மதுரையைச்சுற்றியுள்ள எட்டு மலைகளில் காணப்படும் சமணக் குகைகள், அழகர் கோவில், திருப்பரங்குன்றம், திருமோகூர், கூத்தியார்குண்டு, கிண்ணிமங்கலம், பெருங்காமநல்லுர், கீழக்குயில்குடி எனத் தேடித்தேடிப் பார்த்திருக்கிறேன். சமீபத்தில் எனது நண்பரான சேவியர் நீங்கள் அவசியம் இடைக்காட்டூரைப் பார்க்க வேண்டும், அது ஒரு கலை எழில் மிக்க தேவலாயம் என்று சொல்லி அழைத்துச் சென்றார்.
இடைக்காட்டூர் மதுரையிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிறிய ஊர். வைகை ஆற்றின் வடகரையில் அமைந்திருக்கிறது. மதுரையைச் சுற்றிய கிராமங்களுக்கே உரியே தனித்துவமான தேநீர் கடைகளும், சிவப்பேறிய கண்கள் கொண்ட மனிதர்களையும் கடந்து ஊரினுள் சென்ற போது பிரம்மாண்டத்துடன் உயர்ந்து நின்றது புனித இருதயநாதர் தேவாலயம்.
நான் பயணம் செய்யும் நிறைய நகரங்களில் உள்ள தேவாலயங்களைப் பார்த்திருக்கிறேன். கோவா, கொச்சி, கல்கத்தா. பாண்டிச்சேரி போன்ற நகரங்களில் உள்ள பழமையான தேவாலயங்களில் ஒலிக்கும் லத்தீன் மொழியாலான பிரார்த்தனைகளையும், ஒவியம் சிற்பம் என நிரம்பிய கலைநுட்பங்களையும் கண்டிருக்கிறேன். தமிழகத்தில் நான் பார்த்த தேவாலயங்களில் மணப்பாடு, ஒரியூர், செயிண்ட் தாமஸ் மவுண்ட் போன்றவை வியப்பூட்டுபவை.
தேவலாயத்தின் நிசப்தமும் எங்கோ மறைந்திருந்து விட்டுவிட்டுக் கேட்கும் புறாக்களின் விம்மல் ஒலியும் எனக்குப் பிடித்தமானது. அதிலும் பிரார்த்தனைக்கான மணிசப்தத்தை தொலைதூரத்திலிருந்து கேட்கும் போது மனதைக் கிறக்க கூடியது.
இடைக்காட்டூர் தேவாலயம் அதன் தோற்றத்திலே தனித்துவானதாகயிருந்தது. பாரீஸில் உள்ள புகழ் பெற்ற நார்ட்டர்டாம் தேவாலயத்தைப் போன்று அதே வடிவத்தில் உருவாக்கபட்டிருக்கிறது என்று சொல்லியபடியே இந்த தேவாலயத்தைக் கட்ட காரணமாக இருந்தவர் அருட்தந்தை பெர்டினட் சிலோ என உள்ளே அழைத்துச் சென்றார் சேவியர்.
சிவப்பும் நீலமுமான கண்ணாடிகள் பதிக்கபட்ட சுவர்கள். அந்த கண்ணாடியில் வரையப்பட்ட ஒவியங்கள். இத்தாலியில் இருந்து கொண்டு வரப்பட்ட பியானோ மற்றும் இசைக்குறிப்புகள். இசை வாசிப்பவர்களுக்கான தனியான மேடையமைப்பு. இத்தாலிய கலை வேலைப்பாடுடன் அமைந்த கோதிக் வகை கட்டிடம்.
நான் சென்ற காலைப்பொழுதில் தேவாயலத்தில் பிரார்த்தனைக்காக எவருமில்லை. பிரம்மாண்டமான அந்தப் பிரார்த்தனை மண்டபத்தினுள் அணில் ஒன்று மரத்திலிருந்து இறங்கி உள்ளே ஒடிக் கொண்டிருந்தது. ஆயிரம் பேர்களுக்கும் மேல் ஒரே நேரத்தில் பிரார்த்தனை செய்யக்கூடிய சபையாக இருந்தது. இவ்வளவு சிறிய சிற்றூரில் எப்படி வியக்கதக்க தேவாலயத்தை உருவாக்கினார்கள் என்ற பிரமிப்பு ஏற்பட்டது
சிறகு விரித்தபடியே மௌனமாக நிற்கும் தேவதைகள். நம்மை உற்று நோக்கி கொண்டிருக்கும் புனிதரின் அசைவற்ற விழிகள். அணைந்து போன மெழுகுவர்த்தியில் பாதி ஒழுகி உறைந்து போன மெழுகுசொட்டு. கண்ணாடியின் வழியே ஊடுருவிப் பாயும் வெயில். அகன்ற கதவுகள். ஜன்னல்கள். எங்கிருந்தோ கசிந்து வரும் தூபத்தின் நறுமணம். மணிமாலைகள், பூ வேலைப்பாடுகள். தங்க நிற ஒளிர்வு கொண்ட வண்ணப் பூச்சுகள்
தேவாலயத்திலிருந்த ஒவ்வொரு கலைப்பொருட்களாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். மதர் ஆப் சாரோ எனப்படும் வேதனை படிந்த சிற்பத்தின் முன் வந்து நின்றபோது பகிர்ந்து கொள்ளப்பட முடியாத துக்கத்தை அதன் முகத்தில் காண முடிந்தது.
1894 ஆண்டு பிரெஞ்சு கிறிஸ்துவ மிஷனரி இந்த தேவலாயம் உருவாக்கப்பட வேண்டும் என்ற முயற்சியைத் துவக்கியது. ஆனால் போதுமான நிதி ஆதாரம் கிடைக்கவில்லை. இதனால் பெர்டினட் தனது சொந்த ஊரான பிரான்சிற்குச் சென்று அங்கே மேரி ஆன் என்ற பணக்கார சீமாட்டியிடம் நிதி உதவி பெற்று இந்த தேவாலயத்தை உருவாக்கியிருக்கிறார். புரவலரான மேரி ஆனின் உருவச்சிலை ஒன்றும் அங்கே காணப்படுகிறது.
என்னை வியப்படைய வைத்தது எப்படி நாட்டர் டாம் தேவாலயத்தை இங்கே அப்படியே அதன் உருமாறாமல் கட்ட முடிந்தது என்பதே. அதைப்பற்றி என் நண்பர் அங்கிருந்த போதகரிடம் விசாரித்த போது நாட்டர்டாம் தேவாலயத்தின் கோட்டோவியங்களைக் காட்டி அது போல உருவாக்கப்பட வேண்டும் என்று மிஷனரி முடிவு செய்தது. அந்தச் சித்திரத்தைப் பார்த்து அப்படியே உருவாக்கியவர்கள் மதுரையை சுற்றியிருந்த கட்டிடக்கலைஞர்கள் தான் என்றார்.
ஆச்சரியம் அடைய வேண்டியது மதுரை கட்டிடக்கலைஞர்களின் கலைத்திறன் தான். எவ்விதமான அளவுகளும் இன்றி வெறும் கோட்டோவியங்களைப் பார்த்து அது போலவே மறுபடியும் புதிதாக ஒரு தேவாலயத்தை உருவாக்க முடிகின்ற கலைஞர்கள் நம்மோடு வாழ்ந்திருக்கிறார்கள். அதன் சாட்சியே இந்த தேவாலயம். யோசிக்கையில் அந்த கலைநுட்பம் இன்று எங்கே போய்விட்டது என்று ஆதங்கமாகவும் இருந்தது.
எனக்குப் பாரீஸில் உள்ள நாட்டர் டாம் தேவாலயத்தை மிகவும் பிடிக்கும். அது பிரெஞ்சு மன்னர்கள் முடிசூட்டிக் கொள்ளும் பராம்பரியமிக்க தேவாலயம். அதனுள்ளே காணப்படும் சிற்பங்களும் ஒவியங்களும் வெகு சிறப்பானவை.
நாட்டர்டாம் தேவாலயத்திற்கு இன்னொரு சிறப்பு . அதை யைமயமாக் கொண்டு விக்டர் க்யூகோ The Hunchback of Notre Dame, என்றொரு நாவலை எழுதியிருக்கிறார். தேவாலயத்தின் பிரம்மாண்டமான மணியை அடிக்கும் முதுகு திமில் போல் வளைந்து போன க்வாசிமோடோ என்பவன், அநியாயமாகத் தண்டிக்கபட இருந்த ஜிப்சி பெண்ணான எஸ்மரல்டாவைத் தூக்கி வந்து தேவாலயத்தின் உள்ளே ஒளித்து வைத்து காப்பாற்றி, அவள் அறியாமல் அவளைக் காதலிக்கும் கதை. முடிவில் அந்தப் பெண்ணிற்காக அவன் பலியாகிறான். இந்தப்படத்தை தழுவி தமிழில் மணியோசை என்ற கல்யாண்குமார் நடித்தபடம் வெளியாகி உள்ளது.
க்யூகோவின் நாவல் தேவலாயத்தின் சுவரில் எழுதப்பட்ட ஒரு வாசகத்தை மையமாக கொண்டு உருவாக்கபட்டிருக்கிறது. அதை எழுதியது யார் என்று இதுவரை தெரியாது. ஆனால் விக்டர் க்யூகோ தனது கற்பனையால் சிறந்த காதல்கதை ஒன்றை உருவாக்கியிருக்கிறார். இந்த நாவல் மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு உலகின் சிறந்த நாவல் வரிசையில் இன்றும் இடம்பிடித்திருக்கிறது
க்யூகோ தேவாலயத்தின் சின்னஞ்சிறு பூவேலைப்பாடுகள் உள்ளிட்ட அத்தனை தகவல்களையும் நுட்பமாகத் தனது நாவலில் விவரித்திருப்பார். திருடர்கள். பிச்சைகாரர்கள். பகட்டுகார்கள். சந்தை வணிகர்கள், கள்ளப்பாதிரிகளின் உலகம். வேசைகளின் மீதான வன்முறை, தான் அழகில்லை என்று வருந்துபவனின் அகவுலகம் என்று நாவல் அடுக்கு அடுக்காக விரிந்து செல்லக்கூடியது.
இந்த நாவலை வாசித்து விட்டு அதில் குறிப்பிட்டப்பட்டுள்ள ஒவ்வொரு இடமும் எங்கே உள்ளது என்று பார்ப்பதற்காகவே தேவாலயத்திற்கு வருபவர்கள் இன்றுமிருக்கிறார்கள்.
The Hunchback of Notre Dameமை ஹாலிவுட்டில் படமாக்கினார்கள். அதில் ஆன்டனி குயின் கூனனாக நடித்திருப்பார். உமர் முக்தார் ஆன்டனி குயினின் சாகச நடிப்பிற்கு உதாரணம் என்றால் இப்படம் அவரது செவ்வியல் நடிப்பிற்கு உதாரணம்.
தேவாலயத்தை அப்படியே ஸ்டுடியோவில் உள்அரங்கமாக அமைந்துப் படமாக்கியிருப்பார்கள். குறிப்பாக தேவாலயத்தின் பெரிய மணியில் ஆன்டனி குயின் தொங்கி ஊஞ்சலாடியபடியே தனது காதலை எண்ணி மகிழும் காட்சியும். தன் காதலியை தன்னிடமிருந்து பிரித்துவிடுவார்களோ என்று கொள்ளும் ஆவேசமும், பிண்ணனி இசையும் மறக்க முடியாதது. கறுப்புவெள்ளைத் திரைப்படங்களில் இது ஒரு காவியம் என்ற சொல்வேன்.
இடைக்காட்டூர் தேவாலயத்தில் இருந்த போது மனதில் நாட்டர்டாமின் நினைவுகள் ஊடுகலந்து சென்றன. பிறகு அங்கிருந்து புறப்படும் போது நாட்டர்டாம் தேவாலயத்தைப் போன்று இங்கும் பெரிய மணி வைக்கபடவில்லையா என்று கேட்டேன்
அதற்கு நண்பர் அப்படியொரு மணி இங்கும் பொருத்தபட்டிருந்தது. பின்னாளில் அது சிவகங்கை கொண்டு செல்லப்பட்டுவிட்டது. அந்த நாட்களில் இந்தப் பகுதியில் அந்த மணியோசை மிக பிரபலமானது, இப்போது உள்ளது அவ்வளவு பெரிய மணியல்ல என்றார்
சிற்பங்களும் ஒவியங்களும் கோவில்களில் மட்டுமில்லை. தேவாலயங்களிலும் நிறைந்து காணப்படவே செய்கின்றன. பிரான்சில் உள்ள தேவாலயங்களில் உள்ள கண்ணாடி வேலைப்பாடுகளுக்கு சற்றும் குறைவில்லாதது இடைக்காட்டூர் தேவாலய ஒவியங்கள்.
பிரார்த்தனைக்கு மட்டுமே செல்லாமல் ஒரு நாள் ஒதுக்கி ஒவ்வொரு சுவரிலும் ஒவ்வொரு கண்ணாடியிலும் தீட்டப்பட்ட ஒவியங்களை, சிற்பங்களை நுணுக்கமாக நின்று நிதானித்து காணும் போது தான் காலம் கடந்து நிற்கும் அதன் சிறப்பும் தனித்துவமும் புரியும். விருப்பமிருந்தால் சென்று பாருங்கள்.