பெருஞ்சுவரின் நிழல்

காணக் கிடைக்காத காட்சி என்பார்களே அது பிபிசி தயாரித்துள்ள – A Slow Odyssey: The Great Wall of China என்ற ஆவணப்படத்திற்குத் தான் பொருத்தமானது. வானில் பறந்தபடியே ஒட்டுமொத்த சீனப்பெருஞ்சுவரையும் கேமிரா வழியாக அங்குல அங்குலமாகக் காட்டுகிறார்கள். கூடவே சீனப்பெருஞ்சுவரின் வரலாற்றையும் விவரிக்கிறார்கள். அற்புதமான ஆவணப்படமிது.

சீனப்பெருஞ்சுவரை எப்படிக் கட்டினார்கள் என்பதைப் பற்றி நிறையப் புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளன. ஆனால் இந்த ஒரு ஆவணப்படம் போதும் அதன் முழுமையை நமக்குக் காட்டிவிடுகிறது.

சீனப்பெருஞ்சுவர் ஒரு மன்னரால் கட்டப்பட்டதில்லை. பல்வேறு காலங்களில் அச் சுவர் எழுப்பப்பட்டிருக்கிறது. சில இடங்களில் மண்ணால் சுவர் எழுப்பியிருக்கிறார்கள்.

சீனச்சுவர் எங்கேயிருக்கிறது என்ற கேள்விக்கு மக்கள் மனதிலிருக்கிறது என்று சீனர்கள் பதில் சொல்வார்கள் என்கிறது இந்த ஆவணப்படம். உண்மையான பதிலது.

உலக அதியசங்களில் ஒன்றாக் கருதப்படும் இந்தச் சுவரைக் கட்டும் பணியில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இறந்து போயிருக்கக் கூடும் என்கிறார்கள். உண்மையான எண்ணிக்கை தெரியவில்லை.

பீடபூமிகள், புல்வெளிகள், பாலைவனங்கள், மலையுச்சி. மற்றும் ஆற்றின் கரை என இயற்கையோடு இணைந்து இந்தச் சுவர் கட்டப்பட்டிருக்கிறது.

இந்த ஆவணப்படத்தில் நாம் பெருஞ்சுவர் பற்றி மட்டுமின்றிச் சீனாவின் பண்பாட்டினையும் அதன் வரலாற்றையும் கூடவே அறிந்து கொள்கிறோம். கைவிடப்பட்ட பழைய நகரங்களையும் இடிந்த கோட்டைகளையும் ஒரு காலத்தில் புகழ்பெற்றதாக இருந்த பட்டுசாலையையும் ஆவணப்படம் நமக்குக் காட்டுகிறது. சில இடங்களில் மனித நடமாட்டமேயில்லை. புழுதி பறக்கும் சாலைகள். ஆமை வடிவத்தில் சுற்றுக்கோட்டையுள்ள பழைய நகரம். அதில் 70 குடும்பங்கள் மட்டுமே வசிக்கிறார்கள். பெருஞ்சுவரின் நிழல் நீண்டு தனியே அலைகிறது.  ஒவ்வொரு நிலப்பரப்பாக கேமிரா கடந்து செல்லச் செல்ல சீனாவின் இயற்கை எழில் நம்மைப் பிரமிக்க வைக்கிறது.

மங்கோலிய படையெடுப்பிற்குப் பயந்தே சீனப்பெருஞ்சுவர் எழுப்பியிருக்கிறார்கள். சில இடங்களில் இடிந்த நிலையில் காணப்படும் சுவரைச் சுற்றிலும் இப்போது விவசாயம் நடக்கிறது. சில ஊர்களில் விவசாயப்பண்ணையின் அரணாகப் பயன்படுத்துகிறார்கள். பதினைந்து மாகாணங்களை ஊடுருவிச் செல்லும் இந்தப் பெருஞ்சுவரை கேமிரா விண்ணிலிருந்து காட்டும் போது வியப்பின் உச்சத்திற்குப் போய்விடுகிறோம்.

கிழக்கிலிருந்து மேற்காகச் சுமார் 13,170 மைல் தொலைவிற்கு, சீனப் பெருஞ்சுவர் கட்டப்பட்டிருக்கிறது. இச்சுவர் 1987 ஆம் ஆண்டில் யுனெஸ்கோவால் உலகப் பாரம்பரியமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.

சீனப் பெருஞ்சுவரின் பெரும் பகுதி 1368 மற்றும் 1644 ஆண்டுகளுக்கு இடையில் மிங் வம்சத்தின் போது கட்டப்பட்டது.எதிரிகளிடமிருந்து நாட்டைக் காப்பதற்காக மட்டுமில்லை. சீன குடிமக்கள் நாட்டை விட்டு வெளியேறாமல் இருக்கவும் இந்தப் பெருஞ்சுவர் பயன்படுத்தப்பட்டது.

இச்சுவரை நிலவிலிருந்து பார்த்தால் தெரியும் என்று சொல்வார்கள். அது கற்பனை என்கிறது இந்த ஆவணப்படம்.

ஆள் அற்ற நிலப்பரப்பில் நீண்டு செல்லும் பாம்பின் உடல் போலத் தோன்றும் சீனப் பெருஞ்சுவரைக் காணும் போது மனித உழைப்பின் மகத்துவம் புரிகிறது. சில குடும்பங்கள் தலைமுறையாகப் பெருஞ்சுவர் கட்டும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். சிறைக்கைதிகளையும் சுவர் கட்டப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

சுவரின் ஒரு முனையிலிருந்து கடைசி முனை வரை இப்படம் காட்சிப்படுத்தியிருக்கிறது. ஐமாக்ஸ் போல விரிந்த திரையில் தரமான ஒலியில் இந்த ஆவணப்படத்தைக் காண முடிந்தால் அற்புதமான அனுபவமாக இருக்கும்.

••

0Shares
0