பகலில் எரியும் விளக்கு

தாய் தந்தையை நினைவு கொள்வதற்குக் கட்டுரை தான் சிறந்த வடிவம். கதையில் அவர்களை இடம்பெறச் செய்தால் உணர்ச்சிப்பூர்வமாகி விடுகிறார்கள். இயல்பை விட அதிகமாகவோ, குறையாகவோ சித்தரிக்கபட்டு விடுகிறார்கள். கவிதையில் இடம்பெற்றாலோ அரூபமாகிவிடுகிறார்கள். கவிதையில் இடம் பெறும் அன்னை கவிஞனின் அன்னையாக மட்டும் இருப்பதில்லை. இலக்கிய வடிவம் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட உறவினை மட்டுமே சரியாகக் கையாளுகிறது. வெளிப்படுத்துகிறது என்பது எனது எண்ணம்.

மனிதர்கள் எதை, எப்போது, எதற்காக நினைவு கொள்கிறார்கள் என்பது விநோதமானது. இறந்து போன தனது கணவரின் கைக்கடிகாரத்தைக் கட்டிக் கொண்டு பள்ளிக்குச் செல்லும் டீச்சருக்கு அவள் கையில் கட்டியிருப்பது வெறும் கடிகாரமில்லை.

இது போலக் கொடியில் காய்ந்து கொண்டிருக்கும் கட்டம் போட்ட பச்சைசட்டை ஒருவரை பல வருஷங்களுக்குப் பின்னே கொண்டு போய்விடுகிறது. குயிலின் குரலைக் கேட்கும் போதெல்லாம் மதியானத்திற்குப் போய்விடும் ஒருவரை நான் அறிவேன். இப்படி நினைவுகளுக்குள் அலைந்தபடியே இருப்பவர்கள் அதன் வழியாக நிகழ்வாழ்வை கடந்து செல்கிறார்கள். ஒவ்வொரு மனிதனும் காலத்தினுள் திரும்பிச் செல்வதற்கான பாதை ஒன்றை தானே கண்டுபிடித்து வைத்திருக்கிறான்.

சிறுகதைகள். நாவல் போலக் கவிதை நினைவுகளைத் தொகுப்பதில்லை. அடுக்கி உருவம் கொடுப்பதில்லை. மாறாக நினைவுகளைக் கலைத்துப் போடுகிறது. எதில் நினைவு இணைக்கபட்டிருக்கிறதோ அதிலிருந்து விடுபடச் செய்து காலமற்ற ஒன்றாக மாற்ற முற்படுகிறது. அதில் வெற்றியும் பெறுகிறது.

வரலாறு எனும் நினைவுகளின் பள்ளதாக்கின் மீது பறவையாகக் கடந்து போகிறது கவிதை. கவிதையின் வேலை நினைவுபடுத்துவது தான். ஆனால் குறிப்பிட்ட ஒன்றை மட்டும் நினைவுபடுத்துவதில்லை. மாறாக விளக்கை ஏற்றிவைத்தவுடன் இருட்டிலிருந்த எல்லாப் பொருளும் தெரிந்துவிடுவது போலக் கவிதை எழுப்பும் நினைவு அறியாத எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள வைத்துவிடுகிறது.

இஸ்ரேலின் முக்கியக் கவிஞர் எஹுதா அமிகாய். ஹீப்ருவில் எழுதப்பட்ட அவரது கவிதைகள் 40 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன

இந்த வருஷம் அவரது நூற்றாண்டு துவங்கியுள்ளது. உலகெங்கும் அவரது கவிதைகள் குறித்துப் பேசுகிறார்கள். கூடி வாசிக்கிறார்கள். பல்கலைகழகங்களில் அவருக்கான கருத்தரங்குகள் நடக்கின்றன. அவர் பிறந்த ஜெர்மனியில் அவரது நினைவைப் போன்றும் மலர் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள்.

??????????

அவரது கவிதைகளை விரும்பி வாசிக்கிறவன் என்ற முறையில் மானசீகமான அவரது நூற்றாண்டு நிகழ்வை எனக்குள் நிகழ்த்திக் கொண்டேன். அதாவது அவரது கவிதைகளை வாசிப்பது. அது குறித்து நண்பர்களுடன் பேசுவது. அந்த மகிழ்ச்சியைப் பலருக்கும் பகிர்ந்து கொள்வது.

கேலிசித்திரம் வரைகிறவர்கள் எவரது தோற்றத்தையும் நேரடியாகச் சித்தரிப்பதில்லை. உருவத்தை மாற்றிவிடுவார்கள். அப்படியான முயற்சியைத் தான் எஹுதா அமிகாய் தனது கவிதையில் மேற்கொள்கிறார்.

அவரது அன்னையும் தந்தையும் கவிதையில் தொடர்ந்து இடம்பெறுகிறார்கள். ஒரு கவிதையில் தனது அன்னையை நினைவுகூறும் போது காற்றாலை போல நான்கு கைகள் கொண்டவர் என்கிறார்.

காற்றால் சுழலும் இறக்கைகளைப் போலக் குடும்பம் தான் அவரைச் சுழல வைக்கிறது. அன்றாடத்திற்கான இரண்டு கைகளும் அதற்கு அப்பால் உள்ளவற்றைக் கையாளும் இருகைகளும் அவருக்கு உள்ளன.

வேறு கவிதை ஒன்றில் அவரது அன்னை ஒரு தீர்க்கதரிசி. ஆனால் தான் ஒரு தீர்க்கதரிசி என அறியாதவர் என்றும் சொல்கிறார். அது உண்மையே எல்லா அன்னையும் தீர்க்கதரிசிகளே. அவர்களே நமக்கு உலகத்தைச் சமைத்துக் கொடுக்கிறார்கள். கண்டித்தும், அன்பு காட்டியும் உலகின் இயல்பை. உறவின் உண்மைகளைப் புரிய வைக்க முயலுகிறார்கள். அதில் கொஞ்சமே வெற்றியடைகிறார்கள். நெற்றியில் வைக்கப்பட்ட அன்னையின் கை பிள்ளையின் உடல்நலத்தை அறிந்து கொள்கிறது. சப்தமில்லாமல் பிரார்த்தனை செய்கிறது.

அமிகாய் தனது அன்னையினைப் பற்றி நிறைய எழுதியிருக்கிறார். அது அவரது அன்னையை மட்டும் குறிக்கவில்லை. முதுமையில் நோயுற்ற நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்த அம்மா தனது கையில் அணிந்திருந்த திருமண மோதிரத்தை அகற்ற விரும்புகிறார். அந்த விரல் வீங்கிக் கொண்டு வலிக்கிறது.

அதைத் தானே அகற்றுவதில்லை. அதற்குப் பிள்ளைகளிடம் அனுமதி கேட்கிறார். பிள்ளைகள் மோதிரத்தை திருகிக் கழட்ட முயலுகிறார்கள். மோதிரத்தைத் தேய்த்தால் அற்புதம் நடக்கும் என்பார்களே. அப்படி எந்த அற்புதமும் அங்கே நடக்கவில்லை என்கிறார் அமிகாய்.

முடிவில் மருத்துவர் அந்த மோதிரத்தை துண்டிக்கிறார். அப்போது அம்மா சிரிக்கிறார். பின்பு எதையோ நினைத்துக் கொண்டது போல அம்மா அழுகிறார். இரண்டையும் நிறைவாகச் செய்கிறார்.

கவிதையில் இடம்பெற்ற இந்தக் காட்சி அப்படியே ஒரு சிறுகதை. அம்மா தனது மோதிரத்தை மட்டும் கழற்றவில்லை. திருமண உறவு ஏற்படுத்திய இறுக்கத்திலிருந்தும் விடுபடுகிறார்.

அந்தக் கவிதையின் இறுதியில் அம்மா பாஸ்போர்ட்டிற்காக ஒரேயொரு புகைப்படம் எடுத்துக் கொண்டார். ஆனால் எந்த வெளிநாட்டிற்கும் சென்றதில்லை, அந்த ஊரில் இறப்புச் சான்றிதழில் போட்டோ கேட்க மாட்டார்கள் என்று கவிதை முடிகிறது.

புகைப்படம் என்பது நினைவின் புறவடிவம். பிறரால் காண முடிகிற நினைவு. ஆனால் அம்மாவின் அனுபவங்கள். கடந்து வந்த வாழ்க்கை. அதன் துயரங்கள் யாவும் அவருக்குள்ளே புதைந்துவிட்டிருக்கின்றன. உலகிற்கு அவர் வெளிக்காட்டியது குறைவே.

அது போலவே தனது தந்தையைச் சிறிய கடவுளாகச் சொல்கிறார். தந்தையின் விருப்பத்திற்கு எதிராக நடந்து கொண்ட மகனாக நடந்து கொண்ட போதும் அவர் தனது தந்தையை வெறுக்கவில்லை. புகார் சொல்லவில்லை. மாறாகப் பரிகாசத்துடன் அவரது அதிகாரத்தை விமர்சனம் செய்கிறார். குடும்பத்தில் வசிக்கும் சிறிய கடவுளின் வல்லமை அவ்வளவு தானே இருக்கும்.

எஹுதா அமிகாயின் தந்தை வீட்டின் கடவுளாக இருந்தாலும் கோபம் கொள்வதில்லை. ( கோபம் கொள்ளும் நேரங்களில் மட்டுமே கடவுள் மனிதரைப் போலிருக்கிறார். நடந்து கொள்கிறார்.) மோசஸின் பத்துக் கட்டளைப் போல அவரது தந்தையும் மகனுக்குப் பத்துக்கட்டளைகளை விதிக்கிறார். இடிமின்னல் எதுவுமில்லாமல் அந்தக் கட்டளைகளைப் பிறப்பித்தார் என்று அமிகாய் கேலியாகச் சொல்கிறார். பத்துக் கட்டளைகளுடன் கூட இரண்டு கட்டளைகளையும் அப்பா சேர்த்துக் கொண்டதையும் கேலி செய்கிறார்.

எஹுதா அமிகாய் கவிதையில் வரும் அன்னையும் தந்தையும் சிறுகதையில் வரும் கதாபாத்திரங்களைப் போல முழுமையாகக் காட்சி தருகிறார்கள். ஆனால் கவிதையில் இடம்பெறும் பெயரற்ற மனிதர்கள் போல உலகிற்குப் பொதுவாகவும் மாறிவிடுகிறார்கள்.

அமிகாய் தனது மகனைப் பற்றி எழுதிய கவிதையில் தந்தையாக நேரடியாக, தெளிவாகத் தந்தையின் கவலைகளை, வேதனைகளை, ஏக்கத்தை எழுதுகிறார். அங்கே அவர் அரூபமான தந்தையாக இல்லை.

அரசியல் கவிதைகளில் வெளிப்படும் அமிகாயும், அன்றாட வாழ்வினை பற்றி எழுதும் அமிகாயும் ஒருவர் தானா என வியப்பாக இருக்கிறது. ஆனால் இரண்டிலும் எதன்மீதும் அவர் வெறுப்பை, துவேசத்தை வெளிப்படுத்தவில்லை. மாறாகத் தனது நிலைப்பாட்டினையும் அதன் பின்னுள்ள நியாயத்தையும் தெளிவாக விளக்குகிறார்.

என் தந்தையின் நினைவு என்பது வேலை நாளுக்கான ரொட்டித் துண்டுகள் போல வெள்ளை காகிதத்தில் சுற்றப்பட்டிருக்கின்றன என்கிறார் அமிகாய். ஒரு மந்திரவாதி தனது தொப்பியிலிருந்து முயலை வெளியே எடுப்பதைப் போல எளிய தனது உடலிலிருந்து அப்பா தனது அன்பை வெளிப்படுத்தினார் என்பது அபாரமான வரி. தந்தை செய்யும் எளிய அற்புதங்கள் உணரப்படாதவை. அந்த அற்புதங்களை எப்படி நடத்தினோம் என அவருக்கே தெரியாது.

ஒரு கத்தி தன்னை நோக்கி வருவதையும் தனக்குள் புகுவதையும் பற்றி ஒரு ஆப்பிள் என்ன நினைக்கும் என்பதை அறிந்து கொள்ள நீங்கள் எஹுதா அமிகாயின் கவிதையை வாசிக்க வேண்டும். முதுமை கனத்த இரும்பு பொருளாக மாறிவிடுவதை உணர்ந்து கொள்வதற்கு அவரை நிச்சயம் படிக்க வேண்டும்.

எஹுதா அமிகாய் ஐந்து முறை நோபல் பரிசிற்குப் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறார். ஆனால் அரசியல் காரணங்களுக்காக நிராகரித்து விட்டார்கள். மொழிபெயர்ப்புகளின் மூலம் ஒரு கவிஞர் சர்வதேச அரங்கில் கவனம் பெறுவது என்பது சவாலானது. அதை வென்று காட்டியவர் அமிகாய்.

ஜெர்மனியில் ஒரு யூதக்குடும்பத்தில் பிறந்த அமிகாய் ஜெருசலேத்தில் வாழ்ந்தவர். ஜெருசலேம் என்பது நித்தியத்தின் கரையில் ஒரு துறைமுக நகரம் என்கிறார். தனது 11வது வயதில் 1936 இல் தனது குடும்பத்துடன் ஜெர்மனியில் இருந்து இஸ்ரேலுக்குக் குடிபெயர்ந்தார்.

இரண்டாம் உலகப் போரின் போது சில ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றியுள்ளார். ஹீப்ரு பல்கலைக்கழகத்தில் பயின்று சில வருடங்கள் ஆசிரியராக மேல்நிலைப் பள்ளிகளில் ஹீப்ரு கற்பித்திருக்கிறார்

பதினொரு கவிதைத் தொகுதிகள், இரண்டு நாவல்கள் மற்றும் ஒரு சிறுகதை புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.

சலிப்பூட்டுவதாகத் தோன்றும் தினசரி வாழ்க்கையை எஹுதா அமிகாய் தனது கவிதைகளின் வழியே வியப்பூட்டுகிறார். சல்லடை ஒன்றின் வழியே ஒளியைப் பரவ விடுகிறார் என்று அவரது கவிதைகளைச் சொல்லலாம். ஆமாம். சிறிய துளைகளின் வழியே ஒளி உருவம் கொள்வது எத்தனை அழகாக இருக்கிறது. கண்ணாடியின் முன்பாக நின்றபடி ஒருவர் தன்னைப் பார்த்துச் சிரித்துக் கொள்வது போன்ற ரகசிய சந்தோஷத்தை கவிதையின் வழியாக வெளிப்படுத்துகிறார்.

தனது பிறந்த நாளை பற்றிய அவரது நீண்ட கவிதை அபாரமானது. இவை அதிலுள்ள சில வரிகள்

நான் பிறந்தது 1924ல்.

ஒருவேளை ஒயினாக இருந்திருந்தால் அற்புதமான மதுவாகவோ அல்லது புளித்துப் போனதாகவோ இருந்திருக்கக் கூடும்.

ஒரு வேளை நாயாக இருந்திருந்தால் இந்நேரம் இறந்திருப்பேன்.

ஒரு புத்தகமாக இருந்திருந்தால் மிகுந்த மதிப்பு உள்ளதாகவோ அல்லது தூக்கி எறியப்பட்ட ஒன்றாகவோ இருந்திருக்கக் கூடும்.

ஒரு வனமாக இருந்திருந்தால் நான் இளமையாக இருந்திருப்பேன்,

ஆனால் ஒரு மனிதனாக நான் மிகவும் சோர்வாக இருக்கிறேன்.

••

மனிதனாக இருப்பது ஏன் ஒருவருக்குச் சோர்வளிக்கிறது. நினைவுகளால் வழிநடத்தப்படுவது ஒரு காரணம். நிகழ்காலத்தின் கைகள் தன்னைப் பகடையாக மாற்றி விளையாடுவது இன்னொரு காரணம். இப்படித் தெரிந்த, தெரியாத நிகழ்வுகளால் மனிதன் தொடர்ந்து அலைக்கழிக்கபடுகிறான். மனிதர்கள் மீது உலகம் ஏற்படுத்தும் காயங்களை இலக்கியமே ஆற்றுகிறது. கவிதைகள் தன்னுடைய இயல்பிலே மருந்தாக இருக்கின்றன. போர் ஏற்படுத்திய காயங்களை. வடுக்களைக் கவிதைகளே குணமாக்கியிருக்கின்றன. மறையச் செய்திருக்கின்றன.

தான் பிறந்த அதே ஆண்டில் வேறு வேறு இடங்களில். வேறு வேறு அன்னையருக்கு பிறந்த அனைவருக்குமாகப் பிரார்த்தனை செய்கிறார் அமிகாய். அவர்களைத் தனது சொந்த உறவாகக் கருதுகிறார். அது தான் கவியின் தனித்துவம்.

கடிகாரத்திற்குள் இல்லை காலம் என்றொரு கவிதை வரியை எழுதியிருக்கிறார் அமிகாய். கடிகாரம் காலத்தை அடையாளப்படுத்துகிறது. காலம் நமக்கு வெளியே ஒருவிதமாகவும் உடலுக்குள் இன்னொரு விதமாகவும் உணரப்படுகிறது. ஒவ்வொரு பொருளிலும் காலம் ஒருவிதமாகப் படிகிறது.

மணி காட்டும் கடிகாரத்தைப் போல நாட்களின் கடிகாரமாக நாமே மாறி விடுகிறோம். மனிதர்கள் உண்மையில் நடமாடும் கடிகாரங்கள் தான். இந்தக் கடிகாரத்தில் எண்கள் எழுதப்படவில்லை. ஆனால் தலையில் வெளிப்படும் நரை என்பது கடிகாரத்தின் மணிசப்தம் போலக் காலத்தின் குரலாகவே ஒலிக்கிறது.

தனக்கு விருப்பமான கிரேக்கக் கவிஞரை நினைவு கொள்ளும் கவிதை ஒன்றில் அவர் வெளியே மருத்துவராகவும் மனதிற்குள் கவிஞராகவும் இருந்தார் என்று அமிகாய் குறிப்பிடுகிறார். இது அப்படியே ஆன்டன் செகாவிற்குப் பொருந்தக்கூடியது. அவர் வெளியே மருத்துவராகவும் உள்ளே சிறுகதை ஆசிரியராகவும் இருந்தார்.

அதே கவிதையில் வேறு ஒரு தருணத்தில் அவர் உள்ளே மருத்துவராகவும் வெளியே கவிஞராகவும் இருந்தார் என்றும் அமிகாய் குறிப்பிடுகிறார். கண்ணாடியின் முன்பக்கம் பின்பக்கம் போன்ற நிலையாக இதைக் கருத முடியாது. பந்தின் முன்பக்கம் பின்பக்கம் போலப் பிரிக்கமுடியாத ஒன்றாகவே கருத வேண்டியுள்ளது.

இறந்த அரசரின் பெயருக்கு அடுத்ததாக

அவர் பிறந்த இறந்த வருஷத்தின் எண்கள்

ஒரு கோடு மட்டுமே அவற்றைப் பிரிக்கிறது.

என்றொரு கவிதையில் சொல்கிறார்.

பிறப்பு மற்றும் இறப்பிற்கு இடைப்பட்ட சிறிய கோடு தான் வாழ்க்கையா. அந்தக் கோட்டிற்குள் எவ்வளவு உண்மைகள் புதைந்திருக்கின்றன. அந்தக் கோடு மன்னரின் வாழ்க்கையை மட்டுமா சொல்கிறது. பிறப்பு இறப்பு இரண்டிற்கும் நடுவிலுள்ள அந்தச் சிறிய கோட்டின் விஸ்வரூபத்தைக் கவிதையே நமக்கு உணர்த்துகிறது. வாழ்வு குறித்த ஞானத்தை வெளிப்படுத்துகிறது.

சில நேரங்களில் ஒரு மனிதன்

எதையாவது எடுப்பதற்காகக் குனிகிறான்

அப்பொருள் அவன் கையிலிருந்து விழுந்தது,

அவன் நிமிரும் போது,

உலகம் மாறி வேறொன்றாகி விடுகிறது.

என்ற கவிதை வரியை வாசிப்பவர்கள் கவிஞர் தேவதச்சனை நினைவு கொள்ளாமல் எப்படியிருக்க முடியும். இருவரும் எளிய நிகழ்விற்குள் பெரிய உண்மையை வெளிப்படுத்துகிறார்கள்.

அமிகாயின் இன்னொரு கவிதையில் ஒரு பெண்பித்தன் மறதியின் வீட்டிலிருந்து இருந்து நினைவின் வீட்டிற்குச் செல்கிறான். பின்பு நினைவின் வீட்டிலிருந்து மறதியின் வீட்டிற்குத் திரும்புகிறான். காதல் என்பதே இந்த இரண்டு வீடுகளுக்கு இடையே அலைந்த பயணம் தானோ.

தொலைவில் இருந்து பார்த்தால்

எல்லாமும் அதிசயம் போல் தெரிகிறது

ஆனால் அருகில் சென்றால்

அதிசயம் கூட

அதிசயமாகத் தெரிவதில்லை.

என்று கவிஞர் குறிப்பிடும் போது இடைவெளி தான் அதிசயத்தை உருவாக்குகிறதோ என்று தோன்றுகிறது.

அவர்கள் தெருவில் ஒரு குழி தோண்டுகிறார்கள்.

ஆடை கிழிந்த அழுக்கு குடிகாரன் போல

பூமியின் அந்தரங்கம்

பொதுவெளியில் வெளிப்படுகிறது

என்ற அமிகாயின் வரிகள் சட்டென நமது பார்வையை மாற்றிவிடுகிறது. பூமியின் அந்தரங்கம் குறித்த குற்றவுணர்வினை நமக்குள் ஏற்படுத்துகிறது..

அமிகாயின் கவிதை ஒன்றில் இறந்து கிடந்த போர்வீரனின் மீது மழை பெய்கிறது. அவன் தனது முகத்தைக் கையால் மூடிக் கொள்ளவில்லை என்கிறார். போரின் துயரை இதை விடை வலிமையாக எப்படிச் சொல்ல முடியும்

அவரது கவிதையில் வேறுவேறு நபர்களுக்குள் நடக்கும் உரையாடல்கள் தொடர்ந்து இடம்பெறுகின்றன. அந்த உரையாடல்களின் சாட்சியமாக அவர் இருக்கிறார். உரையாடலில் அவர் குறுக்கிடுவதில்லை. மாறாக அந்த உரையாடல்களைத் தனது சொந்த அனுபவத்தோடு இணைத்து புதிய அனுபவமாக மாற்றிவிடுகிறார்.

அன்பைப் பற்றிய அவரது கவிதை ஒன்றில் உடல் தான் அன்பிற்கான காரணம் என்கிறார். நமது உடல் அன்பின் கோட்டையாகவும் அன்பின் சிறைச்சாலையாகவும் மாறிவிடுகிறது. உடல் இறக்கும் போது அன்பு விடுதலையாகி விடுகிறது, நாணயங்கள் போட்டு விளையாடும் சூதாட்ட இயந்திரம் திடீரென உடைபட்டு நாணயங்கள் சிதறுவதைப் போல எனக் கவிதை முடிகிறது. இதை வாசிக்கும் போது அன்பு என்பதே உடலின் தந்திரம் தானோ, உடலின் சூதாட்டம் தான் அன்பாக உணரப்படுகிறதோ என்றும் தோன்றுகிறது.

நான் முழு நம்பிக்கையுடன் சொல்கிறேன்

பிரார்த்தனைகள் கடவுளுக்கு முந்தியவை என்று.

பிரார்த்தனைகள் கடவுளைப் படைத்தன.

கடவுள் மனிதனைப் படைத்தார்,

மேலும் மனிதன் பிரார்த்தனைகளை உருவாக்குகிறான்

அது மனிதனைப் படைக்கும் கடவுளை உருவாக்குகிறது.

இந்தக் கவிதையில் பிரார்த்தனை பற்றி இதுவரை நாம் அறிந்து வைத்துள்ள, நினைத்துக் கொணடிருக்கிற யாவும் மாறிவிடுகிறது.

பிரார்த்தனைகள் தான் கடவுளைப் படைத்தன என்பது வியப்பூட்டும் வரி

உண்மையில் நாம் எதன் முன்பாகப் பிரார்த்தனை செய்கிறோமோ அப்பொருள் கடவுளாகி விடுகிறதே.

கடற்கரை மணலில்

பறவைகளின் கால்தடங்கள்,

பொருள்கள், பெயர்கள், எண்கள் மற்றும் இடங்களை

நினைவில் கொள்ள விரும்பிய

ஒருவரின் கையெழுத்துக் குறிப்புகள் போல

காலடிதடங்களை விட்டுச் சென்ற

பறவையை நான் ஒரு போதும் பார்த்ததில்லை

கடவுளைப் போலவே.

காணாத கடவுளின் காலடித்தடங்கள் தான் பூமியில் நாம் காணும் இயற்கை காட்சிகள் என்பது பரவசமளிக்கிறது. கடவுள் ஒரு பறவையைப் போன்றவர் என்று கவிதையால் மட்டுமே சொல்ல முடியும்.

உருண்டையான பழத்தை கத்தியால் உரிப்பதைப் போல,

காலத்தின் இயக்கத்தை

உணர்கிறேன நான்.

எனும் அமிகாயை இடிபாடுகளின் கவிஞன் என்று சொல்லலாம். காலத்தால் உருமாறிய இடங்களின் இடிபாடுகள் மட்டுமின்றி. உறவன் இடிபாடுகளையும் அவர் எழுதுகிறார்

ஒருவரை மறப்பதென்பது

பின்கட்டில் உள்ள விளக்கை

அணைக்க மறப்பது போன்றது

அதனால் அது அடுத்த நாள் முழுவதும்

எரிந்து கொண்டே இருக்கும்

ஆனால் பின்பு அதன் வெளிச்சமே

உங்களை நினைவில் வைக்கும்

என்ற கவிதையில் நமது கவனக்குறைவு தான் மறதிக்கான காரணம் என்கிறார். அறியாமல் செய்த தவறு என்றும் அதைக் கருதலாம். அல்லது அலட்சியமான தவறு என்றும் கருதலாம்.

எளிமையான ஒன்றைச் செய்ய மறந்ததால் ஏற்படும் விளைவுகளை நாம் அனைவரும் அனுபவித்திருக்கிறோம், அச் செயல் பல்வேறு பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது.

பின்கட்டில் எரியும் விளக்கும் முன்கட்டில் எரியும் விளக்கும் ஒன்றல்ல. இந்தக் கவிதையில் பின்கட்டில் உள்ள விளக்கை தான் அணைக்க மறந்து போகிறார்கள். வீட்டின் கவனத்தைப் பெறாமலும் அதே நேரம் தனது பயனற்ற தன்மையை வெளிப்படுத்துவதாகவும் அந்த வெளிச்சம் பகலிலும் எரிந்து கொண்டேயிருக்கிறது. அந்த ஒளியென்பது அதுவரை வெளிப்பட்ட விளக்கின் ஒளியாகயில்லை. மாறாக அதற்கு எதிரான ஒளியாக மாறுகிறது. நமது தவறின், கவனக்குறைவின், கண்டுகொள்ளாமையின் அடையாளமாக மிஞ்சுகிறது வெளிச்சம்.

நாம் யாரையாவது மறக்க முயற்சித்தால், அணைய மறுக்கும் ஒளியைப் போல அவர்கள் நம்மைத் துரத்துவார்கள் என்பதையே இந்தக் கவிதை வரி உணர்த்துகிறது. இதனை இழந்த, முறிந்த காதலின் கவிதையாக இன்றைய இளைஞர்கள் கொண்டாடுகிறார்கள்.

துக்கம் அனுசரிப்பவர்கள் சில சமயங்களில் சமயக் கவிதைகளைத் தாண்டி வேறு சில கவிதைகளை வாசிக்க விரும்புகிறார்கள். அப்படி இந்தக் கவிதையைத் துக்கசடங்கில் வாசிப்பவர்கள் நிறைய இருக்கிறார்கள். அவர்களுக்கு இக்கவிதை வெறும் காதலின் பிரிவை சொல்லும் கவிதையில்லை.

I don’t live like a poet, nor do I look like one, and I have the child in me. My escape route to childhood is always open. என்கிறார் அமிகாய். தனது தப்பிக்கும் வழியாக அவர் உருவாக்கிக் கொண்டதே கவிதை. ஆனால் அதன் வழியாக அவர் தனது பால்யத்திற்கு மட்டும் திரும்பவில்லை. விரும்புகிற வயதிற்கு, விரும்புகிற இடத்திற்குக் கவிதையின் வழியாகச் சென்று வருகிறார். காலம் மற்றும் வெளியோடு விளையாடுகிறார். உறவினுள் விழுந்த முடிச்சுகளை அவிழ்க்கிறார். ஒரே நேரத்தில் நடிகராகவும் பார்வையாளராகவும் இருக்கிறார்.

அமிகாய் தன்னை நவீன, இஸ்ரேலிய வரலாற்றின் பிரதிநிதியாக மட்டும் கருதவில்லை, மாறாக அவர் மூவாயிரம் ஆண்டுப் பழமையான யூத பாரம்பரியத்தின் சுமையையும் மகிழ்ச்சியையும் கொண்டிருக்கிறார் என்பதே அவரது தனித்துவம்.

•••

0Shares
0