புதிய சிறுகதை
தரையில் வைக்கப்பட்டிருந்த அந்த ஐந்து அடுக்கு டிபன்கேரியரைப் பார்த்தபடியே இருந்தார் துரைக்கண்ணு.
நாற்பத்தியாறு வயதிற்குள் தலை முழுவதும் நரைத்துப் போய்விட்டது. எப்போதும் அணிவது போன்ற வெள்ளைச் சட்டை. பளுப்பு நிற பேண்ட். அகலமான பிரேம் கொண்ட கண்ணாடி. அவரது சட்டைபையில் ஒரு மொபைல் போன். கையில் ஒரு மொபைல் போன். சற்றே பெரிய காதுகள். இடது கண் ஓரம் சிறிய மச்சம். சமீபமாக யாராவது அதிர்ந்து பேசினால் கை நடுக்கம் வந்துவிடுகிறது. அரசாங்க விருந்தினர் விடுதியின் பொறுப்பாளராக இருந்தார் துரைக்கண்ணு.

பைபாஸ் ரோட்டில் இருந்த பழைய விடுதியில் இருந்தவர் என்பதால் காந்தி சிலையை ஒட்டி புதிதாகக் கட்டப்பட்ட இந்த விடுதிக்கும் அவரையே காப்பாளராக நியமித்திருந்தார்கள்.. அந்த விடுதிக்கு வந்து போன பல அதிகாரிகள் பாராட்டியதால் தானோ என்னவோ இதே வேலையில் பத்து வருஷங்களாக இருக்கிறார்.
அந்த விடுதியில் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட இரண்டு பெரிய அறைகள் இருந்தன. மிகவும் ஆடம்பரமான அறையது. கிங் சைஸ் பெட், சுவரில் 55′ இன்ச் ஸ்மார்ட் டிவி. பாத்டப் வசதியுள்ள குளியல் அறை. சிறிய டைனிங் ரூம். மினி பிரிட்ஜ், ரிம்லெஸ் வாஷ் பேசின் எனச் சகல வசதிகளுடன் இருந்தது
மாடியில் இரண்டு படுக்கை கொண்ட ஆறு அறைகள். விடுதியின் முகப்பில் தாமரை மலரிலிருந்து தண்ணீர் பீச்சுவது போன்ற நீருற்று. அதைச் சுற்றி பூந்தோட்டம். இரண்டு மகிழமரங்கள். பின்பக்கம் பத்துக் கார்கள் நிற்குமளவிற்கான இடம். ஆறடி உயர காம்பவுண்ட் சுவர்.
வரவேற்பறையின் பின் பக்கத்திலே அவர் வசித்துவந்தார். அறைகளைச் சுத்தப்படுத்தவும், எடுபிடி வேலைகள் செய்யவும் மூன்று பணியாளர்கள் இருந்தார்கள். ஒரு காவலாளியும் இருந்தார். இவர்களுக்கு அவர் தான் அதிகாரி.
••
டிபன் கேரியரில் இருந்த உணவை என்ன செய்வது என யோசித்துக் கொண்டிருந்தார். மணி பனிரெண்டைக் கடந்திருந்தது. காலை எட்டு மணிக்கு வாங்கி வைத்த டிபன், இன்னமும் டெப்டி செகரெட்டரி வந்து சேரவில்லை. ஒருவேளை காலை விமானத்தில் மதுரைக்கு வந்து அங்கிருந்து காரில் வருகிறாரோ என்னவோ.
எப்போது வருவார் என்று தெரிந்து கொள்ளாமல் எதற்காக இவ்வளவு டிபன் வாங்கி வைத்துக் காத்திருக்கிறார்கள் என்று புரியவில்லை.
நிச்சயம் அதிகாரி வழியிலே சாப்பிட்டிருப்பார். ஒருவேளை சாப்பிடாமல் வந்தாலும் ஆறிப்போன இந்த இட்லி தோசைகளைச் சாப்பிடுவாரா என்று தெரியாது.
எதற்காக ஒருவர் சாப்பிடுவதற்கு இட்லி, தோசை, பூரி, பொங்கல், கேசரி வடை இடியாப்பம் என இவ்வளவு உணவு வகைகளை வாங்குகிறார்கள். யாருடைய செலவு அது.
அதிகாரிகளில் எவரும் நிதானமாகச் சாப்பிட்டு அவர் கண்டதில்லை. செல்போன் பேசியபடியே, எதையோ நினைத்தபடியே அவரசமாகவே சாப்பிடுகிறார்கள். அதுவும் இலையில் வைத்ததில் பாதிக்கு மேல் வீணாகிவிடும். அவற்றைத் தெருநாய்களுக்குப் போட்டுவிடுவார். அரசாங்க விடுதிக்குள் தெருநாயை எப்படி அனுமதிக்கலாம் என்று அதற்கும் ஒரு அதிகாரி கோவித்துக் கொண்டார்.
அதிகாரி சாப்பிட்டது போக மீதமாகும் உணவை அப்படியே வேலைக்கார லட்சுமியிடம் கொடுத்து விடுவார். அவள் வீட்டிற்குக் கொண்டு போய்ப் பிள்ளைகளுடன் சாப்பிடுவாள். மாலை வரும் போது டிபன் கேரியரை கழுவி கொண்டுவந்து வைத்து விடுவாள்.
இன்றைக்கு அவளும் வேலையை முடித்துக் கொண்டு போய்விட்டாள். இந்த டிபனை யார் சாப்பிடுவது. காசு கொடுத்து வாங்கியதை குப்பையில் கொட்ட மனது வரவில்லை. நாமே கொண்டு போய் நாய்களுக்குப் போட்டுவிட்டு வந்துவிடலாமா என்று யோசித்தார்
எதற்கும் நாகராஜனை கேட்டுக் கொண்டு முடிவு செய்யலாம் என நினைத்து அவருக்குப் போன் செய்தார். ரிங் போய்க் கொண்டேயிருந்த்து. நாகராஜன் போனை எடுக்கவில்லை. டிபன் கேரியரின் ஒரு அடுக்கிலிருந்து வழிந்த சாம்பார் உறைந்து போயிருந்தது.
யாருக்காவது சாப்பிடக் கொடுத்துவிடலாம் என்றால் கூட அங்கே ஆள் கிடையாது. இப்அதிகாரிகளுக்குக் கொண்டுவரப்படும் உணவில் ஒரு வாய் கூட அவர் சாப்பிட்டது கிடையாது. அதைப் பிடிக்கவும் செய்யாது.
ஆகவே டிபன் கேரியரை என்ன செய்வது எனப்புரியாமல் மூர்த்திக்கு போன் செய்தார். அவனும் போனை எடுக்கவில்லை. கண்முன்னே இவ்வளவு உணவு வீணாகிப் போவது அவருக்கு ஆதங்கமாக இருந்தது.
••
காலை ஏழு மணிக்கு விடுதி வாசலில் அரசாங்க ஜீப் வந்து நின்று நாகராஜன் குரல் கொடுத்த போது துரைக்கண்ணு குளித்துக் கொண்டிருந்தார். அவரசமாகக் குளியலை முடித்துவிட்டு ஈரத்தலையைக் கூடத் துவட்டாமல் சட்டையை மாட்டிக் கொண்டு வெளியே வந்தார்
“இன்னும் அரைமணி நேரத்தில சென்னையில இருந்து டெப்டி செகரெட்டரி வந்துருவார். ரூம் ரெடியா இருக்குல்லே“ என்று கேட்டார் நாகராஜன்
“ஆறு மணிக்கே ரெடி பண்ணிட்டேன். பிளாஸ்க்கில காபியும் வாங்கி வச்சிட்டேன்“
“ஒன்பது மணிக்கு விசிட் கிளம்பிருவார். அதுக்குள்ளே டிபன் வாங்கி வைக்கணும். மூர்த்தி வருவான். நீங்க கேரியரைக் குடுத்து அனுப்புங்க. “
“தனலட்சுமில டிபன் வாங்கிக்கோங்க. வடை மட்டும் ரத்னாவில நல்லா இருக்கும்“ என்றார் துரைக்கண்ணு
“கிரீன் டீ பாக்கெட் இருக்கா.. இப்போ வர்ற அதிகாரிகள் எல்லாம் அதானே குடிக்கிறாங்க“
“வாங்கி வச்சிருக்கேன். தேனும் இருக்கும். சுதாகர் சார் வந்தப்போ.. வாங்கினது“
“ரூம் ஸ்பிரே அடிச்சிவிட்ருங்க. இப்பவே ஏசி போட்டு வச்சிருங்க“. எனச் சொல்லியபடியே யாருக்கோ போன் பண்ணத் துவங்கினார் நாகராஜன். தூக்கம் கலையாத அவரது முகம் ஏனோ துரைக்கண்ணுவிற்கு வருத்தத்தை ஏற்படுத்தியது
“நான் பாத்துகிடுறேன்.. மூர்த்தியை அனுப்பி வையுங்க“ என்றார் துரைக்கண்ணு
••

காலை டிபனுக்கு ஐந்து அடுக்கு கேரியர். மதியம் சாப்பாட்டிற்கு ஆறு அடுக்கு கேரியர். மாலையில் வடை பஜ்ஜி கேசரி வாங்கி வருவதற்கு மூன்று அடுக்கு கேரியர் எனத் துரைக்கண்ணு மூன்று கேரியர்கள் வைத்திருந்தார். காபி டீ வாங்கி வருவதற்காக சிறிய பிளாஸ்க் இரண்டு. பெரிய பிளாஸ்க் மூன்றும் வைத்திருந்தார்.
அரசாங்கத்தின் உயரதிகாரிகள் வந்து தங்குவதால் எப்போதும் அறைகள் சுத்தமாக இருக்க வேண்டும். சில அதிகாரிகள் தட்டில் சாப்பிட மாட்டார்கள். அவர்களுக்கு வாழை இலை வேண்டும். சிலர் வெள்ளிதட்டில் தான் சாப்பிடுவார்கள். இதற்கென மூன்று வெள்ளிதட்டுகள் வாங்கி அலமாரியில் பூட்டி வைத்திருக்கிறார். இது போலவே உப்பு. சக்கரை. எலுமிச்சம்பழம். சோடா, ஒம வாட்டர், பாக்கு, பல்குச்சி என அத்தனையும் வைத்திருந்தார். பொன்னிற ரேகைகள் கொண்ட பீங்கான் கோப்பைகள். சில்வர் ஸ்பூன்கள், முட்கரண்டிகள். கண்ணாடி டம்ளர்கள், சூப் கிண்ணங்கள் எனவும் ஒரு மரபீரோ நிறைய வைத்திருந்தார்.
எந்த இரவிலும் ஒரு அதிகாரி விடுதிக்கு வந்து சேரக்கூடும் என்பதால் அவர் அங்கேயே குடியிருந்தார். துரைக்கண்ணுவின் மனைவி ரேவதி பக்கத்திலிருந்த தேவனூர் கிராமத்தில் பள்ளி ஆசிரியராக இருந்தாள். அங்கேயே அவளும் மகள் உமாவும் வசித்து வந்தார்கள். துரைக்கண்ணு மாதத்தில் ஒரு நாள் அவர்களைப் போய்ப் பார்த்து வருவதுண்டு.

வீட்டுச்சாப்பாடு இல்லை. போதுமான தூக்கமில்லை. அதிகாரிகளின் உத்தரவுகளை உடனே நிறைவேற்ற வேண்டும் என்ற படபடப்பு வேறு. இத்தனையும் சேர்ந்து கொண்டு அவருக்கு ரத்தக்கொதிப்பு மற்றும் சக்கரை நோயை உருவானது. அதற்குக் கோபாலன் டாக்டரிடம் காட்டி மருந்து எடுத்துக் கொண்டு வந்தார். ஆனாலும் அசதி குறையவில்லை.
இத்தனை வருட அனுபவத்தில் விதவிதமான அதிகாரிகளையும் அவர்களின் அதிகார தோரணைகளையும் பார்த்துவிட்டார். இப்போதெல்லாம் அது ஒரு நாடகம் போலவே தோன்றுகிறது. தன்னால் நன்றாக நடிக்கும் முடியும் என்று காட்டுவது போல உணர்ந்தார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அங்கே தங்குவதற்காக வந்திருந்த அதிகாரி ஒருவர் தனது அறையில் இயேசு நாதரின் படம் மாட்டப்பட வேண்டும் என்று உத்தரவிட்டார். அவர் அறைக்கு வந்தபோது இரவு மணி பத்தரையாகி இருந்தது. இந்நேரம் இயேசுநாதர் படத்திற்கு எங்கே போவது என்று புரியாமல் தோட்டவேலை செய்யும் மைக்கேலின் வீட்டிற்குப் போய் ஒரு இயேசு நாதர் படத்தை வாங்கிக் கொண்டு வந்து மாட்டினார்.
இன்னொரு அதிகாரி உப்பு புளி காரம் இல்லாத உணவு மட்டுமே சாப்பிடுவார் என்றதால் அவருக்கான சாப்பாட்டினை தானே சமைத்துக் கொடுத்தார். காலை காபியோடு பேரிச்சம் பழம் வேண்டும் என்று கேட்டார் வட இந்திய அதிகாரி. கிழக்கே தலை வைத்து தான் தூங்குவேன் என்று கட்டிலை திருப்பிப் போட சொன்னார் வேறு அதிகாரி. இப்படி விதவிதமான உத்தரவுகளைக் கேட்டுப் பழகியிருந்தார்.
ஒருவர் சாப்பிடும் உணவை வைத்து அவரது குணத்தைத் தெரிந்துவிட முடியும் என்பதைத் துரைக்கண்ணு அனுபவத்தில் உணர்ந்திருந்தார். மனிதனுக்கு மனிதன் பசியின் அளவு வேறுபடுவது வியப்பளித்து. சிலருக்கு எவ்வளவு சாப்பிட்டாலும் பசியடங்குவதில்லை. ஒட்டைப்பானை வயிறு என்று அவரது அம்மா சொல்லுவாள். விதவிதமான உணவு வகைளை சமைத்தாலோ, தினசரி பார்த்துக் கொண்டேயிருந்தாலோ முகத்தில் அடித்துவிடும். சாப்பிட மனசே வராது. அதனால் தான் சமையற்காரர்கள் வெறும் ரசம்சோறு சாப்பிடுகிறார்கள் போலும்.
நேரத்திற்குச் சாப்பிடாமல் விட்டு அவரது வயிறு சுருங்கிவிட்டிருந்தது. பள்ளிவயதில் வயிற்றின் குரலை கேட்டிருக்கிறார். இப்போது அது சப்தமிடுவதேயில்லை.
அதிகாரிகள் எதற்காகக் கோவித்துக் கொள்வார்கள் என்று தெரியாது. அவர்களிடம் எந்த விளக்கமும் தராமல் அமைதியாக இருப்பது தான் தீர்வு என்பதை அறிந்திருந்தார்.
••
பைக்கில் தயாளன் வருவது தெரிந்தது. அவன் பிளம்பிங் வேலை செய்பவன். மாடி அறையில் குழாய் அடைத்துக் கொண்டிருப்பதைச் சரி செய்வதற்காக வரச் சொல்லியிருந்தார். தயாளன் பைக்கை நிறுத்திவிட்டு துரைக்கண்ணு இருந்த வரவேற்பு அறையை நோக்கி வந்தான். அவன் கண்ணிலும் டிபன் கேரியர் தான் பட்டது
“இன்னும் ஆபீசர் வரலையா“ என்று கேட்டான்
“வரக்காணோம். இதை என்ன செய்றதுனு தெரியலை நீ சாப்பிடுறயா“
“எனக்கு வேணாம். நான் வீட்ல சாப்பிட்டேன்“
“அப்போ ஒண்ணு பண்ணு இந்த டிபனை கொண்டு போயி புளியமரத்தடியில போட்டுட்டு வந்தா நாயாவது திங்கும்“.
“போகும்போது எடுத்துட்டு போறேன். வையுங்க“ என்றபடியே படியேறினான் தயாளன்
“நீ இதைக் கொண்டு போய்ப் போட்டுட்டு வந்துருப்பா.. இப்பவே மணி பனிரெண்டுக்கு மேல ஆகிருச்சி. சட்னி எல்லாம் ஊசிப்போன வாடை வருது“
அவன் டிபன்கேரியரை கையில் எடுத்துக் கொண்டு வெளியே நடந்தான். துரைக்கண்ணுவிற்குக் கால்கள் சோகை பிடித்துக் கொண்டது போலிருந்தது. எழுந்து உதறிக் கொண்டார். திடீரென உடல் எடையற்றுப் போய்விட்டது போல உணர்ந்தார்.
காலையிலிருந்து அறையில் ஒடும் ஏசியை அணைத்துவிட வேண்டுமா, அல்லது அதிகாரி வந்துவிடுவாரா என்று தெரியவில்லை. எதற்கும் ஒரு முறை அறையைப் பார்த்துவிடுவோம் என்று நடந்தார். காலையிலிருந்து ஏசி ஒடிய குளிர்ச்சி அறையெங்கும் நிரம்பியிருந்தது. அந்தக் குளிர்ச்சி அவருக்குத் தூங்க வேண்டும் என்ற ஏக்கத்தைக் கொண்டு வந்தது. அதைக் காட்டிக் கொள்ளாமல் கதவை மூடி வெளியே வந்தார்.
தயாளன் குழாயில் காலியான டிபன்கேரியரை கழுவி கொண்டிருந்தான். மதிய உணவு எங்கே வாங்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை. வந்தவுடன் கேரியர் கேட்பார்கள். அதை எடுத்து வெளியே வைத்துவிட வேண்டும் என்று நினைத்தபடியே வரவேற்பரையை நோக்கி நடந்தார். அவரது மேஜையிலிருந்த போன் அடித்தது. அவர் எடுப்பதற்குள் போன் கட்டாகிவிட்டது. யார் அழைத்தார்கள் என்று தெரியவில்லை. தயாளன் கழுவிய டிபன்கேரியரை வெயில் பட வைத்துவிட்டு மாடியேறிச் சென்றான்.
துரைக்கண்ணு மகிழமரத்திலிருந்து இறங்கி ஒடிய அணிலைப் பார்த்தபடி இருந்தார். அப்போது வாசலில் கார் ஹார்ன் கேட்டது. அவசரமாக எழுந்து வெளியே வருவதற்குள் அரசாங்க முத்திரை பதித்த காரும் பின்னாடியே இரண்டு ஜீப்புகளும் உள்ளே நுழைந்தன. காரை விட்டு இறங்கிய டெப்டி செகரெட்டரி நாற்பது வயதிற்குள் இருந்தார். ஒல்லியான தோற்றம். கோல்டன் பிரேம் போட்ட கண்ணாடி அணிந்திருந்தார். கறுப்பு ஷு. இடதுகையில் பச்சைக்கல் மோதிரம். அவரை நோக்கி கைகூப்பினார் துரைக்கண்ணு. அதை அவர் கண்டுகொள்ளாதது போல நடந்தார். நாகராஜன் அறைக்கதவை திறந்து உள்ளே அழைத்துக் கொண்டு சென்றார். அந்த அறையின் கதவு சாத்தப்பட்டது.
சில நிமிஷங்களுக்குப் பின்பு வெளியே வந்த நாகராஜன் “சார் இன்னும் சாப்பிடலை.. டிபன் எங்கே வச்சிருக்கே“ என்று கேட்டார்
“மணி இப்பவே பனிரெண்டரை ஆச்சு.. சாப்பாடு வாங்கிற வேண்டியது தானே“ என்றார் துரைக்கண்ணு
“அதுக்கு நேரம் இருக்கு.. கேரியரை எடுத்துட்டு வா.. நீயே பக்கத்துல இருந்து பரிமாறு“…
துரைக்கண்ணுவிற்கு என்ன செய்வது எனத் தெரியவில்லை.
“இளநீர் வாங்கிட்டு வரச்சொல்லவா“ என்று கேட்டார்
நாகராஜன் கோபத்துடன் “மூர்த்தி டிபன் வாங்கிட்டு வரலையா“ என்று கேட்டார்
“வந்தாப்லே.. ஆனா. மணி பனிரெண்டுக்கு மேல ஆச்சுனு நான் தான் நாய்க்கு போட சொன்னேன்“
“யாரைக் கேட்டு சொன்னே. எனக்கு அந்த டிபன் வந்தாகணும்“.
“நான் வேணும்னா.. தனலட்சுமில போய் வாங்கிட்டு வரவா“
“அந்த மயிரு எல்லாம் வேணாம். நான் வாங்கி வச்ச டிபன் தான் வேணும்“
இப்படிக் கேட்டால் என்ன செய்வது எனப்புரியாமல் துரைக்கண்ணு அமைதியாக இருந்தார்.
“உன் வேலை என்னவோ அந்த மசிரை மட்டும் பாக்க வேண்டியது தானே என் உசிரை ஏன்யா வாங்குறே“ என்று கையை நீட்டி பலமாகச் சப்தமிட்டார் நாகராஜன்.
பதில் சொல்ல வேண்டும் என்று மனது துடித்தது. ஆனால் வாயை மூடிக் கொண்டு நின்றிருந்தார். நாகராஜன் கண்ணில் கழுவி வைத்த டிபன் கேரியர் பட்டது. அவர் ஆத்திரத்துடன் ஏதோ திட்ட முயலும் போது அழைப்பு மணி ஒலிக்கும் சப்தம் கேட்டது. நாகராஜன் டெப்டி செகரெட்டரி இருந்த அறையை நோக்கி வேகமாக ஒடினார்.
தனலட்சுமி விலாஸ் ஹோட்டலுக்குப் போன் செய்து டிபன் இருக்கிறதா என்று கேட்டார் துரைக்கண்ணு
“மீல்ஸ் டயமாகிருச்சி.. டிபன் கிடையாது“ என்றார்கள்.
நாகராஜன் அவசரமாக வெளியே வந்து ஜீப்பை எடுக்கச் சொல்லி கிளம்பினார். எங்கே போகிறார் என்று தெரியவில்லை. ஒருவேளை டெப்டி செகரெட்டரி அவரைத் திட்டியிருப்பாரா. ஏதாவது டிபன் வாங்குவதற்குத் தான் நாகராஜன் போகிறாரா என எதுவும் தெரியவில்லை.
தானே அதிகாரி முன்பாகச் சென்று பதில் சொல்லிவிடுவது நல்லது எனத் தோன்றியது. ஆனால் அவர்களாக அழைக்காமல் நாமாக உள்ளே போனால் அதற்கும் கோவித்துக் கொள்வார்களே எனப் பயமாகவும் இருந்தது. வெளியே காத்திருக்கும் வேறு அலுவலர்கள் ஏதோ தவறு நடந்திருக்கிறது என்பதைக் கண்டுபிடித்துவிட்டவர்கள் போல அவரை முறைத்துக் கொண்டிருந்தார்கள்.
எதற்காக இப்படி நடந்து கொண்டோம். இப்போது என்ன சொல்லிச் சமாதானம் செய்வது எனக் குழப்பமாக இருந்தது. நாகராஜன் அதிகாரி வந்துவிட்டதாகப் போனில் சொல்லியிருந்தால் கேரியரை அப்படியே வைத்திருந்திருப்பேனே என்று நினைத்துக் கொண்டார்.
அவர்கள் தவறை ஒத்துக் கொள்ள மாட்டார்கள். மாட்டிக் கொண்டது நாம் தான் என முணுமுணுத்துக் கொண்டார். திடீரென ஊரில் உள்ள மனைவி மகளின் நினைவு வந்தது. தனது பசியைப் பற்றிக் கவலைப்படுகிறவர்கள் அவர்கள் இருவர் மட்டுமே என்று தோன்றியது.
நாகராஜன் வருவதற்குள் ஏதாவது சாப்பிடக் கொடுத்து அதிகாரியின் பசியைத் தணிக்க வேண்டியது தனது பொறுப்பு என்பது போல அவசரமாகக் கிரீன் டீ தயாரித்து ஒரு டிரேயில் நாலைந்து பிஸ்கட்களையும் வைத்து எடுத்துக் கொண்டு அறைக்கதவைத் தட்டினார். உள்ளே வரும்படி ஆங்கிலத்தில் பதில் வந்தது. அறையில் இருந்த சோபாவில் டெப்டி செகரெட்டரி சாய்ந்து உட்கார்ந்திருந்தார். அவரது சட்டைப்பொத்தானை மீறி இளந்தொப்பை தெரிந்தது.
டீயை அவர் முன்னால் இருந்த மரமேஜையில் வைத்தபோது வேண்டாம் என மறுத்தபடியே அவர் சொன்னார்
“மோர் இருந்தா குடுங்க.. இதெல்லாம் வேணாம்“
“சாரி சார்.. நீங்க சாப்பிடுறதுக்கு வாங்கி வச்சிருந்த டிபனை நேரமாகிருச்சின்னு நான் தான் நாய்க்கு போட சொன்னேன்“
இதைச் சொல்லும் போது அவர் அறியாமல் கைவிரல்கள் நடுங்கின.
“டிபன் எல்லாம் வேண்டாம்னு சொன்னனே.. எதுக்கு இப்படிப் பண்ணுறாங்க.. நாகராஜனைக் கூப்பிடுங்க“
“அவர் வெளியே போயிருக்கார்“.
“நான் இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங் செய்றவன். ஒரு நாள் சாப்பிட்டா மறுநாள் சாப்பிட மாட்டேன். உண்ணாவிரதம். அது அவருக்குத் தெரியாது“.
“என்னை மன்னிச்சிருங்க சார்“
“நீங்க என்ன தப்பு பண்ணுனீங்க.. தேவையில்லாமல் டிபன் வாங்கி வச்சது அவங்க தப்பு. நான் பாத்துகிடுறேன்“
“அவங்களைக் கோவிச்சிகிட வேண்டாம் சார். இது எப்பவும் நடக்குறது தான். நான் தான் இன்னைக்கு அவசரப்பட்டு நடந்துகிட்டேன்“
“இது உங்க யார் தப்பும் இல்லை. பழக்கம். ஐம்பது நூறு வருமா நடந்துகிட்டு வர்ற பழக்கம். இதை எல்லாம் மாத்துங்கன்னு சொன்னா.. யார் கேட்குறா.. ஆபீசர்ன்னா ஒரு வாய்க்குப் பதிலா பத்து வாய் இருக்குமா. இல்லை. எப்பவும் சாப்பிட்டுகிட்டே இருக்கணுமா.. விதவிதமா சாப்பிட குடுத்தா நாங்க சந்தோஷமாகிடுவோம்னு நினைக்கிறாங்க. நான் வந்திருக்கிறது வேலை பாக்க.. அதைக் கரெக்டா செய்தா போதும்.. என்ன சொல்றீங்க. “
ஒரு உயரதிகாரி இப்படி வெளிப்படையாகப் பேசுவது அவருக்கு ஆறுதலாக இருந்தது. அவர் சொன்னதை ஆமோதிப்பது போலத் தலையசைத்தார்
“. நிறைய ஹைஅபிசியல் கேம்ப் வர்றதே ஆசையா நினைச்சதை எல்லாம் சாப்பிடுறதுக்குத் தான். நம்மளை விட்டு பிரிட்டீஷ்காரங்க போயிட்டாங்க. ஆனா அவங்க ஏற்படுத்துன பழக்கம் எதுவும் போகலை. இவங்க போக விடவும் மாட்டாங்க “
என்றபடியே டீவைக்கப்பட்டிருந்த டிரேயை பார்த்தபடியே “நீங்க கிரீன் டீ குடிப்பீங்களா“ எனக்கேட்டார் அதிகாரி
“இல்லை“ எனத் தலையாட்டினார் துரைக்கண்ணு.
“ஏன் பிடிக்காதா“
“ஆமாம்“ என லேசாகத் தலையசைத்தார்
“உங்களுக்குப் பிடிக்காததை என் தலைல கட்டுறீங்க பாத்தீங்களா“ என வேடிக்கையாகச் சொன்னார் டெப்டி செகரெட்டரி. அந்தக் கேலி துரைக்கண்ணுவிற்குள் இருந்த நடுக்கத்தை நிறுத்தியது.
“ரூம் ரொம்ப நீட்டா இருக்கு.. நீங்க தான் பாத்துகிடுறீங்களா. குட் ஜாப்“ என்று பாராட்டினார்.
துரைக்கண்ணுவால் பதில் பேச முடியவில்லை. சிறிய அங்கீகாரங்கள் தரும் மகிழ்ச்சியை;ப போல உயர்வானது எதுவுமில்லை என்பது போலக் கைகூப்பி நன்றி சொன்னார்.
“நாகராஜன் லஞ்ச் ஏற்பாடு பண்ணப்போறார். வேணாம்னு சொல்லிடுங்க“ என்றார் அதிகாரி.
அதைச் சொன்னபோது அவரது முகத்தில் மெல்லிய சிரிப்பு வெளிப்பட்டது. டீ டிரேயை எடுத்துக் கொண்டு வெளியே வந்த போது வெயில் பிரகாசமாக இருப்பது போலத் தோன்றியது.
நாகராஜன் ஜீப்பில் வந்து இறங்கியிருந்தார். ஜீப்பிலிருந்து ஆறு அடுக்கு கேரியர் ஒன்றை இருவர் இறக்கிக் கொண்டிருந்தார்கள்.
“அமீன்ல இருந்து மட்டன் பிரியாணி. பிஷ்பிரை, சிக்கன்பிரை, கரண்டி ஆம்லெட், காடை ரோஸ்ட், லிவர் பிரை எல்லாம் வாங்கிட்டேன். நீ மறக்காம ஸ்வீட் பீடா நாலு வாங்கிட்டு வந்துரு“
என யாரிடமோ போனில் சொல்லிக் கொண்டிருந்தார் நாகராஜன்.
கேரியரை உள்ளே எடுத்துக் கொண்டு போவதைக் காண துரைக்கண்ணுவிற்கு வேடிக்கையாக இருந்தது.
நாகராஜனை அழைத்துச் சொல்லிவிடலாமா என்று நினைத்தார். ஆனால் அவராகத் தெரிந்து கொள்ளட்டும் என்று முடிவு செய்தபடியே அதிகாரியின் அறையை நோக்கி நாகராஜன் போவதை பார்த்துக் கொண்டிருந்தார்.
வெளியே வந்த நாகராஜன் முகம் வெளிறிப்போயிருந்தது. ஏமாற்றத்தை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஆனாலும் அதைக் காட்டிக் கொள்ளாதவரைப் போலத் துரைக்கண்ணுவைப் பார்த்து சொன்னார்
“காலை ஆறு மணில இருந்து ஒடிக்கிட்டே இருக்கேன். பல்லுல பச்சத்தண்ணி படலை. கொலைபட்டினி. நம்ம பசியை யாரு நினைச்சிப் பாக்குறா.. “
“சாப்பிட்டு வேலை பாக்க வேண்டியது தானே. அதான் கேரியர் நிறைய பிரியாணி, மட்டன் சிக்கன் எல்லாம் இருக்குல்ல.. என்றார் துரைக்கண்ணு
அப்படிச் சொன்னபோது அதில் கேலியிருந்தது.
“டெப்டி செகரெட்டரி தூங்குனதுக்கு அப்புறமாத் தான் சாப்பிடணும்.. பிரிட்ஜ்ல ஐஸ் வாட்டர் இருந்தா குடுங்க“ என்றார் நாகராஜன்
பழக்கத்தை மாற்றவே முடியாது என டெப்டி செகரெட்டரி சொன்னது துரைக்கண்ணுவின் நினைவில் வந்து போனது. தனக்குத் தானே சிரித்துக் கொண்டபடி குளிர்சாதனப்பெட்டியை நோக்கி நடந்தார் .
•••