மழைக்குள் நடக்கும் திருமணம்.

அகிரா குரோசாவாவின் கடைசித் திரைப்படமான ட்ரீம்ஸில் நரியின் திருமண ஊர்வலக் காட்சி இடம்பெற்றுள்ளது. அதனை ஒரு சிறுவன் ரகசியமாக ஒளிந்திருந்து வேடிக்கை பார்க்கிறான்.

வெயிலும் மழையும் சேர்ந்திருக்கும் பொழுதினை நரிக்குக் கல்யாணம் நடப்பதாகச் சொல்லும் நம்பிக்கை நம்மிடமும் இருக்கிறது.

எனது சிறுவயதில் நரிக்கும் காகத்திற்கும் கல்யாணம் நடக்கும் நாளில் இப்படி வெயிலும் மழையும் சேர்ந்திருக்கும் எனக் கேள்விபட்டிருக்கிறேன். அந்தக் கல்யாணத்தினை யாரும் பார்த்துவிடக் கூடாது என்பதற்காக மழை பெய்கிறது என்பார்கள். இதே நம்பிக்கை ஜப்பானிலும் இருக்கிறது. அதையே குரோசாவா தனது படத்தில் இடம் பெறச் செய்திருக்கிறார்

ஸ்பீல்பெர்க் தயாரிப்பில் குரோசாவா இயக்கிய ‘ ட்ரீம்ஸ்’அவரது திரை வாழ்வின் உன்னதப் படைப்பாகும். 1990ல் வெளியான இந்தத் திரைப்படம் கனவினை மையப்படுத்திய எட்டுக்கதைகளின் தொகுப்பாக உருவாக்கபட்டுள்ளது.

இதன் முதல்பகுதி ஒரு சிறுவனைப் பற்றியது. அவன் வெயிலோடு மழை பெய்வதைக் காணுகிறான். சிறுவனின் அம்மா நரியின் திருமணம் பற்றிச் சொல்கிறாள். உலகின் கண்ணில் படாமல் நடக்கும் அந்த மணஊர்வலத்தைக் காணுவதற்காகச் சிறுவன் ஒடுகிறான்.

முகமூடி அணிந்த நரிகளின் ஊர்வலத்தைக் காணுகிறான். மிகவும் அழகான காட்சியது. மணமகளான நரி அழைத்து வரப்படுகிறாள். முகமூடி அணிந்த மனிதர்கள். உற்சாகமளிக்கும் இசை. நாணல் அசைவது போன்ற நடனம். யாரோ தங்கள் ஊர்வலத்தை வேடிக்கை பார்க்கிறார்கள் என்ற சந்தேகத்துடன் ஒரு நரி திரும்பி பார்க்கிறது. சிறுவன் மரத்தின் பின்னால் ஒளிந்து கொள்கிறான்.

பார்க்கக்கூடாத ஒன்றை சிறுவன் பார்த்துவிட்டதாகவும் அதற்குத் தண்டனையாகச் செப்புக்கு செய்யும் படி ஒரு கத்தியை கோபக்கார நரியொன்று விட்டுச் சென்றுள்ளதாக அம்மா சொல்கிறாள்.

தனது வயிற்றைக் கத்தியால் கிழித்துக் கொண்டு சாவது சாமுராய்களின் வழக்கம். அதன் பெயரே செப்புக்கு. அதற்கெனக் கூர்மையான கத்தி இருக்கிறது. அந்தச் சடங்கு ஒரு வகை மன்னிப்பு. அதனை நிறைவேற்றிக் கொள்ளவே நரி கத்தியை சிறுவன் வீட்டின் முன்பாக விட்டுப் போகிறது.

நரியின் வீட்டைத் தேடிச் சென்று மன்னிப்பு கேட்க விரும்பும் சிறுவன், நரிகளின் வீடு இருப்பதாகக் கூறப்படும் தொலைதூர மலைக்குப் பின்னால், வானவில்லுக்குப் பின்னால் உள்ள இடத்தை நோக்கிப் பயணிக்கிறான்.

படத்தின் துவக்கத்தில் சிறுவன் காணும் வானவில் படத்தின் முடிவிலும் இடம்பெறுகிறது. சிறுவனில் துவங்கும் படம் முதியவரிடம் முடிவடைகிறது.

இப்படத்தின் ஒரு பகுதியில் ஓவியர் வான்கோவின் ஓவியத்திற்குள் நடந்து செல்லும் இளம் ஓவியனைப் பற்றியது. அப்பகுதி கவித்துவமானது. அந்த அத்தியாயத்தில் வான்கோவாக நடித்திருப்பவர் அமெரிக்க இயக்குநர் மார்ட்டின் ஸ்கோர்செசி. வயல்களின் நடுவே அவர் ஓவியம் வரைந்து கொண்டிருக்கிறார். அவரை இளைஞன் சந்தித்து உரையாடுகிறான். அதன் முடிவில் காகங்கள் பறந்தலையும் வான்கோவின் ஓவியம் திரையில் உயிர்பெறுகிறது. வான்கோவின் ஓவியக்காட்சிகள் அப்படியே நிஜமாக உயிர்பெற்று இயங்குவதைக் காணுவது பரவசமளிக்கிறது.

படத்தின் இறுதியில் நூறு வயதைத் தாண்டியவர்கள் வாழும் தீவினைப் பற்றிக் குரோசாவா விவரிக்கிறார். Village of the Water Wheels பகுதியில் ஒரு கிழவரை இளைஞன் சந்திக்கிறான்

கிழவர் தண்ணீர் இறைக்கும் சக்கரம் போன்ற ஒன்றினை சரி செய்து கொண்டிருக்கிறார் அவரிடம் இளைஞன் “இந்தக் கிராமத்தின் பெயர் என்ன? “என்று கேட்கிறான்.

இதனை“ கிராமம்“ என்று மட்டுமே அழைக்கிறோம் என்கிறார் கிழவர். அந்தப் பதிலால் அது ஒரு அடையாளம் என்று நமக்குப் புரிகிறது.

தொலைதூரத்தில் கேட்கும் இசையை அறிந்த இளைஞன் “இங்கே ஏதேனும் திருவிழா நடக்கிறதா “எனக் கேட்கிறான்

“ஒரு இறுதி ஊர்வலம் வருகிறது. நாங்கள் மரணத்தைக் கொண்டாடக் கூடியவர்கள். மகிழ்ச்சியான வாழ்விலிருந்து மறுஉலகம் செல்வதற்கு இறுதி விடை அளிக்கிறோம்“ என்கிறார்.

99 வயதில் இறந்து போன பெண் தனது முதற்காதலி என்றும் அந்தக் காதல் நிறைவேறவில்லை. அவள் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டுவிட்டாள் எனவும் கிழவர் உற்சாகமாகச் சொல்வதோடு அந்தப் பெண்ணின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு மகிழ்ச்சியாக நடனமாடுகிறார்.

அந்தப் பகுதி நிறைவுறும் போது கிழவர் “மக்கள் தாங்களும் இயற்கையின் ஒரு பகுதி தான் என்பதை மறந்துவிடுகிறார்கள்“ என்று ஆதங்கமாகச் சொல்கிறார். அத்தோடு “மனித குலத்திற்கு முக்கியமானது தூய்மையான காற்றும் சுத்தமான நீரும் தான்“ என்று சுட்டிக்காட்டுகிறார்.

அழகான நீரோட்டத்தின் லயம், பேரழகு மிக்க இயற்கையின் வனப்புடன் படம் நிறைவு பெறுகிறது. அதே நீரோட்டக் காட்சியைத் தார்கோவெஸ்கி தனது சோலாரிஸ் படத்தி கூடுதல் அழகோடு, சலனத்தோடு ஓடையில் உள்ள கடற்பாசி அலைவுறுவதாகச் சித்தரித்திருப்பார். மறக்கமுடியாத காட்சி. இருமேதைகளும் நிகரற்றவர்களே.

சிறுவன் காணும் நரியின் மண ஊர்வலமும் முதற்காதலியின் இறுதி ஊர்வலமும் கைவளையின் இருமுனைகள் போல அழகாகப் பொருந்துகின்றன.

ஜப்பானிய நரி இந்திய நரியிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. ஜப்பானில் நரி தந்திரக்கார விலங்காகக் கருதப்படுவதில்லை. மாறாக நரி ஒரு தெய்வம். தனது சாபத்தால் விலங்காக உருமாறியுள்ளது. வெள்ளை நரி ,சிவப்பு நரி என இருவகை நரிகளை ஜப்பானிய மரபு கூறுகிறது. இதில் வெள்ளை நரியின் திருமணம் எப்படி நடைபெற்றது என்பதைப் புராணக்கதையாக விவரிக்கிறது.

அக்கதையில் திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்ட வெள்ளை நரி பணம் சம்பாதிக்கக் கடுமையாக உழைக்கிறது. அழகான பெண் நரியைப் பற்றிக் கேள்விபட்டுத் திருமணத்திற்கு ஏற்பாடு செய்கிறது. மணமகனான நரி பெண்ணின் வீட்டிற்குத் திருமணப் பரிசுகளை அனுப்பி வைக்கிறது. , திருமணத்திற்காக, மணமகள் மணமகனின் வீட்டிற்குச் செல்வதற்கான ஊர்வலம் ஏற்பாடாகிறது. மணமகளை வேறு எவரும் பார்த்துவிடக் கூடாது என்பதற்காகவே மழை பெய்கிறது. இந்தக் காட்சியைத் தான் படத்தில் சிறுவன் காணுகிறான்.

அது ஒரு மகிழ்ச்சியான ஊர்வலம். பொம்மை போன்ற முகம் கொண்டவர்கள் இசையோடு நடனமிட்டபடி வருகிறார்கள். சிறுவன் தான் கேட்டிருந்த கதையினை நேரில் காணுகிறான். அந்தக் காட்சி அவன் ஒருவனுக்கு மட்டுமே தெரிகிறது.

சந்தோஷமான அந்த மண ஊர்வலத்தைப் பார்த்து ரசித்த குற்றத்திற்காக நரி அவனுக்குத் தரும் தண்டனை கடுமையானது. செப்புக்குச் செய்து இறப்பது சாமுராய்களின் மரபில் முக்கியமானது.

நரியின் கோபத்தைக் கண்டு சிறுவன் பயப்படவில்லை. அவன் மன்னிப்பு கேட்க நரியின் வீட்டைத் தேடிச் செல்கிறான். நரியின் வீடு வானவில்லுப் பின்னால் இருக்கிறது என்பது அழகான காட்சிப்படிமம்.

நம் ஊரில் நரி காகத்தைத் திருமணம் செய்து கொள்கிறது. அது ஏன் என்று தெரியவில்லை. அந்தத் திருமணம் நடக்கக் கூடாது என்பதற்காக மழை பெய்கிறது என்றும் கிராமத்தில் சொல்வார்கள். அத்தோடு நரியின் கல்யாணத்தில் மண் தான் இனிப்பாக வழங்கபடுகிறது எனச் சிறுவர்கள் மண்ணை அள்ளி வீசுவார்கள். நரியின் திருமணம் வேடிக்கை நிகழ்வு மட்டுமில்லை. அது ஒரு தொல் நம்பிக்கை. மழைச்சடங்கு.

படத்தின் துவக்கத்தில் கனமழைக்குச் சற்று முன்பாகத் தனது பாரம்பரிய வீட்டின் வாசலில் ஒரு சிறுவன் குழப்பத்துடன் நிற்கிறான். அந்தக் காட்சி மறக்கமுடியாதது. அந்தச் சிறுவன் தான் வளர்ந்து கடைசிப் பகுதியில் கேள்வி கேட்கும் இளைஞனாக மாறுகிறான் என்றும் தோன்றுகிறது.

சிறுவனின் தாய் மழையின் ஊடாக நனைந்த பொருட்களைச் சேகரித்துக் கொண்டிருக்கிறாள். வெயிலும் மழையும் கலந்த விசித்திரமான வானிலை, சிறுவன் வெளியே செல்ல விரும்புகிறான் என்பது அவன் நிற்கும் நிலையிலே தெரிகிறது. அம்மா நரியின் திருமணத்தைச் சொல்லி அவனை எச்சரிக்கை செய்கிறாள். தாயின் பேச்சை கேட்காமல் சிறுவன் வெளியே ஒடுகிறான்.

பால்ய வயதில் கேட்ட கதைகளும் அது தந்த கனவுகளும் வாழ்வில் மறக்க முடியாதவை. அதையே குரோசாவா திரை அனுபவமாக உருவாக்கியிருக்கிறார்.

குரோசாவாவின் குழந்தைப் பருவத்தில் அவரதுஅம்மா சொன்ன ஒரு கதையின் கற்பனை சித்தரிப்பு இதுவென்று தனது நேர்காணலில் குறிப்பிடுகிறார். படத்தின் இடம்பெற்றுள்ள வீடு குரோசாவாவின் சொந்த வீட்டினைப் போலவே உருவாக்கபட்டிருந்தது. டோஷிஹிகோ நகானோ சிறுவனாகச் சிறப்பாக நடித்திருக்கிறான். தனது பால்யத்தில் கேட்ட கதையைக் குரோசாவா தனது எண்பது வயதில் படமாக்கியிருப்பது வியக்கவைக்கிறது. ஒப்பற்ற கலைஞர்கள் தனது பால்யத்திற்குத் திரும்புவதையே தனது கடைசிபடைப்பாக முன் வைக்கிறார்கள்.

ரோஷோமோனின் மழைக்காட்சியினையும் ட்ரீம்ஸ் மழைக்காட்சியினையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது குரோசாவா நினைவுகளை மழையாக மாற்றும் விந்தையை உணர முடிகிறது. மழை வெறும் நிகழ்வில்லை. அது ஆயிரமாயிரம் கதைகளின் உருவம். மழை வேண்டியும், மழை நிற்கச் சொல்லும் எத்தனையோ கதைகள் இருக்கின்றன. மழைக்குள் நடந்த சந்திப்பு. மழைக்குள் கண்ட காட்சிகள். மழைக்குள் நிகழ்ந்த காதல் என எத்தனையோ கதைகள் மழையின் ஊடாக மறைந்திருக்கின்றன.

பௌத்த மரபில், நரி கர்ம வினையின் சின்னம், உருமாறும் ஆவி, மற்றும் வானுலகத் தூதுவர். அரிசியின் தெய்வமான இனாரியுடன் இணைந்ததால் , நரி சிலைகள் ஷிண்டோ ஆலயங்களிலும் சில பௌத்தக் கோயில்களிலும் இடம்பெறுகின்றன.

வானவில்லை கடந்து நரியின் வீட்டை நோக்கி செல்லும் சிறுவன் இன்னும் தனது பயணத்தை முடிக்கவில்லை. ஒவ்வொரு முறை வெயிலோடு மழை பெய்யும் போதும் அந்தச் சிறுவன் என் நினைவில் எழுகிறான். வானவில் பால்யத்தின் அழியாத வண்ணங்களுடன் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது.

0Shares
0