“நீங்க எடுத்திருக்கிறது நாவலோட இரண்டாம் பாகம் . முதல் பாகம் லெண்டிங் போனது இன்னும் வரலை“ என்றார் நூலகர்
“பரவாயில்லை சார். நான் இரண்டாம் பாகம் படிக்கிறேன் “என்றார் அந்த வாசகர்
நூலகர் வியப்போடு பார்த்தபடியே “கதை புரியாதே“ என்றார்
“படிக்கிறதை வச்சி புரிஞ்சிகிட வேண்டியது தான். கல்யாணத்துக்கு முன்னாடி என் வொய்ப் அவ வீட்ல எப்படியிருந்தா. காலேஜ்ல எப்படி படிச்சா. எந்த ஊருக்கெல்லாம் டூர் போனா எதுவும் எனக்குத் தெரியாது. முதல்பாகம் தெரியாமல் நான் அவளைக் கல்யாணம் பண்ணிக்கொண்டேன். எங்க ரெண்டாம் பாகம் நல்லா தானே போய்கிட்டு இருக்கு“ என்று சிரித்தார் அந்த வாசகர்
புத்தகம் படிப்பவர்களால் தான் இப்படி யோசிக்க முடியும் என்று தோன்றியது. நூலகர் அவர் சொன்ன பதிலின் புத்திசாலிதனத்தை வியந்தபடியே “மூணாம் பாகமும் மிச்சம் இருக்கே“ என்று கேலியாகச் சொன்னார்
“நான் கையில கிடைக்கிற புத்தகத்தைப் படிப்பேன் . மிச்சக் கதை தெரியாட்டி ஒண்ணுமில்லை. கூடப் படிச்ச பிரண்ட்ஸ் என்ன ஆனாங்கன்னு தெரியாமல் வாழ்ந்துகிட்டு இருக்கோம். இதுல புக்ல மட்டும் முடிவு தெரிஞ்சே ஆகணுமா. கதை தானே சார். விடுங்க“ என்றார் அந்த வாசகர்
அவர் சொன்னதை நூலகரால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.
“ஒரு புத்தகத்தைப் பாதி மட்டுமே படித்து வைப்பது எப்படிச் சரியாக இருக்கும். அது நியாயமில்லையே“
“புத்தகத்துக்குக் கூடவா நியாயம் அநியாயம் இருக்கு“ எனக்கேட்டார் அந்த வாசகர்
“ஏன் அப்படிக் கேட்டுட்டீங்க. புத்தகத்துக்கு நியாயம் செய்றதுன்னா அதை முழுசா படிக்கிறது. ஆழ்ந்து படிக்கிறது. படிச்சதை மனசில் ஏற்றிகிடுறது. அதை விட்டுட்டு அங்கங்கே புரட்டிட்டு தூக்கி போட்டா அது அநியாயம் தானே சார்“
“ பத்து இருபது பக்கம் படிக்கிறப்போ சுவாரஸ்யமா இருந்தால் நான் தொடர்ந்து படிப்பேன். இல்லாட்டி மூடி வச்சிருவேன். பிடிக்காத புஸ்தகத்தை எதுக்குப் படிக்கணும்“ எனக்கேட்டார் அந்த வாசகர்
“இப்போ பிடிக்காமல் போன பொஸ்தகம் இன்னொரு வயசில பிடிக்கும் . என் அனுபவத்திலே உணர்ந்திருக்கேன். “ என்றார் நூலகர்
“நான் சும்மா படிக்கிறவன் சார் நமக்கெல்லாம் பிடிக்கலைன்னா பிடிக்கலை தான்“ என்றபடியே தன் புத்தகத்தை நூலகர் மேஜையில் வைத்தார் அந்த வாசகர்.
சும்மா படிப்பது என்பது ஒரு பொய் சமாதானம். தனக்கான புத்தகத்தைத் தேடிக் கொண்டிருக்கிறார் என்பதே நிஜம். நிச்சயம் ஏதாவது ஒரு புத்தகம் அவரை ஆழமாகப் பாதிக்கவே செய்யும்.
இரண்டாம் பாகத்தை மட்டும் தனியே இரவல் பெற்றுப் போனவரைப் போல விநோத வாசகர்கள் நூலகத்தில் அதிகம்.
பொது நூலகங்களின் முக்கியத்துவமே பாகம் பாகமாக வெளியான நூல்களைப் பெரிய விலை கொடுத்து வாங்க முடியாதவர்கள் அதை எளிதாகப் படிக்க முடிகிறது என்பது தானே. சிலர் நாவலின் இரண்டாம் பாகம் எப்போது வரும் எனக் காத்துகிடப்பார்கள். ஏழு பாகமும் படித்திருக்கிறேன் என்று பெருமையாகச் சொல்வார்கள்.
மூன்று பாகங்கள் கொண்ட சரித்திர நாவலை மொத்தமாகப் படித்து முடித்திருந்தாலும் தனியே இரண்டாம் பாகத்தை மட்டும் எவரும் திரும்பப் படிப்பதில்லை. மறுவாசிப்பு என்றாலும் மூன்று பாகங்களையும் தான் வாசிக்கிறார்கள். இரட்டைப் பிள்ளைகளைப் போலப் புத்தகங்களுக்குள்ளும் இப்படி ஒரு உறவு இருக்கிறது.
இரண்டாம் பாகத்தை மட்டும் தனியே படிக்கும் அந்த வாசகர் கதையின் முற்பகுதியில் நடந்தவற்றைத் தானே யோசித்துக் கொள்வார். அது அவரது கற்பனையைப் பொருத்த விஷயம். முதல் பாகத்தில் இடம்பெற்ற சிலர் இரண்டாம் பாகத்தில் இடம் பெற மாட்டார்கள். கதாபாத்திரங்களின் வயதும் இடமும் மாறியிருக்கக் கூடும்.
முதல் பாகம், இரண்டாம் பாகம், மூன்றாம் பாகம் என்பதெல்லாம் காலத்தின் சித்திரங்கள் தானே
அந்த வாசகர் சொன்னது போல ஒருவரை நாம் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் போது அவரது முதற்பாகமும் தெரிவதில்லை. மூன்றாம் பாகமும் தெரிவதில்லை. அவருடன் ஏற்படும் உறவும் நெருக்கமும் முக்கியமாக இருக்கிறது. ஒருவேளை அவரின் மூன்றாம் பாகத்தை நாமே வழிநடத்தவும் கூடும்
புத்தகங்களை எந்த வரிசையில் வாசிக்க வேண்டும் என்று எந்த வழிகாட்டுதலும் கிடையாது. அது அவரவர் விருப்பம் சார்ந்த ஒன்று. ஒரு நாள் ஹோட்டலில் ஒருவரைக் கண்டேன். உள்ளே வந்து உட்கார்ந்தவுடன் ஒரு காபி குடித்தார். பிறகு இனிப்பு சாப்பிட்டார். பிறகு தோசை சாப்பிட்டார். கடைசியில் மீண்டும் காபி குடித்தார். இது என்ன புதுப்பழக்கம் என்று தோன்றியது. ஆனால் அது அவரது ரசனை. அப்படித் தான் வாசிப்பிலும் பல்வேறு ரகமான மனிதர்கள் இருக்கிறார்கள்
அவர்களைப் பொது நூலகத்தில் எளிதாக அடையாளம் கண்டுவிடலாம். சரித்திர நாவலில் ஏன் நகைச்சுவையே எழுதப்படுவதில்லை என்று ஆதங்கப்படும் வாசகரைக் கண்டிருக்கிறேன். ஒரு நாள் குடும்ப நாவல். மறுநாள் சரித்திர நாவல். அடுத்த நாள் துப்பறியும் நாவல் என மாறி மாறிப் படிக்கும் வாசகரை அறிவேன். யாரும் எடுத்துப் போகாத புத்தகத்தை மட்டுமே எடுத்துப் போகும் அரிய வாசகர்களும் இருந்தார்கள். இப்படி ஒவ்வொரு நூலகத்திலும் நூறு விதமான வாசகர்கள் இருப்பதை அறிவேன்
ஆனால் இரண்டாம் பாகத்தை மட்டும் தனியே படிக்கும் வாசகர் அபூர்வமானவர். அவருக்குப் புத்தகங்களுக்குள் தொடர்ச்சி கிடையாது. உறவு கிடையாது. அவை தனித்து வாசிக்கப்பட வேண்டியவை.
அவர் ஏன் ஒரு கதையின் முந்தைய அடுத்த பகுதிகளை அறிந்து கொள்வதில் ஆர்வமில்லாமல் இருக்கிறார். நிச்சயம் சொந்தவாழ்க்கையில் ஏற்பட்ட ஏதோ ஒரு கசப்பான அனுபவம் புத்தகம் வழியாக வெளிப்படுகிறது.
சிலர் தன் கடந்தகாலத்தை நினைத்துப் பார்ப்பதேயில்லை. பெரும்பான்மையினர் பால்ய வயதைப் பற்றி நினைத்து நினைத்து மகிழ்ச்சி அடைகிறோம். சிலருக்கு பால்ய வயதைப் பற்றிப் பேசினாலே கோபம் வந்துவிடும். நல்லவேளை அந்த நாட்கள் முடிந்துவிட்டது. அதை ஒரு போதும் நினைக்கவே மாட்டேன் என்பார்கள். பள்ளி நாட்கள் எல்லோருக்கும் சந்தோஷமானதில்லை.
சொந்த வாழ்க்கையின் பிரதிபலிப்பைப் புத்தகங்களில் தேடுவதும் ஒரு வகை வாசிப்பு தான். சிலரால் தங்கள் வாழ்க்கை அனுபவத்தின் ஏதாவது ஒரு பக்கத்தை ஒரு நாவலிலோ அல்லது கதையிலோ காணும் போது தன்னை அறியாமல் அழுகை வந்துவிடுகிறது. தனது பழைய புகைப்படத்தைக் காண்பது போல உணருகிறார்கள். மனிதர்களைச் சிரிக்க வைத்த புத்தகங்களை விடவும் அழுகை வரச்செய்யப் புத்தகங்களின் எண்ணிக்கை தானே அதிகம்.
எனது நண்பர்களில் ஒருவருக்கு எந்த நாவல் படித்தாலும் அதன் கதாபாத்திரங்களின் பெயர் நினைவில் இருக்காது. உடனே மறந்துவிடுவார். ஆனால் கதை மறக்கவே மறக்காது. ஆகவே அவராக அந்த நாயகனுக்குப் பெயர் வைத்துச் சொல்லுவார். நான் சிரித்தபடியே கதையை இவ்வளவு நன்றாக நினைவு வைத்துள்ள உனக்கு ஏன் கதாபாத்திரத்தின் பெயர் மறந்துவிட்டது என்று கேட்பேன். அப்படிப் பழக்கமாகிருச்சி என்று சிரிப்பார். இவருக்கு நேர் எதிராக எப்போதோ படித்த ஒரு கதையில் வரும் சிறிய கதாபாத்திரத்தின் பெயரைக் கூடத் துல்லியமாக நினைவில் வைத்துச் சொல்லும் வாசகர்களும் இருக்கவே செய்கிறார்கள்
குற்றால அருவியில் குளிப்பவர்களைப் பார்த்திருக்கிறீர்களா. எந்த இருவரும் ஒன்று போலக் குளிக்கமாட்டார்கள். சிலருக்கு முதலில் கை மட்டுமே நனைய வேண்டும். சிலர் அருவிக்குள் தலையைத் தான் முதலில் கொடுப்பார்கள். சிலருக்குத் தோளில் அருவி விழுவது தான் சுகம். சிலரோ அருவியின் அருகில் வந்தாலும் குளிப்பதில்லை. வேடிக்கை மட்டும் தான் பார்ப்பார்கள். ஒரே அருவி தான் நூறு நூறு அனுபவமாக மாறுகிறது. வாசிப்பும் இப்படியானது தான். ஒரே புத்தகத்தை இரண்டு பேர் ஒன்றாக வாசிக்க முடியாது. ஒருவருக்குப் பிடித்த ஏதாவது விஷயம் இன்னொருவருக்குப் பிடிக்காது. வாசிப்பு நம்மைப் புத்துணர்வு கொள்ள வைக்கிறது. மகிழ்ச்சிப்படுத்துகிறது என்பது தான் பொது உண்மை
தனிப்பட்ட முறையில் ஒருவர் புத்தகத்தை நோக்கி எதற்குப் போகிறார். என்ன அறிந்து கொள்கிறார் என்பது புதிரான விஷயமே. ஒவ்வொரு புத்தகத்திற்குள்ளிருந்தும் ரகசியமான இசை ஒன்று வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. எவரது காதுகளுக்கு அந்த இசை கேட்கிறதோ அவரே அந்தப் புத்தகத்தைக் கையில் எடுக்கிறார்கள் என்று சீனாவில் நம்புகிறார்கள்.
நூலகம் முழுவதும் புத்தகங்கள் நிரம்பியிருந்தாலும் ஏதோ சில புத்தகங்கள் தானே நம்மை அழைக்கின்றன. நம்மோடு நெருக்கம் கொள்கின்றன.
••