நூலக மனிதர்கள் 18 எல்லோர் கைகளுக்கும்

நூலகத்திற்கு வந்து புத்தகம் படித்துக் கொண்டிருப்பதற்காக ஒருவர் அடி வாங்குவதைப் பார்த்திருக்கிறீர்களா ?

பத்து நாட்களுக்கு ஒரு முறை அப்படி ஒரு பையன் அடிவாங்குவான். ஆவேசமாக நூலகத்திற்குள் வரும் அவனது மாமா அவன் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தைப் பிடுங்கி வீசிவிட்டுக் கன்னத்தில் அறைவார். அடிவாங்கிய போதும் அவன் சலனமேயில்லாமல் உட்கார்ந்திருப்பான்.

ஒரு முறை அந்தப் பையன் அடிவாங்கிய போது நூலகத்திலிருந்த பலரும் அவனது மாமாவைக் கண்டித்தார்கள்.

ஆனால் அவரோ “வேலையைப் போட்டுட்டு இங்கே உட்கார்ந்து பொஸ்தகம் படிச்சிட்டு இருந்தா சோறு யாரு போடுறது. நீங்க போடுவீங்களா“ என்று கேட்டார்

“அதுக்காக லைப்ரரியில வந்து அடிப்பீங்களா“ என ஒருவர் கோபமாகச் சொன்னார்

“இவன் பண்ற தப்புக்கு கண்ட நாய்கள் கிட்ட நான் பேச்சு கேட்க வேண்டிகிடக்கு“ என்று அந்தப் பையனை இன்னொரு முறை அடித்தார் அவனது மாமா.

அவன் மரபெஞ்சை விட்டு வரமாட்டேன் என்பது போல இறுக்கமாகப் பிடித்துக் கொண்டிருந்தான். அவர் எவ்வளவு இழுத்தாலும் அவன் பிடியை விலக்கிக் கொள்ளவில்லை

“ஸ்கூல்ல பெயிலா போனா நாயி, இப்போ படிச்சி என்ன கிழிக்கப் போறே. ஒழுங்கா வேலை செய்யத் துப்பில்லை. நீ எல்லாம் படிச்சி என்ன கலெக்டர் ஆகப்போறயா“ என்று மாமா திட்டிக் கொண்டிருந்தார்

“நீங்க போங்க மாமா நான் வர்றேன்“ என்று அந்தப் பையன் தலைகவிழ்ந்தபடியே சொன்னான்

“என் பேச்சை கேட்டு ஒழுக்கமாக வேலை செய்றதா இருந்தா பாரு. இல்லை ஊருக்கு ஒடிப்போயிரு“. என்று மிரட்டியபடியே அவர் விடுவிடுவென வெளியேறிப் போனார்

அடிவாங்கிய போதும் அந்தப் பையன் உடனே நூலகத்தை விட்டு வெளியேறிப் போகவில்லை. தான் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை நூலகரிடம் ஒப்படைத்துவிட்டு எதுவும் நடக்காதவன் போல வெளியேறிப் போனான்.

அந்தப் பையனுக்குப் பதினைந்து வயதிருக்கக் கூடும். அவன் பெயர் துரை. ஐஸ் பாக்டரி ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்தான். அவன் வயதை ஒத்த பல சிறுவர்கள் அந்தப் பேக்டரியில் வேலை செய்து கொண்டிருந்தார்கள். சிலர் ஐஸ் வண்டிகளை வீதி வீதியாகத் தள்ளிக் கொண்டு போய் விற்பனை செய்வதும் வழக்கம்.

பள்ளிக்கூடத்தில் 11 மணிக்கு இண்டர்வெல் விடுவார்கள். அந்த நேரத்தில் ஐஸ் விற்பவர்கள் நுழைவாசலில் வந்து நிற்பது வழக்கம். நல்ல விற்பனை நடக்கும். அதற்குள் கப் ஐஸ், சேமியா ஐஸ், பால் ஐஸ் என ரகத்திற்கு ஐம்பது வீதம் பெட்டியில் போட்டு தயார் செய்து ஐஸ் விற்பவர்களை அனுப்பி வைக்க வேண்டும். அது தான் துரையின் முக்கியமான வேலை. அவர்கள் திரும்பி வரும்வரை சற்று ஒய்வு கிடைக்கும்.

அந்த நேரத்தில் துரை நூலகத்திற்கு வந்துவிடுவான். விருப்பமான புத்தகம் ஒன்றை எடுத்துக் கொண்டு ஒரமாக உட்கார்ந்து படிப்பான். அடிக்கடி அவன் கண்கள் கடிகாரத்தை ஏறிட்டபடியே இருக்கும். நூலகமே காலை 11.30 மணிக்கு மூடிவிடுவார்கள். ஆகவே அதுவரை படித்துக் கொண்டிருப்பான். சில நாட்கள் அவனைத் தேடி ஐஸ் பேக்டரியின் உரிமையாளராக இருந்த அவனது மாமா வந்துவிடுவார். அவருக்குப் புத்தகம் படிப்பதே பிடிக்காது. அதைவிடவும் வேலையைப் போட்டுவிட்டு இப்படி வந்து படிக்கிறானே என்ற ஆத்திரம் மேலோங்கியிருக்கும்

இரண்டு மூன்று முறை அவர் நூலகத்திற்குள் நுழைந்து துரையை அடித்து இழுத்துக் கொண்டு போன பிறகு, அந்த ஆளை உள்ளே விடக்கூடாது என்று நாங்கள் நூலகரிடம் புகார் செய்தோம்

“அது எப்படி அவரை உள்ளே விடமுடியாதென்று சொல்லமுடியும். இது பப்ளிக் லைப்ரரி. யார் வேணும்னாலும் வரலாம் “ என்றார் நூலகர்

“அந்த ஆள் படிக்கவா வருகிறார். படிக்கிற பையனை அடிச்சி இழுத்துட்டு போறார். பாவம் அந்தப் பையன். நீங்க நடவடிக்கை எடுக்கலைன்னா. நான் போலீஸ்ல கம்ப்ளெயிண்ட் பண்ணிடுவேன்“ என்றார் ஒரு வாசகர்

“அந்த பையன் இனிமேல் மேலே உட்கார்ந்து படிக்கட்டும். கிழே இருந்தால் தானே அந்த ஆள் அடிச்சி இழுத்துட்டு போறார், மேல வந்தா நாங்க பாத்துகிடுறோம் “ என்றார் நூலகர்

அதன்பிறகு அந்தப் பையன் படிப்பதற்காகப் புத்தக அடுக்குகளை ஒட்டியே ஒரு மரநாற்காலியை போட்டார்கள். துரை மிகுந்த கூச்சத்துடன் அதில் அமர்ந்து படிக்கத் துவங்கினான். அப்படியும் அவனது மாமா தேடி வராமல் இல்லை. இந்த முறை அவர் தனியே வரவில்லை. துணைக்கு ஒரு ஆளை கூட்டிக் கொண்டு வந்திருந்தார்

அவர்கள் நூலகரிடம் வாக்குவாதம் செய்தார்கள். நூலகரை மிரட்டினார்கள். நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஐஸ் பேக்டரி ஆள் மீது போலீஸில் புகார் கொடுப்பது என்று முடிவு செய்தோம்.

கோபத்தில் துரையின் மாமா கத்தினார்

“அவன் புஸ்தகம் படிச்சி என்ன செய்யப்போறான் அதைச் சொல்ல சொல்லுங்க“

துரை பதில் சொல்லவில்லை. அமைதியாக நின்றிருந்தான்.

“பெயிலாப் போயி ஊர்ல இருந்த பையனுக்கு வேலை கொடுத்து சோறு போட்டு வீட்ல வச்சிருக்கிறது என் தப்பு. சொந்தக்கார பையனு நினைச்சா. இப்படிக் கிறுக்குப் பிடிச்சி திரியுறான். இந்த லைப்ரரிக்கு வர்ற வரைக்கு இவன் உருப்பட மாட்டான்“ என்று மாமா கோபத்தில் கத்திக் கொண்டிருந்தார்

உடன் வந்தவர் நூலகரிடம் அந்தப் பையனை இனி நூலகத்திற்குள் அனுமதிக்கக் கூடாது என்று கறாராகச் சொல்லிக் கொண்டிருந்தார்

அந்தப் பையனுக்காக நாங்கள் பரிந்து பேசினோம். துரை புத்தகங்களை வெறித்துப் பார்த்தபடியே இருந்தான். இவனைப் போல எத்தனையோ பேர் புத்தகம் படிப்பதற்காக வீட்டில் திட்டுவாங்கியிருக்கிறார்கள். அவமானப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். யாருக்கும் தெரியாமல் ஒளித்துப் படித்திருக்கிறார்கள். எல்லோர் கைகளுக்கும் புத்தகம் எளிதாகச் சென்று சேர்ந்துவிடவில்லை.

“துரைக்கு வாரம் ஒருநாள் விடுமுறை கொடுத்து நூலகத்திற்குப் படிக்க அனுப்பி வைக்கலாமே“ என்றுகூட நூலகர் யோசனை சொல்லிப் பார்த்தார். அவனது மாமா கேட்கவில்லை.

ஆனால் அதன்பிறகு அந்தப் பையன் நூலகத்திற்கு வரவில்லை. ஒவ்வொரு முறை ஐஸ் பாக்டரியை தாண்டிப் போகையிலும் துரை கண்ணில் படுகிறானா என்று பார்ப்பேன். அவனைப் பார்க்க முடியவில்லை. ஒருவேளை வேலையை விட்டு நீக்கப்பட்டிருப்பான். அல்லது ஊரைவிட்டுப் போயிருப்பான்.

துரையைப் போல ஹோட்டல்களில், பேக்டரியில். கடைகளில் வேலை செய்தபடியே கிடைக்கும் நேரத்தில் புத்தகம் படிக்க ஆசைப்படும் பலர் இருக்கிறார்கள். அவர்கள் போராடியே படிக்கிறார்கள்.

ஒரு முறை உடுப்பி ஹோட்டல் சர்வர் ஒருவர் என் கையிலிருந்த பள்ளிகொண்டபுரம் நாவலைப் பார்த்துவிட்டு நீல.பத்மநாபனோட தலைமுறைகள் படிச்சிருக்கேன் சார். இது லைப்ரரியில் இருக்கா என்று ஆசையாகக் கேட்டார்.

படிக்க ஆசைப்படுகிறவர்களுக்குப் பணம் கிடைப்பதில்லை. அனுமதி கிடைப்பதில்லை. நேரமிருப்பதில்லை. ஆனால் பணமிருக்கிறவர்களுக்கோ படிக்க விருப்பமேயில்லை. இது தான் வாழ்க்கையின் முரண்.

பள்ளியில் பெயிலாகிப் போனால் வாழ்க்கை அத்தோடு முடிந்து போய்விடுவதில்லை. வேறு பாதைகள் இருக்கின்றன. வேறு வழியில் வெற்றியை அடைய முடியும். கல்லூரி போய்ப் படிக்கமுடியாமல் போன எத்தனையோ பேர் சொந்த முயற்சியால் தொலைதூரக் கல்வி மூலம் பட்டம் பெற்று நல்லவேலைக்குச்சென்றிருக்கிறார்கள். சிவில் சர்வீஸ் எழுதிப் பாஸ் செய்தவர்களுக்கும் இருக்கிறார்களே.

துரைக்குத் தன் வயதை ஒத்த மற்ற பையன்களைப் போல ஊர் சுற்றுவதில் விருப்பமில்லை. அவன் தன்னை வளர்த்துக் கொள்ள விரும்பினான். சிற்றூர்களில் பிறந்தவர்களுக்குப் புத்தகமும் கல்வி நிலையங்களும் தானே துணை. படிப்பால் மட்டுமே உலகை வெல்ல முடியும்.

குழந்தை தொழிலாளர்களுக்கு எவ்வளவோ சட்டங்கள் இயற்றப்பட்டுவிட்டன. ஆனால் அவர்களை வேலைக்கு வைப்பதை நிறுத்த முடியவில்லை. பணியிடத்தில் அவர்கள் மிக மோசமாகவே நடத்தப்படுகிறார்கள். எழுத்தாளர் சார்லஸ் டிக்கன்ஸ் இதுபோன்ற குழந்தை தொழிலாளர்களுக்கு நடக்கும் ஒடுக்குமுறைக்கு எதிராக எழுதினார். அவரது நாவல் அடைந்த வெற்றிக்குப் பின்பே இங்கிலாந்தில் சட்டம் இயற்றப்பட்டது.

புத்தகம் படித்து என்ன ஆகப்போகிறது என்ற கேள்வி துரையை நோக்கியது மட்டுமில்லை. வாசிப்பில் ஆர்வம் கொண்ட அனைவரும் அந்தக் கேள்வியை என்றாவது எதிர்கொண்டிருப்பார்கள்.

ஏன் துரை பதில் சொல்லவில்லை. அவன் என்ன பதில் சொல்லியிருந்தாலும் அது கேலி செய்யப்பட்டேயிருக்கும். புத்தகம் இசை ஓவியம் என எந்தக் கலையில் ஆர்வம் கொண்டிருந்தாலும் உலகம் இதே கேள்வியைக் கேட்கவே செய்யும். பதில் சொல்லி உலகின் வாயை மூடிவிட முடியாது. தண்ணீர் மற்றும் சூரிய ஒளியின் உதவியால் கண்ணுக்குத் தெரியாமல் தாவரங்கள் வளர்ந்து கொண்டேயிருக்கின்றன. அப்படி வாசிப்பில் நீங்கள் கொள்ளும் ஆர்வம் உங்கள் ஆளுமையை வளர்த்தெடுக்கவே செய்யும்.

உனக்குப் படிக்கத் தெரியாது என்றொரு புத்தகத்தை எழுத்தாளர் கமலாலயன் மொழியாக்கம் செய்திருக்கிறார். அமெரிக்காவில் வாழும் மேரி மெக்லியோட் பெத்யூன். என்ற கறுப்பினப் பெண் தன் நிறத்தின் காரணமாகக் கல்வி மறுக்கப்படுகிறாள். அவள் புத்தகம் படிக்கக்கூடாது என்று கண்டிக்கப்படுகிறாள்.

சிறு வயதில் அவளிடமிருந்து பறிக்கப்பட்ட புத்தகம் வாழ்நாள் முழுவதுக்குமான கனவை அவளுக்குள் உருவாக்குகிறது. கறுப்பினக் குழந்தைகளுக்காக ஒரு பள்ளியை உருவாக்கியே தீருவது என்று மேரி முடிவு செய்கிறாள். இதற்காகப் போராடுகிறாள். முடிவில் பள்ளி ஒன்றைத் துவக்குகிறாள். கறுப்பினப் பெண்களின் கைகளுக்குப் புத்தகம் வந்து சேருகிறது. மேரியின் குரல் கல்வி மறுக்கப்பட்ட சமூகங்களின் குரலாகவே ஒலிக்கிறது

ஒருவேளை நூலகத்திலிருந்து அடித்து வெளியேற்றப்பட்ட துரை தன் அனுபவத்தை எழுதினால் அதுவும் மேரியின் குரல் போலவே ஒலிக்கும்.

••

0Shares
0