போலி மகள்

பெரிமேஸன் துப்பறியும் போலி மகள் என்ற புத்தகத்தைப் பழைய புத்தகக் கடையில் வாங்கினேன்.

இந்நாவலைத் தமிழாக்கம் செய்தவர்கள் பெரிமேஸன் என்ற பெயரை மட்டும் அப்படியே வைத்துக் கொண்டு மற்ற எல்லாக் கதாபாத்திரங்களின் பெயர்களுக்கும் தாங்களே புதிய பெயர் கொடுத்திருக்கிறார்கள். இன்றைக்கு வெளியாகும் டப்பிங் படங்களைப் போன்ற டப்பிங் நாவல் போலும்.

நான்சி என்ற பெண்ணின் பெயரை யசோதா என மாற்றியிருக்கிறார்கள். ஸ்டீவ் என்ற கதாபாத்திரத்திற்குப் பெயர் மோகனசுந்தரம், ஜான் என்பதற்கு மல்லையா, மன்றோ என்பதற்குச் சங்குண்ணி மேனன். ( இப்படி ஒரு பெயரை எதற்கு வைத்தார்கள் என்று வியப்பாகவே இருக்கிறது.) பவுல் என்ற இன்னொரு துப்பறியும் நிபுணரின் பெயர் அர்ஜுன் சிங். பெரிமேஸனின் உதவியாளர் பெயர் உஷா தேவி.

இப்போது  பெரிமேஸன் நாவல்களைத் தமிழில் யாரும் வாசிக்கிறார்களா தெரியவில்லை. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு பெரிமேஸன் துப்பறியும் நாவல்கள்  மிகப் பரபரப்பாக விற்பனை ஆகியிருக்கின்றன..

மர்மக் கொலையும் மறைந்த கிளியும் , காணாமல் போன பணம், பாதாளத்தில் விழுந்த பாவைகள், வெறி பிடித்த மனித ஒநாய். இரட்டை கொலை வழக்கு, மங்கையைச் சூழ்ந்த மர்மம் என எர்ல் ஸ்டான்லி கார்டனர் நாவல்களைத் தமிழாக்கியிருக்கிறார்கள். இப்போது பழைய புத்தகக் கடைகளில் இவை பத்து ரூபாய்க்குக் கிடைக்கின்றன

ஸ்டான்லி கார்டனர் ஒரு வழக்கறிஞர். தனது அனுபவத்தில் கண்ட குற்றவாளிகளை, கொலை வழக்குகளை முன்வைத்து கற்பனையான துப்பறியும் நாவல்களை எழுதியிருக்கிறார். தடயவியல் சார்ந்த திறமை அவருக்குண்டு என்பதால் அந்த விஷயங்களை நாவலில் நுணுக்கமாக எழுதியிருக்கிறார்.

அமெரிக்காவில் இவரது புத்தகங்களை வெளியிட்ட பாக்கெட் புக்ஸ் இவரால் கோடீஸ்வரர்கள் ஆனார்கள் . காரணம் இவரது ஒரு துப்பறியும் நாவல் எட்டு மணிநேரத்திற்கு இரண்டாயிரம் புத்தகங்கள் வீதம் விற்றுச் சாதனை புரிந்திருக்கிறது.  இந்த விற்பனை வருடம் முழுவதும் இதே பரபரப்பில் தொடர்ந்தது தான் ஆச்சரியம்..

இவரது துப்பறியும் நாவல்கள் 20 மொழிகளில் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டிருக்கின்றன. தொலைக்காட்சித் தொடராகவும், திரைப்படமாகவும் வந்து பெரும் புகழ் பெற்றிருக்கின்றன.

புத்தகங்களின் வழியே தனக்குக் கிடைத்த பெரும்பணத்தைக் கொண்டு ஸ்டான்லி கார்டனர் மூவாயிரம் ஏக்கர் எஸ்டேட் ஒன்றை விலைக்கு வாங்கிக் கொண்டு உல்லாசமாக வாழ்க்கையைக் கழித்திருக்கிறார். கதை எழுதுவதற்கு முன்பு இவருக்குச் சொந்தமாக சிறிய அறை கூடக் கிடையாது. காரில் இணைக்கப்பட்ட டிரயிலரில் தான் வசித்திருக்கிறார்.

ஸ்டான்லி கார்டனர் கையால் எதையும் எழுத மாட்டார். மொத்தக் கதையையும் பேசி டேப்ரிக்கார்டரில் பதிவு செய்துவிடுவார். பின்பு அதைக் கேட்டு உதவியாளர்கள் டைப் செய்து கொடுப்பார்கள் . அப்படித்தான் அவரது நாவல்கள் எழுதப்பட்டன.

கிரிமினல் லாயர் என்பதால் வழக்கறிஞரின் கோணத்தில் சாட்சியங்கள். குற்றப்பின்புலம் போன்றவற்றைத் துல்லியமாக விவரித்திருக்கிறார். இவர் உருவாக்கிய புகழ்பெற்ற கதாபாத்திரமே பெரிமேஸன்..

போலிமகள் என்ற நாவல் ஆங்கிலத்தில் The Case of the Duplicate Daughter என வெளியாகியுள்ளது.

முதல் அத்தியாயத்தில் ரேணுகா ஸ்டவ் பற்ற வைத்துத் தோசை சுட ஆரம்பிக்கிறாள். திருமலை தோசைக்காகக் காத்திருக்கிறார். தோசைக் கல் சூடேற நேரமாகிறது. திருமலைக்கு நெய் தோசை தான் பிடிக்கும். இன்றைக்குக் கூடுதலாக இரண்டு தோசை வேண்டும் எனக் கேட்கிறார். இது அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது என்று  வர்ணனை நீள்கிறது.

ஆங்கிலத்தில் Muriell’s father, Carter Gilman, was hungry this morning and had asked for another egg and a slab f the homemade venison sausage. என உள்ளதைத் தான் நெய் தோசையாக மாற்றியிருக்கிறார்கள்.

யார் இந்த நாவலை மொழிபெயர்த்தவர் எனத் தெரியவில்லை. நாவல் 1968ல் வெளியாகியுள்ளது. எவரது பெயரும் நாவலின் முகப்பில் குறிப்பிடப்படவில்லை. அந்த நாட்களில் கைச்செலவிற்கு பத்து ரூபாய்க் கொடுத்தால் நாவலை மொழிபெயர்த்துத் தருபவர் இருந்திருக்கிறார்.. பதிப்பகத்தார் அவரது பெயரைப் புத்தகத்தில் வெளியிடமாட்டார்கள் என்று கேள்விப் பட்டிருக்கிறேன்.

போலிமகள் நாவலில் ரேணுகாவின் தந்தை திருமலை சுந்தரம் திடீரென மாயமாக மறைந்துவிடுகிறார். அவரைத் தேடிக் கண்டுபிடிக்கப் பெரிமேஸனைத் தொடர்பு கொள்கிறார்கள். அவர் துப்பறியத் துவங்குகிறார்.

முன்னதாகத் திருமலை சுந்தரம் யாரோ ஒருவர் அவரது மனைவியை ப்ளாக்மெயில் செய்வதைப் பற்றி விசாரிக்க பெரிமேஸனை நாடியிருக்கிறார். அப்போது அவரது பெயரை மாற்றிச் சொல்லி அறிமுகமாகியிருக்கிறார். .

திருமலை சுந்தரத்திற்கு முதல் திருமணத்தின் வழியே ஒரு மகள் இருக்கிறாள். அதன்பிறகு இரண்டாம் திருமணம் செய்து கொண்டு அவள் மூலம் ஒரு மகளும் இருக்கிறார். யார் பிளாக்மெயில் செய்கிறார். எதற்காக என விசாரிக்கத் துவங்கி மெல்லக் கதை வேறு ஒரு கொலைக்கும் இதற்குமான தொடர்பைக் கண்டறிவதாக நீளுகிறது.

வழக்கமான துப்பறியும் நாவல்களைப் போல முடிச்சுகளைப் போடுவதும் அவிழ்ப்பதுமாகக் கதை தொடருகிறது

பெரிமேஸன் ரசிகர்கள் இன்றும் இணையத்தில் அவரது நாவல்களைப் பற்றி வியந்து உரையாடிக் கொண்டு தானிருக்கிறார்கள்.

ஆனால் எனக்கு நாவலில் ஒரு சுவாரஸ்யமும் இல்லை. அட்டை தான் அழகாகயிருக்கிறது.

••

0Shares
0