Each day is
a journey, and the journey itself home,”
ஜென் கவிஞரான பாஷோ இயற்கையை நெருங்கி அறிவதற்காக ஒரு நீண்ட நடைபயணம் ஒன்றினை மேற்கொண்டார். அந்த பயண அனுபவம் குறித்து அவர் எழுதிய குறிப்புகளையும் பயணத்தின் ஊடே அவர் எழுதிய கவிதைகளையும் வாசித்த போது அற்புதமாக இருந்தது. இவை அவரது பயணத்தின் குறிப்புகள் சிலவற்றின் மொழியாக்கங்கள்.
***
நீண்ட சாலையின் துவக்கம்
முடிவில்லாத காலத்தின் நித்ய பயணிகளே நாட்களும் மாதங்களும். கடந்து போன வருசங்களும் அப்படியானதே. கடலின் மீது படகில் போனாலும், பூமியின் குறுக்காக குதிரையில் கடந்துசென்றாலும் காலத்தின் சுமையை நம் மீது ஏற்றிக் கொண்டே பயணிக்கிறோம். நம் மூதாதையர்களில் பலர் தொலை தூரப்பயணத்தில் இறந்து போயிருக்கிறார்கள். நானும் நீண்டகாலமாகவே காற்றில் அலைவுறும் மேகம் போல விருப்பமான பாதையில் சுற்றியலையும் யாத்திரை செய்யவே விரும்பினேன்.
ஆனால் கடந்த வசந்தகாலத்தில் தான் கடற்கரை வழியாக வீடு திரும்பியிருந்தேன். புதுவருடத்தின் முன்பாக சுமிதா ஆற்றின் கரையில் இருந்த என் நொய்ந்த வீட்டில் படர்ந்த சிலந்திவலைகளை சுத்தபடுத்த விரும்பினேன். ஆனால் அதற்குள்ளாகவே மூடுபனி துவங்கி வயல் எங்கும் நிரம்பியிருந்தது.
அடுத்த பயணத்தை நான் அப்போதே துவங்கினால் மட்டுமே உரிய நேரத்தில் சிரஹவா நுழைவாயிலை கடக்க முடியும். கடவுள் என் ஆன்மாவை இறுகபற்றிக் கொண்டு என்னை புரட்டி போட்டது போன்ற மனஉணர்ச்சியே ஏற்படுகிறது. சாலையின் முடிவற்ற காட்சிகளில் முழ்கிப்போகாமல் என்னால் வீட்டில் அடைந்து கிடக்க முடியாது என்ற உந்துதல் என்னை துரிதப்படுத்துகிறது
பயணத்திற்காக கிழிந்து போன உடைகளை தைத்தபடி, தலைக்கு வைக்கோல் தொப்பியை ஏற்பாடு செய்து கொண்டு, கால்களுக்கு வலுவேற்ற தைலம் தடவியபடியே மட்சூமா தீவின் நடுவில் பூர்ண சந்திரன் உதயமாகும் காட்சியை கனவு கண்டு கொண்டிருக்கிறேன்.
.
**
முகாம். 2 – புறப்பாடு
மார்ச் 27 ம் தேதியின் அதிகாலையில் நான் நடக்க துவங்கினேன். சாலையில் இருள் படிந்திருந்தது. ஆகாசத்திலோ அப்போதும் நிலவு தென்பட்டுக் கொண்டிருந்தது. மெல்ல மறைந்து கொண்டிருக்கும் பின்நிலவது. ப்யூஜி மலையின் நிழலும், பூத்து சொரியும் செர்ரிபூக்களும், எனக்கு விடைதந்து அனுப்பி வைத்தன. செஞ்சு சந்தையடியிலிருந்து கிளம்பும் என் பயணத்தில் படகில் கொஞ்ச தூரம் கூடவே வந்து வழியனுப்பி வைப்பதற்காக நண்பர்களும் வந்திருந்தார்கள். படகில் நாங்கள் ஏறிக் கொண்ட போது நான் பயணம் செய்ய போகின்ற மூவாயிரம் மைல் தொலைவு என் மனதில் ஒடியது. என் கண்ணீர் நிரம்பிய கண்களால் என் நண்பர்களையோ அல்லது மூடுபனிக்குள்ளிருந்த வீடுகளையோ காணமுடியவில்லை.
பறவைகள் வருந்துகின்றன
மீன்கள் அழுகின்றன
நீர் கசியும் கண்களால்.
இந்த கவிதையோடு தான் என் பயணம் துவங்கியது. நான் நண்பர்களிடமிருந்து விடை பெற்று தனியாக செல்ல துவங்கினேன். வரிசையாக நின்றபடியே கையசைத்து நண்பர்கள் பிரியாவிடை தந்தார்கள். நடந்து செல்ல ஆரம்பித்தேன். என் முதுகையே அவர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள் என்பதை நான் அறிவேன்.
முகாம் 3 சாஹே
நாள் முழுவதும் நடந்து கொண்டேயிருந்தேன். வடக்கின் விசித்திரமான காட்சிகளை கண்டபிறகே திரும்பி வரும் எண்ணமிருக்கிறது. ஆனால் அது எளிதில் சாத்தியமான கூடியதில்லை. இது போன்ற நீண்ட பயணத்தினால் குளிர் பிரதேசங்களை அடைவதற்குள் என் தலை நரைத்து போவது தான் அதிகமாகும் என்பதை நான் அறிவேன்.
மாலை நேரத்திற்குள் நான் சாஹே என்ற கிராமத்திற்கு வந்திருந்தேன். இதற்குள் என் தோள் வலிக்க ஆரம்பித்திருந்தது. அதற்கான முக்கிய காரணம் என் தோளில் தொங்கிய சுமை. அதற்குள் இரவு குளிரை தாங்குவதற்காக வெதுவெதுப்பான காகித போர்வை. மற்றும் மழையில் நனைந்துவிடாமல் தடுக்கும் குடை. எழுதுவதற்கான உபகரணங்கள். மாற்றுஉடைகள். நண்பர்கள் அளித்த பரிசுகள் இருந்தன. உண்மையில் நான் அதிக சுமையில்லாமல் பயணம்செய்யவே விரும்பினேன். ஆனாலும் எனக்கு விருப்பமான சில பொருட்களை தூக்கி எறியமுடியாதபடி அதன் மீது நெருக்கம் கொண்டிருந்தேன்.
முகாம் 4 முரோநயோஷிமா
முரோநயோஷிமாவில் உள்ள ஆலயத்தினை காண விரும்பி சென்றேன். என் வழித்தோழன் சோரா அந்த ஆலயம் பூமரங்களின் பெண்கடவுளுக்கு உரியது என்றும் அது போன்ற ஒரு கோவில் ப்யூஜி மலையின் அடிவாரத்திலும் இருக்கிறது என்றான். இந்த பெண் தெய்வம் ஒரு மூடிய நெருப்பறை ஒன்றில் தன்னை அடைத்துக் கொண்டு வசிக்கிறாள். அதற்கான காரணம் அவளது கர்ப்பத்தை கணவன் சந்தேகம் கொண்டதால் தனது பரிசுத்ததை நிரூபணம் செய்ய அவள் நெருப்பினை வளர்த்து அதற்குள் தனித்திருக்கிறாள். அதனால் அவளது மகனுக்கு அக்னிபுத்திரன் என்று பெயர். அதிலிருந்தே அந்த இடத்திற்கு முரோநயோஷிமா அதாவது அக்னிகூடம் என்று பெயர்.
அந்த ஆலயத்திற்கு வரும் கவிஞர்கள் புகையை வாழ்த்தி பாடுவது வழக்கம். அங்கு வழிபட வரும் சாதாரண மக்கள் கோனோஷிரா என்ற மீனை சாப்பிட கூடாது என்ற மரபிருக்கிறது. அதற்கு காரணம் அந்த மீன் சுடும் போது துர்நாற்றமடிக்கும் அதை கடவுளுக்கு பிடிக்காது என்பதே.