நூலக மனிதர்கள். 17 கனவின் முகம்

அந்த இளைஞருக்கு இருபது வயதிருக்கும். எப்போது நூலகத்திற்கு வரும் போதும் கூலிங்கிளாஸ் அணிந்து கொண்டு தான் வருவார். அதை நூலகத்தினுள்ளும் கழட்ட மாட்டார்.

அவர் தான் ஒரு நாள் “சினிமா பாட்டுப்புத்தகங்களை ஏன் நூலகத்தில் வாங்குவதில்லை“ என்று கோவித்துக் கொண்டார்

“பாட்டுப் புத்தகம் வேணும்னா கோவில் முன்னாடி இருக்கிற பெட்டிகடையில விற்குறாங்க. பத்துப் பைசா குடுத்தா கிடைச்சிரும். சினிமா பாட்டுப் புத்தகமெல்லாம் லைப்ரரியிலே வாங்க முடியாது “என்றார் நூலகர்

“ஏன் சினிமா பாட்டுபுத்தகம் படிக்கிறது தப்பா“ என்று அவர் கேட்டார்

முப்பது வருஷங்களுக்கு முன்பு வீட்டிற்குச் சினிமா பாட்டுப் புத்தகம் வாங்கி வருவதைத் தவறான பழக்கமாகக் கருதினார்கள். சினிமா பார்க்கலாம். சினிமா பாட்டுக் கேட்கலாம். ஆனால் சினிமா பாட்டுப் புத்தகங்களைப் படிக்கக் கூடாது என்பதே குடும்பத்தின் சட்டம்

ஆனால் பள்ளி கல்லூரி மாணவர்கள் தவறாமல் சினிமா பாட்டுப் புத்தகங்களை வாங்கினார்கள். அத்தோடு அந்தப் பாடல்களைப் பாடி சந்தோஷப்பட்டார்கள்

பள்ளிக்கூடத்தில் புத்தகங்களுடன் ஒளித்து வைத்து வகுப்பறைக்கே பாட்டுப் புத்தகங்களைக் கொண்டு வருவார்கள். கைமாறி கைமாறி படிப்பார்கள். மதிய உணவின் போது மரத்தடியில் நின்றபடியே கைகளை விரித்தபடியே டிஎம்எஸ் குரலில் யாரோ ஒருவன் பாடுவதும் உண்டு.

சினிமா பாட்டுப் புத்தகம் என்றில்லை. சினிமா தொடர்பான புத்தகங்களே நூலகத்தில் குறைவாக இருந்தன. சினிமா மலர்கள் நிறைய வெளிவந்து கொண்டிருந்த காலமது. ஆனால் அவற்றை நூலகத்தில் காண முடியாது. சினிமாவைப் பற்றிப் படிப்பதற்கு என்ன இருக்கிறது என்றே பலரும் நினைத்தார்கள். சினிமாவில் பணியாற்றிய கலைஞர்களும் அதை ரகசியமாகப் பாதுகாத்தார்கள்.

ஹாலிவுட் இயக்குநர்கள் பலரும் தங்கள் சினிமா வாழ்க்கை அனுபவத்தை விரிவாக எழுதியிருக்கிறார்கள். அப்படித் தமிழில் ஒரு புத்தகம் வெளியானதில்லை.

புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குநர் ஹிட்ச்காக்கை பிரெஞ்சு இயக்குநர் த்ரூபா விரிவாக நேர்காணல் செய்து Hitchcock : Truffaut என ஒரு நூலாக வெளியிட்டிருக்கிறார். மிக முக்கியமான புத்தகம். இன்று வரை அதன் முழுமையான மொழியாக்கம் கூட வெளியாகவில்லை.

விலை மலிவு என்பதால் சினிமா பாட்டுப் புத்தகங்களை எப்போதும் சாணித்தாளில் தான் அச்சிடுவார்கள். முதற்பக்கத்தில் படத்தின் கதைச் சுருக்கம்  இருக்கும். அதில் தான் மற்றவை வெள்ளித்திரையில் காண்க. என்ற வரியை முதன்முறையாகப் படித்தேன். பெரும்பான்மை பாட்டுப் புத்தகங்களின் அட்டை கறுப்பு வெள்ளை தான். எண்பதுகளுக்குப் பிறகு தான் கலரில் பாட்டுப் புத்தகங்கள் வெளியாகின.

பாட்டுப் புத்தகம் மட்டுமின்றிப் படத்தின் கதை வசனத்தைத் தனியே சிறுவெளியீடாகவும் வெளியிடுவார்கள். பராசக்தி, வீரபாண்டிய கட்டபொம்மன். திருவிளையாடல் ரத்தக்கண்ணீர் போன்ற படங்களின் வசனப் புத்தகங்கள் பெரும் விற்பனையானது.

கடந்த இருபது ஆண்டுகளில் தமிழில் நிறையச் சினிமா நூல்கள் வெளியாகியுள்ளன. உலகச் சினிமா துவங்கி உள்ளுர் படங்கள் வரை விரிவாக எழுதப்பட்ட புத்தகம் இன்று நூலகத்தில் இருக்கின்றன. இதில் திரைக்கதை ஒளிப்பதிவு. எடிட்டிங். நடிப்பு. மொழிபெயர்ப்புகள். சினிமா கட்டுரைகள். சுயசரிதைகள் எனச் சினிமாவின் அனைத்து விஷயங்களைப் பற்றியும் புத்தகங்கள் வெளியாகியிருக்கின்றன.

ஆனால் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு பொதுநூலகத்தில் சினிமா தொடர்பாக நாலைந்து புத்தகம் மட்டுமே இருந்தன. அதுவும் அறந்தை நாராயணன் எழுதிய தமிழ்சினிமா வரலாறு. பி.எஸ்.ராமையா எழுதிய சினிமா. சினிமா மாயை போன்ற புத்தகங்களே.

பாட்டுப் புத்தகம் கேட்ட இளைஞர் சினிமாவில் நடிக்க ஆசை கொண்டவர் என்பது அவரது தோற்றத்திலிருந்தும் பேச்சிலிருந்தும் தெரிந்து கொள்ள முடிந்தது.

ஒரு நாள் நூலகரிடம் “சினிமாவில் நடிப்பது எப்படி“ என்று புத்தகம் இருக்கிறதா என்று கேட்டார்

“அப்படி எதுவுமில்லை“ என நூலகர் கையை விரித்தவுடன் “இவ்வளவு ஆயிரம் புத்தகம் வச்சிருக்கீங்க. நடிக்கிறதை பற்றி ஒரு புத்தகம் கூடவா இல்லை “என்று ஆதங்கமாகக் கேட்டார்

“எனது நாடகவாழ்க்கைனு டி.கே.சண்முகம் எழுதின புத்தகம் இருக்கிறது. அது நடிகர்களைப் பற்றியது தான்“ என்றார் நூலகர்

“ரஜினியோட வாழ்க்கை வரலாறு இருக்கா“ என்று கேட்டார் அந்த இளைஞர்

“இல்லை. ரசிகர் மன்றத்துல கேட்டுப் பாருங்கள்“

அந்த நாட்களில் ரசிகர் மன்றங்கள் தீவிரமாக இயங்கிவந்தன. பேப்பரில் ரஜினி கமல் பற்றி எந்தச் செய்தி வந்தாலும் அதைக் கட் பண்ணி பைண்ட் பண்ணி வைப்பார்கள். சினிமா விளம்பரங்களைச் சேகரித்து வைத்திருப்பார்கள். தியேட்டரில் முதற்காட்சியின் போது அலங்காரம் செய்வார்கள். ரசிகர் மன்ற டிக்கெட் விற்பார்கள். ரஜினி கமல் ஆட்டோகிராப் போட்ட புகைப்படம் வாங்கித் தர உதவுவார்கள். இப்படி மன்றங்கள் பரபரப்பாக இயங்கின.

“அங்கே கேட்டுப்பார்த்துட்டேன். அவங்க கிட்ட புக் எதுவுமில்லை மன்றத்தில் உறுப்பினர் ஆகச் சொல்கிறார்கள்“ என்றார் இளைஞர்.

திரையுலகின் புகழ்பெற்ற ஆளுமைகள் எவரைப் பற்றியும் நூலகத்தில் புத்தகங்கள் இல்லாதது அவருக்குப் பெருங்குறையாக இருந்தது. சினிமாவை ஏன் அங்கீகரிக்க மறுக்கிறார்கள் என்று கோபம் கொண்டிருந்தார்.

“அப்போ நீங்க மெட்ராஸ் தான் போகணும் “என்றார் நூலகர்

எப்படியாவது சினிமாவிற்குள் புகுந்து நடித்துப் பெரிய ஆள் ஆகிவிட வேண்டும் என்ற கனவு அந்த இளைஞரிடமிருந்தது. ஆகவே அவர் நூலகத்தில் இதற்கு ஏதாவது வழி கிடைக்குமா எனத் தேடிக் கொண்டிருந்தார். நாளிதழ்கள் வார இதழ்களில் சினிமா பற்றி வெளியான செய்திகளை மட்டுமே அவர் வாசிப்பார்.

நூலகத்தின் படிகளில் ஏறும் போது ரஜினி போலவே நடப்பார். அவரை நூலகத்தில் பலரும் கேலி செய்தார்கள். அதைப் பொருட்படுத்தவேயில்லை. பேசும்விதம், கைகளை அசைப்பது, என எல்லாவற்றிலும் அவருக்கு ரஜினியே ஆதர்சம்.

“சினிமாவில அனுபவம் இல்லாமல் நடிக்க முடியாதே“ என்று ஒருமுறை நூலகர் கேட்டார்

“அது ரஜினிபடத்தைப் பார்த்து நடிக்கக் கத்துகிட்டேன். ரஜினிபடம் எது வந்தாலும் பத்து தடவையாவது பார்த்துருவேன். “

“சினிமாவில யாராவது சொந்தக்காரங்க, தெரிஞ்ச ஆள் இருக்காங்களா“

“ஒருத்தரும் கிடையாது. எங்கய்யா மார்க்கெட்ல காய்கறி கடை வச்சிருக்கார். அதான் புக் இருந்தால் சினிமாவை பற்றித் தெரிஞ்சிகிடலாம்னு நினைச்சேன். “

“புத்தகம் படிச்சி எப்படி நடிக்க முடியும்“

“நடிக்கிறதில் நிறையச் சீக்ரெட்ஸ் இருக்கு. அதை எழுதியிருப்பார்கள்“ என்றார் இளைஞர்

தான் படிக்காத புத்தகம் பற்றி அவருக்குள்ளாகவே இருந்த கனவது.

சினிமா பார்க்கிற எல்லோருக்கும் சினிமாக்கனவு என்ற விதை மனதிற்குள் முளைக்கவே செய்கிறது. பலர் அதை வெளிக்காட்டிக் கொள்வதில்லை. சிலர் வெளிக்காட்டுகிறார்கள். இவர்களில் ஒரு சதவீதமே சினிமாவைத் தேடிச் செல்கிறார்கள். சினிமா ஆசையால் வீட்டை விட்டு ஒடிப்போய்த் தோற்றவர்களின் எண்ணிக்கை அதிகம். ஆனால் வென்றவர்களின் கதை எங்கோ கிராமத்தில் வசிக்கும் இளைஞனை சினிமாவை நோக்கி இழுக்கவே செய்கிறது.

சினிமாவைப் பற்றிப் படிக்க ஆசைப்படுகிறவர்கள் நிறைய இருக்கிறார்கள். அது சினிமாவை ஆழ்ந்து தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இல்லை. எப்படியாவது சினிமாவிற்குள் போவதற்கு ரகசிய வழிகள் தெரிந்துவிடாதா என்பதற்காகவே படிக்கிறார்கள்.

அந்த இளைஞர் ரஜினியை நேரில் பார்த்து ஆசி வாங்கிவிட்டு அப்படியே சினிமாவில் நுழைந்து விடுவதற்காக மெட்ராஸ் கிளம்பினார்.

ஊரை விட்டுப் போவதற்கு முந்திய நாள் நூலகம் வந்திருந்தார். நூலகரிடம் ஆசி பெற்றார்.

“தான் நடிகனாகிப் புகழ்பெற்றால் நூலகத்திற்குப் புதுக் கட்டிடம் கட்டி தருவதாக“ வாக்குறுதி கொடுத்தார்.

அதன்பிறகு அந்த இளைஞரை நூலகத்தில் நான் பார்க்கவேயில்லை. நான்கு வருஷங்களுக்குப் பிறகு ஒருநாள் திரும்பவும் நூலகத்தில் பார்த்தேன். கூலிங்கிளாஸ் இல்லை. ஒடுங்கிப்போன முகம். உலர்ந்த கண்கள். பத்து நாள் காய்ச்சலில் கிடந்து மீண்டவரைப் போன்ற தோற்றம். கையில் பட்டினத்தார் பாடல்கள் புத்தகமிருந்தது.

நூலகரிடம் அவரைப் பற்றிக் கேட்டதற்குச் சொன்னார்

“அது பெரிய கதை. மெட்ராஸ் போயி ரஜினியை பார்க்கவே முடியலை. நடிக்கவும் வாய்ப்பு கிடைக்கலை. பாண்டிபஜாரில் ஒரு ஹோட்டல்ல சப்ளையரா வேலை பாத்து இருக்கார். எந்த ஸ்டுடியோவுக்குள்ளேயும் நுழைய முடியலை. கடனாளியாகி கஷ்டப்பட்டு வடபழனியில இருந்தவரை அவங்க மாமா போய்க் கூட்டிட்டு வந்துட்டார். சினிமா ஆசை அவ்வளவு தான் என்றார்

“இப்போ என்ன செய்றார்“

“டின்பேக்டரியில வேலை செய்றார். இப்போ சினிமா பாக்குறது கூடக் கிடையாது. ரொம்பக் கஷ்டப்படுறார் “என்றார்

ரஜினி போல நடந்து அவர் நூலகப் படிகளில் ஏறிவரும் அந்தக் காட்சி மனதில் ஓடியது. கனவை இழந்தவர்களின் தோற்றம் ஒன்றுபோலவே இருக்கிறது. எது அவர்களுக்கு அமுதமாக இருந்ததோ அதுவே நஞ்சாக மாறிவிடுகிறது.

பலருக்கும் நூலகம் கனவுகள் அரும்பும் இடமாக இருக்கிறது. ஆனால் அந்தக் கனவுகள் எல்லோருக்கும் நிறைவேறிவிடுவதில்லை. தோற்றவர்களுக்குத் துணை கிடையாது. வீடும் அவர்களை வெறுக்கத் துவங்கிவிடுகிறது.

அவர்கள் மீண்டும் புத்தகத்திடம் தான் ஆறுதல் தேடுகிறார்கள். சொற்களே மனதில் நம்பிக்கையை உருவாக்குகின்றன. புதிய தேடுதலை உருவாக்குகின்றன. புதிய வழியை, புதிய வாழ்க்கையை அறிமுகம் செய்கின்றன.

•••

0Shares
0