நூலக மனிதர்கள் 20 புத்தகங்களுக்கு நடுவே

பல்லாயிரம் புத்தகங்களுக்கு நடுவே இருந்தாலும் ஒரு சில நூலகர்களே புத்தக வாசிப்பில் தீவிர ஆர்வம் கொண்டிருக்கிறார்கள். பலருக்கும் அது ஒரு வேலை மட்டுமே.

ஆனால் தனது வேலையும் பார்த்துக் கொண்டு கிடைக்கும் நேரத்தில் படித்துக் கொண்டும் இருக்கக் கூடிய சிவானந்தம் போன்ற நூலகர் இருக்கத் தானே செய்கிறார்கள்

சிவானந்தம் நிறையப் படிக்கக் கூடியவர். யாராவது ஏதாவது கேட்டால் உடனே அந்த எழுத்தாளரைப் பற்றியும் அவர் எழுதிய முக்கியமான புத்தகங்களைப் பற்றியும் சொல்லுவார். ஒருவரிடமும் ஒரு வார்த்தை கோபமாகப் பேச மாட்டார்.

புத்தக அடுக்குகளுக்கு நின்று தேடுவதில் கால்வலி உருவாகிறது என்பதால் முக்காலிகள் போடும் வசதியை அவரே துவக்கி வைத்தார். அதில் அமர்ந்து கொண்டு கீழ்வரிசையில் உள்ள புத்தகங்களைத் தேடிப்பார்க்கலாம்.

நூலகம் முடிந்து வீடு திரும்பும் போது அவரும் ஒரு புத்தகம் எடுத்துக் கொண்டு போவார். மதிய ஓய்வு நேரங்களில் கூடப் படித்துக் கொண்டு தானிருப்பார்.

பொது நூலகத்தின் முக்கியப் பிரச்சனைகளில் ஒன்று அரசியல் பேசுவது. அதில் உருவாகும் வாக்குவாதம். அன்றாடம் யாராவது ஒருவர் பேப்பரில் வெளியான அரசியல் செய்தியைப் படித்துவிட்டு வம்பு வளக்கத் துவங்கிவிடுவார். சில நாட்கள் இது பெரிய பிரச்சனையாக வளர்ந்துவிடும். சம்பந்தப்பட்ட கட்சியைச் சேர்ந்தவர்கள் நூலகத்திற்கு வந்து சண்டையிடுவார்கள். அது போன்ற நேரங்களில் சிவானந்தம் அவர்களை அமைதிப்படுத்தி எந்தச் சண்டையும் சச்சரவும் இன்றி அனுப்பி வைப்பார்.

அத்தோடு ஒரு பணியாளரைச் செய்தித் தாள் படிக்கும் பகுதியிலே அமரச் செய்து யாராவது வம்புப் பேச்சைத் துவக்கினால் உடனே தடுத்து நிறுத்தும்படி செய்தார்.

நூலகராக வேலை செய்தபடி சிறந்த எழுத்தாளர்களாக இருந்த சிலரை அறிவேன். பிலிப் லார்கின் என்ற புகழ்பெற்ற கவிஞர் நூலகராக இருந்தவர். அர்ஜென்டினாவின் புகழ்பெற்ற இலக்கிய ஆளுமை போர்ஹெஸ் நூலக இயக்குநராக இருந்தார். Giacomo Casanova, Angus Wilson, August Strindberg Archibald MacLeish, Roberto Juarroz, Daniel J Boorstin, Mary Ann Shaffer, Per Petterson போன்ற எழுத்தாளர்களும் நூலகராக இருந்தவர்களே.

இதில் போர்ஹெஸ் கண்பார்வையற்றவர். லட்சக்கணக்கான புத்தகங்கள் கொண்ட அர்ஜென்டினா தேசிய நூலகத்தின் இயக்குநராகப் பணியாற்றினார். ஆயிரமாயிரம் புத்தகங்களையும் கொடுத்து தன் பார்வையைப் பறித்துக் கொண்டது எவ்வளவு முரண் என்று போர்ஹெஸ் எழுதியிருக்கிறார். பார்வையற்ற போதும் அவர் தீவிரமாகப் படித்தார். அவருக்கென உதவியாளர் இருந்தார். அவரின் உதவியோடு விரும்பிய புத்தகங்களை எல்லாம் படிக்கச் சொல்லிக் கேட்டார். இந்தியாவிற்கு ஒருமுறை கூட வந்திராத போர்ஹெஸ் இந்தியா பற்றிச் சிறப்பான சிறுகதையை எழுதியதற்கு அவரது படிப்பே காரணம்.

சிவானந்தம் புத்தகம் படிப்பதில் ஆர்வமாக இருந்ததோடு நூலகத்திற்கு வருபவர்களில் யார் யார் எந்த எழுத்தாளரை விரும்பிப் படிக்கிறார்கள். எந்தத் துறை சார்ந்து ஆர்வம் கொண்டிருக்கிறார்கள் என்பதை நன்றாக அறிந்து வைத்திருந்தார். ஆகவே அவர்களுக்குத் தேவையான புத்தகம் இரவல் சென்று திரும்பி வந்தால் தனியே எடுத்து வைத்திருப்பார். அந்த வாசகர் நூலகத்திற்கு வரும்போது அதைக் கையில் கொடுத்துச் சந்தோஷப்படுத்துவார்.

தாமதமாக ஒப்படைக்கப்படும் நூல்களுக்கு அபராதம் செலுத்தவேண்டும். ஆனால் சிவானந்தம் அதில் கறாராக இருக்கமாட்டார். ஒன்றிரண்டு முறை எச்சரிக்கை தருவதுடன் விட்டுவிடுவார். மாணவர்களாக இருந்தால் ஒரு போதும் தாமதக் கட்டணம் கேட்கமாட்டார்.

ஏழை எளியவர்கள் வேண்டுமென்றே காலதாமதம் செய்வதில்லை. அவர்களுக்குப் படிக்க நேரம் கிடைக்காது. அவர்களிடம் போய் இரண்டு ரூபாய் மூன்று ரூபாய் எப்படி அபராதம் போடுவது என்று சொல்லுவார்.

ஒரு நாள் அரசுப்பள்ளியைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் நூலகத்திற்கு வந்து உறுப்பினராக வேண்டும் என்றார்கள். மாணவர்கள் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் ஒரு கடிதம் வாங்கி வரவேண்டும். ஐந்து ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால் அவர்கள் கடிதம் கொண்டுவரவில்லை. ஆளுக்கு ஒரு ரூபாய் மட்டுமே வைத்திருந்தார்கள். மீத பணத்தைத் தானே போட்டுக் கட்டுகிறேன் என்று அவர்களை நூலக உறுப்பினர்களாக்கியதோடு அடுத்த முறை வரும்போது கடிதம் வாங்கிக் கொண்டு வரச் சொன்னார். அவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.

நூலகத்திற்கு வரும் வணிகர்களிடம் பேசி ஆண்டுக்கு ஒருமுறை மேஜை நாற்காலிகள் கொடையாகப் பெற்றுவிடுவார். நூலகத்தைச் சுத்தமாக வைத்துக் கொள்வது, நேரம் தவறாமல் செயல்படுவது என்பதில் தனிக்கவனம் செலுத்தி வந்தார்

அவரது மேஜையை ஒட்டி சுவரில் சிறிய அறிவிப்புப் பலகை போல ஒன்றை வைத்திருப்பார். அதில் ஒவ்வொரு நாளும் எந்த எழுத்தாளர்கள் பிறந்தார்கள். எவரது நினைவு நாள் என்பதைத் தவறாமல் எழுதி வைப்பார். நூலகத்திற்கு வரும் பலரும் அதை வாசித்துப் போவார்கள்.

ஒருமுறை பொதுப்பணித்துறையில் பணியாற்றும் என்ஜினியர் ஒருவர் தன் பையனை நூலகத்திற்கு அழைத்துக் கொண்டு வந்திருந்தார்.

அந்தப் பையன் ஒரு கதை எழுதியிருப்பதாகச் சொல்லி அதைச் சிவானந்தம் முன்பாக நீட்டினார்

“உன் பேரு என்ன தம்பி. என்ன படிக்கறே“ என்று கேட்டார் சிவானந்தம்

“ஆறாம் வகுப்புப் படிக்கிறேன். என் பேரு ரவிசங்கர்“

“கதை எழுதுற ஆர்வம் எப்படி வந்துச்சி“

“அப்பா நிறையக் கதை சொல்லுவார். நானே கதை புக் படிப்பேன்.“

“ரொம்பச் சந்தோஷம். இது தான் நீ எழுதுன முதல்கதையா“

“ஆமாம்“ என்று தலையாட்டினான் அந்தப் பையன

“ குடுத்துட்டு போங்க. ஒய்வா இருக்கும் போது படிச்சிட்டு சொல்றேன்“ என்றார்

மறுநாள் அந்தக் கதையைப் படித்துவிட்டு நன்றாக இருப்பதாகச் சொன்னதோடு தன் செலவிலே அதைக் கோகுலம் இதழுக்குத் தபாலில் அனுப்பியும் வைத்தார். அடுத்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு ரவிசங்கரின் கதை கோகுலத்தில் வெளியாகியிருந்தது.

ரவிசங்கரும் அவனது தந்தையும் நூலகத்திற்கு வந்து மிகுந்த மகிழ்ச்சியோடு நன்றி சொன்னார்கள்

“நம்ம லைப்ரரியிலே இப்போ ஒரு ரைட்டர் வந்துட்டார். தம்பி நிறையப் படிக்கணும். பெரிய எழுத்தாளரா வரணும்“ என்று ஆசி கொடுத்தார்.

அதன் பிறகு ரவிசங்கர் தன் தந்தையுடன் அடிக்கடி நூலகம் வரத் துவங்கினான். புதிதாகக் கதை எழுதினால் அதை நூலகரிடம் தான் முதலில் வாசிக்கத் தருவான். வாரமலரில் கூட அவனது ஒரு கதை வெளியாகியிருந்தது.

ரவிசங்கரின் அப்பாவிற்கு வேலை மாறுதலாகி அவர்கள் பரமக்குடி போவதற்கு முன்பு நூலகத்திற்கு வந்திருந்தார்கள்

“எழுதுறதை ஒரு போதும் கைவிடக்கூடாது, “ என்று ரவிசங்கரிடம் மீண்டும் வலியுறுத்தி அனுப்பி வைத்தார்.

ரவிசங்கர் என்ன ஆனான் என்று எனக்குத் தெரியாது. ஆனால் புதிதாக எழுத ஆரம்பிப்பவர்களுக்குச் சிவானந்தம் போன்றவர்கள் காட்டும் அன்பும் அக்கறையும் பெரும் உத்வேகத்தைக் கொடுக்கும் என்பதை அறிவேன். புத்தகங்கள் உருவாக்கிய அகத்தூண்டுதல்கள் வாழ்நாள் முழுவதும் தொடரக்கூடியவை. தேவாலயத்தின் வண்ணக்கண்ணாடியில் பட்டு ஒளி விநோத கோலம் கொள்வது போல ஒரு புத்தகத்தின் வழியே எளிய விஷயங்கள் கூட பேரழகு மிக்கதாக மாறிவிடுகின்றன. ஒரு புத்தகத்தின் குறிப்பிட்ட சில பக்கங்கள் யாரோ ஒரு நெருக்கமான வாசகனுக்கு ஒளிரத் துவங்கிவிடுகின்றன. சொற்களின் வழியே அவன் மாயப்பயணம் ஒன்றை நிகழ்த்தத் துவங்கிவிடுகிறான் என்பதே நிஜம்.

ஜெயகாந்தன் மீது பெருமதிப்புக் கொண்டிருந்த சிவானந்தம் எப்படியாவது நூலகத்திற்கு அவரை ஒருமுறை அழைத்து வந்து பேச வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

இதற்காகவே சென்னை சென்று ஜெயகாந்தன் அவர்களை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்திருக்கிறார்

“சந்தோஷமா கலந்துகிடுறேன். ஆனால் இப்போ முடியாது. ஆகஸ்ட் செப்டம்பர்ல பாக்குறேன்“ என்று ஜெயகாந்தன் சொன்னதும் அவருக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை

நூலகத்திற்குத் திரும்பி வந்து நமது நூலகத்திற்கு ஜேகே வரப்போகிறார் என்று சொல்லிக் கொண்டேயிருந்தார். அதைவிடவும் ஜெயகாந்தனை நேரில் சந்தித்துப் பேசியதை அவரால் மறக்கவே முடியவில்லை. நூலகத்திற்கு வருகிறவர்களை ஜெயகாந்தனைப் படியுங்கள் என்று ஆசையாகப் படிக்க வைத்தார்

ஒரு நாள் அவருக்கு இடமாறுதல் உத்தரவு வந்திருந்தது. நாங்கள் தான் அவரைப் போன்ற நூலகர் இடம் மாறிப் போகிறாரே என்று வருத்தம் அடைந்தோம். அவரோ எங்கே போனாலும் இதே புத்தகங்களுடன், புத்தகம் படிப்பவர்களுடன் தானே இருக்கப்போகிறேன் என்று சொன்னார்.

ஆனால் அவர் மனதில் தன் பணிக்காலத்தில் ஜெயகாந்தனை அழைத்து வரமுடியவில்லையே என்ற ஒரே ஆதங்கம் மட்டுமே இருந்தது.

சிவானந்தம் மாறுதலாகிப் போனதும் வேறு ஒரு புதிய நூலகர் பதவி ஏற்றுக் கொண்டார். அவர் ஒரு சிடுமூஞ்சி. எதற்காக நூலகத்தைத் திறந்து வைக்கிறார்கள் என்ற எரிச்சலுடன் தான் பணிக்கு வருவார். காலை 11:20 ஆனதும் வெளியே போகும்படி குரல் கொடுக்க ஆரம்பித்துவிடுவார். எந்தப் புத்தகத்தைக் கேட்டாலும் இல்லை என்று தான் சொல்லுவார். அதைவிடவும் சிவானந்தம் உருவாக்கி வைத்த எழுத்தாளர்களின் பிறந்தநாள் பற்றிய அறிவிப்புப் பலகையை அப்படியே கழட்டி மூலையில் கொண்டு போய்ப் போட்டுவிட்டார்.

புதிய நூலகரின் கெடுபிடியான நடத்தை ஒவ்வொரு நாளும் சிவானந்தத்தை நினைவு கொள்ளச் செய்தது.

இருபது ஆண்டுகளுக்குப் பிறகு ஒருமுறை அவரைச் சென்னையில் பார்த்தபோது தான் ஓய்வு பெற்றுவிட்டதாகவும் இப்போது தனியார் கல்லூரி ஒன்றில் நூலகராக வேலை செய்வதாகவும் சொன்னார்.

அவரைப் போன்றவர்களுக்குப் புத்தகமில்லாமல் வாழ்க்கையில்லை.

ஒவ்வொரு நூலகத்திலும் எழுதப்படாத இது போன்ற நூறு கதைகள் மறைந்திருக்கின்றன. சிவானந்தம் போல மறக்கமுடியாத மனிதர்களும் அதோடு இணைந்திருக்கிறார்கள்.

**

0Shares
0