மீனின் பாடல்

உதிரும் இலைகளின் பாடல் என்ற தலைப்பில் சீனக்கவிதைகளை மொழியாக்கம் செய்து வெளியிட்ட ப. கல்பனா தற்போது மலர்கள் விட்டுச்சென்ற வெற்றிடத்தில் எனக் கொரியக்கவிதைகளை மொழிபெயர்த்திருக்கிறார்.

அவரும் புதுவையில் வசிக்கும் பேராசிரியர் பா. இரவிக்குமாரும் இணைந்து கொரியாவின் முக்கியக் கவிஞர்களின் தேர்வு செய்யப்பட்ட கவிதைகளைச் சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார்கள் .பரிசல் பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது.

கொரியக்கவிஞரான கோ யுன் குறித்துத் தடம் இதழில் நான் விரிவான கட்டுரை எழுதியிருக்கிறேன். அந்தக் கட்டுரை தங்களுக்கு ஒரு உந்துதலாக இருந்ததாக ரவிக்குமார் தனது முன்னுரையில் குறிப்பிடுகிறார்.

சமகால உலகக் கவிதைகளில் கொரியாவிற்குத் தனியிடமிருக்கிறது. நாவல்களுக்கு இணையாகக் கவிதை நூல்கள் கொரியாவில் விற்பனையாகின்றன

கோ யுன் தேசியக்கவியாகவே கொண்டாடப்படுகிறார். நூற்றுக்கும் மேற்பட்ட கவிதைத் தொகுப்புகளை எழுதிய கோ யுன் மூன்று முறை நோபல் பரிசிற்குப் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறார்.

அறுபது கவிதைகளை இத்தொகுப்பில் மொழியாக்கம் செய்திருக்கிறார்கள். கவிதைகளைத் தேர்வு செய்த விதமும் மொழியாக்கம் செய்திருப்பதும் சிறப்பாகவுள்ளது.

கொரியக்கவிதைகள் ஒரு புறம் பனியாலும் மலர்களாலும் சூழப்பட்டுள்ளன. மறுபுறம் போராட்டமிக்க சமகால வாழ்க்கை. பிரச்சனைகள். புரட்சி, எனத் தீவிரமாகச் சமூகப்பிரச்சினைகள் குறித்துப் பேசுகின்றன. கொரியாவில் நடந்த ஜப்பானியக் கொடுமையான காலனியாட்சியின் சாட்சியங்களாகக் கொரியக்கவிதைகள் உள்ளன.

இந்தக் கவிதைகளின் வழியே கொரியாவின் பண்பாட்டினையும் அரசியலையும் சமகாலப் பிரச்சனைகளையும் நாம் தெரிந்து கொள்ள முடிகிறது

தமிழின் சங்க கவிதைகளைப் போலவே இயற்கையைப் பாடுவதில் கொரியக் கவிதைகள் தனித்துவமிக்கதாகவுள்ளன.

நினைவென்பது

வெற்று இருக்கையொன்றில் அமர்தல்

மலர்கள் விட்டுச் சென்ற வெற்றிடத்தில் அமர்தல்

என்ற மூன் டே ஜுன் கவிதை மலர்கள் விட்டுச் சென்ற வெற்றிடத்தை நினைவுகள் நிரப்புவதாகச் சொல்கிறது. இந்த வரிகள் மிகுந்த மன எழுச்சி தருகின்றன.. மலர்கள் விட்டுச் சென்ற வெற்றிடம் பற்றிச் சங்க கவிதையிலும் பாடப்பட்டிருக்கிறது. நினைவு எதையோ இட்டு நிரப்புகிறது. நினைவுகள் இல்லாத போது அந்த வெற்றிடம் நம்மைத் துயரப்படுத்தும் என்பதே நிஜம்

இத்தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த கவிதை மீனுக்கும் ஒரு பறவைக்குமான உரையாடலைச் சொல்லும் ஹவாங் பியோங்கின் கவிதையே.

இக்கவிதை இரண்டு காட்சிகளை இடைவெட்டி விவரிக்கிறது. வானில் பறக்கும் பறவைக்கும் தொட்டி தான் உலகம் என வாழும் மீனிற்குமான உரையாடலை நிகழ்த்துகிறது. ஒருவகையில் இது ஆண் பெண் இருவருக்குமான உரையாடலும் தானோ.

பறவை மிக மரியாதையாக மீனிடம் நலம் விசாரிக்கிறது. பறவையின் பாடலே மீனை கவனிக்க வைக்கிறது. பறவையின் கேள்விக்கு மீன் சொல்லும் பதில் இரண்டு நீர்க்குமிழிகள். ஜென்புதிர் போன்றுள்ளது இந்தப் பதில்..

உன்னிடமும் பாடல் உள்ளதா எனப் பறவை கேட்கிறது. அதற்கும் மீன் இதே பதிலைத் தான் சொல்கிறது. பறவையின் பாடலை நாம் கேட்டிருக்கிறோம். ஆனால் மீனின் பாடலை கேட்டதில்லை..

மீனின் பாடல் எப்படியிருக்கும். மீனின் பாடலை தண்ணீர் கேட்டிருக்குமா. இரண்டு நீர்க்குமிழிகள் என்பது பறவையும் மீனும் தானா. வாசிக்க வாசிக்கக் கவிதை நமக்குள் நிறைய அதிர்வுகளை ஏற்படுத்திக் கொண்டேயிருக்கிறது. பா. இரவிக்குமார். கல்பனா இருவருக்கும் மனம் நிரம்பிய பாராட்டுகள்.

••

தொட்டியில் ஒரு மீன் கவனிக்கிறது

ஒரு பறவையின் பாடல் சன்னல் வழியே பாய்கிறது

பறவை வணங்கி வாழ்த்துகிறது

எப்படி இருக்கிறீர்கள் திரு. மீனே

தன் செவுள்களை நெகிழ்த்துக் கொண்டு

மீன் பதிலளிக்கிறது

இரண்டு நீர்க்குமிழிகள்

தொட்டியில் மீன் கவனிக்கிறது

பறவையின் பாடல் சன்னலுக்குள் பாய்கிறது

பறவை கேட்கிறது

உன்னிடமும் பாடல் உள்ளதா

மீன் கவனிக்கிறது

பறவை விடைபெறுகிறது

பத்திரம் திரு மீனே

மீன் பதிலளிக்கிறது

தன் துடுப்புகளை ஆட்டியபடியே

இரண்டு நீர்க்குமிழிகள்

ஹவாங் பியோங்

0Shares
0