மகாபாரத ஒவியங்கள்

சென்னை லலித் கலா அகாதமியில் நடைபெற்றும் வரும் INNER FLOW எனும் ஒவியக்கண்காட்சியை காலையில் பார்த்து வந்தேன், சித்ரகதி எனப்படும் மராட்டிய ஒவியமரபின் பாணியில் மகாபாரதக் கூத்தினை மையப்படுத்தி ஏழு ஒவியர்கள் ஒன்றாக இணைந்து  தங்களது  ஒவியங்களைக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்

அபிமன்யூ, திரௌபதி, காந்தாரி, அரவான், கர்ணன் ஆகிய முக்கியக் கதாபாத்திரங்களே ஒவியங்களின் குவிமையம், இந்த நிகழ்வின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் பாலாஜி ஸ்ரீனிவாசன், பாரதக் கூத்து குறித்த இந்த ஒவியக்கண்காட்சிக்கு முக்கிய காரணமாக அமைந்தவர்  மீனாட்சி மதன்,

மீனாட்சி தேர்ந்த இலக்கிய வாசகர், சிறந்த ஒவியர், நுங்கம்பாக்கத்தில் hues of heart studio என்ற கலைக்கூடத்தை நடத்திவருகிறார்,

ஒரே இடத்தில் இவ்வளவு மகாபாரத ஒவியங்களை ஒரு சேரக் காண்பது மிகுந்த சந்தோஷம் அளிக்க கூடியது, அதுவும் கூத்தின் சிறப்பியல்புகளை அப்படியே காட்சிப்படுத்தி ஒவியமாக்கியிருப்பது பாராட்டிற்குரியது

மகாபாரதக் கதாபாத்திரங்கள் குறித்து ஒவ்வொருவருக்கும் ஒரு மனப்பிம்பம் இருக்கிறது, சகுனியைப் பொதுவாக குள்ளமான மனிதராகவே சித்திரஙகளில் வரைகிறார்கள், ஆனால் என் மனதிலுள்ள சகுனி உயரமானவன், அவனது தோற்றம்  ஒரு கந்தவர்வனைப் போல இருக்கும் என்றே கற்பனை செய்து கொள்கிறேன், இப்படி இதிகாசங்களை வாசிக்கின்ற ஒவ்வொரு வாசகரும் தனக்கான மனப்பிம்பத்தை கொண்டிருக்கிறார்கள்,

மகாபாரத கதாபாத்திரங்கள் நேரில் உயிர்பெறும் களம் தான் பாரதக்கூத்து மேடை, வட ஆற்காடு, தென்ஆற்காடு மாவட்டங்களில் பதினெட்டு நாட்கள் நடைபெறும இந்த கூத்துநிகழ்வில்  இதிகாசத்தில் வாசித்து அறியாத பல சம்பவங்கள், திருப்பங்கள், மனவுணர்ச்சிகள், கிளைக்கதைகளைக் காணமுடியும், இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும் தனக்கென தனியாக மகாபாரத கிளைக்கதைகள் பலவற்றைக் கொண்டிருக்கின்றன, ஏதாவது ஓரு கதாபாத்திரத்தை தனது அடையாளமாக கொள்கின்றன, உதாரணத்திற்கு கேரளாவில் பீமன் தான் முக்கிய கதாபாத்திரம், கர்நாடகாவிற்கோ அர்சுனன், தமிழ்நாட்டிற்கு  கர்ணன், வடமாநிலங்களுக்கு பீஷ்மர்,  இப்படி நிறைய சொல்லலாம்,

நான் பல்வேறு மகாபாரத வாய்மொழிகதைகளைக்  கேட்டிருக்கிறேன்,  எனது உப பாண்டவம் மகாபாரதம் மீதான நவீன புனைவு, அதற்காக நான்கு ஆண்டுகள் மகாபாரத பிரதிகள், நிகழ்த்துகலைகளை தேடி இந்தியா முழுவதும் சுற்றியலைந்திருக்கிறேன்,  வாய்மொழிக்கதைகள் இதிகாசத்திலிருந்து பெரிதும் மாறுபட்டவை, நுட்பமானவை, அப்படியான கிளைக்கதைகளை கூத்தில் காணமுடியும், தமிழகத்தின் தென்மாவட்டங்களில் மகாபாரதக் கூத்துகள் கிடையாது, திரௌபதி அம்மன் வழிபாடும் அதிகம் இல்லை,

சித்ரகதி என்பது கதைசொல்வதற்காக வரையப்படும் ஒவியமரபாகும், ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களைத் தனித்தனி சித்திரமாக வரைந்து அதன் வழியே கதை சொல்லுவார்கள், ஒருவகையில் இது தோல்பொம்மலாட்டம் போன்ற காட்சிக்கலையது, இதுகுறித்து மணிகௌல் இருபது நிமிஷ ஆவணப்படம் ஒன்றினை பிலிம் டிவிசனுக்காக உருவாக்கியிருக்கிறார், சித்ரகதி பற்றிய சிறப்பான படமது

அழிந்து வரும் இம் மரபினை புத்துருவாக்கம் தரும்வகையில் ஒவியக்கண்காட்சி  உருவாக்கபட்டிருக்கிறது

இந்த ஒவியங்களுக்கு இணையாக நவீன கவிஞரான ஷங்கர் ராமசுப்ரமணியன் கவிதைகள் எழுதியிருக்கிறார், மிக அற்புதமான கவிதைகள், இவ்வளவு மனஎழுச்சி தரும் நவீன கவிதைகள் எதையும் சமீபத்தில் நான் வாசித்ததில்லை, ஷங்கர் ராமசுப்ரமணியனின் ஆகச்சிறந்த கவிதைகள் இவையே என்று சொல்வேன்,

வைஷ்ணவி வரைந்துள்ள அபிமன்யூ ஒவியங்களின் சிறப்பு அதன் துல்லியமான உணர்ச்சிவெளிப்பாடு, மற்றும் கச்சிதமான நிறத்தேர்வு, உடைகளை வரைவதில் தான் அவரது கைகள் எவ்வளவு அற்புதமாகச் செயல்பட்டிருக்கின்றன, சுபத்ரையின் முகத்தில் வெளிப்படும் அபூர்வமான சாந்தம், அர்சுனன் முகத்தில் காணப்படும் மலர்ச்சி, கர்ப்பசிசுவாக அபிமன்யூ சக்ரவியூகம் பற்றிக் கேட்டு அறியும் ஒவியத்தில் அந்த குழந்தையும் அது வரையப்பட்ட விதமும் பாராட்டிற்குரியது

ஷோபா ராஜகோபாலன் ஒவியங்களில் எனக்கு மிகவும் பிடித்திருந்தது எல்லம்மா அர்சுனனுக்காக காத்திருக்கும் ஒவியம், அதில் எல்லம்மாவிடம் காணப்படும் ஒயிலிற்கு நிகரேயில்லை, அவளது நாடி வளைவும், கூர்ந்த மூக்கும், காலைமடித்து உட்கார்ந்துள்ள வாகும்  பார்ப்பவரை மயங்குகின்றன

ராஜேஸ்வரி மணிகண்டன் ஒவியத்தில் என்னை வசீகரம் செய்தது தர்மராஜா சூதில் தோற்றுப்போவது, அதில் பாண்டவர்களின் கண்கள் வரையப்பட்ட விதம், அந்த வளைவு மீசைகள், யுதிஷ்ட்ரன் முகத்தில் வெளிப்படும் தோல்வியின் வலி, சகுனியின் உள்ளார்ந்த புன்னகை, பாண்டவர்களின் வேதனைமிக்க முகபாவங்கள் என யாவும் சிறப்பாக வரையப்பட்டுள்ளன

சண்முகப்பிரியாவின் குறிசொல்ல வரும் திரௌபதி மலைக்குறத்தி போலவே சிருங்கார அழகியாக இருக்கிறாள், அவளது எரியும் தணல் போன்ற கேசமும், தலை அலங்காரமும், உடைகளும் வெகு நுட்பமாகவும் அழ்காகவும் வரையப்பட்டுள்ளன, அவள் சகாதேவனை ஒரு குழந்தையைப் போல இடுப்பில் ஏந்தியிருப்பது தனி அழகு. வறுத்த தானியங்களை விளைவிக்கும் திரௌபதியின் ஒவியமும் அற்புதமான ஒன்றே,

கிருஷ்ணன் மோகினியாக வந்து அரவானை மணந்து கொள்ளும் காட்சியை சுரேஷ்  நன்றாக வரைநதிருக்கிறார், அரவான் களப்பலியின் சடஙகுகளும், அரவானின் அலங்காரமான தோற்றமும் மரபும் நவீனமும் கலந்து உருப்பெற்றிருக்கிறது, குறிப்பாக அரவான் யுத்தகளத்தைக் கற்பனை செய்யும் ஒவியத்தில் இடம் பெற்றுள்ள யானை மறக்க முடியாத ஒன்று

இந்திரா சேஷாத்ரி வரைந்துள்ள கர்ணனை ஆற்றில் விடும் ஒவியத்தில்  அவனை கண்டு எடுக்கும் தேரோட்டியின் முகபாவம் அபாரமான ஒன்று, ஆற்றங்கரையில் உள்ள அந்த மரம், சூரியனின் தோற்றம், ஆற்றில் நீந்தும் மீன்கள், ஏக்கமான குந்தியின் மனநிலை என ஒவியத்திற்கு தனி அழகு கூடிவிடுகிறது

மீனாட்சி மதன் வரைந்துள்ள ஒவியங்களில் மிருகங்கள் விசித்திரமான  மனநிலையின் அடையாளச்சின்னங்கள் போலவே காணப்படுகின்றன, குறிப்பாக காந்தாரி கௌரவர்களை பிறப்பிக்கும் காட்சியில் உள்ள காந்தாரியின் உக்கிரமும் கௌரவர்களின் முகபாவங்களும் அவரை ஒரு தேர்ந்த ஒவியராக நிரூபணம் செய்கின்றன ,  நாக கன்னிகை ஒவியத்தில் இலைகள் வரையப்பட்டுள்ள விதமும் அதனுள் உள்ள குரங்கும் அழகாக உள்ளன,

மீனாட்சியின் மிகச்சிறப்பான ஒவியம், காந்தாரி துரியோதனனை நிர்வாணமாக நிற்கச் சொல்லி அவன் உடலில் தனது சக்தியை உரமேற்றும் காட்சி, இது போல பெண்மையின் நளினம் கலந்த துரியோதனனை கண்டதேயில்லை, அதுவரை மனதில் இருந்த துரியோதன உருவம் மறைந்த புதிய பிம்பம் உருவாகிவிட்டது,

அது போலவே தண்ணீரில் பதுங்கிய துரியோதனன், மீன்கள், எறும்புகளிடம் தன்னை காட்டிக் கொடுக்க வேண்டாம் என்று கேட்கும் காட்சியில்  துரியோதனின் முகம், உடல்மொழி, அற்புதமாக உள்ளது, குறிப்பாக அந்த துரியோதனின் கண்கள் சிறப்பாக வரையப்பட்டுள்ளன,

மகாபாரதம் குறித்த நினைவுகளை மீட்டும் இவ்வோவியங்கள் மரபும் நவீனமும் ஒன்று கலந்த புதிய கலைமுயற்சியாக உள்ளன,

••

துயரத்தில் அழுபவளின்

தேம்பலில்

உலகத்திற்கு சாம்பல் நிறம்

வந்துவிடுகிறது

கைவிடப்பட்ட

அவளின் ஒரு கேவலில்

என் காலுக்குக் கீழே

தரை நழுவத் தொடங்குகிறது

கருணை கருணை

என்று

முகம் தெரியாதவள்

இறைஞ்சும் போது

இயலாமையில்

தோள்வலிக்கிறது

பெண் அழும் ஒவ்வொரு

இடமும்

கௌரவர் சபை தானோ

•••

கருப்புக்கல் மாளிகை

தங்க விதானங்கள்

தடாகம் பேல

பளபளக்கும் தரை

சுவர்கள்

அறைகள்

முகங்கள் எல்லாம்

ஒன்றையொன்று

பிரதிபலித்து

உயர்ந்து நிற்கும் மாளிகைகள்

பிறர்வலி

கண்டு நகைப்பது

இன்னமும் உண்டு

•••

பசி தீர்ந்துவிட்டால்

போர் வரும்

போர் தீர்ந்துவிட்டால்

பசி வரும்

••

என ஷங்கர் ராம சுப்ரமணியனின் ஒவ்வொரு கவிதையும் மகாபாரதத்தின் ஆழமான பெருமூச்சாக உள்ளது, அற்புதமான இக்கவிதைகளை எழுதிய ஷங்கருக்கு என் அன்பு நிறைந்த வாழ்த்துகள்.

•••

இக்கண்காட்சி செப்டம்பர் 16 ஞாயிறு மாலை வரை நடைபெறுகிறது, இந்த நிகழ்வை ஒட்டி ஞாயிறு மதியம்  4 மணி முதல் 6 வரை பாரதக்கூத்து மற்றும் கலைமரபுகள் குறித்து கருத்தரங்கம் நடைபெற உள்ளது, அதில் ஒவியர் மருது, டாக்டர் அரசு, நாடகக்கலைஞர் ரவீந்திரன், டாக்டர் பழனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு உரையாற்ற இருக்கிறார்கள்

இடம் : ல்லித்கலா அகாதமி. கிரிம்ஸ் சாலை, சென்னை,

0Shares
0