ஏன் அணுகுவதில்லை. அரசியல் குற்றங்களுக்கு யாருக்கு தண்டனை தருவது என்பது போன்ற ஆழமான கேள்விகளை இந்த படம் எழுப்புகிறது.


இரண்டாவது உலக யுத்தத்திற்கு பிறகு நிஜமாக நடைபெற்ற நூரெம்பெர்க் விசாரணையை தழுவி இந்த படம் உருவாக்கபட்டிருக்கிறது.


அமெரிக்க நீதித்துறையின் சார்பில் நூரெம்பெர்க்கிற்கு விசாரணையை மேற்கொள்ள வருகிறார் நீதியரசர் ஜான் ஹேவார்ட். யுத்த இடிபாடுகளுக்கு சிக்கி கிடக்கும் நூரெம் பெர்க் வீதிகளில் அவரது கார் பயணம் செய்கிறது. ஜெர்மனியர்கள் தங்கள் தோல்வியை மறந்து இயல்பான வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். இப்போது இந்த விசாரணையின் காரணமாக அவர்களது இயல்பு வாழ்க்கை மீண்டும் கடந்த கால நினைவுகளுக்கு தள்ளப்படுமா என்ற சந்தேகம் ஹேவார்ட்டிற்கு இருக்கிறது. அவர் நீதிவிசாரணை நடைபெற உள்ள இடத்தை பார்வையிடுகிறார். தனக்கு ஒதுக்கபட்ட தங்குமிடத்தில் தங்குகிறார்.


அவருக்கு சவாலாக இருக்க போவது அவரது விசாரணை. அவர் விசாரிக்க போகின்றவர்கள் அவரை போன்ற நீதிபதிகள். அதில் ஒருவர் ஜெர்மனிய சட்டங்களை எழுதிய உலகப்புகழ் பெற்ற நீதிபதி எர்னெஸ்ட் ஜேனிங். அவரது சட்டநுட்பங்களை படித்து ,பயன்படுத்தி ஹேவார்ட் நீதியரசர் ஆகியிருக்கிறார். ஆகவே எவரது சட்டங்கள் தன்னை உருவாக்கியதோ அவரை தான் எப்படி விசாரணை செய்வது என்ற தயக்கம் அவருக்குள் இருக்கிறது. தன்னோடு பணியாற்ற உள்ள மற்ற நீதிபதிகள் எந்த அளவு இதில் ஒத்துழைப்பு தருவார்கள் என்ற யோசனை அவருக்கு உண்டாகிறது. அதே நேரம் அமெரிக்க அரசின் அரசியல் தலையீடு இதில் எவ்வளவு இருக்கும் என்றும் உள்ளுர பதட்டமிருக்கிறது.


இந்த வழக்கில் தான் மிக நேர்மையான திறந்த விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்று ஹேவார்ட் விரும்புகிறார். தேசப்பற்று என்பது குற்றசெயலுக்கு துணையாக அமைந்தால் அதை எப்படி சட்டரீதியாக விளக்குவது என்று படித்து அறிகிறார். எந்த இடங்களில் ஜெர்மனியர்கள் ஒன்று திரண்டார்கள். எங்கே யூத மக்கள் ஒடுக்கபட்டார்கள் என்று அந்த நகரின் வீதிகளில் நடந்து அலைந்து பார்க்கிறார். நண்பர்களின் உதவியால் நீதிமன்றத்திற்கு வெளியே என்ன உண்மை புதைந்து கிடக்கிறது. எதை மக்கள் நம்பினார்கள். எதை புரிந்துகொண்டிருந்தார்கள் என்று கண்டறிகிறார்.


நீதிவிசாரணை துவங்குகிறது. குற்றம்சாட்டப்பட்ட நீதிபதிகள் வாயை திறந்து பேசக்கூடமறுத்து மௌனம் காக்கிறார்கள். தங்களை விசாரிக்க கூடாது என்ற எதிர்ப்பின் அடையாளம் அது. குற்றம் சாட்டப்பட்ட நீதிபதிகள் மற்றும் யூதபடுகொலைகளுக்கு வக்காலத்து வாங்குவதற்காக இளம் வழக்கறிஞர் ஹான்ஸ் ரொல்பே கோர்ட்டில் ஆஜர் ஆகிறார்.


நீதிவிசாரணையின் போது யூதபடுகொலை குறித்து உண்மையான ஆவணப்பதிவுகள் காட்டப்படுகின்றன. முதன்முறையாக அமெரிக்க மக்கள் இந்தப் படத்தில் தான் யூத படுகொலையின் ஆவணக்காட்சிகளை பார்த்தார்கள். அந்த காட்சி நீதிமன்றத்தை உலுக்குகிறது. ஆனால் அதை ஒரு சாட்சியமாக கொள்ள முடியாது. அது உணர்ச்சியை தூண்டும் வெளிப்பாடு என்று மறுக்கிறார் இளம் வழக்கறிஞர்.


நீதிபதிகள் தொடர்ந்து விசாரிக்கபடுகிறார்கள். தேசத்தின் தலைமை நீதிபதியாக இருந்தவர் ஹிட்லர். அவரது உத்தரவை செயல்படுத்தியது மட்டுமே தங்கள் வேலை என்கிறார்கள். லட்சக்கணக்கான யூதர்கள் கொல்லபடுகிறார்கள் என்று தாங்கள் அறிந்திருக்கவில்லையா என்று நீதிபதிகளிடம் ஹேவார்ட் கேள்வி கேட்கிறார்.


உண்மையில் தாங்கள் அதைபற்றி அறிந்திருக்கவில்லை. பெரும்பான்மை ஜெர்மானியர்களுக்கும் அப்படியொரு படுகொலை நிகழ்வுகள் பற்றி தெரியாது. ஹிட்லர் தன் அதிகாரத்திற்கு உட்பட்டவர்களை நாஜி கட்சியில் கட்டாயமாக இணைத்து கொண்ட காரணத்தால் மட்டுமே தாங்கள் அந்த கட்சி உறுப்பினர்கள் ஆனோம் என்பதை சொல்கிறார்கள்.


தங்களின் உத்தரவு என்ன பாதிப்பை உருவாக்குகிறது என்பதை அறியாமல் எப்படி உத்தரவிட்டீர்கள் என்று கேட்டபோது அவர்கள் அது ஹிட்லரின் கட்டளை அதை மீறினால் தாங்கள் உயிரோடு இருக்க முடியாது என்று சொல்லி மௌனம் காக்கிறார்கள்


படத்தின் பெரும்பான்மை காட்சிகள் நீதிவிசாரணைகளே. ஆனால் நிமிச நேரம் கண்ணை திருப்பவிடாமல் காட்சிகள் நம்மை கவ்விக் கொள்கிறது. வாதபிரதிவாதங்களும் அதற்காக அவர்கள் கையாளும் உதாரணங்களும் மிகச் சிறப்பானவை.  எர்னெஸ்ட் லஸ்சியோ படத்தின் ஒளிப்பதிவாளர். ஒரே அரங்கினை மிக அழகான கோணங்களில் நுட்பமாக படமாக்கியிருப்பார்.


நீதிமன்ற விசாரணையின் இறுதியில் ஹிட்லர் மட்டும் குற்றவாளியில்லை. ஹிட்லரை புகழ்ந்து கொண்டாடி அவரை போன்ற ஒருவர் இங்கிலாந்திற்கு கிடைத்திருந்தால் இங்கிலாந்து வளர்ச்சி பெற்ற நாடாகியிருக்கும் என்று பேசிய சர்ச்சில், ஹிட்லருக்கு துணை நின்ற நாடுகள், ஆதரவு தந்த தொழில்அதிபர்கள், அவரது கட்சிசெயல்பாட்டை விருப்பத்துடன் மேற்கொண்ட மக்கள் யாவருமே குற்றவாளிகள் தான் என்று ஹான்ஸ் வாதாடுகிறார் . மிகுந்த உணர்ச்சிபூர்வமான உரையிது.


ஆனாலும் தேசத்தின் பெயரால் நடைபெறும் குற்றங்களுக்கு அதன் காப்பாளர்கள் பொறுப்பானவர்களே. அவர்கள் தங்கள் மனசாட்சியோடு நடக்க தவறியிருக்கிறார்கள். உயிர்பயத்தில் அவர்கள் செயல்பட்டார்கள் என்பதை மட்டும் கருத்தில் கொண்டு அவர்களை குற்றவாளி இல்லை என்று விடுவிக்கமுடியாது. குற்றம் அவர்கள் அறிந்தே நடந்திருக்கிறது. இன்னொரு பக்கம் நீதிமன்றம், மக்கள் நலம் போன்றவற்றில் அரசும் அரசியலும் மேற்கொண்டுவரும் தலையீடும்,  பொறுப்பற்ற செயல்களும் கண்டிக்க தக்கது என்றும் நீதிபதி அறிவிக்கிறார். ஜெர்மனிய மக்களில் எவரும் பொதுகுற்றவுணர்ச்சிகளுக்கு ஆட்படவில்லை. அவர்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியிருக்கிறார்கள். ஆகவே குற்றம் உறுதி செய்யப்பட்ட ஜெர்மனிய நீதிபதிகள் தண்டனைக்காக அழைத்து செல்லபடுகிறார்கள்.


எந்த நீதிபதியின் சட்டபுத்தகங்களை தான் படித்து நீதிபதி ஆனாரோ அவரை கடைசி முறையாக சந்திக்கிறார் ஹேவேர்ட். ஜேனிங் தனது சட்டங்களை முறையாக செயல்படுத்தியவர் ஹேவர்ட் என்று ஜெர்மனிய நீதிபதி பாராட்டுவதோடு தான் எழுதி வெளியிடப்படாமல் போன தனது நீதிமன்ற குறிப்பேட்டை அவரிடம் தருகிறார்.


ஒரு நீண்ட விசாரணை முடிவடைகிறது. ஆனால் நீதிமன்றத்தில் எழுப்பபட்ட கேள்விகள் அப்படியே இன்றும் எதிரொலித்துக் கொண்டேயிருக்கின்றன.


உண்மை சம்பவங்களையும் அதன் பின்னணியும் இப்படத்தில் சிறப்பாக பயன்படுத்தபட்டிருக்கிறது.  பக்கம் பக்கமான வசனங்கள் கிடையாது. ஆனால் மனதை கனமாக்கும் ஆழ்ந்த வாதங்கள் இருக்கின்றன. ஸ்பென்சர் ட்ரேசி ஹேவர்ட்டாக நடித்திருக்கிறார்.  மிகையற்ற நடிப்பு. உணர்ச்சிகளை எவ்வளவு கட்டுபாடுடன் வெளிப்படுத்த வேண்டும் என்பதற்கான மாதிரி நடிப்பாக இதைச் சொல்லலாம். 


ஒரு பக்கம் பொதுக்குற்றம் குறித்த ஆய்வு மறுபக்கம் இனதுவேசம் மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்முறை இரண்டையும் படம் விவரிக்கிறது. இரண்டிலும் உணர்ச்சிபூர்வமான வெளிப்பாடுகளும் மறுப்பும் அடங்கியிருக்கிறது.


இன்றும் இந்தியாவின்  பல்வேறு நீதிமன்ற வளாகத்தின் வெளியே காத்திருக்கும் ஆயிரக்கணக்கான மக்களில் பலர் தங்களுக்கு எப்போது நீதி கிடைக்கும். யார் தண்டிக்கபடுவார்கள். ஏன் குற்றவாளி விடுவிக்கபடுகிறான் என்று புரியாத குழப்பத்தில் தான் இருக்கிறார்கள். எது குற்றம் எது தண்டனை என்பது குறித்த ஆழ்ந்த விவாதங்கள் இன்னும் துவங்கபடவேயில்லை.


நீதித்துறை குறித்த ஆழ்ந்த பார்வைகளை முன்வைக்கும் இந்த படம் அமெரிக்க சினிமாவின் சிறந்த படமாகும். அந்த வகையில் அவசியம் காண வேண்டிய  முக்கியமான படங்களில் ஒன்று நூரெம்பெர்க் விசாரணை.


***


 



 

0Shares
0