1970ல் வெளியான Cromwell என்ற வரலாற்றுப்படத்தைப் பார்த்தேன்
கென் ஹியூஸ் இப்படத்தை இயக்கியுள்ளார். கிராம்வெலாக நடித்திருப்பவர் ரிச்சர்ட் ஹாரிஸ். மன்னர் சார்லஸாக நடித்திருப்பவர் அலெக் கின்னஸ்,
இங்கிலாந்தில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின்போது நாடாளுமன்ற படைகளுக்குத் தலைமை தாங்கிப் போரிட்டு வெற்றி தேடித் தந்தவர் ஆலிவர் கிராம்வெல்
இங்கிலாந்தின் மன்னராட்சி முறையை மாற்றி மக்களாட்சி முறையை அமைப்பதற்கு முக்கியக் காரணமாக இருந்தவர். அவரது வாழ்க்கை வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளை விவரிக்கும் விதமாகக் கிராம்வெல் படம் உருவாக்கப்பட்டிருக்கிறது,
பிரிட்டீஷ் வரலாற்றுபடங்கள் பெரும்பாலும் கதையை விட்டு விலகிச் செல்வதேயில்லை. பிரம்மாண்டங்களை விடவும் உணர்ச்சிப்பூர்வமான நாடகத்தையே பிரதானமாகக் கருதுகிறார்கள். அவ்வகையில் இந்தப் படத்திலும் கிராம்வெல் வழியாக மக்களாட்சி முறை ஏன் முக்கியமானது என்பதை அழுத்தமான வெளிப்படுத்துகிறார்கள்
இங்கிலாந்தின் மன்னராட்சிக்கு எதிராகக் குரல் கொடுப்பதும் மன்னரைக் குற்றவாளியாக்கி நீதி விசாரணை செய்து தண்டிப்பதும் எளிதான விஷயமில்லை. இங்கிலாந்து வரலாற்றின் முக்கியத் திருப்புமுனையாகக் கருதப்படும் நிகழ்வுகளைப் படம் விவரிக்கிறது.
ஆலிவர் கிராம்வெல் மன்னரின் விசுவாசியாகவே இருக்கிறார். அவர் மன்னர் திருந்தி நல்லாட்சியைத் தருவார் என்று நம்புகிறார். ஆனால் மன்னரின் கொடுங்கோன்மை அவரை எதிர்நிலை கொள்ள வைக்கிறது.
படத்தில் கிராம்வெல் பாராளுமன்றத்தில் ஆற்றும் உரையும் அதைத் தொடர்ந்த எழுச்சியும் மிக அழகாகப் படமாக்கப்பட்டிருக்கிறது.
தன்னை எதிர்ப்பவர்களை விசாரணையின்றிக் கொல்ல ஆணையிடுகிறார் மன்னர். கிராம்வெல்லின் தலைக்கு மேல் எப்போதும் வாள் தொங்கிக் கொண்டேயிருக்கிறது. ஆனால் கிராம்வெல் அச்சப்படவில்லை. அவர் மக்களின் குரலாகப் பாராளுமன்றத்தில் ஒலிக்கிறார்.
1628 ஆம் ஆண்டில் கிராம்வெல் இங்கிலாந்து நாடாளுமன்றத்திற்குத் தமது 30 ஆம் வயதில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த நாட்களில் இங்கிலாந்தில் சமயச்சண்டை மேலோங்கியிருந்தது.
அப்போது மன்னர் முதலாம் சார்லஸ் இங்கிலாந்தை ஆண்டு வந்தார். அவர் 1629 -ல் நாடாளுமன்றத்தைக் கலைத்து விட்டுத் தனது எல்லையற்ற அதிகாரத்தை நிலைநாட்டினார். 12 ஆண்டுகள் நாடாளுமன்றத்தைக் கூட்டவே இல்லை.
மன்னர் சார்லஸ் தனது பிரெஞ்சு ராணியை ரோமன் கத்தோலிக்க மதத்தைத் தனிப்பட்ட முறையில் பின்பற்ற அனுமதித்தார், ஆனால் அந்த நம்பிக்கையில் இளம் வேல்ஸ் இளவரசரை வளர்க்கத் தடை விதித்தார். ராணியின் செல்வாக்கினால் ரோமன் கத்தோலிக்கச் சபை வளர ஆரம்பித்தது. இது சமயசண்டைக்கு முக்கியக் காரணமாக விளங்கியது.
1640 ல் ஸ்காட்லாந்து நாட்டிற்கு எதிராகப் போர் தொடுப்பதற்காக மன்னருக்கு நிதியுதவி தேவைப்பட்டது. அதைப் பெறுவதற்காகப் பிரபுக்களின் உதவியை நாடினார். இதனால் 1640-ஆம் ஆண்டில் மீண்டும் நாடாளுமன்றத்தைக் கூட்டினார்.
அப்போது நாடாளுமன்ற உறுப்பினராகச் செயல்பட்ட ஆலிவர் கிராம்வெல் மன்னருக்கு உதவி செய்ய நிபந்தனைகளை விதித்தார். இது மன்னரின் கோபத்தை உருவாக்கியது நாடாளுமன்றத்திற்கு அடிபணிந்து நடக்கச் சார்லஸ் விரும்பவில்லை.
கிராம்வெல் உள்ளிட்ட அவரது நண்பர்களைத் தேசத்துரோகியாக அறிவித்து மரண தண்டனை வழங்கினார். ஆனால் அதைப் பாராளுமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை. மன்னருக்கு எதிராக உள்நாட்டுப் போர் துவங்கியது. இதற்குத் தலைமை ஏற்றார் கிராம்வெல்.
அரசருக்கு எதிராகப் போரிடுவதற்காக ஒரு குதிரைப் படையைத் திரட்டினார். போர் நடந்த நான்கு ஆண்டுகளில் கிராம்வெல்லின் வீரம் மக்களால் பெரிதும் பாராட்டப்பட்டது 1646 ஆம் ஆண்டில் போர் முடிவடைந்தது. முதலாம் சார்லஸ் மன்னர் சிறை பிடிக்கப்பட்டார்.
படத்தின் இறுதி காட்சிகளில் மன்னரை நீதி விசாரணை செய்வதற்காக அழைத்துவருகிறார்கள். மன்னர் தன்னை விசாரிக்கும் அதிகாரம் அந்தச் சபைக்குக் கிடையாது என்கிறார். நீதிசபையோ அவர் இப்போது குற்றவாளி எனக்கூறி சாட்சிகளை விசாரணை செய்கிறது. முடிவில் ஜுரிகள் மன்னரைச் சிரச்சேதம் செய்யும்படி ஆணையிடுகிறார்கள்
மன்னர் சிரச்சேதத்திற்காகச் செல்லும் காட்சியும் முந்தைய இரவில் அவர் தனது குடும்பத்தினருடன் செலவிடும் காட்சியும் சிறப்பானவை.
கிராம்வெல்லின் ஆளுமையைப் படம் துல்லியமாக விவரிக்கிறது. கிராம்வெல்லின் வெற்றிகளை மட்டுமில்லை. அவரது பலவீனங்களை, குழப்பங்களை, தவறான முடிவுகளைக் கூடப் படம் சுட்டிக்காட்டுகிறது
கிராம்வெல் முயற்சியால் தான் இங்கிலாந்தில் மக்களாட்சி உருவானது. அவரே ஆட்சி புரிந்தார். 1658-ஆம் ஆண்டு லண்டனில் மலேரியா நோய் கண்டு கிராம்வெல் இறந்தார்.
1660-ல் இரண்டாம் சார்லஸ் மன்னர் மீண்டும் அரச பதவி ஏற்றவுடன் பழிவாங்கும் நடவடிக்கையாக ஆலிவர் குரோம்வெல்லின் சடலம் கல்லறையிலிருந்து தோண்டி எடுக்கப்பட்டு மீண்டும் தூக்கிலிடப்பட்டது.
கிராம்வெல் மன்னரைச் சந்தித்துத் தனது கோரிக்கைகளை முன்வைக்கும் காட்சியில் அவர் மன்னரிடம் காட்டும் நேசமும் அதைப் புரிந்து கொள்ளாமல் மன்னர் அவரைச் சந்தேகத்துடன் அணுகுவதும் முக்கியமான காட்சி
ஆங்கில உள்நாட்டுப் போர் வெடித்ததற்கு முக்கியக் காரணி குரோம்வெல் மட்டுமே என்பது போலப் படம் அவரது பங்கைப் பெரிதுபடுத்துகிறது என்ற விமர்சனம் முன்வைக்கப்படுகிறது
கிராம்வெல் மன்னரைப் பல முறை நேரில் சந்திக்கிறார்: உரையாடுகிறார். தனது கருத்துகளை முன்வைக்கிறார். இது போன்ற விஷயங்கள் நிஜத்தில் நடக்கவில்லை. வரலாற்றில் இல்லாத நிறைய நிகழ்வுகள் படத்திற்காகச் சேர்க்கப்பட்டுள்ளன என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
WHEN MEN RUN OUT OF WORDS, THEY REACH FOR THEIR SWORDS. LET’S HOPE WE CAN KEEP THEM TALKING
என ஒரு இடத்தில் கிராம்வெல் சொல்கிறார்.
படத்தில் மிகச் சிறப்பாக வசனங்கள் எழுதப்பட்டுள்ளன.
இங்கிலாந்து வரலாற்றின் முக்கிய நிகழ்வுகள் யாவும் திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளன. இந்திய வரலாற்றிலோ அதன் முதன்மையான நிகழ்வுகள் கூட இன்னமும் திரைப்படமாக உருவாக்கப்படவில்லை.