மழையை வரைபவர்கள்

கியோமிசு கோவிலில் பெய்யும் மழை என்ற ஹசுய் கவாஸின் (Hasui Kawase) ஓவியத்தைக் கண்ட போது ரஷோமான் திரைப்படத்தின் முதற்காட்சி நினைவில் எழுந்தது .

Kiyomizu Temple in Rain

ரஷோமான் நுழைவாயிலில் மழை பெய்வதில் தான் படம் துவங்குகிறது. கற்படிக்கட்டுகளில் வழிந்தோடும் மழையைக் காணுகிறோம். மழைக்கு ஒதுங்கிய இருவரைக் காணுகிறோம்.

மழைக்குள்ளாக நினைவு கதையாக மாறுகிறது. அவர்களில் ஒருவர் எனக்குப் புரியவில்லை என்று சொல்வதில் தான் படம் துவங்குகிறது. புரியவில்லை என்று அவர் சொல்வது மனிதர்களின் செயலை, கண்முன்னே நடந்தேறிய நிகழ்வுகளை.

அந்தச் சொல்லின் பின்னே ஒளிந்துள்ள கதையைத் தான் படம் விவரிக்கிறது. மழையில்லாமல் அக் காட்சி உருவாக்கப்பட்டிருந்தால் இத்தனை நெருக்கம் தந்திருக்காது. அந்தக் காட்சியில் மழை நம்மையும் கதை கேட்கத் தூண்டுகிறது.

ஜப்பானிய ஓவியர்கள் இயற்கைக் காட்சிகளை, கடலை, மழையை, பனி பெய்வதை, மலர்களை நிறைய வரைந்திருக்கிறார்கள். இயற்கை ஜப்பானிய கலைமரபில் நிரந்தரம் மற்றும் நிலையற்ற தன்மையின் அடையாளமாக கருதப்படுகிறது. ஆகவே பருவ காலங்களை வரைவதும் எழுதுவதும் கலைஞர்களின் முதன்மைச் செயல்பாடாக விளங்கியிருக்கிறது.

உண்மையும் அழகும் ஒன்று சேருவதே கலையின் அடிப்படை என ஜப்பானியர்கள் நம்புகிறார்கள். உண்மை என்பது தோற்றம் தரும் அனுபவமில்லை. ஆகவே மலர்களை வரையும் போது முழுமையின் அடையாளமாக, நிரந்தரமின்மையின் குறியீடாக வரைகிறார்கள். இயற்கை கடந்தகாலத்தை நினைவு வைத்திருப்பதில்லை. அது எப்போதும் நிகழ்காலத்திலே வாழுகிறது. அந்த நிகழ்காலத்தில் வாழ்வதைத் தான் பௌத்தம் சுட்டிக்காட்டுகிறது. அந்த வகையில் இயற்கையை அறிவதும் பௌத்த ஞானமரபே. ஓவியர்கள் இயற்கைக் காட்சியை வெறுமனே வியப்பதில்லை. மாறாக அதன் தனித்துவ அழகினை அடையாளம் காட்டுகிறார்கள்.

ஹசுய் கவாஸ்

மழையை வரைவது எளிதானதில்லை. ஒரு மரம் மழையை எதிர்கொள்ளும் விதமும் மனிதர்கள் எதிர்கொள்வதும் ஒன்றானதில்லை. ஆகவே மழையின் வழியே உருமாறும் தினசரி வாழ்க்கையை, உடலின் இயக்கத்தை. காட்சிகளின் விநோத அழகை வரைந்து காட்டுகிறார்கள்.

ஜப்பானியர்களுக்கு மழை சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது, மழையைக் குறிப்பதற்கு ஜப்பானிய மொழியில் குறைந்தபட்சம் 50 வார்த்தைகள் உள்ளன . ஜப்பானிய மரச்செதுக்கு ஓவியங்களில் மழை முக்கியக் கருப்பொருளாக உள்ளது. பாரம்பரிய மழை சடங்குகள் இன்றும் தொடர்கின்றன

ஹசுய் கவாஸ் ஓவியத்தில் கியோமிஸு கோவிலில் குடைபிடித்தபடி ஓருவர் மழையை ரசிக்கிறார். இது திடீர் மழையில்லை. அவரது உடையைக் காணும் போது மழைக்காலத்தின் ஒரு நாளை ஓவியர் வரைந்திருக்கிறார் என்பதை உணருகிறோம்.

தொலைதூரத்து மலையும், காற்றின் சீரான வேகமும் அடர்ந்து பெய்யும் மழையும் நேர்த்தியாக வரையப்பட்டிருக்கின்றன. மழைக்காட்சியை வரையும் போது மழை ஏற்படுத்தும் புற அனுபவத்தைத் தான் பதிவு செய்ய முயலுகிறார்கள். இந்த ஓவியத்தில் மழைத்துளிகள் துல்லியமாக வரையப்படவில்லை. மழையின் வேகம் ஓராயிரம் அம்புகள் பாய்வது போலிருக்கிறது.

மழை இனிது என்கிறார் பாரதியார்.

சட்டச்சட சட்டச்சட டட்டா-என்று

தாளங்கள் கொட்டிக் கனைக்குது வானம்;

தக்கை யடிக்குது காற்று-தக்கத்

தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட

எனக் காற்றோடு இணைந்து மழை உருவாக்கிய இசையைப் பதிவு செய்திருக்கிறார். இதே உணர்வு நிலையைத் தான் ஓவியமும் வெளிப்படுத்துகிறது

கண்டோம் கண்டோம் கண்டோம்-இந்தக்

காலத்தின் கூத்தினைக் கண்முன்பு கண்டோம்! என்று பாரதியின் கவிதை முடிகிறது. காலத்தின் கூத்து தான் மழை.

கியோமிசு, ஜப்பானின் கிழக்குக் கியோட்டோவில் அமைந்துள்ள ஒரு புத்த ஆலயமாகும். இக்கோவில் ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. கியோமிசு என்றால் தூய நீர் என்று பொருள். ஒடோவா நீர்வீழ்ச்சியிலிருந்து வரும் தண்ணீர் அந்தக் கோவில் குளத்தில் விழுகிறது

இந்தக் கோவிலின் முழுக் கட்டுமானத்திலும் ஒரு ஆணி கூடப் பயன்படுத்தப்படவில்லை. ஹிகாஷியாமா மலைத்தொடரிலுள்ள இந்தக் கோவிலின் மேடை மீதிருந்து தாவிக்குதித்தால் விரும்பியது நிறைவேறும் என்றொரு நம்பிக்கை இருந்தது. இப்படித் தாவிய சிலர் உயிர் இழந்திருக்கிறார்கள். பதினெட்டாம் நூற்றாண்டில் இந்தத் தாவுதல் தடைசெய்யப்பட்டுவிட்டது.

இந்த வளாகத்தினுள் பல கோவில்கள் உள்ளன, அதில் இரண்டு “காதல் கற்கள்” உள்ளன. காதலுற்ற ஒருவர் கண்களை மூடிக்கொண்டு நடந்து மற்றொரு கல்லைத் தொட்டுவிட்டால் அவரது காதல் நிறைவேறிவிடும் என்பது நம்பிக்கை.

இந்தத் தகவல்களை அறிந்து கொண்டபிறகு ஓவியத்தின் காட்சி வேறாகிவிடுகிறது. தொன்மையான கியோமிசு ஆலயத்தில் மழை பெய்யும் போது காலம் விழித்துக் கொள்கிறது. மழையை வேடிக்கை காணுகிறவர் காலத்தின் கூத்தினையே காணுகிறார்.

ஜப்பானில் ட்சுயு எனப்படும் பருவமழை , ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் ஆறு வாரங்கள் பெய்கிறது. சூறாவளி, பெருமழைக்காலம் பொதுவாக இலையுதிர் காலத்தில் நிகழ்கிறது.

ஜப்பானிய ஓவியர்கள் மழையின் சீற்றத்தையே அதிகம் வரைந்திருக்கிறார்கள். அதிக எண்ணிக்கையிலான மெல்லிய இருண்ட இணையான கோடுகளைப் பயன்படுத்தி மழை சித்தரிக்கப்படுகிறது

ஓஹாரா கோசன் வரைந்துள்ள ஒரு மழை இரவில் நிற்கும் நாரையின் ஓவியத்தில் அடர் கருப்புப் பின்னணியில் ஒற்றைக் காலை தூக்கி நிற்கிறது நாரை. பிரகாசமான வெள்ளை உடல், அதன் கண்கள் மிக அழகாக வரையப்பட்டிருக்கின்றன. நாரையின் கால்களில் காணப்படும் மஞ்சள் நிறம் வழக்கமான நீலம் அல்லது சாம்பல் நிறத்திற்கு மாற்றாக உள்ளது கவனிக்கத்தக்கது-

நாரை தன்னை முழுமையாக மழையிடம் ஒப்புக் கொடுத்து நிற்கிறது. அக்ககாட்சி மழையினுள் நாரை தியானம் செய்வது போலிருக்கிறது. நாரையின் வெண்மை மின்னல் வெளிச்சம் போலத் தனித்து ஒளிருகிறது. ஜப்பானிய ஓவியர்கள் தங்கள் ஓவியத்தில் முதன்மையாக சித்தரிக்க விரும்பும் பொருளை அளவை விடவும் பெரிதாக வரைகிறார்கள். இந்த நாரையும் அது போன்றதே. .

Utagawa Hiroshige

உதகாவா ஹிரோஷிகேயிடம்(Utagawa Hiroshige) ஓவியங்களை இயற்கையின் கவிதை வடிவம் என்கிறார்கள். உதகாவா ஹிரோஷிகே மழையை வரைந்திருக்கிறார். அதுவும் எதிர்பாராமல் பெய்யும் மழையினை வரைந்திருக்கிறார்.

Sudden Shower at Shōno ஓவியத்தில் பல்லக்கு தூக்குபவர்களும் கிராமவாசிகளும் மழைக்குள்ளாக ஓடுகிறார்கள், தனித்துவமான சாய்ந்த கோடுகளுடன் மழை குறிப்பிடப்படுகிறது. கிராமவாசிகளின் உடை, அவர்கள் வைத்துள்ள குடை காற்றில் மடங்குவது, பல்லக்கு தூக்குபவரின் இடுப்புத் துணியின் நீல நிறம். சாலை மற்றும் மரங்களின் சித்தரிப்பு எனப் படம் மழைக்காட்சியை அற்புதமாகச் சித்தரிக்கிறது.

JP41

Ukiyo e ஓவிய மரபில் திடீர் மழை என்பது முக்கியமான கருப்பொருளாகும், Sudden Shower over Shin-Ōhashi Bridge ஓவியத்தில் பாலம் வலதுபுறத்தில் இருந்து கீழ் இடதுபுறமாக நீண்டுள்ளது, பின்னணியில் உள்ள அடிவானக் கோடு இடமிருந்து வலமாகக் கீழ்நோக்கி சாய்ந்துள்ளது. பாலத்தில், மூன்று சிறிய உருவங்கள் முன்னோக்கிச் சாய்ந்து, இடதுபுறமாக, தங்கள் உடலை மழையில் நனையாமல் மறைக்க, தலைக்கு மேல் குடைகளைப் பிடித்தபடி செல்கிறார்கள், எதிர் திசையில் நகரும் மூன்று உருவங்கள் பகிரப்பட்ட ஒரே குடையின் கீழ் செல்கிறார்கள்.. தொலைதூரக் கரை சாம்பல் நிறமாக உள்ளது, நேரான கருப்பு கோடுகளாக மழை விழுகிறது. பாலம் ஒரு பிரகாசமான வடிவமாகத் தோன்றுகிறது, அவர்களின் வைக்கோல் தொப்பிகள், மரக்குடைகள் அழகாக வரையப்பட்டிருக்கின்றன. பாலத்தின் மஞ்சள் நிறம், பாலத்தின் அடியிலுள்ள நீரின் நீலவண்ணம், விரைந்து ஓடுபவர்களின் வாளிப்பான கால்கள். காற்றின் வேகம் என ஓவியம் மிகவும் நேர்த்தியாக வரையப்பட்டிருக்கிறது

ஆற்றில் கட்டுமரம் செல்கிறது. கட்டுமரத்தைச் செலுத்துகிறவன் மழையைப் பொருட்படுத்தவில்லை. ஆற்றின் தொலைதூரக் கரையில், அரசாங்கக் கப்பலான அட்டகேமரு நிற்பது தெரிகிறது.

இந்த ஓவியத்தினை வான்கோ மிகவும் ரசித்திருக்கிறார். இதன் நகல் ஒன்றை அவரே வரைந்துமிருக்கிறார். ஜப்பானிய ஓவியங்களின் தாக்கம் வான்கோவிடமிருந்தது. அவர் ஒருமுறை கூட ஜப்பானுக்குச் சென்றதில்லை. ஆனால் ஜப்பானிய பிரிண்ட்டுகள் மூலம் முக்கியமான ஜப்பானிய ஓவியங்களை ஆழ்ந்து ரசித்திருக்கிறார்.

ஹிரோஷிகேயின் ஓவியங்கள் இயற்கையைப் பற்றிய நுட்பமான உணர்வைத் தருகின்றன. 1858 ஆம் ஆண்டில் காலரா காரணமாக ஹிரோஷிகே இறந்து போனார். அசகுசாவில் உள்ள ஜென் புத்த கோவிலில் அவர் அடக்கம் செய்யப்பட்டார்.

ஜென் கவிதையொன்றில் மழையைக் காதுகளால் பார்க்கிறோம் என்ற வரி இடம்பெற்றிருக்கிறது. உண்மை தான். மழைச்சத்தம் மழையினை மனதில் காட்சியாக உருமாற்றிவிடுகிறதே.

டைட்டோ கொகுஷி என்ற கவிஞர் எழுதிய கவிதை இது.

காதுகளால் பார்த்தாலும்,

கண்களால் கேட்கும் போதும்,

முத்து போன்ற மழைத்துளிகள்

நான்தான்

என்பதில் சந்தேகமில்லை .

நான் எனும் தன்னுணர்வு அன்றாடம் பல்வேறு நிகழ்வுகளால் துளியாகச் சிதறுகிறது. மழை அதன் புறவடிவம் போலிருக்கிறது.

விழிப்புணர்வு கொண்டவர்கள் புறநிகழ்வுகளை நேராகக் காணுவதில்லை. அவற்றை.தலைகீழாகப் பார்க்கிறார்கள். தங்களைத் தாங்களே இழந்து, விஷயங்களைப் பின்தொடர்கிறார்கள் என்கிறார் ஜிங்கிங்

இந்தக் கண்ணோட்டத்தில் ஜென்துறவிகள் மழையை ஆராதிப்பதில்லை. அதன் பயன்களைப் பற்றி யோசிப்பதில்லை. மாறாக அவர்களே மழையாகிறார்கள்.

ஜப்பானிய ஓவியர்கள் மழையை வரைவதன் மூலம் தளர்வு மற்றும் எதிர்பாராத மாற்றத்தை வரைந்திருக்கிறார்கள். மழை சீரற்ற இயக்கத்தின் குறியீடாக அமைகிறது.

ஐரோப்பிய மழைக்காட்சி ஓவியங்களில் மழையின் ஈரமும் குடைபிடித்தபடி செல்லும் பெண்களின் நிதான நடையும் சித்தரிக்கப்படுகிறது. இந்திய நுண்ணோவியம் ஒன்றில் பெண்ணின் மீது மழை சிறுதுளிகளாக வீழ்வதாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. இது நேரடி அனுபவத்தின் வெளிப்பாடாக உள்ளது. ஆனால் இந்த இரண்டிலிருந்து வேறுபட்டு ஜப்பானிய ஓவியர்கள் வரைந்துள்ள மழைக்காட்சிகள் திடீர் மழையை மட்டுமின்றிக் காலமாற்றம் எனும் பேருணர்வையும் நமக்குள் ஏற்படுத்துகின்றன.

0Shares
0