மழையின் மனிதர்கள்


வண்ணநிலவனின் ரெயினீஸ் ஐயர் தெரு தமிழ் நாவல்களில் அபூர்வமானது. மிகச்சிறப்பான நாவல். சிறந்த ஐரோப்பிய நாவல்கள் என்று சர்வதேச அளவில் புகழ்பெற்ற நாவல்களை வெளியிட்டார்கள். அந்த வரிசையில் வைத்துக் கொண்டாடப்பட வேண்டிய  நாவலிது.

வண்ணநிலவனின் கம்பாநதியும், கடல்புரத்திலும் வேறுபட்ட கதைக்களன்கள். மொழி நடை கொண்டவை. ஆனால் ரெயினீஸ் ஐயர் தெருவின் எழுத்துமுறை முற்றிலும் கவித்துவமானது. கிறிஸ்துமஸ் பண்டிகை சமயங்களில் கேரல் பாடியபடியே வருபவர்களைக் காணும் சந்தோஷம் போன்றது.

நீர்வண்ண ஓவியங்களுக்கெனத் தனி அழகு இருக்கிறது. அப்படித் தான் வண்ண நிலவன் இந்த நாவலை நீர்வண்ண ஓவியங்கள் போல உருவாக்கியிருக்கிறார்.

ரெயினீஸ் ஐயர் தெரு என்ற தலைப்பிலே வசீகரமிருக்கிறது. வரலாறு ஒளிந்திருக்கிறது. அறியப்படாத இரேனியஸ் பாதிரியின் ஆளுமை  நிழலாடுகிறது

திருநெல்வேலியிலுள்ள ஒரு தெருவின் கதை தான் நாவல். மனிதர்களைப் போலவே அந்த வீதிக்கும் தனித்துவமிருக்கிறது. அத் தெருவில் மொத்தம் ஆறே வீடுகள் இருந்தன. திருவனந்தபுரம் சாலையை ஒட்டிய வீதியது. தெருவின் பின்னால் சிறிய வாய்க்கால் ஓடுகிறது.

நாவல் விவரிப்பது ஒரு தெருவின் கதையை மட்டுமில்லை. வீடுகளின் கதையை சொல்கிறது. வீடுகள் என்பது மனிதர்கள் தானே. அந்த வீட்டு மனிதர்களின் கதையைப் பேசுகிறது. குறிப்பாகப் பெண்களின் கதையை முன்னெடுக்கிறது.

தனது சிறுகதைகளில் வண்ணநிலவன் இத்தகைய பரிவான, அன்பால் உருவான பெண்களை எழுதியிருப்பார். அவர்கள் உரத்துப் பேசவோ, சண்டையிடவோ தெரியாதவர்கள். சின்னஞ்சிறு சந்தோஷங்களை ஆராதிப்பவர்கள். பிரார்த்தனையின் வழியே தனது கஷ்டங்களைக் கடந்து போகிறவர்கள். ரவி வர்மாவின் ஓவியம் ஒன்றில் ஒரு பெண் கையில் விளக்கேந்தி நிற்பாள். அந்த வெளிச்சம் அவள் முகத்தில் பிரகாசமான ஒளியைப் பரவச் செய்திருக்கிருக்கும். அது போல அன்பின் வெளிச்சத்தால் பிரகாசம் கொண்ட பெண்கள். விதி அவர்களுடன் பரமபதம் ஆடுகிறது. துயருற்ற அந்தப் பெண்களை இயற்கையே ஆற்றுப்படுத்துகிறது.

நாவல் முதல் வீட்டிலிருந்து துவங்குகிறது. டாரதி தான் கதையை முன்னெடுக்கிறாள். அவள் தெருவோரம் மேய்ந்து கொண்டிருக்கும் கோழிக்குஞ்சுகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். கோழிக்குஞ்சுகள் மேய்வதற்காக ஏன் அந்த இடத்தைத் தேர்வு செய்தன என அவளுக்குத் தெரியவில்லை. அவை தெருமுனையில் மேய்ந்து கொண்டிருப்பது அவளுக்குக் கவலையைத் தருகிறது. கோழிக்குஞ்சுகள் வேகமாக வளர்ந்துவிட்டதைப் பற்றி டாரதி நினைத்துக் கொள்கிறாள். அவளுக்கு திடீரென தெருவில் யாராவது வந்தால் சந்தோஷமாக இருக்கும் போலிருக்கிறது. எபன் நேரங்கழித்துத் தான் வருவேன் என்று சொல்லிச் சென்றது நினைவிற்கு வருகிறது.

கடந்த காலத்தை நினைப்பது துயரம் தந்தாலும் அதில் ஒரு சந்தோஷம் இருப்பதை டாரதி உணருகிறாள். அது தான் அவளது இயல்பு. தாயில்லாத பெண் டாரதி. அதனால் தானோ என்னவோ கோழிக்குஞ்சுகள் மீது கூட இத்தனை பரிவு கொள்கிறாள்.

தன் கடந்த காலத்தைப் பற்றி அவள் நினைத்துக் கொண்டிருக்கும் போது மழை பெய்ய ஆரம்பிக்கிறது. மழைத்தூறலுக்கு ஊடாகத் தேவாலயத்து மணியோசை கேட்கிறது. அந்த மணிச்சப்தம் கூட அன்போடும் உருக்கத்தோடும் கேட்கிறது. கோவில் குட்டியார் ரேமாண்டின் நினைவு வருகிறது. தெருமுனையில் ரெயினீஸ் ஐயரின் கல்லறை இருக்கிறது. அதன் மீது மழை பெய்கிறது.

மழை  தெருவிற்குப் புதுமணலைக் கொண்டு வருகிறது.

தெருவிற்குப் புதுமணல் எப்படி வருகிறது என்று அம்மாவிடம் கேட்டபோது இயேசு சாமி தான் போடுகிறார் என்று அம்மா சொன்ன நினைவு பாரதிக்கு வருகிறது. மழையும் காற்றும் அவளைக் கல்யாணி அண்ணனை நினைக்க வைக்கிறது. முதல் வீட்டின் டாரதி தெருவில் அலைந்து கொண்டிருக்கும் கோழிக்குஞ்சைப் போன்றவள். கோழிக்குஞ்சின் எதிர்காலம் என்னவாகும் என யாருக்குத் தெரியும்

இரண்டாவது வீட்டின் கதை துவங்கும் போது நாழி ஒடு போட்ட வீடுகளில் எப்போதும் சண்டையும் சச்சரவாக இருக்கும் என்றே கதை ஆரம்பமாகிறது.  அன்னாகரீனினாவின் முதல்வரியைப் போன்றது இந்த வாசகம்.

அந்த வீட்டில் இருதயத்து டீச்சர் வசிக்கிறாள். அவளது கணவன் சேசய்யாவுக்குப் பன்னிரண்டு வருஷங்களாகத் தொண்டைப் புகைச்சல். நோயாளி கணவனை பராமரிப்பு செய்கிறாள். இனிமையானது அவர்கள் திருமண புதிதில் நடந்த நிகழ்வுகள்.

பிலோமியின் உலகம் அறிமுகமாகிறது. அத்தானோடு ஆசையாகப் பழகுகிறாள் பிலோமி.  உண்மையில் அது ஒரு ரகசிய கனவு. எபன் ரெயினீஸ் ஐயர் தெருவிற்கு வரும் சாணைப்பிடிப்பவனைப் பற்றி ஒரு கவிதை எழுதி அது பத்திரிக்கையில் வெளியாகிறது. பிலோமி அதை மிகவும் ரசிக்கிறாள். கொண்டாடுகிறாள். ஒரு சூரியகாந்திப் பூவைப் போல அகன்று விரிந்திருக்கிறது ரெயினீஸ் ஐயர் தெரு.

இடிந்தகரையாள் என்ற பெண்ணின் இளமைக்காலம் நினைவு கொள்ளப்படுகிறது. அவள் கோழி இறகால் காது குடைவதில் சுகம் காணுபவள். அவளது உண்மையான பெயர் எதுவென யாருக்கும் தெரியாது. ஆனால் அவளது இளமைக்காலம் விசித்திரமானது. கருப்பட்டிப் புகையிலைத் துண்டு மாதிரி தொங்கும் சுருங்கிப்போன மார்புகள் என்ற அவளைப்பற்றிய வரி மறக்கமுடியாதது.

மூன்றாவது வீட்டிலிருப்பது இருதயத்து டீச்சரின் மாணவி அற்புதமேரி. அவள் ஹென்றி மதுர நாயகத்தின் மகள்

அற்புதமேரியின் நினைவில் அழியாமல் இருப்பது சாம்ஸன் அண்ணனும் எஸ்தர் சித்தியும் உடலுறவு கொண்ட காட்சி. தற்செயலாக அதைக் கண்டுவிட்ட அவளுக்கு அது நல்ல காரியமில்லை என்று மனதை உறுத்துகிறது. ஆனால் அந்தக் காட்சியே அவளுக்குள் ஒரு முதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. பெரிய மனுஷி போல அதன் பிறகு நடந்து கொள்ள ஆரம்பிக்கிறாள்.

மீண்டும் முதல் வீட்டில் டாரதியின் நினைவில் கதை விரிகிறது. ரெயினீஸ் ஐயர் தெருவிற்கு டவுனிலிருந்து வரும் கல்யாணி அண்ணனை எல்லோருக்கும் பிடிக்கிறது. ஒரு தேவதூதன் போல அவர் வருகிறார். அனைவரிடம் பிரியமாக நடந்து கொள்கிறார். பொருட்காட்சிக்கு அவர்கள் செல்லும் காட்சி மறக்கமுடியாதது.

ரெயினீஸ் ஐயர் தெருவில் இருப்பவர்கள் அத்தனை பேரும் மழையின் அடிமைகள். மழை அவர்களின் துயரங்களைக் கரைத்துப் போகிறது

ஆசிர்வாதம்பிள்ளையின் விடு தெருவிலே வெகுவாகப் பாழ்பட்டது. மழையில் அவர்கள் வீட்டுச் சுவர் இடிந்த போது குடிகார தியோடர் தான் உதவி செய்கிறான். அந்தத் தெருவில் அவனைப் புரிந்து கொண்டவர்கள் குறைவே.

நினைவுகளின் வழியே நாவல் விரிவு கொள்கிறது. தனக்கு விருப்பமான மனிதர்களையும் மறக்கமுடியாத நிகழ்வுகளையும் பற்றிய பெண்களின் நினைவுப்பின்னலே இந்த நாவல்.

Pavilion of Women என்றொரு நாவலை நோபல் பரிசு பெற்ற பெண் எழுத்தாளரான பியர்ல் எஸ் பெக் எழுதியிருக்கிறார். இந்தத் தலைப்பு ரெயினீஸ் ஐயர் தெரு நாவலுக்குத் தான் பொருத்தமானது.

டாரதி. ஜீனோ, ரெபேக்கா, அற்புதமேரி, இருதயத்து டீச்சர். இடிந்தகரையாள் என்று பல்வேறு பெயர்கள் கொண்ட இந்தப் பெண்களின் வாழ்க்கை ஒன்று போலவே இருக்கிறது அவர்கள் துயரத்தின் நிழலிலே வாழுகிறார்கள். கடந்தகாலம் தான் அவர்களின் ஒரே மீட்சி. சந்தோஷம் ஒரு வானவில்லைப் போல அவர்கள் வாழ்க்கையில் தோன்றி மறைந்து விடுகிறது.

வாழ்வில் ஏதாவது மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடந்துவிடக் கூடும் என்று காத்திருக்கிறார்கள். மனிதர்களிடமிருந்து சந்தோஷம் கிடைக்காத போது மழையிடமிருந்து பெற்றுக் கொள்கிறார்கள்.

தினசரி வாழ்க்கையின் நெருக்கடிகள் அவர்கள் மீது கரும்புகை போலப் படிந்திருக்கிறது. ஆனால் அவர்களுக்குள் எரியும் அன்பின் சுடர் அதே பிரகாசத்துடன் தனிமையுடன் ஒளிரவே செய்கிறது

நாவலில் வரும் ஆண்களில் எபனும் தியோடரும் கல்யாணி அண்ணனும்  மழையைப் போன்றவர்கள்.  சேசய்யா ஒரு கரைந்த நிழல்.

ரெயினீஸ் ஐயர் தெருவின் வாழ்க்கை ஏன் இத்தனை துயரமிக்கதாக இருக்கிறது. சின்னஞ்சிறு சந்தோஷங்களைத் தவிர வேறு எதுவும் ஏன் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. தங்களின் அவலநிலைக்காக அவர்கள் யார் மீதும் குற்றம் சொல்வதில்லை.

சின்னஞ்சிறிய இந்த நாவலை முடிக்கும் போது நாம் பெருமூச்சுடன் அந்தப் பெண்களுக்காக வருந்துகிறோம். நல்லது நடந்து விடாதா என்று ஏங்குகிறோம். ரெயினீஸ ஐயர் தெருவில் நாமும் ஒரு கோழிக்குஞ்சு போலச் சுற்றியலைகிறோம். மழை நம்மையும் நனைக்கிறது.

இரேனியஸ் என்ற கிறிஸ்துவப் பாதிரியார் திருநெல்வேலியில் 18 ஆண்டுகள் இறைத்தொண்டுகள் செய்திருக்கிறார். நெல்லை சீமையில் நூற்றுக்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களை உருவாக்கியுள்ளார். தாய்மொழியில் தான் கல்வி கற்பிக்க வேண்டும் என்பதில் இரேனியஸ் அடிகள் உறுதியாக இருந்தார். நெல்லையில் வசித்த போது முறையாகத் தமிழ் படித்திருக்கிறார். லூத்தரன் திருச்சபையோடு ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக அவர் ஒதுக்கப்பட்டார்.

1838-ல், இரேனியஸ் அடிகளார் இறந்தபோது, அவரைப் புதைக்கக் கல்லறைத்தோட்டத்தில் இடம் தரப்படவில்லை. ஆகவே, சாலையோரத்தில் புதைக்கப்பட்டார். என்கிறார்கள். காலமாற்றத்தில் இன்று அவரது கல்லறை உரிய மரியாதையுடன் உருவாக்கப்பட்டிருக்கிறது

இரேனியஸ் அடிகள் தான் ரெயினீஸ் ஐயர் என்று அழைக்கப்படுகிறார்.

நாவலில் பெரிய திருப்பங்கள் எதுவுமில்லை. உரத்த வாதங்கள் இல்லை. அந்தச் சிறிய உலகத்தில் நீரோட்டம் போல வாழ்க்கை செல்கிறது. எல்லா நிகழ்வுகளும் சுருக்கமாக, கச்சிதமாக சொல்லப்படுகின்றன. ஜெபமாலையில் கோர்க்கபட்ட முத்துகளைப் போலவே நினைவுகள் கோர்க்கபட்டிருக்கின்றன.

பைபிள் படிப்பது போன்ற கவித்துவமான எழுத்துநடையில் எழுதப்பட்ட இந்த நாவல் வண்ணநிலவனின் அபூர்வமான படைப்பு.. முன்னும் பின்னுமாக நினைவுகளைக் கோர்த்து அவர் கதையைப் பின்னிச் செல்லும் அழகும் மாயமும் கொண்டாடப்பட வேண்டியதாகும்.

•••

••

0Shares
0