மான்வேட்டை

வனவேட்டையை ஒவியம் வரைவது ஒரு சவாலான கலை, பல நேரங்களில் ஒவியர்கள் தானும் வேட்டையாடும் மன்னருடன் அல்லது பிரபுக்களுடன்  காட்டிற்குள் நேரில் சென்று கோட்டோவியமாக வரைந்து கொண்டு பின்பு அதை வண்ணம் தீட்டுவதுண்டு

மொகலாய மினியேச்சர்களில் மன்னர்களின் வேட்டையைப் பிரதானமாக கொண்ட ஒவியங்கள் நிறைய இருக்கின்றன, அக்பர் துப்பாக்கி ஏந்தி வேட்டையாடும் ஒரு ஒவியம் குறிப்பிடத்தக்கது

ஐரோப்பாவில் நரிவேட்டை பிரபலமாக இருந்த நாட்களில் அது பற்றி  Richard Newtown, Jr. வரைந்த ஒவியங்களில் காணப்படும் நாய்களின் உடல்வாகு நமது ராஜபாளையம் நாய்களைப் போலவே இருக்கிறது, ஒவ்வொரு நாயின் முகபாவமும் தீவிரமாகவும் தனித்துவமிக்கதாகவுமுள்ளது,

வீழ்த்தப்பட்ட நரியின் ரத்தத்தை மோந்து பார்க்கின்ற நாய்களின் கூட்டம் உள்ள அவரது ஒவியத்தில் இயல்பும் விநோதமும் ஒன்று கலந்திருக்கிறது.

ராஜஸ்தானிய ஒவியங்களில் ஒன்றான இரவில் ஒரு மான்வேட்டை  ஒவியம் அற்புதமான ஒன்று, 1775ம் ஆண்டு வரையப்பட்ட இவ்வோவியத்தில் பாகில் எனப்படும்  ஆதிவாசிகளின் வனவேட்டை காட்சிப்படுத்தபட்டிருக்கிறது,

மகாபாரதத்தில் வரும் ஏகலைவன் இந்த பாகில் இனத்தை சேர்ந்த ஆதிவாசியே. பாகில் இனத்தை சேர்ந்தவர்கள் அரசர் வேட்டைக்கு செல்லும் போது சிகாரிகளாக உடன் செல்வார்கள், படைப்பிரிவிலும் இவர்கள் தனி அணியாக பணியாற்றியிருக்கிறார்கள்

மானை வேட்டையாடுவதற்காக பாகில் இளைஞன் கையில் வில்லுடன் நிற்கிறான், அவன் முன்பாக ஒரு பெண், அவளது இலையுடைகள் வனவாசி போலத் தோற்றம் கொண்டிருந்த போதும் அவளது நகைகள் மற்றும் அலஙகாரங்கள் அவள் அரண்மனையை சேர்ந்தவள் என்பதையும் வனவேட்டைக்காக அவள் இலையுடைகளை உடுத்தியிருக்கிறாள் என்பதும் தெரியவருகிறது,

அவள் கையில் உள்ள பந்தவிளக்கின் வெளிச்சம் கண்டு மான்கள் மிரட்சியோடு பார்க்கின்றன

சுற்றிலும்இருட்டு, அடர்நீல வானில் மினுக்கும் நட்சத்திரங்கள், சாரை சாரையாக உயர்ந்து நிற்கும் மரங்கள் , பந்த வெளிச்சம் டார்ச் லைட்டின் ஒளிக்கற்றையைப் போல விழுகிறது, அந்த வெளிச்சத்தில் நான்குமான்கள் தென்படுகின்றன, அதில் ஒன்று ஆண் மான், மற்றவை பெண்மான்கள், வேடன் தனது கேசத்தை முடிந்துள்ள அழகும், இடுப்பில் சொருகியுள்ள கத்தியும் கச்சிதமாக இருக்கிறது,

பெண்ணின் கையில் உள்ள பந்தத்தில் எரியும் தழலும், அவள் கையில் மானின் கவனத்தை ஈர்ப்பதற்கான மணியும், அலங்காரமான காதணியும் ,சுருண்டு வழியும் காதோர முடியும் ,பாந்தமான முகமும் கொண்டை வனப்பும், அவள் விரும்பி வேட்டைக்கு வந்திருப்பதை சுட்டுகின்றன, இந்த வனத்தின் தோற்றம் அடர்த்தியாக இல்லை,

ஒவியத்தின் இடதுபுறத்தில் வேட்டையாடி வீழ்ந்த மானின் அருகில் அதே வேடன் அமர்ந்திருக்கிறான், அம்பு பட்ட மானின் கால்கள் கட்டப்பட்டிருக்கின்றன, இப்போது அவனது முகபாவம் மாறியிருக்கிறது

ஒவியங்களில் மான் ஆசையின் குறிடாகவும் வரையப்படுகிறது, மான்வேட்டையாடுதல் என்பது காமத்தைகுறிக்கிறது என்றும் பொருள்கொள்வார்கள், அப்படிப் பொருள்கொண்டால் இது காமகேளிக்கையின் புறவடிவம் என்று எடுத்துக் கொள்ளலாம், அப்படி பொருள்கொள்ளும் போது தான் அவளது அலங்காரங்கள், ஒயில் யாவும் பொருத்தமானதாகப் படுகிறது

வீழ்த்தபட்ட மான் என்பது பாலுறவின் பிறகான பெண் என்று கூறுகிறார்கள்,  இந்த ஒவியத்தில் என்னை பெரிதும் கவர்ந்த அம்சம் அந்த ஒளிக்கற்றையே, அதன் தெறிப்பும், வெளிச்சத்தில் திகைத்து நிற்கும் மான்களும் ரோமங்கள் கூட நேர்த்தியாக வரையப்பட்டிருப்பது ஒவியனின் தேர்ந்த திறமைக்கு சான்றாக உள்ளன

இரவின் மயக்கத்தை காட்சிபடுத்தியிருப்பதில் ஒவியனின் கலைநேர்த்தி அற்புதமாக வெளிப்பட்டுள்ளது. வான்கோ போன்ற மேதைகள் வரைந்து காட்டிய இரவு பற்றி எரியும் கோடுகளால் ஆனது என்றால் இந்த ஒவியத்தில் கரைந்தோடும் வண்ணங்களாலும் வெளிச்சத்தாலும் இரவு தீட்டப்பட்டிருக்கிறது,

இலையாடைகளின் நேர்த்தியைப் பாருங்கள், வேடன் இடையில் கட்டியுள்ள கச்சையின் வடிவத்தை வைத்தே அவன் பாகில் இனத்தை சேர்ந்தவன் என்று அடையாளம் காணப்படுகிறான்,  நீலம் மற்றும் கருமை இரண்டுமே ராஜபுத்திர ஒவியமரபின் தனித்துவத்தைச் சேர்ந்தவை. இந்த வகை ஒவியங்கள் பதினெட்டாம் நூற்றாண்டில் பிரபலமாக விளங்கின, பெர்ஷிய மற்றும் மொகலாய பாணிகளின் கலப்பு இந்த வகை ஒவியங்களில் காணமுடியும், இயற்கையாகக் கிடைக்கும் வண்ணங்களைக் கொண்டே இந்த வகை ஒவியங்கள் தீட்டப்பட்டிருக்கின்றன, ராஜபுதன ஒவியங்களை பற்றி ஆராய்ந்துள்ள கலைவிமர்சகர் ஆனந்த குமாரசாமி இவை அன்றைய இந்திய இலக்கியங்களின் மாற்றுவடிவம் போன்றவை, எந்த கவித்துவ அனுபவத்தை இலக்கியங்கள் உருவாக்கியதோ அதற்கு நிகராக அதே கருவில் வரையப்பட்ட ஒவிய வகைமை என்கிறார்,

பதினைந்தாம் நூற்றாண்டில் தான் காகிதம் பொதுப் பயன்பாட்டிற்கு வந்த்து, மேற்கண்ட ஒவியம் கூட காகித்த்தில் வரையப்பட்ட நுண்ணோவியங்களில் ஒன்று தான், அடர்ந்த வண்ணங்களைத் தேர்வு செய்வது, நேர்த்தியாக உருவங்களை இயல்பான நிலையில் வரைவது, இவை தான் இந்த நுண்ணோவியங்களின் சிறப்பு

இந்த நுண்ணோவியத்தை வரைந்த ஒவியர் யார் எனத் தெரியவில்லை, அன்றைய காலகட்டத்தில் புகழ்பெற்றிருந்த மொகலாய ஒவியர்களை தவிர மற்றவர்களின் ஒவியங்களில் தனிமுத்திரையோ, பெயர்களோ இருப்பதில்லை

இரவை எப்படி இசை ஒரு ராகமாக மாற்றுகிறதோ அதற்கு நிகரானது இந்த ஒவியம் என்று புகழ்ந்து கூறுகிறார் கலைவிமர்சகர் ரஷித்,

அது உண்மை என்பதை ஒவியத்தில் ரசித்துக் கிறங்கும் போது நாமும் உணரத்துவங்குகிறோம்

•••

0Shares
0