போர்ஹெஸின் பயணம்.

அமெரிக்க எழுத்தாளரான ஜெய் பரினி இதுவரை எட்டு நாவல்களை எழுதியுள்ளார், டால்ஸ்டாய் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு இவர் எழுதிய தி லாஸ்ட் ஸ்டேஷன் நாவல் திரைப்படமாக வெளிவந்துள்ளது.

நாவல் மற்றும் திரைப்படம் இரண்டும் மிகச்சுமாரானவை என்றே சொல்வேன். இரண்டிலும் டால்ஸ்டாயின் ஆளுமையும் வாழ்க்கை நிகழ்வுகளும் சரியாக வெளிப்படவில்லை.

ஸ்டீன்பெக், வில்லியம் பாக்னர், ராபர்ட் பிராஸ்ட் போன்ற புகழ்பெற்ற எழுத்தாளர்களின் வாழ்க்கை வரலாற்றை ஜெய் பரினி எழுதியிருக்கிறார். தகவல் துணுக்குகள் என்பதைத் தாண்டி இந்த வாழ்க்கை வரலாற்று நூல்களில் அசலான பார்வைகளோ, மதிப்பீடுகளோ எதுவுமில்லை.

இவர் எழுதிய Borges and Me: An Encounter என்ற புத்தகத்தைச் சமீபத்தில் வாசித்தேன். போர்ஹெஸ் பற்றிய புதிய நூல் என்பதோடு அவரது ஸ்காட்லாந்து பயணம் பற்றிய முக்கியமான பதிவு என்று இலக்கிய இதழ் ஒன்றில் பாராட்டு வெளியாகியிருந்தது. ஆகவே இதைப் படிப்பதற்கான ஆசை கொண்டு உடனே வாங்கினேன்.

ஜெய் பரினி ஸ்காட்லாந்தில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டிருந்த நாட்களில் போர்ஹெஸைச் சந்தித்து ஒன்றாகப் பயணம் செய்திருக்கிறார். அந்த அனுபவத்தை இதில் விவரித்திருக்கிறார்

போர்ஹெஸின் தாய்வழி பாட்டி ஒரு ஆங்கிலப் பெண்மணி. ஆகவே அவரது வம்சாவளியில் ஆங்கிலப் பராம்பரியமுள்ளது. போர்ஹெஸ் பள்ளியில் சேர்க்கப்பட்ட போது கூட ஆங்கிலம் தான் முதலில் படித்திருக்கிறார். தனது குடும்ப, மற்றும் இலக்கிய வேர்களைத் தேடிக்காண வேண்டும் என்ற போர்ஹெஸின் விருப்பம் அவரை ஸ்காட்லாந்திற்குப் பயணம் செய்த வைத்தது.

கவிஞரும் மொழிபெயர்ப்பாளருமான அலீஸ்டர் ரீட் அழைப்பின் பெயரில் போர்ஹெஸ்  விருந்தினராக வந்திருந்தார்.

1970களில் தனது முனைவர் பட்டட ஆய்விற்காக ஸ்காட்லாந்தில் வசித்த ஜெய் பரினி நண்பரான ரீடின் அழைப்பின் பெயரில் போர்ஹெஸை சந்தித்து உரையாடியிருக்கிறார். முதல் சந்திப்பின் போது அவருக்குப் போர்ஹெஸ் குறித்து எதுவும் அறிந்திருக்கவில்லை. ஸ்பானிய இலக்கியம் குறித்தோ, போர்ஹெஸின் கவிதைகள். கதைகள் குறித்தோ எதுவும் அறியாத பரினி அவரைச் சந்தித்து உரையாடுகிறார்.

முதல் சந்திப்பிலே போர்ஹெஸ் அவரது பெயரிலுள்ள பரினி என்பது கியூசெப் பரினி என்ற இத்தாலியக் கவிஞரின் பெயர் என்பதை நினைவுபடுத்துவதோடு நியோகிளாசிக் காலத்தின் கவிஞரான பெரினியின் கவிதைகளை மனப்பாடமாகச் சொல்கிறார். பெரினிக்கு இந்தக் கவிதைகள் எதுவும் தெரியவில்லை என்பதிலிருந்தே அவரது இலக்கிய ஈடுபாடு  எந்த அளவானது என்பது நமக்குப் புரிந்துவிடுகிறது.

பரினியோடு போர்ஹெஸ் முதல் சந்திப்பிலே நிறையப் பேசுகிறார். படித்த புத்தகங்களை நினைவு கொள்கிறார். கவிதையினைக் கொண்டாடுகிறார். மொழி ஆராய்ச்சி செய்கிறார். இதை வெறுமனே வேடிக்கை பார்த்தபடியே இருக்கிறார் பரினி. இவ்வளவிற்கும் அவர் ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் மேற்கொள்கிறவர். ஒரு கவிஞர். பாவம் போர்ஹெஸ் என்றே தோன்றியது.

தனது குடும்பத்தில் ஏற்பட்ட அவசர வேலை காரணமாக அலீஸ்டர் ரெய்ட் லண்டனுக்குப் போக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால் அவர் திரும்பி வரும் வரை போர்ஹெஸை கவனித்துக் கொள்ளுமாறு பரினியிடம் வேண்டுகிறார். அதை ஏற்றுக் கொண்ட பரினி போர்ஹெஸின் பாதுகாவலராக அவருடன் சேர்ந்து தங்குகிறார் இருவரும் சாலைவழியாக ஸ்காட்லாந்தின் மலைப்பிரதேசத்தைக் காணச் செல்கிறார்கள். இந்தப் பயணச்செலவு முழுவதையும் தானே ஏற்றுக் கொள்வதாகப் போர்ஹெஸ் சொல்கிறார். பரினியின் காரில் அவர்கள் நீண்ட பயணம் மேற்கொள்கிறார்கள்

வழியில் இருவருக்குள்ளும் நடந்த இலக்கிய உரையாடல்கள். போர்ஹெஸ் தங்கிய விடுதி. அவரது நண்பரைச் சந்திக்கச் சென்ற நிகழ்ச்சி. ஸ்காட்லாந்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களைக் கண்ட அனுபவம் யாவற்றையும் தொகுத்து பரினி எழுதியிருக்கிறார்

புத்தகம் முழுவதும் பரினியின் கற்பனையால் எழுதப்பட்டிருக்கிறது. இதில் வரும் போர்ஹெஸ் வாய் ஓயாமல் பேசும் கிழவராகச் சித்தரிக்கப்படுகிறார். தோற்றுப்போன நடிகர்கள் தனது கடந்தகாலத்தை நினைவுபடுத்தி நாடகமேடை வசனங்களைப் பேசிக்காட்டுவது போல அவரது உரையாடல்களைப் பரினி எழுதியிருக்கிறார்.

மொத்த உரையாடலும் பரினி நினைவிலிருந்து எழுதியது என்று பின்னுரையில் குறிப்பிடுகிறார். ஆனால் இது போர்ஹெஸின் பல்வேறு நேர்காணல்கள் மற்றும் கட்டுரைகளை வாசித்துவிட்டு அவற்றையெல்லாம் தன்னிடம் போர்ஹெஸ் பேசினார் என்பது போலக் கற்பனையாக எழுதப்பட்டிருக்கிறது என்பதை எளிதாக அறியமுடிகிறது. பரினி ஒரு திறமையில்லாத மூன்றாம் நிலை எழுத்தாளர். அவரது கவிதைகளும் நாவலும் கூட அத்தகையதே. அதன் வெளிப்பாடே இந்த நூலின் அசட்டுத்தனங்கள்.

போர்ஹெஸிற்கு உலக அளவில் உள்ள புகழைப் பயன்படுத்திக் கொள்ள இப்படியொரு கற்பனையான நினைவுகொள்ளுதலை பரினி மேற்கொண்டிருக்கிறார். வெறும் விற்பனை தந்திரம் என்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை

அவர் ஜோர்ஜ் லூயி போர்ஹெஸ் உடன் ஒருவார காலப்பயணம் மேற்கொண்டது உண்மை. அந்தப் பயணத்தில் அவர்கள் தங்கிய இடங்கள் யாவும் உண்மை. ஆனால் போர்ஹெஸ் அவரிடம் பேசிய விஷயங்கள் யாவும் பரினியின் கற்பனை.

போர்ஹெஸிற்கு விருப்பமான ஆங்கிலோ சாக்சன் கவிதைகள். மொழியியல் ஆய்வு. செர்வாண்டிஸ். ஆர். எல். ஸ்டீவன்சன், ஷேக்ஸ்பியர். அரேபியன் நைட்ஸ், வழிப்பறிக்கொள்ளையர்களின் கதை, என்சைக்ளோபீடியா மீதான தீவிர ஈடுபாடு இவற்றையெல்லாம் சாதுர்யமாகத் தனது உரையாடலுக்குள் பொருத்தியிருக்கிறார் பரினி. அது செயற்கையாக இருக்கிறது

போர்ஹெஸிடம் வெளிப்படும் ஞானமோ, கவித்துவமான வெளிப்பாடோ எதுவும் இந்த நூலில் காணப்படவில்லை. Borges at eighty என்ற அவரது நேர்காணல்களின் தொகுப்பினையோ அல்லது Osvaldo Ferrarri நிகழ்த்திய நேர்காணல் தொகுப்பான Conversations – 3 volumes, வாசித்தவர்களுக்குப் போர்ஹெஸ் உரையாடும் முறையும் அவரது மொழியும் எளிதாக அடையாளம் காணமுடியும்.

போர்ஹெஸை நினைவு கொள்ளும் இந்தப் புத்தகத்தில் முதல் நூறு பக்கங்கள் பரினி தனது சொந்தவாழ்க்கையினை நினைவு கூர்ந்திருக்கிறார். இந்த நூலுக்குத் தேவையற்ற விஷயங்கள். பரினி வாழ்க்கையில் சொல்லிக் கொள்ளும்படி எதுவும் நடக்கவுமில்லை. பத்தாவது அத்தியாயத்தில் தான் போர்ஹெஸை சந்திக்கிறார்.

புத்தகம் முழுவதும் போர்ஹெஸ் பார்வையற்றவர் என்பதைத் தேவையற்று பல இடங்களில் வலிந்து குறிப்பிடுகிறார். நிறைய நேரங்களில் பார்வையின்மையைக் கேலி செய்வது போலவும் எழுதியிருக்கிறார். அது உறுத்தும்படியாக உள்ளது.

இரவில் மூத்திரம் பெய்வதற்காக அடிக்கடி போர்ஹெஸ் எழுந்து சென்றது அவர்கள் தங்கிய வீட்டு உரிமையாளரான பெண்ணிற்கு எவ்வளவு இடையூறாக இருந்தது என்பதைப் பெரிய நகைச்சுவை சம்பவம் போல விரிவாக எழுதியிருக்கிறார். இது பரினியின் அசட்டுத்தனம் என்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை

போர்ஹெஸின் உரையாடல்களில் பரினி பங்குபெறவேயில்லை. மொத்த புத்தகத்தை வாசித்து முடிக்கும் போது பரினி ஆழ்ந்த இலக்கிய வாசிப்பு எதுவுமின்றி வெறும் பெயர்களை உதிர்க்கும் மனிதர் என்பதைத் தெளிவாக உணர முடிகிறது

போர்ஹெஸ் நூலகத்திற்குச் செல்லும் பகுதி ஒன்று தான் படித்தவரை நன்றாக இருந்தது. அதில் கடவுள் தான் உலகின் முதல் நூலகர் என்கிறார் போர்ஹெஸ். தான் அர்ஜென்டினா நூலகத்தின் இயக்குநராகப் பணியாற்றிய நாட்களை நினைவுகூறுகிறார்.

போர்ஹெஸ் பற்றிய புதிய நூல் என்பதால் இதை வாசிக்க ஆர்வம் கொண்டு வாங்கியிருந்தேன். ஏமாற்றமான அனுபவத்தையே தந்தது. போர்ஹெஸ் பற்றிய செய்தி துணுக்குகளைத் தவிர வேறு உருப்படியாக எதுவுமில்லை.

இந்தப் புத்தகம் படித்த சலிப்பிற்குப் பிராயச்சித்தமாக எழுத்தாளர் பெர்னான்டோ சொரண்டினோ போர்ஹெஸை நேர்காணல் செய்த Seven Conversations with Jorge Luis Borges – Fernando Sorrentino எடுத்துப் படிக்க ஆரம்பித்தேன். மிகச்சிறப்பான நேர்காணல்களின் தொகுப்பிது.

Before I ever wrote a single line, I knew, in some mysterious and therefore unequivocal way, that I was destined for literature.
What I didn’t realize at first is that besides being destined to be a reader, I was also destined to be a writer, and I don’t think one is less
important than the other.

என இந்த நேர்காணலில் போர்ஹெஸ் குறிப்பிடுகிறார். வாசகராகவும் எழுத்தாளராகவும் அவர் நம்மை எப்போதும் வியக்க வைக்கிறார் என்பதே நிஜம்.

••

0Shares
0