போர்க்களத்தில் ஒரு பயணம்.

நேற்றிரவு ஐமாக்ஸ் திரையரங்கில் 1917 திரைப்படம் பார்த்தேன். முதல் உலகப்போரின் போது யுத்தமுனைக்கு அவசரச் செய்தி ஒன்றினை கொண்டு செல்லும் இரண்டு ராணுவ வீரர்களின் பயணமே திரைப்படம். பத்து வரிக்குள் அடங்கிவிடும் கதையது. ஆனால் அதைப் படமாக்கிய விதம் மிகப்பிரம்மாண்டமாக உருமாறியுள்ளது.

முதலாம் உலகப் போரின் கொந்தளிப்பின் மத்தியில் பிரிட்டிஷ் மற்றும் ஜெர்மன் துருப்புக்களைப் பிரிக்கும் வடக்கு பிரான்சிலுள்ள No mans land சுற்றியே கதை நடைபெறுகிறது. இரண்டு இளம் ராணுவ வீரர்களான பிளேக் மற்றும் ஸ்கோஃபீல்ட் எதிரிகளின் பிரதேசத்தின் வழியாக மேற்கொள்ளும் ஒரு பயணமே படத்தின் கதைச்சரடு.

ஹாலிவுட்டில் ஆண்டுத் தோறும் ஏதோவொரு யுத்த பின்புலப்படம் கவனம் பெறுவது வழக்கம். பெரும்பாலும் அது பிரிட்டன் அல்லது அமெரிக்க ராணுவம் குறித்த களமாகவே இருக்கும். இந்த வகைத் திரைப்படங்களுக்கு என ஒரு டெம்பிளேட் உள்ளது. அதைக் கச்சிதமாக ஹாலிவுட் உருவாக்குவது வழக்கம். ஆனால் 1917 இந்த டெம்பிளேட்டிலிருந்து விலகிய திரைக்கதை அமைப்பைக் கொண்டிருக்கிறது. பெரிய திருப்பங்கள். தியாகங்கள். தேசபக்தி முழக்கங்கள் இதில் கிடையாது.

ஒட்டு மொத்த திரைப்படத்தையும் தனது ஒளிப்பதிவின் மூலம் தூக்கி நிறுத்தியிருப்பவர் ரோஜர் டீகன்ஸ். உலகின் மிகச்சிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான டீகன்ஸ் தனது ஒவ்வொரு படத்திற்கும் ஒரு ஓவியரை முதன்மையான வழிகாட்டியாகக் கொள்ளக்கூடியவர்.

ஒவியக்கல்லூரியில் பயின்ற ரோஜர் ஓவியங்களில் இருந்தே தனது வண்ணத்தையும் ஒளியமைப்பையும் உருவாக்குபவர். வெவ்வேறு ஜானர் திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். குறிப்பாகக் கோயன் சகோதரர்கள், சாம் மென்டிஸ் மற்றும் டெனிஸ் வில்லெனுவே ஆகியோரின் படங்களில் பணியாற்றியதற்காக மிகவும் பிரபலமானவர். அமெரிக்க ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் (A.S.C.) வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற்றுள்ளார்.

The Shawshank Redemption, Fargo, A Beautiful Mind, Fargo Kundun No Country for Old Men The Assassination of Jesse James Skyfall, Sicario, and Blade Runner 2049, போன்றவை அவர் ஒளிப்பதிவு செய்த முக்கியப் படங்கள்.

சிம்பொனி இசைக்கோர்வையைப் போலவே கச்சிதமான ஒருங்கிணைப்பும் நேர்த்தியும் கொண்டதாக ஒளிப்பதிவு செய்பவர் ரோஜர் டீகன்ஸ். யுத்தகாலப் படங்களில் முன்னதாகப் பணியாற்றியிருக்கிறார். ஆகவே 1917 படத்தினை உருவாக்கும் போது பார்வையாளரை யுத்தகளத்தில் ஒருவராக உணரச் செய்ய வேண்டும் என்பதிலே கவனம் கொண்டிருக்கிறார்.

படத்தின் துவக்க காட்சியில் இரண்டு ராணுவ வீரர்களும் சோர்ந்து உறங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை ராணுவத் தலைமை அதிகாரி அழைப்பதாகச் செய்தி வருகிறது. எழுந்து நடக்க ஆரம்பிக்கிறார்கள். கேமிரா அவர்களைப் பின்தொடரத் துவங்குகிறது. இங்கிருந்து படத்தின் கடைசிக் காட்சி வரை கேமிராவோடு நாமும் அவர்களைப் பின்தொடர்கிறோம்.

படத்தின் மையக்கதை படம் துவங்கிய மூன்றாவது நிமிசமே ஆரம்பமாகி விடுகிறது. திரைக்கதை எழுதும் போது கவனிக்க வேண்டிய முக்கிய விஷயமது. படம் எதை நோக்கிச் செல்கிறது என்பது தீர்மானிக்கப்பட்டுவிட்டது. இனி அவர்கள் அந்த இலக்கை அடைவார்களாக எனப் பார்வையாளர்கள் காத்திருக்கத் துவங்குவார்கள். அது தான் இயக்குநர் கொண்டுள்ள விருப்பம்.

வழக்கமான யுத்த பின்புலத் திரைப்படங்களைப் போலத் திடீர் திருப்பங்கள். சாகச நிகழ்வுகள் இந்தப் படத்தில் இல்லை. பிளாஷ் பேக். பிளாஷ் கட் என எங்கேயும் படம் பின்னோக்கிப் போகவில்லை. நேர்கோட்டில் கதையின் நாயகர்களைப் பின்தொடர்ந்து செல்கிறது.

யுத்தவெளி தான் படத்தின் முக்கிய மையம். எரிந்து போன உடல்கள். கைவிடப்பட்ட இடிபாடுகள். ஆள் அற்ற பதுங்கு குழிகள். இறந்து கிடக்கும் குதிரையின் மீது மொய்க்கும் ஈக்கள். செத்துப்போன நாயின் உடல். வெறித்த பார்வையுடன் செல்லும் ராணுவ வீரர்கள். நதியில் மரக்கட்டைகளைப் போல ஒதுங்கி கிடக்கும் மனித உடல்கள். பற்றி எரியும் நகரம் என யுத்தம் எவ்வளவு பெரிய அழிவை , உயிரிழப்பை உருவாக்குகிறது என்பதைப் படம் அழுத்தமாகச் சுட்டிக்காட்டுகிறது.

இந்த இடிபாடுகளுக்குள், அழிவிற்குள் ஆங்காங்கே காட்டப்படும் சில அபூர்வ காட்சிகளாகக் காலியான படுக்கை ஒன்றில் ஒட்டப்பட்டுள்ள சிறுவனின் புகைப்படம். ராணுவ வீரன் தன்னோடு வைத்துள்ள அம்மாவின் புகைப்படம், செர்ரி மலர்கள் பூத்துள்ள இடம், வீடு திரும்புவதைப் பற்றிய ராணுவ வீரனின் பாடல். பற்றி எரியும் தேவாலயத்தின் பின்புலத்தில் அறியாக் குழந்தையின் கைவிரல்களைப் பற்றிக் கொண்டு பேசும் காட்சி எனப் படம் உணர்ச்சிகளைக் கட்டுக்குள்ளாகவே வெளிப்படுத்துகிறது.

ரோஜர் டீக்கன்ஸின் ஒளிப்பதிவில் வெளிப்படுவது வீடியோ கேமில் வெளிப்படும் விளையாட்டு சாகசத்திற்கும் நிஜமான யுத்தகள அனுபவத்திற்கும் இடைப்பட்ட நிலை. சில காட்சிகளில் நாம் ஒரு துர்கனவின் வெளிப்பாட்டினை போலக் காட்சிகளைக் காணுகிறோம். குறிப்பாகத் தேவாலயம் ஒன்று தாக்குதலில் தீப்பற்றி எரியும் காட்சியில் வானத்தில் ஒளி பீறிடுவதும் முற்றிலும் இருண்டு மறைவதுமாக இருப்பது ஊழிக்காலத்தின் தோற்றம் போலவே அடையாளப்படுத்தப்படுகிறது

ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட படம் போலப் படத்தொகுப்பில் இணைக்கப்பட்டிருக்கிறது என்பதே படத்தின் சிறப்பு.

படத்தின் இறுதி காட்சியில் ஸ்கோஃபீல்ட் தாக்குதலில் தப்பியோடி பாதாள அறைக்குள் நுழைகிறான், அங்கு ஒரு குழந்தையுடன் ஒரு இளம் பெண்ணைக் கண்டுபிடிக்கிறான். அந்த அறையின் மூலையில் ஒரு கொதிகலனிலிருந்து வெளிப்படும் வெளிச்சமும் அந்தப் பெண் கன்னிமேரியின் சாயலுடன் அடையாளப்படுத்தப்பட்டிருப்பதும் அற்புதம்

படத்தின் ஒரு காட்சியில் இந்திய வீரன் ஒருவன் ராணுவ வாகனத்தில் பயணிக்கிறான். முதல் உலகப்போரில் இந்தியர்களும் கலந்து கொண்டார்கள் என்பதன் அடையாளம் போலவே இக்காட்சி வெளிப்படுகிறது.

ஸ்கோஃபீல்டு நதியில் நீந்திச் சென்று உயரத்திலிருந்து தாவி விழும் போது கேமிரா கூடவே சுழலுகிறது. நீரின் ஓட்டத்துடன் கேமிரா இணைந்து பயணிக்கிறது.

கடைசியில் பிளேக்கின் சகோதரனைச் சந்தித்து ஸ்கோஃபீல்ட் உரையாடும் காட்சி மறக்கமுடியாதது.

படத்தின் இசை மற்றும் ஒலியமைப்பு மிகச்சிறப்பாகக் கையாளப்பட்டுள்ளது. அதுவும் ஐமாக்ஸ் அரங்கில் திரைப்படத்தைக் காணும் போது ஒலியமைப்பின் நேர்த்தியை முழுமையாக உணர முடிகிறது.

ஆந்த்ரே தார்கோவஸ்கியின் Ivan’s Childhood படம் பாருங்கள். அதிலும் யுத்தகளமே பின்புலம். ஆனால் அதை எவ்வளவு மகத்தான கலைப்படைப்பாகத் தார்கோவஸ்கி உருவாக்கியிருப்பார் என்பது புரியும். 1917 அது போன்ற கலைப்படைப்பாக வெளிப்படவில்லை. வணிகச் சுவாரஸ்யங்களின் எல்லைக்குள் நின்றுவிட்டது. அது தான் 1917க்கும் Ivan’s Childhoodக்குமான இடைவெளி.

1917 மிகச்சிறந்த படமில்லை. ஆனால் அது படமாக்கப்பட்டிருக்கும் விதம் வியக்க வைக்கக்கூடியது. Roger Deakins இப்படத்திற்காக மீண்டும் ஒரு ஆஸ்கார் விருது பெறக்கூடும் என்றே தோன்றுகிறது.

0Shares
0